Sunday 9 February 2020

பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திலிருந்து விருப்ப பணி நிறைவு : வா.நேருவுக்கு பாராட்டு விழா

பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திலிருந்து விருப்ப பணி நிறைவு : வா.நேருவுக்கு பாராட்டு விழா


மதுரை, பிப் 9-:பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலிருந்து விருப்ப பணி நிறைவு பெற்ற பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேருவுக்கு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக விருப்ப பணி நிறைவு பாராட்டு விழா 02.02.2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மதுரை யானைக்கல் எஸ்.ஏ.எஸ்.அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சுப.முருகானந்தம் தலைமை ஏற்றார். நிகழ்வினை திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் ஒருங்கிணைத்தார். 

விழாவில் அனைவரையும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் அ.முருகானந்தம் வரவேற்றார்.விழாவிற்கு திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சே.முனியசாமி,மதுரை மண்டலத்தலைவர் நா.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






 விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொழிலாளர் அணிச்செயலாளர் மகபூப்ஜான்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னணி வழக்கறிஞர் இராம.வைரமுத்து மதுரை யாதவர் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேரா.இ.கி.இராமசாமி,அருப்புக்கோட்டை பகுத்தறிவாளர் கழகப்புரவலர் ந.ஆனந்தம்,பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தலைவர் சு.கருப்பையா,வா.நேருவின் +2 வேதியியல் ஆசிரியர் முத்துராமலிங்கம்,திராவிடர் இயக்கத்தமிழர் பேரவையினைச்சார்ந்த ஊடகவியலாளர் உமா, திராவிடர் கழக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் நா.கணேசன் ஆகியோர் உரையாற்றிய பின்பு புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் " பி.எஸ்.என்.எல்,எம்.டி.என்.எல். நிறுவனங்களிலிருந்து ஒரே நாளில்(31.01.2020) 92,000 பேர் விருப்ப ஓய்வில் வெளியேறி இருக்கிறார்கள்.இது ஒரு வகையில் கட்டாய ஓய்வு.நேருவைப் பொறுத்த அளவில் அவருக்கு விருப்ப ஓய்வு என்றாலும் மற்றவர்களுக்கு அப்படி அல்ல. அரசாங்கம் கொடுப்பதாக சொல்லியிருக்கும் சலுகைகள்,நிறுவனத்தில் தொடர்ந்து கொடுக்கப்பட்ட மறைமுக நெருக்கடி, தொழிற்சங்கங்களின் இயலாமை போன்ற எல்லாம் இணைந்து இத்தனை பேர் வெளியேறி இருக்கிறார்கள்.அரசியல் அமைப்புச்சட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் கட்சியில் இருக்கக்கூடாது என்று இல்லை. கட்சி சார்பு இல்லாமல் எப்படி வாக்களிக்க முடியும்.வாக்களிக்கும்போது ஒரு கட்சி சார்ந்துதானே அரசாங்க ஊழியரும் வாக்களிக்கின்றார். அரசியல் கட்சியில் இருப்பது என்பது அரசாங்க ஊழியர்களின் உரிமை. ஆனால் இதுவரை எந்த தொழிற்சங்கமும் அந்த உரிமைக்காகப் போராடியது இல்லை.நானும் இஸ்ரோ என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்தவள்தான். இன்று நான் தொடர்ந்து இருந்திருந்தால் உயர்ந்த கிரேடு1 அதிகாரியாக இருந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் திட்டமிட்டு எனக்கு பதிவு உயர்வு கொடுக்காமல் புறக்கணித்தார்கள். நான் விருப்ப ஓய்வில் வெளியேறினேன்." எனக்குறிப்பிட்டு   பேசுவதற்கு நாட்டில் குடியுரிமை பதிவேடு, பணமதிப்பு வீழ்ச்சி, நீட், புதிய கல்விக்கொள்கை அதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை பாதிப்பு போன்ற எத்தனையோ விசயங்கள் இருக்க, நாளைய முதல்வர் கனவில் இருக்கும் நடிகரின் பெரியார் பற்றிய தரக்குறைவான பேச்சு மூலம் மக்களைத் திசை திருப்பும் செயலை வன்மையாகக் கண்டித்தும், இன்றைக்கு நாட்டில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு சிறப்பாக உரை யாற்றினார்.

விழாவில் கழகத்தோழர்களும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வா.நேரு அவர்களுடன் பணியாற்றிய சக தோழர்களும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மதுரையில் அண்மையில் கே.பி.என்.ஜானகி அம்மாள் விருதுபெற்ற இராக்கு தங்கம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.முடிவில் பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத்தலைவர் செல்ல.கிருட்டிணன் நன்றி கூறினார்.

நன்றி : விடுதலை 09.02.2020


2 comments:

OVIYA said...

நல்ல பதிவு. நேரு தோழர் தான் விரும்பிய விடுதலை வாழ்வை வெற்றிகரமாகத் தொடர நல்வாழ்த்துகள். நிகழ்வை ஒருங்கிணைத்த திராவிடர் கழகத் தோழர்களுக்கு நன்றி.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர்.தங்கள் பேச்சும் தோழர் உமா மற்றும் பேசிய தோழர்களின் பேச்சுகள் மிகவும் எதார்த்தமாகவும், நடப்பில் இருக்கும் எதிரிகளுக்கு எதிராக நாம் விழிப்புணர்வாகவும்,போராட்ட குணத்துடனும் இருக்க வேண்டிய தேவையை உணர்த்தியது. மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நான் வேண்டாம் என்று சொன்னபோதும் திராவிடர் கழக அமைப்புச்செயலாளர் அண்ணன் செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் நடத்துகிறோம், நீங்கள் வந்து ஏற்புரைக்கு மட்டும் உட்காருங்கள் என்றார்கள். அப்படியே அவர்களே முழுப்பொறுப்பும் எடுத்துக்கொண்டார்கள். நன்றி அனைவருக்கும்.