Friday 28 December 2018

'நெருப்பினுள் துஞ்சலில்' ........ மு.சங்கையா


தோழர் நேரு,

              "நெருப்பினுள் துஞ்சல்  " சிறுகதை தொகுப்பை படித்து முடித்தபின் பல்வேறு சூழல்களில் வாழும் மனிதர்களை சந்தித்து உரையாடி வெளியில் வந்தது போல உணர்ந்தேன்.கதையில் வரும் அத்தனை மனிதர்களும் நமக்கு நெருக்கமானவர்களே.அன்றாட வாழ்வில் தினமும் சந்தித்தாலும் நம் நினைவுப் பாசறையில் அவர்கள் என்றும் நின்றதில்லை. எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்பதற்கு மேல் அவர்களை பற்றிய எந்த சிந்தனையும் வருவது இல்லை.

              நம் வாழ்வில் தினம் தினம் வந்து போனாலும் அவர்களது அன்றாட வாழ்க்கைக்குள் கண்ணுக்கு தெரியாத சோகங்கள் மண்ணுக்கு அடியில் உணவுக்காக போராடும் வேர்களை போல போராடிக்கொண்டிருப்பதை  போராடிக்கொண்டிருப்பதை யாரும் ஒரு கணம் கூட எண்ணிப்பார்ப்பதில்லை.அவர்களை கண்டும் காணாதது போல் எளிதாக கடந்து போய்விடுகின்ற நிலையில் சமூகம் கண்டு கொள்ளாத அந்த எளிய மனிதர்களை அருகில் சென்றும் தொலைவில் நின்றும் ,தேடிப்போய் பார்த்தும் அவர்களோடு உரையாடியும் அதனால் பெற்ற அனுபவங்களை கதைக்கான களமாக மாற்றி அவர்களை அந்த கதையின் பாத்திரங்களாக வலம் வர செய்திருப்பதும் 'நெருப்பினுள் துஞ்சல்'தொகுப்பிற்கான வெற்றியாகவே நான் கருதுகிறேன்.



              தினமும் சந்திக்கும் அதே மனிதர்களை உங்கள் கதையிலும் காணும்போது அடடே இவர்களை ஏற்கனவே சந்தித்திருக்கிறோமே என்கிற உணர்வே எழுகிறது.இந்தக் கதைகளில் வரும் எவரும் கற்பனை அல்ல எல்லாமே நிஜம்தான்.மு.வ.வின் எல்லா புதினங்களிலும் மு.வ. ஒரு பாத்திரமாக வந்து நல்லுரை வழங்குவதைப் போலவே நெருப்பினுள் துஞ்சலுக்குள்ளும் நல்லதை போதிக்கும் ஆசானாக நீங்கள் வருவதும் வாழ்க்கைக்கான கருத்துக்களையும் ஒரு சில கதைகளில் பகுத்தறிவுவாதங்களை தொட்டுப்பேசுவதும் சுவையாகவே இருக்கிறது.

              "அடி உதவுறது மாதிரி" கதையில் படிக்க மறுக்கும் பையனிடம் "  நீச்சல் கத்துக்கிறது,சைக்கிள் ஓட்டக்கத்துகிறது மாதிரிதான் படிக்கிறதும். விழுந்து விழுந்து எந்திரிச்சு,சைக்கிள் ஓட்டப்பழகினது மாதிரி முயற்சி பண்ணிக்கிட்டே இரு. கணக்கு வந்திரும் "என்று எளிமையாக புரிய வைப்பது அழகு.

               "முட்டுச்சுவரில் " படிப்பு என்பது ஒன்றும் வாழ்க்கையை விட பெரிதல்ல,ஒத்துப்போகலைன்னா தலை முடி போச்சுன்னும் போயிரணும்.ஒரு பாதையிலே போறோம்,முட்டு சுவர்.இதுக்கு மேலே போனா போக முடியாதுன்னு உணர்ந்து திரும்பி வேற பாதையிலே போறதில்லையா.அதுபோல தான் படிப்பும் என்று மண்ணின் வாசனையோடு கதையை நகர்த்துவது அருமை.

               "அடி உதவுற மாதிரி" யில் முயன்று படிக்க சொல்வதும் ,"முட்டுச்சுவரில் " ஒத்துப்போகவில்லை என்றால் விட்டுவிட அறிவுறுத்துவதும் முரணாக தோன்றினாலும் சூழல்கள்தான் முடிவைத் தீர்மானிக்கிறது என்கிற நோக்கில் இரண்டுமே உண்மையை உரத்து பேசுவதாகவே தோன்றுகிறது.இப்படி எல்லா கதைகளிலும் உங்கள் அனுபவங்கள் கருத்து செறிவோடு வெளிப்படுவதைக் காண முடிகிறது.

               "சீr சுமந்து அழிகிற சாதி சனமே " என்கிற தலைப்பே அவலத்தின் சுவையை சுமந்து வந்து நெஞ்சுக்குள் இறக்கி வைத்தது போல் இருந்தது. ...வெளிச்சத்தில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளாக இருக்கும் இந்த சனங்களுக்கு இந்த ஒரு கதை போதாது,ஒரு இயக்கமே தேவைப்படுகிறது.

              "ஒரு வளாகம்,ஒரு நாய், ஒரு பூனை "- இது ஒரு வழக்கமான கதை அல்ல. பகை முரண் கொண்ட நாயையும் பூனையையும் நெருக்கடிகள் நட்பாக்குவதும், நட்பாகி சேர்ந்து நடப்பதும்,அருகருகே படுத்து இருப்பதும் எப்படி என்கிற புதிரோடு கதை தொடங்கி பின் கணவன் மனைவி உறவுகளோடு முடிச்சு போட்டு அதை மெல்ல அவிழ்ப்பதில் ஒரு படைப்பாளனின் ரசனையைக் கண்டேன். முதல் shot ல் நாய்,பூனை. அடுத்த Shot ல் கணவன் மனைவி சண்டை ,இறுதியில் சிக்கல் மிகுந்த இல்லற உறவுக்கு தீர்வு என்று கதை முடியும்போது ஒரு குறும்படத்தின் சாயலைப் பார்த்தேன்....எல்லா உயிரினங்களின் சின்ன சின்ன அசைவுக்குள்ளும் ஒரு வாழ்க்கை புதைந்து கிடக்கிறது.கூர்ந்து கவனித்தால் அதுவே மனிதனுக்கு பாடம் சொல்லும் வேதமாகும் என்பதை சுருக்கமாக கூறியிருந்தால் இன்னும் சுவை கூடி இருக்கும்.

               ஜாதகத்தை நம்பாதே என்கிற பகுத்தறிவு கருத்தை "யார் யார் வாய்க்கேட்பினும் " கதையின் மூலம் சொல்ல முயன்றிருப்பது சரிதான். ஆனால் அது ஒரு துன்பியலில் முடிந்து அவலத்தை அதிகமாக்கி சொல்ல வந்த கருத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளியின் உரிமைக்குள் தலையிடுவது சரி அ;ல்லதான் ஆனாலும் செல்வி ஏன் சாக வேண்டும்? ...அவள் கருப்பையாவை மறுமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து காட்டி ராசி,நட்சத்திரம், ஜாதகத்தின் மீது சம்மட்டி அடி கொடுத்திருந்தால் பெரியாரும் மகிழ்ந்திருப்பாரே.ஜாதகம் பொய் என்று நிரூபிக்க ஒரு பெண்ணைத்தான் பலியிட வேண்டுமா... ? எதிர்மறை அணுகுமுறை நோக்கத்தை பல நேரங்களில் சிதைத்து விடுவதுண்டு.

               பொதுவாக கூற வேண்டுமென்றால் ஒவ்வொரு கதையும் சமூகத்தின் கீழடுக்கில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது. கூடுதலாகவும் இல்லை.குறைவாகவும் இல்லை.சரளமான நடை.வெகுளித்தனமான மண்ணின் மனம் வீசும் உரையாடல்கள் கதைக்கு நெருக்கமாக கொண்டு செல்ல உதவுகிறது. சிறுகதை நெடுங்கதையாக மாறுவதை குறைத்திருக்கலாம். கதைக் கரு சிறப்பு ஆனால் ஆழமின்றி மெதுவாக நகர்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.

             சமூக மாற்றத்தை விரும்பும் ஒரு படைப்பாளி உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதில் நிறைவு கொள்ள முடியாது.அது ஒருவகை என்றாலும் அதை எழுதிக்குவிக்க வேறு பலர் உண்டு.சமூகப் படைப்பாளிகள் எளிய மனிதர்கள் தங்களை நோக்கி வரும் சவால்களை எப்படி துணிவோடு எதிர் கொள்கின்றனர் வெற்றி பெறுகின்றனர் என்பதைக் கதைக்களமாக கொண்டு நம்பிக்கை விதைகளை தூவ வேண்டும்.
           "நெருப்பினுள் துஞ்சல் " கதை தொகுப்பிலுள்ள பல கதைகள் எதார்த்தத்தை பிரதிபலிப்பது உண்மைதான் என்றாலும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை குறைந்த அளவு கூட விதைக்கத் தவறிச்செல்கிறது.அதே வேளையில், ஐயோ பாவம் என்கிற பச்சாதாப உணர்வு மேலோங்கி வருவதும் உண்மை. பச்சாதபமும்,அனுதாபமும் இயலாமையில் எழும் புலம்பல்களும் கதைக்குள் ஊறுகாயாக இருப்பதில் தவறல்ல ஆனால் அதுவே உணவாக இருக்கக்கூடாது.சமூக சிக்கல்களை அது தீர்க்க உதவாது என்பது எனது கருத்து.

            எழுத்தாற்றலும் சமூக நீதிக்கோட்பாட்டின் மீதுள்ள பற்றும், சமூகத்தின் மீதான அக்கறையும் உங்களை மிகச்சிறந்த சமூக படைப்பாளியாக நிச்சயம் உருவாக்கும்.'நெருப்பினுள் துஞ்சலில்' அதற்கான அறிகுறிகளை என்னால் காணமுடிகிறது.

                                              வாழ்த்துகள்
                                                                                                                         அன்புடன்
மு.சங்கையா ,மதுரை  


தோழர் மு.சங்கையா , பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழக அரசின் விருதுபெற்ற " லண்டன் ஒருபழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம் " மற்றும் "பன்னாட்டுச்சந்தையில் பாரதமாதா " என்னும் நூல்களின் ஆசிரியர். தொழிற்சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய தோழர். 'நெருப்பினுள் துஞ்சல் 'நூலை முழுவதுமாகப் படித்து ,தனது மதிப்புரையைக் கொடுத்துள்ளார். தோழர் சங்கையா அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன் 
வா.நேரு


                                                                                                                                        

No comments: