Saturday 28 July 2018

கடந்துபோன காலங்கள்(17)

   கடந்துபோன காலங்கள்(17).....

எனது படங்கள்
எத்தனை எத்தனை
ஒளிப்படங்களாய்
என் மகனின்
கணினி சேமிப்பில்.....

எப்படி எப்படியோ
எடுத்து வைத்திருக்கின்றான்
எனது படங்களை....
உட்கார்ந்த வண்ணம்....
ஓடிய வண்ணம்...
கைகூப்பிய வண்ணம்....
கையைக் கட்டிய வண்ணம்
எனது இணையரோடு
ஒருவரோடு ஒருவர்
சாய்ந்த வண்ணம்
எத்தனையோ படங்களை
எடுத்து வைத்திருக்கிறான்

சென்ற இடங்களின்
நினைவுகள் எல்லாம்
சேமிக்கப்பட்ட
வண்ணப்படங்களாய்
அடைத்துக்கிடக்கின்றன
அவனது கணினி
நினைவுகளில்.....

புத்தகத்தில் போட வேண்டுமா?
முக நூலில் போடவேண்டுமா?
கேட்டுவிட்டால் போதும்
படங்களாய் கொண்டுவந்து
கொட்டுகிறான்
கணினித்திரையில்......
எது வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள் .
எடுத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்கிறான்....
எல்லார் கைகளிலும் செல்பேசி..
செல்பேசிக்குள் நிழற்படம்
எடுக்கும் கருவியென
அனைத்தையும் சாத்தியமாக்கிய அறிவியல்....

எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித்திரையில்
பார்க்க ஆசை !
எனது ஏழு வயதில் இறந்துபோன
அப்பாவின் முகம்
நிழலாகக் கூட நினைவில் இல்லை....
அப்பாவின் புகைப்படம்
இறந்த பின்பு யாரோ ஒருவரால்
வரையப்பட்ட படம் ....
அதில் உயிரோட்டம் இல்லை...
அதனால் உணர்வோட்டமும் இல்லை....

அப்பாவின் மாணவர்கள்....
அப்பாவின் நண்பர்கள்....
அப்பாவின் கைப்பந்து
விளையாட்டின் தோழர்கள்.....
எல்லோரிடமும் கேட்டு
கேட்டுப்பார்க்கின்றேன்.....

சாப்டூர் வாலகுரு ஆசிரியர்
ஆண்டவர் வாத்தியார் என
அன்புடன் அழைக்கப்பட்டவர்
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குமுன்
ஆயிரத்து தொழாயிரத்து
எழுபத்து ஒன்றில் திடீரென
இருதய நோயால் மறைந்து போனவர்....
எங்கேணும் அவரது புகைப்படம்
உங்கள் வீட்டில் இருந்தால்
தனிப்படமோ....இல்லை
குழுப்படமோ இருந்தால்
கொடுங்கள் எனக் கேட்டுக்
கொண்டே இருக்கின்றேன்,,,,,,
எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித் திரையில்
பார்க்க ஆசை !....

                                               வா.நேரு......29.07.2018

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் ஆசை விரைவில் நிறைவேறட்டும் ஐயா

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றி அய்யா, வருகைக்கும் கருத்திற்கும். இன்றைய வாய்ப்பான நிலையையும், அன்றைய வாய்ப்பற்ற நிலையையும் இணைத்துச்சொல்ல நினைத்தேன்.