Sunday 18 November 2018

அண்மையில் படித்த புத்தகம் : வகுப்பறைக்கு வெளியே ! ...இரா.தட்சனாமூர்த்தி

அண்மையில் படித்த புத்தகம் : வகுப்பறைக்கு வெளியே
நூல் ஆசிரியர்              : இரா.தட்சனா மூர்த்தி
வெளியீடு                  : புக்ஸ் பார் சில்ரன் -புதுவை அறிவியல் இயக்கம்,சென்னை-18
முதல் பதிப்பு               : நவம்பர் 2014, இரண்டாம் பதிப்பு : 2015. மொத்த பக்கங்கள் : 64 விலை ரூ 40

                            இந்த நூல் ஆசிரியர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் எனக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தனது பணி அனுபவத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை கட்டுரைகளாக வடித்து நம்முன் சில கேள்விகளை முன் வைக்கின்றார். ஒரு மாணவனோ, மாணவியோ பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்பொழுது, பள்ளிக்கு வராமல் இடை நிற்கின்றார்கள் என்றால் அதற்கு யார் காரணம் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதற்கான விடைகள் என்ன என்பதனை விட அந்தக் குழந்தைகள் ஏன் பள்ளிக்கூடத்திற்கு வராமல் நிற்கின்றார்கள் என்பதனை சமூகப்பார்வையோடு சொல்லக்க்கூடிய புத்தகம் இது.

                       'கனவு ஆசிரியர் ' என்னும் நூலில் எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரி மாநில கல்விமுறையை தமிழகக் கல்விமுறையோடு ஒப்பிட்டு பாராட்டுவார். ஆனால் இந்தப்புத்தகத்தைப் படித்தபின்பு புதுச்சேரி கல்விமுறையிலும் உள்ள சில கோளாறுகளை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. அப்பாவை இழந்த ஒரு மாணவி,வீட்டில் அண்ணன் முறை வைத்து கூப்பிட்டுப் பழகிய ஒருவர் திடீரென்று தனது அம்மாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று தெரிந்தவுடன், உங்களை அண்ணன் என்று சொல்வதா ,அப்பா என்று சொல்வதா எனக்கடிதம் எழுதுவதாக வரும் முதல் கதை 'சுமை',இப்படி இளம்பிஞ்சுகள் இவ்வளவு மனச்சுமையோடு வந்தால் எப்படி படிப்பார்கள் என்னும் கேள்வியை எழுப்பும் கட்டுரை.

                      கல்யாண வீடுகளில் சாப்பிட்ட இலையை எடுத்துப்போடும்  அம்மாவின் பையன் 'பரமசிவம் ', அம்மா கொண்டு வந்து தரும் பாயாசத்தால் 'பாயாசம் பரமசிவம்' ஆகி வகுப்பில் மற்ற மாணவர்களால் கேலிக்கு உள்ளாகும் 'பாயாசம் பரமசிவம் ' இரண்டு மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை. பின்னால் குழந்தைத் தொழிலாளியாக அவனைப் பார்க்கும் நேரத்தில் அம்மாவுக்கு கால் ஒடிய அவளுக்கும் தனக்குமான கஞ்சிக்காக கம்பி கிரில் வேலை செய்வதை சொல்கிறான். பரமசிவம் பள்ளியை விட்டு நின்று போனது யார் குற்றம் ?என்று கேள்வி கேட்கின்றார்.

                   மணல் அடிக்கும் வண்டிக்காரனின் மகனாக பள்ளிக்கு வரும் இருசப்பன் பற்றிய கட்டுரை 'வண்டிக்காரன்' ...பகுதி நேரமாக மணல் அடிக்கும் வேளைக்குப் போகும் இருசப்பன் பின்பு அப்பாவின் உடல் நலக்குறைவால் முழு நேர வண்டிக்காரனாக மாறிப்போவதை இந்தக் கட்டுரை விரிவாகச்சொல்கின்றது. 

                ஒரு பாடத்தில் அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றால் அந்த ஆசிரியருக்கு கேடயமும் பரிசுத்தொகையும் கிடைக்கும் ,எல்லோரும் நூறு சதவீதம் வெற்றி பெற்றால் அந்தப்பள்ளிக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு என அறிவித்த கல்வித்துறையின் செயல்பாட்டை ,நிகழும் நிகழ்வுகளால் விமர்சனம் செய்யும் 'எனக்கு இங்கிலீஷ் வரலை...' என்னும் கட்டுரை புத்தகத்திலேயே மிக ஆழமான கட்டுரை. முடிவாக இந்தக் கட்டுரை முடிவில் சில கேள்விகளைக் கேட்டிருந்தார் நூல் ஆசிரியர் ...அவை பின் வருமாறு...

1.நூறு சதம் வேண்டி மூன்று மாணவர்களைப் பள்ளியை விட்டு விரட்டியது சரியா ?
2. மனித வளத்துறை என்ற பெயரில் உள்ள கல்வித்துறை மதிப்பெண் மட்டுமே மாணவனின் தகுதி தேர்ச்சியாக கருதப்படும் கல்விமுறை சரியா ?
3.அந்நிய மொழி ஆங்கிலத்தைக் கற்க வேண்டி மாணவர்களை கட்டாயப்படுத்தும் நிலையில் ,பல மாணவர்கள் பெயிலாகும் நிலை சரியா ?
4. மூன்று மாணவர்களைப் பள்ளியைவிட்டு துரத்தியது பள்ளியா? ஆசிரியரா?கல்விமுறையா?போதனா முறையா ?பெற்றோரின் அறியாமையா ? அரசின் நிலைபாடா ?அந்நிய மொழி ஆங்கிலமா? நூறுசதம் தேர்ச்சியின் அரசுப் பரிசு திட்டமா? விவாதியுங்கள்...முடிவை வாசகர்களே தீர்மானியுங்கள்... என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்த நூலினை வாசித்த எனது முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலாக " சந்தேகமில்லாமல் ஆசிரியர்தான் காரணம் ' என்று நூலில் விடை எழுதியிருக்கின்றார்.

                      பள்ளிக்கு வரும் பிள்ளைகள் திடீர் திடீரென நின்று போகின்றார்களா? அவர்கள் நிற்பதற்கான காரணம் எத்தனை ஆசிரியர்களுக்குத் தெரியும்? ஏன் நின்றார்கள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கின்றார்களா? தெரிந்தால் அவர்களால் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளால் வகுப்புக்கு வராமல் நின்று போனார்களா? எனப் பல கேள்விகளை வாசிப்பவர்கள் மனதில் எழுப்பும் புத்தகம் இது. பணக்காரர்கள்,பெரிய வீட்டுப் பிள்ளைகள் இந்த மாதிரியான புத்தகங்களை வாசிக்கும் நிலைமையை வகுப்பறைக்குள் கொண்டுவர வேண்டும். கொண்டு வந்தால் அவர்களுக்கும் கொஞ்சம் சமூகத்தைப் பற்றிய புரிதல் கிடைக்கும்.

                     " இந்த நூலைப் படிக்கும்போது மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதாரக்காரணங்கள் மாணவர்களின் இடை விலகல்களுக்குக் காரணமாகிறது என எண்ணத்தோன்றும். ஆனால் நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போய்ப்பார்த்தால் இந்த நூலின் கதாநாயகர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியும் காரணம். குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம் " என அணிந்துரையில் த.பரசுராமன் குறிப்பிடுவதை நூலைப் படிக்கும்போது விரிவாக உணர முடிகின்றது.பள்ளிச்சூழல் பற்றிக் கவலை கொள்பவர்கள், கவனம் கொள்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. 


6 comments:

ரமேஷ்/ Ramesh said...

நன்றி புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு, மிக சிலரே இப்பணியை செய்கின்றனர். தொடரவும்
மீண்டும் நன்றி !!



ரமேஷ்
https://ennizhalbimbam.blogspot.com/

முனைவர். வா.நேரு said...

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நூல்
அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
நன்றி

முனைவர். வா.நேரு said...

அய்யா,வணக்கம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.தாங்களும் பள்ளி அனுபவங்கள், வெவ்வேறு மாணவர்களின் அணுகுமுறைகள், சூழல்கள் இவற்றையெல்லாம் சேர்த்து அனுபவப்பதிவாக ஒரு நூலை படைக்க வேண்டும். உறுதியாக முதல் ஆளாக படித்து விமர்சனம் செய்யும் ஆளாக நான் இருப்பேன்.

vimalanperali said...

நல்ல நூல்! அருமை!

முனைவர். வா.நேரு said...

நன்றி ,வருகைக்கும் தங்கள் கருத்திற்கும். எப்பவுமே அனுபவம் சார்ந்த பதிவுகள் மனதினை ஈர்க்கும்....பெரும்பாலும் அவை உண்மைகளைப் பேசுவதால்...பேரா.அ.மாடசாமி அவர்களின் 'எனக்குரிய இடம் எங்கே ? ' என்னும் புத்தகமும் அருமையான அனுபவ,சமூக நோக்கு பதிவே.....அதனையும் பதிவிடல் வேண்டும் என் வலைத்தளத்தில் ...விரைவில்...