Thursday, 4 May 2017

நூலக வாசலில் காத்திருக்கிறார்கள்.......

நூலகத்துறையில் தனிக்கவனம் செலுத்தும் திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவரை ஊக்குவிக்கும் கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களுக்கும் நமது பாராட்டுக்கள். இப்படி ஒரு நூலகத்தை தன் மனக்கண் முன்னால் நிறுத்தி, அதனை நிறுவி  பயன்பாட்டிற்கு அளித்த முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். மதுரையில் இப்படி ஒரு வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்குமா, எனது சொந்த ஊரான சாப்டூர் போன்ற கிராமங்களில் உள்ள பொது நூலகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஒரு சிறிய அள்விலாது போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டல் கிடைக்குமா என்னும் எதிர்பார்ப்புகளோடு இனி பி.பி.சி. செய்தி...........வா.நேரு

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சில பகுதிகளைப் பயன்படுத்துவதற்காக அதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் நூலக வாசலில் காத்திருக்கிறார்கள்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்று. தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த நூலகம், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சரியாகப் பராமரிக்கப்படவில்லையென சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.

7 தளங்களில் 5, 70,000 புத்தகங்களுடன் இயங்கிவரும் இந்த நூலகத்தில் கடந்த சில மாதங்களாக சீரமைப்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.
இந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பயன்படுத்துவதோடு, வாசகர்கள் வீட்டிலிருந்து தங்கள் புத்தகங்களையும் எடுத்துவந்து இங்கே வைத்துப் படிப்பதற்கான அறைகளும் உள்ளன. இந்த அறைகளில் குளிர்சாதன வசதி, லேப் - டாப், மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கான வசதி ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை
தரைத் தளத்தில் ஓர் அறையும் முதலாவது தளத்தில் ஓர் அறையும் என இரு அறைகளிலும் சேர்த்து இருநூறு பேர் வரை அமர்ந்து படிக்க முடியும்.
துவக்கத்திலிருந்தே மாணவர்களிடம் பெரும் வரவேற்றைப் பெற்றிருந்த இந்த வசதியைப் பயன்படுத்துவதற்காக தினமும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் முயற்சிப்பதால், இடத்தைப் பிடிப்பதற்காக அதிகாலை ஐந்து மணிக்கே மாணவர்கள் தற்போது காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.
தங்களுடைய புத்தகத்தை எடுத்துவந்து படிப்பதற்காக வெகுதூரத்திலிருந்தெல்லாம் மாணவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்?
"வீட்டில் இருந்து படித்தால், திடீரென டிவி பார்க்கத் தோன்றும். படுத்துக்கொள்ளத் தோன்றும். அதனால்தான் இங்கே வந்துவிடுகிறேன்" என பட்டயக் கணக்காளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ராஜேஷ் பிபிசியிடம் தெரிவித்தார். இவர் தண்டையார்பேட்டையிலிருந்து படிப்பதற்காக இங்கே வருகிறார்.

காலை ஆறு மணிக்கே சுமார் நூறு பேர் வரை நூலக வாசலில் திரண்டுவிடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தற்போது நூலக நிர்வாகம் ஆறரை மணியளவில் பிரதான நுழைவாயிலைத் திறந்து வளாகத்திற்குள் வாசகர்களை அனுமதித்து வருகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை
அதன் பிறகு காத்திருப்பவர்களுக்கு எண்களுடன் கூடிய டோக்கன் வழங்கப்படுகிறது. பிறகு எட்டு மணியளவில் எண் வரிசையின் அடிப்படையில் வாசகர்கள் வரிசையில் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
நூலகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரைதான் இயங்கும் என்றாலும் இந்த வசதி காலை எட்டு மணி முதல் இரவு 9 மணிவரை வழங்கப்படுகிறது.
"காலை ஆறு மணிக்கே இந்த அறைகளைத் திறந்தால் நன்றாக இருக்கும். அதேபோல, கூடுதலான மாணவர்கள் படிக்கும் வகையில் அறைகளை அதிகப்படுத்த வேண்டும். பல சமயங்களில் தரையில் அமர்ந்து படிக்க வேண்டியிருக்கிறது" என்கிறார் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா. இவர் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காகத் தயாராகி வருகிறார்.

பல மாணவர்களுக்கு இந்த நூலகம் கிட்டத்தட்ட இரண்டாவது வீட்டைப்போலவே மாறிவருகிறது. தற்போது இங்குள்ள உணவகமும் செயல்பட ஆரம்பித்திருக்கும் நிலையில், எதற்காகவும் வீடு திரும்பத் தேவையில்லாத நிலையில் மாணவர்கள் அதிகாலையில் வந்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புகிறார்கள்.

"இப்போதாவது பரவாயில்லை. போட்டித்தேர்வுகள் நெருங்குவதால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் காலை நான்கு மணிக்கெல்லாம் வர வேண்டியிருக்கும்" என்கிறார் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகிவரும் சுரேஷ்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை
வெளியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து படிப்பதற்கான இடத்தை அதிகப்படுத்து நூலக நிர்வாகம் தயங்குகிறது. பிரதானமாக இது நூலகமாகவே இருக்கவேண்டுமென நிர்வாகம் நினைக்கிறது.

"நூலகம் என்பது வாசகர்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும். வெளியிலிருந்து புத்தகங்களை எடுத்துவந்து நாள் முழுவதும் இருந்து படிப்பதென்பது சரியாக இருக்காது. இருந்தாலும் மாணவர்கள் ஆர்வமாக இருப்பதால் கூடுதல் இடங்களை ஒதுக்க முடியுமா என்று பார்த்து வருகிறோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் பள்ளிக் கல்வித் துறையின் செயளாலர் உதயசந்திரன்.

சென்னை அண்ணா நகரில் மாநில அரசால் நடத்தப்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி மையமும் தற்போது கோட்டூர்புரத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால், நூலகத்திற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
"பல சமயங்களில் நூலகத்தை ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவார்கள். இந்தியாவில் வேறு எந்த நூலகத்தையும் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை" என்கிறார் இங்கு பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி.

சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் தவிர, ரஷ்ய கலாசார மையத்திலும் இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நூலகம் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும். ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம், வருடம் முழுவதும் விடுமுறையின்றி இயங்கும் வகையில் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

நன்றி : பி.பி.சி. 05.05.2017
(படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. )


3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பல சமயங்களில் நூலகத்தை ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவார்கள். இந்தியாவில் வேறு எந்த நூலகத்தையும் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை

மகிழ்ந்தேன் ஐயா

முனைவர். வா.நேரு said...

நாம் மகிழக்கூடிய செய்திதான். சாராயாக்கடைகளே இல்லாத தமிழகத்தில் ,சாரை சாரையாய் நூலகத்திற்குள் இளைஞர்கள் செல்கிறார்கள், எல்லா ஊர்களிலும் எனும் கேட்கும் நாள் எந்த நாளோ....
நன்றி அய்யா, வருகைக்கும் கருத்திற்கும்

முனைவர். வா.நேரு said...


சு.கருப்பையா அவர்கள் வாசிப்போர் களம் வாட்ஸ் அப் குழு வாயிலாக.....

மகிழ்ச்சியான செய்தி நேரு. என் பணி ஓய்விற்குப்பிறகு என் இல்லத்தில் ஒரு சிறு நூலகம் அமைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. இப்போது 2000 புத்தகங்கள் மட்டுமே உள்ளது.இலக்கியம்,சமூகம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே உள்ளது.உயர்கல்வி,போட்டித்தேர்வுகள் பற்றிய புத்தகங்கள் பற்றிய புத்தகங்கள் இனிமேல் வாங்க வேண்டும்.ஒரு நல்ல பட்டியலை தயார் செய்யும்படி தம்பி நேருவை கேட்டுக்கொள்கின்றேன்.