Tuesday 25 December 2018

சாதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.......

சாதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.......

அணமையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப்பெண்கள்
நூல் ஆசிரியர்               :ஓவியா
                                    கட்டுரை (2)
மொத்தம் 16 அத்தியாயங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தின் தலைப்பு "பின்னோக்கி ஒரு முன்னோட்டம் ". களத்தில் நின்ற கருஞ்சட்டைப்பெண்களைப் பற்றி அறிவதற்கு முன் பெண்களின் நிலைமை எப்படி இருந்தது என்பதனை ஒரு வரைபடம் போலவும் ஓவியம் போலவும் எடுத்துக்காட்டுவது இந்தத் தலைப்பின் நோக்கமாக இருக்கிறது. பெண்களின் தலைமையில் இருந்த சமூகம் எப்படி ஆண்களின் தலைமைக்கு மாறியது ? பெண் ஏன் ஆணுக்கு இரண்டாம் தரமான குடிமகளாக உலகம் முழுவதும்  பார்க்கப்படுகிறாள் ? எனும் கேள்வியை எழுப்பி விடை தேடுவதற்காக தோழர் ஏங்கல்சு எழுதிய "குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் " எனும் நூலின் கருத்தினை விளக்குகின்றார்.ஏங்கல்சுவின் கருத்துக்களில் மாறுபடும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக 'டாவின்சி கோட் ' திரைப்படத்தின் மூலம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே தலைமைக்காக ஒரு போர் நடந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தினை சொல்லி அதற்கான காரணங்களையும் குறிப்பிடுகின்றார். " ஆண் தலைமையை விரும்புகிறவர்களாக வரலாற்றில் பெண்கள் " எப்படி மாற்றப்பட்டார்கள் என்பதனையும் விளக்குகின்றார். கருத்தியல் ரீதியாக உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் அடுத்தடுத்து வரலாறு எப்படி நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதனை விளக்குகின்றார்,என்னென்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதனை நாமும் கூட ஊகிக்க முடியும் வகையில் விளக்கம் அளித்திருக்கின்றார் நூலாசிரியர் ஓவியா.

தலைமை ஆணிடம் மாறிய நிலையில் பெண் வாரிசை உருவாக்குபளாக, முதல் அடிமை இனமாக  மாற்றப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு உலகில் உள்ள பெண்களுக்கு எல்லாம் ஒரு ஆணிற்கு வாரிசாக  பிள்ளை பெற்றுத்தரவேண்டும் என்பது பிரச்சனை ஆனால் இந்தியாவில் ? " இங்கு ஒரு ஆணிற்கு பிள்ளை பெற்றுத்தருவது மட்டும் அவள் வேலை அல்ல.அதையும் தாண்டி ஒரே சாதிக்குள் பிள்ளை பெற்றுத்தரவேண்டும்.இது உலகில் மற்ற பெண்களுக்கு இல்லாத பிரச்சனை " என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் இங்கு சாதி மட்டும் பிரச்சனை அல்ல,குடும்பம் என்னும் அமைப்பும் பிரச்சனை என்பதனை விளக்கிச்செல்கின்றார்.சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்பவர்கள் கூட குடும்பம் என்னும் அமைப்பு ஒழிய வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வதில்லை.குடும்பம் இல்லையென்றால் சமூகம் கெட்டுவிடாதா? ஒழுங்கு குலைந்து விடாதா? என்னும் கேள்வி எழுப்பப்படுகின்றது.அதனால்தானோ என்னவோ நூல் ஆசிரியர் ஓவியா 'குடும்பம், தனிச்சொத்து ' என்னும் ஏங்கல்சின் கருத்தில் இருந்து புத்தகத்தினை  இருந்து ஆரம்பித்திருக்கின்றார் போலும். குடும்பம் வேண்டுமா ? வேண்டாமா? என்பது அடுத்த நிலை, ஆனால் இப்போது இருக்கும் குடும்ப அமைப்பு முறை என்பது பெண்களை ஒடுக்குவதற்கான கருவியாகத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றது என்பது கண்கூடு. 

சாதியென்னும் இழிவு நம்மைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறது. "சாதி என்னும் தாழ்ந்தபடி/நமக்கெல்லாம் தள்ளுபடி/ சேதி தெரிந்துபடி இல்லையேல்/ தீமை வந்துடுமே மறுபடி " என்றார் புரட்சிக்கவிஞர். எப்படியாவது வர்ணத்தின் அடிப்படையிலான சாதி அமைப்பினைக் கட்டிக்காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வரிந்துகட்டி நிற்கின்றார்கள். " ஆயிரம் உண்டிங்கு சாதி " எனக் குருமூர்த்தி சாதி அமைப்பினால் தொழில் வளர்கிறது என்று பம்மாத்துக்காட்டுகிறார். ஆனால் குடும்பம் குடும்பமாக செய்துகொண்டிருந்த சிறுதொழில்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அழிந்து போவதற்கான வழியை செல்லாத நோட்டு அறிவிப்பு மூலமும் ஜி.எஸ்.டி. என்னும் அறிவிப்பின் மூலமும் செய்துவிட்டு இப்போதும் வெட்கமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு நோக்கம் பார்ப்பனிய மேலாண்மையை நிலை நிறுத்துவது. அதற்கு பார்ப்பனர்களுக்கு சாதி வேண்டும், சாதி அமைப்பு வேண்டும். ஆனால் சாதியால் ஒடுக்கப்படுபவர்களுக்கு,துன்பப்படுபவர்களுக்கு சாதி எப்படியாவது ஒழிய வேண்டும்.சாதி ஒழியவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பளிச்சென்று புரியும் வண்ணம் எப்போது சாதி ஒழியும் ? என்பதற்கு தனது கருத்தை ஓவியா பகிர்ந்திருக்கின்றார் பக்கம் -5-ல். " அம்மா, அப்பாவிற்குத் தன் பெண்ணையோ பையனையோ யாருக்கு கட்டிக்கொடுக்கவேண்டும் என்னும் நிலைக்குப் பெயர்தான் சாதி. நாம் என்றைக்கு சாதியை இப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் சாதியை ஒழிக்க முடியும்". இந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பித்ததுதான் சுயமரியாதை இயக்கம். கருப்புச்சட்டை பெண்கள் அப்படித்தான் உருவாகின்றார்கள். தங்களது துணையை அப்பா,அம்மா சொல்லும் தேர்வினைத் தவிர்த்து அல்லது எதிர்த்து தேர்ந்தெடுக்கின்றார்கள்.இதனை விரிவாக விளக்க இயலும். 

பெண்ணடிமைத்தனத்திற்கும் சாதி அமைப்பிற்கும் உள்ள உறவை நுட்பமாக புரிந்துகொள்வதன்மூலம் மட்டுமே நாம் அடுத்த கட்டத்திற்கு நகர இயலும்.ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் 'தமிழனெக்கென்று ஒரு நாடில்லை " என்னும் புத்தகத்தில் தனது பேட்டியில் இன்றைய கனடா நாட்டில் வாழும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாது என்று சொல்லியிருப்பார். புலம் பெயர்ந்து வாழும் நிலையில் இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது துணையைத் தானே தேர்ந்தெடுக்கின்றார்கள். ஏனெனில் மேலை நாட்டில் அதுதான் வழக்கமாக இருக்கின்றது. நூல் ஆசிரியர் சொல்வது போல மேலை நாட்டில் பெண்கள், ஆண்கள் நான் யாரோடு வாழ்வது என்பதை எப்படி என் பெற்றோர் தேர்ந்தெடுக்க முடியும் ? அவர்களுக்கு எப்படித் தெரியும் ? என்று கேட்கிறார்கள்,வியப்படைகின்றார்கள். ஆனால் இந்தியாவில் இதற்கு நேர் எதிராக உல்டாவாக இருக்கிறது. எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் தனது பெண்ணுக்கு இணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாது, நாம்தான் தேர்ந்தெடுத்து தரவேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்கிறது. இந்த எண்ணம் தப்பு, மாற வேண்டும் என்பதற்கான உழைப்புதான் கருப்புச்சட்டை பெண்களின் உழைப்பு. அதுதான் சுயமரியாதை இயக்கப்பெண்களின் துவக்கப்புள்ளி எனச்சொல்கின்றார் நூல் ஆசிரியர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "சாதியை ஒழிக்கும் வழி " புத்தகத்தையும் அதனை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்த தந்தை பெரியார் பற்றியும் , மேயோவின் புத்தகம் பற்றியும் எழுதுகின்றார். இவர்களின் நினைப்பு எப்போதும் சிற்றின்பம் பற்றித்தான் என்று அந்த அம்மையார் எழுதியது பற்றியும், காந்தியார் கொடுத்த மறுப்பு பற்றியும் ஆனால் மேயோ அம்மையார் கொடுத்த புள்ளி விவரங்கள், குழந்தை மணம் பற்றிய செய்திகளை எல்லாம் கொடுக்கின்றார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்த குழந்தை மணம், விதவைகள் நிலமை, தேவதாசி முறை போன்றவற்றின் கொடுமையான தன்மைகளை குறிப்பிட்டு இப்படிப்பட்ட நிலைமையில் தோன்றியதுதான் ,இவற்றைக் களைவதற்காக தோன்றியதுதான் சுயமரியாதை இயக்கம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்."இதற்கான ஒரு இயக்கமாக ,இந்தச்சமூகக் கொடுமைகளைக் களைவதற்கென்றே தொடங்கப்பட்ட இயக்கம் என்பது பெரியார் தொடங்குவதற்கு முன்னால், சுயமரியாதை இயக்கத்திற்கு முன்னால் வேறு ஒரு இயக்கம் கிடையாது " பக்கம்(11) என்பதனை பதிவு செய்கின்றார் நூலாசிரியர் ஓவியா.இதோடு கிறித்துவ மிசினிரிகள் வந்ததால் ஏற்பட்ட மாற்றத்தையும்,காந்தியார் தனது விடுதலைப் போருக்கு பெண்களை அழைத்ததையும் குறீப்பிட்டு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு அடுத்த அத்தியாயமான தொல்காப்பியமும் மனுதர்மமும் என்னும் அதிகாரத்திற்கு முன்னுரையாக செய்திகளைக் கொடுக்கின்றார்.இந்த தலைப்பைப் புரிந்துகொள்ள தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? , அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 'சாதியை ஒழிக்கும் வழி',கோவை அய்யாமுத்து அவர்களின் "மேயோ கூற்று மெய்யோ? பொய்யோ ? ", தோழர் ஏங்கல்சுவின் " குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்' போன்ற நூல்களை மேற்கோள்களாகக் காட்டியிருக்கின்றார். தோழர் ஞானையாவின் "சாதியை ஒழிக்க இயலுமா ? " ,பெருமாள் முருகன் தொகுத்த " நானும் சாதியும் " என்னும் புத்தகமும் இந்தத் தலைப்பிற்கு உதவும் என்பது என் கருத்து, இந்தப் புத்தகங்களை வாசித்துவிட்டு , இந்தத் தலைப்பை வாசிப்பது இன்னும் கூடுதல் வெளிச்சத்தை நமக்குக் காட்டும் வகையில் அமையும். 

                                                                                    ....தொடரும் .... 

  








2 comments:

கருப்பையா.சு said...

இந்தியாவில் சாதியை ஒழிக்க இயலுமா ? என்பது மிகப் பெரிய கேள்வி!.

தந்தை பெரியாருக்குப் பிறகு சாதி ஒழிப்பு பணியில் பெரும் பின்னடைவு எழுந்துள்ளது. அதனால் தற்போது இந்தியா முழுவதும் ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் , பாரதீய ஜனதா அரசினால் பார்ப்பனீயம் மேலோங்கியுள்ளது தான்.

பெண்தான் சாதியத்தின் ஆணிவேராக இருக்கிறாள். அதனால், பெண்ணடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்காமல் சாதியத்தை ஒழிக்க முடியாது. இந்தப் பொறுப்பை யார், எவ்வாறு நிறைவேற்றுவது?. இதற்கு விடை தெரிந்து விட்டால் , சாதியத்தை ஒழிப்பதற்கான பாதையும் தெரிந்து விடும். அதனால் கருஞ்சட்டைப்பெண்கள் பெறுக வேண்டும்.

முனைவர். வா.நேரு said...

"பெண்தான் சாதியத்தின் ஆணிவேராக இருக்கிறாள். அதனால், பெண்ணடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்காமல் சாதியத்தை ஒழிக்க முடியாது."உண்மைதான். கொடுப்பதல்ல, அவர்களாக உணர்ந்து சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளும் நிலை வரவேண்டும். சாதி வெறியைத் தூண்டி விட்டு குளிர்காய பார்ப்பனியம் எப்போதும் போல திட்டமிடுகிறது. அதற்கு சில சாதி அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. இவர்களும் முரட்டு மீசைகளோடு முட்டாள்தனமாக பேட்டி கொடுக்கின்றார்கள், வாட்சப் பதிவுகளில் வெறியூட்டுகிறார்கள். சாதி நமக்கான இழிவு, நம்மை அடிமைப்படுத்துவது என்பதனை உணர்ந்துகொள்ள கறுப்புச்சட்டை பெண்களால் இயலும். எனவே அவர்கள் அதிகமாக வேண்டும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.