Saturday 19 January 2019

ஒளவையின் கூற்றை அடித்துத் துவைக்கிறார் அய்யா பெரியார்..

அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது என்றார் ஒளவை...
ஒளவையின் கூற்றை
அடித்துத் துவைக்கிறார் அய்யா பெரியார்..
கொடிது ! கொடிது! என்று கூறடா
மானுடப்பிறப்பை எனக் கூறுகிறார்....

தேடித் தேடி இரையைத் தின்னும்
இணையோடு குதுகலிக்கும்
சில நேரங்களில் துன்புறும்
ஆனால் துன்பமிது என்று உணரும்
கொடுமை விலங்குகளுக்கு இல்லை

குதிரையை வண்டியில் பூட்டி நோகடித்தாலும்
காளையைப் பிடித்து காயடித்தாலும்
துன்புறும் ஆனால் துன்புறுகிறோமே எனும்
துயர உணர்ச்சி அவைகளுக்கு உண்டோ....

நாளைக்கு வேண்டுமே எனும் கவலை உண்டா?
போதாது போதாது எனும் பேராசை உண்டோ?
விலங்குகளிடம் ..

அடப்போடா, இத்தனையும் கொண்ட மனிதா,
நீதான் உலகில் இழிந்த பிறவி போ,போ
என்று சொல்கிறார்....

கவலை இல்லா மனிதரில்லை...
பேராசை இல்லா மானிடப்பிறப்பு இல்லை
அட இவைகள் கூட இயற்கைத் தடைகள்....

செயற்கைத் தடைகள் எத்தனை? எத்தனை?
ஆளுக்கொரு கடவுள்....
அவரவர் விருப்பப்படி வணங்கும் முறைகள்....
ஒன்றிணையா விடாது துரத்தும்
சாதிகள்...மதங்கள்..சாத்திரங்கள்...குப்பைகள்...
பார்ப்பானுக்கு கொட்டி அழவே
எத்தனை சடங்குகள்...விழாக்கள் ...
அரசு வசூலிக்கும் வரிகள் அறிவாய் நீ
அவாள்கள் வசூலிக்கும் வரிகள் அறிவாயோ நீ?

பகுத்து உணரும் அறிவு உண்டு உனக்கு
அட அதனைப் பயன்படுத்தும்
அறிவு உனக்கு உண்டோ ?
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என
எந்த வகையில் குதுகலிக்கிறாய் நீ?

பெரியார் அன்றும் இன்றும்
புத்தகத்தைத் திறந்த உடனே
வந்து விழும் வினாக்களுக்கு
விடை சொல்வார் யாருமுண்டோ...சொல்வீரே....



                                                                                                        வா.நேரு
                                                                                                          19.01.2019


2 comments:

கருப்பையா.சு said...

ஒளவையாரின் பார்வை கருத்தியல் சார்ந்தது. தந்தை பெரியாரின் பார்வை பகுத்தறிவு பாதை ; எதிராகத் தான் இருக்கும்.

முனைவர். வா.நேரு said...

உண்மை. வாய்ப்பு இருக்கும்போது ஒளவையின் உளவியலை அவரின் பாடல் கருத்து கொண்டு பதிவிடுங்கள். நன்றி பார்வைக்கும் கருத்திற்கும்.