Saturday 23 March 2019

வறுமையும் பிணியுமற்ற.....

தூக்குக்கயிற்றை முத்தமிட்ட
தோழர்களின் நினைவு நாள்...
நாடு விடுதலை பெற்றால்
வறுமையிலிருந்தும்
பிணியிலிருந்தும்
நாட்டின் மக்கள் எல்லாம்
விடுதலை பெறுவார்கள்
எனும் நம்பிக்கையில்
எமது தோழர்கள்... தியாகிகள்
பகத்சிங்கும் அவரது
தோழர்களும் தூக்குக்கயிற்றை
முத்தமிட்ட நாள் இந்த நாள்.....

அகப்படாமல் வாக்காளர்களுக்கு
பணம் கொடுப்பதில் அவன் நிபுணன்
எனப்பேசிக்கொள்கிறார்கள்.....
அரசியல் கட்சியில் சேர்ந்த நேரத்தில்
வெறும் ஆளாய் இருந்த அவன்
வெகுவேகமாய்
பல வீடுகளுக்கு அதிபதியாய்
எப்படி ஆனான்......
புரியாத புதிராக இருக்கிறது
விடுதலை பெற்ற தேசத்தில்.....

சில படி கடலைகளை முன்னால்
குவித்துப்  போட்டபடி
இணையர்களாய் உட்கார்ந்திருக்கிறார்கள்
உழவர் சந்தையின் முன்னால் அவர்கள்...
அழுக்கேறிய வேட்டியோடும்
கிழிந்த சேலையோடும்
எழுபதுகளைக் கடந்த அவர்கள்
கடும் வெயிலிலும் வீதியினைப்
பார்த்தபடி உட்காந்திருக்கிறார்கள்
எவரேனும் கடலை வாங்கக்கூடும்
எனும் எதிர்பார்ப்பில்...
அதன் மூலம் இன்றைக்கு
தங்கள் வயிறு நிரம்புக்கூடும் எனும் நினைப்பில்....
ஒரு நாளைக்கு ஒருவேளை
முழு வயிற்றுக்கும் சோறு
எட்டாத கனவு என்று சொல்கிறார்கள்
சிரித்தபடி ......
ஏழைகள் வயிற்றுப் பசி ஆறாமல்
பசித்துக்கிடக்க...
பத்து பதினைந்து  லட்சம் ரூபாய்க்கு
தலைவர்கள் சட்டை போடும்
விடுதலை பெற்ற தேசத்தையா
கனவு கண்டாய் தோழா  நீ?.....

கிராமத்தில் குடிக்கத் தண்ணீரில்லை...
.குளிக்கவும் தண்ணீரில்லை....
நடு இரவில் குழாயில் வரும்
நாலு குடம் தண்ணீரைப் பிடிக்க
நடந்த மல்லுக்கட்டை விளக்கிவிட்டு
என்னடா நாடும் ஊரும்
இப்படி போகுது ?
என்ன செய்றதுன்னு புரியாம
ஏழை ஜனம்
எல்லாம் விழி பிதுங்கிச்சாகுதுண்ணு...
அழுகுற குரலிலே
சொந்த ஊரிலிருந்து செல்பேசியில்
உறவினர் சொன்னபோது
எல்லோர் கையிலும் செல்பேசி வந்திருச்சு...
ஓசியிலே செல்பேச வழிசெய்த
மகாராசனுக ஏண்டா
குடிக்கிற தண்ணியையும்
குளிக்கிற தண்ணியையும்
காசுன்னு ஆக்குனாங்க என்று
எதுவும் புரியாமல் கேட்டபோது
இப்படிப்பட்ட
விடுதலை பெற்ற தேசத்திற்கா
தோழா நீ  தூக்கில் தொங்கினாய்
எனும் நினைப்புத்தான் மனதில் ஓடியது....

இன்னும் கூட நம்பிக்கை
இருக்கிறது மனதில்....
ஜல்லிக்கட்டு போராட்டம் போல
ஒன்றிணைவார்கள் மக்கள்
என்னும் கனவு இருக்கிறது மனதில்...
அந்த நம்பிக்கையில்
வறுமையும் பிணியுமற்ற
விடுதலை பெற்ற தேசத்தைக்
கனவு கண்ட தோழர்களே !
வீர வணக்கம் ! வீரவணக்கம்...
உங்கள் நினைவுகளுக்கு
செவ்வணக்கம் ! செவ்வணக்கம்....

                            வா.நேரு,23.03.2019








5 comments:

Unknown said...

மாமா அவர்களின் கருத்து உண்மையானதாகவும் நியாயமானதாகவும் உள்ளது நன்றி வரும் காலம் நமது காலமாக இருக்க நல்லதோர் வீணை செய்வோம் என்ற அடிப்படையில் மக்களுக்கான தெளிவான சிந்தனையினை நாம் பரப்புவோம் மக்கள் தாங்களாக திருந்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது நன்றி மாமா

முனைவர். வா.நேரு said...

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்......

கருப்பையா.சு said...

ஆம் நேரு. கடலை விற்கும் அந்த சகோதரனை கடந்து செல்லும் போது எனக்கும் வலிக்கும்.

முனைவர். வா.நேரு said...
This comment has been removed by the author.
முனைவர். வா.நேரு said...

அண்ணே, நன்றி,வலைத்தள வருகைக்கும் கருத்திற்கும்...இது அவர்கள் விதி என்று நம்மால் கடந்து செல்ல முடியவில்லை...பெரியாரை,அம்பேத்கரை, மார்க்சை படித்ததால்.....