Saturday 12 January 2019

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்.....(4)...ஓவியா

ண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
                                   கட்டுரை (4)
அண்மையில் எழுத்தாளர் சமஸ் அவர்கள் " பெரியாரைப் புரிந்து கொள்வது எப்படி ? " என்று தி இந்து தமிழ் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நல்ல கட்டுரை. இந்தக் கருஞ்சட்டைப் பெண்கள்   நூலின் ஆசிரியர் ஓவியா அவர்கள் இந்தப் புத்தகத்தில் " காந்தியாரைப் புரிந்து கொள்வது எப்படி? -அதுவும் பெண்ணியல் நோக்கில் " என்று தலைப்புக் கொடுக்கும் வண்ணம் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதன் தலைப்பு " இந்தியப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் பிதாமகனா காந்தியார் ? " என்னும் கட்டுரை.  சங்க கால இலக்கியத்தில் இருந்து ஆரம்பித்து பெண் கல்வி பற்றி ஒரு முன்னோட்டத்தை,வரலாற்றை சொல்லும் நூல் ஆசிரியர் ஓவியா காந்தியின் போராட்ட களத்தில் பெண்கள், தந்தை பெரியாரின் போராட்ட களத்தில் பெண்கள் என இரண்டு பார்வைகளை வைக்கின்றார்.இரண்டையும் வேறுபடுத்திக்காட்டும் விதம் புதுமை.

காந்தியைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. நமக்கு காந்தியார் கொள்கைகளில் மாற்றுக்கருத்து உண்டே தவிர, அவர் மீது மரியாதை உண்டு. அவரின் எளிமை, உண்மைத்தன்மை போன்றவற்றில் இன்றைக்கும் எனக்கு ஈர்ப்பு உண்டு.ஆனால் பெரியாரியல்,அம்பேத்கர் இயல் நோக்கில் விமர்சனப்பார்வை எப்போதும் உண்டு.காந்தியார்  தெரிந்துதான் குழப்பினாரா? அல்லது தெரியாமல் குழப்பினரா ? என்பது நம்மையே குழப்பிவிடும் கேள்வி. விவாதத்துக்குரியது.ஓவியா இந்த நூலில் அதனைத் தெளிவுபடுத்துகிறார். காந்தியாரின் நம்பிக்கை என்பது எதன் அடிப்படையலானது என்னும்  உண்மை புரிந்தால் நம்மால் காந்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

" காந்தியாரைப் போலி மனிதராகப் பார்க்கவில்லை.அவர் போலியான வார்த்தைகளை உச்சரிக்கவில்லை.உண்மையாகவும் ,உணர்வு பூர்வமாகவும் இவ்வாக்கியங்களை அவர் சொல்கிறார். 'மதத்தில் இருந்து ஒரு நொடி கூட என்னைப் பிரிக்க முடியாது'. என்னுடைய அரசியலாக இருக்கட்டும், என்னுடைய நடவடிக்கைகளாக இருக்கட்டும். அவை என்னுடைய மதத்திலிருந்துதான் வருகின்றன.'என்று அவர் சொல்கிறார். அவருடைய மதம் என்பது இந்து மதம்...." மதத்தை எதிர்க்காமல் பெண் விடுதலையைப் பேச முடியுமா? அப்படிப் பேசினால் அது உண்மையானதாக இருக்குமா ?என்பதுதான் நாம் அடிப்படையாக வைக்கின்ற கேள்வி". எந்த மதமாக இருந்தாலும் மதத்தை நான் உண்மையாகப் பின்பற்றுகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவர் பெண் விடுதலைக்கு எதிரான மன நிலை உள்ளவர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொள்ள வேண்டும். சாதியை எதிர்த்தால் நமது நாட்டில் ஆணவக்கொலையில் முடிகின்றது. அயல் நாடுகளில் மதத்தை எதிர்த்தாலும் ஆணவக்கொலையில் முடிகின்றது. 18 வயதான 'ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்' -சவூதி அரேபியப் பெண் இன்றைக்கு இஸ்லாத்தில் இருந்து நான் விடுபட்டுக்கொண்டேன், எங்கள் நாட்டு சட்டப்படி என்னைக் கொன்று விடுவார்கள், எனக்கு அடைக்கலம் கொடுங்கள் என்று கனடாவில் தஞ்சம் புகுந்திருக்கின்றார். எங்கள் குடும்பத்தினரே என்னைக் கொன்று விடுவார்கள் என்று சொல்கின்றார்.எனவே எவராக இருந்தாலும் ஈரோட்டுக்கண்ணாடியில் பார்த்தால், மத ஆதரவாளர் என்றால் பெண் விடுதலைக்கு எதிரானவர் எனப்பொருள். காந்தியார் தன்னுடைய அரசியல், உண்ணல், உடுத்தல்,உறங்கல், பேசுதல்  என அனைத்தும் தன்னுடைய மதத்திலிருந்துதான் வருகின்றது என்று சொல்கின்றார். எனவே  ஒரு அளவிற்கு பெண்ணுக்கு உரிமை  வேண்டும் எனச்சிந்தித்தவர் காந்தியார் எனக்குறிப்பிடுகின்றார்.   

 "காந்தியார் எவ்வாறு ஒருபுறம் தாழ்த்தப்பட்டோர் விடுதலையை முன்னிறுத்தி பேசிக்கொண்டே மற்றொரு புறம் அவர்களை அடிமைப்படுத்துகிற வர்ணாசிரமத்தை ஆதரித்தாரோ அதே போல்தான் பெண்கள் விசயத்திலும் அவரது எண்ணப்போக்கு இருந்தது. இது காந்தியாரின் முரண்பட்ட சிந்தனைப்போக்கு. அவருடைய மகன், தனது மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ள விரும்பி  அவரிடம் கேட்டபோது " உன்னைப்போலவே திருமணமாகி ஒரு குழந்தையுடனிருக்கும் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்துகொள் ' என்று சொல்கின்ற காந்தியாரைப் பார்த்து வியக்கின்ற நேரத்தில் ,அவரது மகன் ஒரு இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை கேள்விப்பட்டவுடன் எதிர்க்கின்ற காந்தியாரை எப்படி புரிந்து கொள்வது என்று நாம் திகைக்க வேண்டியிருக்கிறது ...." பக்கம்(34).. 

" ஒரு பெண் ஜாதிக்கும் மதத்திற்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றத்தையும் விரும்பாத காந்தியார்,பெண்கள் படிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கிறார்  அது எப்படி சாத்தியம் ? எனக் கேள்வி கேட்கும் நூல் ஆசிரியர் அது ஏன் சாத்தியமில்லை என்பதற்கான காரணங்களை விளக்கியிருக்கின்றார், இன்றைய அமைப்பு என்பது ஆணாதிக்க அமைப்பு, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் அமைப்பு. " நமது நோக்கமெல்லாம் தத்துவார்த்த ரீதியாக இந்த அமைப்பைக் கேள்வி கேட்கின்ற தலைவர்கள் யார் இருந்தார்கள் என்பதுதான்.எனக்குத்தெரிந்த வரையில் பெரியார் ஒருவரே அந்த இடத்தை மிகச்சிறப்பாக நிரப்புகிறார். நாம் இதுவரை பார்த்த அந்த வரலாற்றில் பெண்ணடிமை தொடங்கிய மூலத்தை கேள்வி கேட்டவராக அவர் மட்டும்தான் இருக்கிறார்.திருமண அமைப்புக்கு வெளியே நின்ற பெண்கள்தான் சாதனையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.பெரியார் ஒருவர்தான் அந்த மூலத்திற்கு வருகிறார். அவர் கூறுகிறார்."திருமணம் என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்படக்கூடிய சமுதாயம் வர வேண்டும் " என்று. "பெண் விடுதலைக் கோரிக்கைகளை பகுதி பகுதியாக பலர் முன்வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவற்றை ஆணிவேரிலிருந்து தொட்ட,தொடர்ந்து பயணித்த இயக்கமாக பெரியார் இயக்கம் இருந்தது ..." எனக்குறிப்பிடுகின்றார்.

உலகப் பெண் விடுதலை இயக்கத்திற்கும்,இந்திய பெண் விடுதலை இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டும் ஓவியா,இரண்டுக்கும் உள்ள மொழி வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.மாற்றி யோசிக்க சொல்கிறார் நம்மை. ஏன் இப்படி எனச்சிந்திக்கவும் சொல்லி அதற்கான விடையையும் நூல் ஆசிரியரே கூறுகின்றார். வர்ணாசிரமம் என்பது வெறுமனே சாதி வேறுபாட்டை நிலை நிறுத்துவது மட்டுமல்ல, பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துவது என்பதைச்சொல்கிறார். " எப்படி வர்ணாசிரமம் பார்ப்பனர்களைத் தூக்கி நிறுத்துகிறதோ,அப்படியே ஆண்களையும் தூக்கி நிறுத்துகிறது " ...அந்த வர்ணாசிரமத்தை முழுமனதோடு ஆதரித்தவர் காந்தியார் என்பதனை வலியுறுத்துகின்றார்.
காந்தியார் 'உடல் ரீதியாக பெண் ஆணுக்கு இணையானவள் 'என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றார்.பெண்களைப் பொறுத்தவரையில் காந்தியாரின் கோட்பாடும் வர்ணாசிரமக் கோட்பாடும் ஒன்றுதான் எனச்சொல்கின்றார். இதற்கு நேர் எதிரானது தந்தை பெரியாரின் புரிதல்...ஒரே வாக்கியத்தில் 'வீட்டிற்கு ஒரு அடுப்படி, ஆணுக்கு ஒரு பெண் என்கிற அமைப்பை என்று  மாற்றுகிறாயோ அன்றுதான் பெண்ணுக்கும் விடுதலை, ஆணுக்கும் விடுதலை ' என்று சொல்கின்றார். இது இன்னொரு எல்லை என்பதையும் குறிப்பிட்டு சொல்லி விளக்கியிருக்கின்றார்.காந்தியாரின் கொள்கையைப் பற்றியும் அவர் ஏன் அகிம்சைப்போரட்டத்தில்,சுதந்திரப்போராட்டத்தில் பெண்களை பங்குபெறச்செய்தார் என்பதைப் பற்றியும் நூல் ஆசிரியரின் பார்வை தனித்தன்மையாக இருக்கிறது.இதனை திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் மிகச்சிறப்பாக இந்தப் புத்தகத்தின் வெளியீட்டின்போது தனது உரையில் குறிப்பிட்டார்.

குடும்பத்திலிருந்து தொடங்கினார் என்னும் தலைப்பிட்டு, தந்தை பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மா பற்றியும்,அன்னை நாகம்மையார் பற்றியும் அன்னை நாகம்மையார் அவர்களை நெறிப்படுத்த தந்தை பெரியார் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படி அய்யா பெரியார் அவர்கள் முயற்சி எடுத்திருக்காவிட்டால்,அப்பேற்பட்ட நாகம்மையார் கிடைத்திருப்பாரா என்பதனைக் குறிப்பிடுகின்றார்.கள்ளுக்கடை மறியல், அன்னை நாகம்மையார் அவர்கள் இறந்தபோது பெரியாரின் இரங்கலுரை போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கின்றார்.தந்தை பெரியார் அவர்களின் தங்கை கண்ணம்மா பற்றி தனி அத்தியாயம் இருக்கிறது. அதனைப் போலவே மூவலூர் இராமமிர்தம் அம்மையார்(அரிய பல தகவல்களோடு ஒரு 17 பக்க கட்டுரை) பற்றிய கட்டுரை பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது . மூவலூர் இராமமிர்தம் அம்மையாரின் நூலிற்கு முன்னுரை எழுதியவர் ஒரு பெண்,பொருள் உதவி செய்தவர் ஒரு பெண், மற்றும் அவரின் போராட்ட முறைகள்,எந்த நிலையில் இருந்து அவர் பொதுப்பணிக்கு வந்தார், எப்படி சமாளித்தார் என விரிவான தகவல்களோடு அந்தக் கட்டுரை உள்ளது.  முத்துலெட்சுமி அம்மையாரின் மவுனம் பற்றிய கட்டுரை, குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ்,வீரம்மாள், டாக்டர் எஸ்.தருமாம்பாள்,நீலாவதி அம்மையார்,தொடரும் வீராங்கனைகள், பார்ப்பனியப் பெண்களின் சாட்சியம் என்று தொடர் கட்டுரைகளைக் கொடுத்திருக்கின்றார்.ஒவ்வொரு கருஞ்சட்டைப் பெண் தலைவரைப் பற்றியும் அவர் கொடுத்திருக்கும் தகவல்களும் விவரிப்பும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பேச்சாளர்கள் கட்டாயம் படித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டுரைகள் அவை.எப்பேர்ப்பட்ட கருஞ்சட்டை பெண் தலைவர்களைப் பெற்றிருக்கிறோம் நாம் எனும் இறுமாப்பு கொள்ளவைக்கும் தகவல்கள் அவை... 

                                                                                         (அடுத்த பகுதியோடு முடியும்) 

No comments: