Wednesday 20 February 2019

அண்மையில் படித்த புத்தகம் : மீட்சி....ஒல்கா....கெளரி கிருபானந்தன்

அண்மையில் படித்த புத்தகம் : மீட்சி
மூலநூல்(தெலுங்கில்)ஆசிரியர் : ஒல்கா
தமிழில் மொழிபெயர்ப்பு      : கெளரி கிருபானந்தன்
வெளியீடு                  : பாரதி புத்தகாலயம், சென்னை-18 பேச : 044-24332424
மொத்த பக்கங்கள்           : 112, விலை ரூ 70/-
மதுரை மைய நூலக எண்   : 216296

                          இராமயணத்தில் இராமனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர். ஒருவர் சீதை..இன்னொருவர் சூர்ப்பனகை....இருவரும் பல ஆண்டுகளுக்கு பின்னால் சந்தித்தால், அந்தச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் ? அதிலும் ஆண்களைப் பற்றி சூர்ப்பனகை சீதைக்கு அறிவுரை கூறும் சந்திப்பாக அமைந்தால் ...அந்தக் கற்பனையில் முகிழ்த்த கதை  முதல் கதை என இந்த நூலின் ஆசிரியர் ஒல்கா குறிப்பிடுகிறார்.இராமனுக்கு ஆசையாய் வாக்கப்பட்டு அவனோடு காட்டுக்குப்போய், சூர்ப்பனகையின் மூக்கையும் காதையும் அறுக்கப்பட்டதால் இராவணனால் சிறை பிடிக்கப்பட்டு, பின்பு இராமனால் மீட்கப்பட்டு மறுபடியும் இராமனால் காட்டுக்கு அனுப்பப்பட்ட சீதை, கானகத்தில் தன்னுடைய குழந்தைகளை வளர்க்கும் சீதை , கானகத்தில் சூர்ப்பனகையை சந்திக்கிறாள். அற்புதமான கற்பனை..ஆனால் நாக்கைப் பிடுங்கும்படியான ஆணாதிக்கத்தைப் பற்றிய கேள்விகள் கேட்கும் நிகழ்காலத்தின் கேள்விகள்....ஒரு பெண்ணால் எழுதப்பட்ட புத்தகம். ஒரு பெண்ணால் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம்.ஒல்கா இந்தக் கதைகள் உருவான வரலாறைக் கூறுகிறார் இப்படி...



" நான் இந்தக் கதைகளில் முதலில் 'சகாமகம் 'எழுதினேன். அந்தக் கதையை எழுதுவதற்கு என்னைத் தூண்டிவிட்ட காரணம் இருக்கிறது.நான் எழுதிய 'யுத்தம் அமைதி' என்ற நாட்டிய நாடகத்தில் சீதையும் சூர்ப்பனகையும் ராம ராவண யுத்தம் நடப்பதற்கு தாம் காரணங்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டே 
" ஆரிய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு கோரிக்கை
 ஏற்படுத்திய ராம ராவண போர்க்களம்
 அது ஆரியர் திராவிடர் இடையில் மூண்ட சமரம்
  பெண்கள் அதில் பகடைக்காய்களாக மாறிய விதம் "
என்று பாடிக்கொண்டே நாட்டியம் செய்வார்கள்.தொடக்கத்தில் சீதையும் சூர்ப்பனகையும் தனித்தனியாக வனவாசம் தங்களுக்குப் பிரியமானது என்றும் ,தாம் அமைதியை விரும்புகிறவர்கள் என்றும் ,அழகை ஆராதிப்பவர்கள் என்றும் சொல்லிவிட்டு அப்படியும் தங்களுக்கு அவமானங்கள்,சந்தேகங்கள்,அவமதிப்புகள் தப்பவில்லை என்று சொல்லிக்கொண்டே நாட்டியம் செய்வார்கள்.இறுதியில் இருவரும் சேர்ந்து மேலே குறிப்பிட்ட வரிகளுக்கு நடனம் புரிவார்கள்.

       இந்தக்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.சூர்ப்பனகை பாத்திரத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.ஆனால் சிலருக்கு சந்தேகங்களும் வந்தன.முக்கியமாக நடனம் புரிபவர்களுக்கே அவை வந்தன.அவர்களுக்குத் தெரிந்தவரையில் சூர்ப்பனகை ஒரு அரக்கி.நான் உருவாக்கிய சூர்ப்பனகை அழகி.செளந்த்ரியத்தை ஆராதிப்பதை வாழ்க்கையின் சூத்திரமாக கடைப்பிடிப்பவள்.நட்பை,அன்பை விரும்புகிறவள் என்று தன்னைப்பற்றி சொல்லிக்கொள்வாள்.இதற்கு நாட்டியம் செய்வதில் அவர்கள் குழப்பமடைந்தார்கள்.

         சூர்ப்பனகை திராவிடப்பெண்மணி என்றும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆரியர்களிடமிருந்து மாறுபட்டு இருக்கும் என்றும் புராணங்களில் திராவிடர்களை அரக்கர்களாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் எடுத்துச்சொன்ன பிறகு அவர்கள் சமாதானம் அடைந்தார்கள்.சூர்ப்பனகை பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இதை 'தூர்தர்ஷனில்' ஒளிபரப்பு செய்தபோது பிரச்சனை வந்தது. சூர்ப்பனகையை அரக்கியாகத் தவிர வேறுவிதமாக அவர்களால் பார்க்க முடியவில்லை. சீதை,திரௌபதியின் வேதனையைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு பழக்கப்பட்ட விஷயம்.சூர்ப்பனகையை அவர்களுக்குச் சமமாக எப்படி சேர்ப்பது ?சூர்ப்பனகை அப்படி என்ன வேதனையை அனுபவித்துவிட்டாள்? பர புருஷனை விரும்பினாள்.தண்டிக்கப்பட்டாள்.அவ்வளவுதானே தவிர,அவளுக்கு வந்த வேதனை என்ன?சீதையும் சூர்ப்பனகையும் எதிரிகள் இல்லையா? சேர்ந்து நாட்டியம் செய்வதாவது ?இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.எங்களுடைய பதில்கள் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.சூர்ப்பனகையின் பாத்திரத்தை 'சென்சார் 'செய்து விட்டு ஒளிபரப்பினார்கள்.

       அப்போது எனக்கு சூர்ப்பனகையின் வேதனையைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டும் போல் தோன்றியது.சீதையும் சூர்ப்பனகையும் ஏன் நட்புடன் இருக்கக்கூடாது என்று கதை எழுதத்தோன்றியது.அதன் விளைவுதான் 'சமாகமம்'. இந்தக் கதையில் சீதை சூர்ப்பனகையிடம் ஒரு ஆழமான கண்ணோட்டம் இருப்பதை உணருகிறாள் " என  ஒல்கா ஒரு விரிவான முன்னோட்டத்தை ஆசிரியர் உரையில் கொடுக்கின்றார்.      

                 

தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் கட்டுடைப்பு என்னும் இலக்கியக் கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டான புத்தகம் எனலாம். நடந்த நிகழ்வுகளை, கதைகளை எடுத்துக்கொண்டு இன்றைய நோக்கின்படி கேள்விகளை எழுப்புவதும் அந்தக் கேள்விகளின் அடிப்படையில் விளக்கங்களைக் கூறுவதும் கட்டுடைத்தல் என்னும் கோட்பாட்டின் முக்கிய நிகழ்வுகள் எனலாம். இராமாயணத்தினை கட்டுடைத்து தெருவுக்கு கொண்டுவந்து அதன் கதாபாத்திரங்களைப் போட்டுடைத்தவர்கள் தந்தை பெரியாரும் அவரது இயக்கத்தவரும். அந்த வகையில் இந்த மீட்சி என்னும் புத்தகம் சீதையென்னும் இராமாயாண கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு கற்பனையில் சீதை சூர்ப்பனகை, அகலிகை, ரேணுகாதேவி, ஊர்வசி என்னும் சமகால கதாபாத்திரங்களை சந்திப்பதாகவும் அந்தச்சந்தப்பில் தனது வேதனைகளை வெளிப்படுத்துவதோடு அவர்களின் வேதனைகளையும் உணர்ந்துகொண்டு அதன்மூலமாக இன்றைக்கும் வேதனைப்படும் பெண்களுக்கு சில தீர்வுகளைச்சொல்வதாகவும் இந்தக்கதைகள் அமைந்துள்ளது.

ஆசிரியர் உரை தவிர இந்தப்புத்தகம் 'இதிகாசம் ஒரு புதிய பார்வை, புதிய வெளிச்சம் 'என்னும் தலைப்பில் ஒரு முன்னுரை இருக்கிறது. அதற்கு அடுத்தாற்போல் சீதையும் சூர்ப்பனகையும் சந்திக்கும் 'இணைதல் ' என்னும் கதை, 'சீதையின் குரல் கம்மியது. தான் கடந்துவந்த அக்கினிப்பரீட்சைக்கு சூர்ப்பனகை சந்தித்த பரீட்சை குறைவானது இல்லை என்று நினைத்ததும் சீதையின் கண்களில் நீர் தளும்பியது ".சீதை சூர்ப்பனகையை உணர்ந்துகொள்வது, சூர்ப்பனகைக்கு இருக்கும் இயற்கையின்மீதான ஈர்ப்பு போன்ற பல செய்திகள் மிகக்கவனமாக இக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.

சீதையும் அகல்யாவும் சந்திக்கும் கதை 'மண்ணின் ஓசை ' என்னும் கதை. " அகல்யா, மிக அழகான பெயர். ஏர் கொண்டு உழப்படாத பூமி  என்று பொருள் '....அகல்யாவிடம் சீதை சொல்கிறாள்..." செய்யாத தவறுக்கு உங்களை குற்றவாளியாக்கி விட்டார்கள்..." அதற்கு அகல்யா பதில் சொல்கிறாள்..." இந்த உலகில் பெரும்பாலான பெண்கள் அப்படி குற்றவாளியாக்கப்பட்டவர்கள்தானே சீதை "....மேலும் " ஒரு நாளும் விசாரணைக்கு சம்மதிக்காதே சீதை...அதிகாரத்திற்கு அடி பணிந்து விடாதே ' என்றாள்....ராமன் அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டுமென்று ராமன் சொன்னதாக வந்து சொன்னபோது அகல்யாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. " தீட்டு,தூய்மை,பவித்திரம்,அபவித்ரம்,ஒழுக்கம்,ஒழுக்கக்கேடு -இந்த வார்த்தைகளை ,உணர்வுகளை புருஷர்கள் எவ்வளவு வலிமையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்றால்" என்னும் அகல்யாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன சீதைக்கு...

பரசுராமனின் தாயான 'ரேணுகாதேவியை ' சீதை சந்தித்து உரையாற்றும் கதை 'மணல் குடம் ' பரசுராமன் என்றவுடன் சீதைக்கு வில்லை ராமன் முறித்தபிறகு ராமனோடு வந்து பரசுராமன் சண்டையிட்டது நினைவுக்கு வருகிறது.பரசுராமன் சத்திரியர்களை கொன்று குவித்த கொடூரன். ஆனால் ராமனும் பரசுராமனும் சமாதானமாகிறார்கள். சீதை ராமனிடம் எப்படி சமாதானமானீர்கள் பரசுராமனோடு என்று கேட்கிறாள். அதற்கு ராமன் " அவர்(பரசுராமன்) சம்ஹரித்த சத்திரியர்கள் ஆரிய தர்மங்களைக் கடைப்பிடிக்காதவர்கள்.வடக்கு எல்லை முழுவதும் அவர் ஆரிய தர்மத்தை முழுவதுமாக நிலை நாட்டி விட்டார். என்னுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்ள வந்தார்.சிவனின் வில்லை முறித்த நான் ஆரிய தர்மங்களைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது அவருடைய எண்ணம்.ஆரிய தர்மங்கள் எனக்கும் கொண்டாடத்தகுந்தவை என்று தெரிந்து மகிழ்ச்சி அடைந்தார்.என்னைத் தன்னுடைய வாரிசாக சுவிகரித்து தெற்கு எல்லை முழுவதும் அந்தத் தர்மங்களை நிலை நாட்டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச்சென்றார் "......ஆரிய தர்மத்தை நிலை நிறுத்துவதான் எனது நோக்கம் என்று இராமன் சொல்வதை விரிவாக இந்தக் கதையில் ஒல்கா பதிவு செய்திருக்கிறார்.மணலைக் கொண்டு பானை செய்யும் ரேணுகாதேவி சீதையின் முன் தன் கருத்துக்களை வைக்கின்றார்...

" என்னைக் கொன்றுவிடச்சொல்லி மகன்களிடம் ஆணையிட்டார் எனது கணவர். பரசுராமன் அதற்கு சித்தமானான்.என் தலையைத் துண்டித்தான்.பாதி தலை அறுந்தபிறகு என் கணவரின் கோபம் தணிந்தது. பரசுராமனை நிறுத்தச்சொன்னார்.ஆசிரமப்பெண்கள்,காட்டுவாசிப்பெண்கள் எனக்கு வைத்தியம் செய்து என் தலை கழுத்தின் மீது நிற்கும்படியாகச்செய்தார்கள். மாதக்கணக்கில் நான் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடினேன்.....வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் நடந்த அந்தப் போராட்டத்தின்போது எத்தனையோ கேள்விகள். கணவன் மகன்கள் என்ற பந்தங்கள் ஒரு பெண்ணுக்கு அவசியமா? அவசியம் இல்லை என்று முடிவு செய்து நான் அவர்கள் எல்லோரிடமிருந்தும் தொலைவாக வந்து விட்டேன்.என் வித்தையுடன் வாழ்ந்து வருகிறேன்.என் சீடர்களுக்கும் அதைத்தான் உபதேசம் செய்கிறான் " இந்தக் கதையில் வரும் ரேணுகாதேவியின் உரையாடல்கள் தனித்தன்மையாகவும் ,பெண்ணியம் நோக்கிலும் விரிவான உரையாடல்களாக இருக்கின்றன.

சீதை வனவாசம் முடிந்தபிறகு இராமனோடு அரண்மனைக்கு வந்தபின் இலட்சுமணன் மனைவி ஊர்மிளாவை சந்தித்து உரையாடும் கதை 'மீட்சி' அதுதான் இந்த நூலுக்கும் தலைப்பாக இருக்கிறது. இராமன் காட்டுக்குப் போனான்,சீதையை அழைத்துக்கொண்டு போனான். இராமனோடு அவனது தம்பி இலட்சுமணன் போனான். அவன் ஏன் தனது மனைவி ஊர்மிளாவை அழைத்துப்போகாமல், அதுவும் ஊர்மிளாவிடம் சொல்லாமல் கூடப்போனான் என்ற வருத்தத்தில் 14 ஆண்டுகளாய் தனிமையில் தனித்து இருக்கும் ஊர்மிளாவை சீதை பார்க்கின்றாள்.பேசுகிறாள். ஊர்மிளா சீதைக்கு அறிவுரை சொல்கிறாள். நல்ல வேறுபட்ட கோணத்தில் நோக்கும் கதை மீட்சி."உன் மீது அதிகாரத்தை நீயே எடுத்துக்கொள்.மற்றவர் மீது உன் அதிகாரத்தை விட்டுவிடு. அப்போது உனக்கு நீ சொந்தமாவாய். உனக்கு நீ எஞ்சியிருப்பாய். நமக்கு நாமே எஞ்சியிருப்பது என்றாள் சாதாரணம் இல்லை அக்கா, என் பேச்சை நீ நம்பு " ஊர்மிளா சொல்லும் இந்த வார்த்தைகள் வேறு ஒரு இடத்தில் சீதைக்கு முடிவெடுக்கத் துணையாக நிற்கிறது.

ராமன் தனக்குத் தானே தன்னை நினைத்து நொந்து கொள்ளும், ஆரிய தர்மத்தைக் காப்பதற்காக தான் இழந்த இன்பங்களை, அடுத்தவர்களுக்கு செய்த துன்பங்களை நினைப்பதாக வரும் கதை 'சிறைப்பட்டவன் ' இறுதியில் இந்தக் கதைகளைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையாக 'ராஜ்ஜிய அதிகார வரம்பிற்குள் ராமன்...பெண்மையின் வரம்பிற்குள் சீதை ' என்னும் கட்டுரை இருக்கிறது. இந்தக் கதைகளைப் படித்துவிட்டு இந்த ஆய்வுக்கட்டுரையை ஆழமாகப் படித்தால் ஒல்காவின் பார்வையை எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.இணையத்திற்குள் சென்று பார்த்தால் இந்தக் கதைகளை மொழிபெயர்த்தமைக்காக கெளரி கிருபானந்தன் சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார், 2015 ஆம் ஆண்டில். " 2015  வருடத்தின் சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருதை பெற்றுள்ளது.அதன் மூல புத்தகம் “VIMUKTHA ” விற்காக திருமதி ஒல்கா அவர்களுக்கு அதே வருடம் சாகித்ய அகாதமி விருது கிடைத்திருப்பது பிரமிக்கத்தக்க, யதேச்சையாக நிகழ்ந்த நிகழ்வு. ஒரு புத்தகத்தின் மூல மொழிக்கும், அதன் மொழிபெயர்ப்புக்கும் ஒரே ஆண்டில் சாகித்ய அகாதமி விருது கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை". எனக் கெளரி கிருபானந்தன் பதிவிட்டிருக்கிறார்.விருதுகளை விட உயர்வாக மதிக்கப்பட வேண்டிய கதைகள் இவை. நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்த புத்தகம், விலைக்கு வாங்கி வீட்டு நூலகத்தில் வைக்கவேண்டும். 



2 comments:

கருப்பையா.சு said...

எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் " நித்யகன்னி " நாவலுக்குப் பிறகு நான் மிகவும் இரசித்த பெண்ணியம் சார்ந்த , மிகசிறந்த மற்றும் சிந்திக்கத் தூண்டும் நூல். நல்ல பதிவு.

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றி அண்ணே, வருகைக்கும் ,எப்போதும் போல ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கும்