Monday 25 May 2020

நானும் புத்தக வாசிப்பும்.....வா.நேரு

நானும் புத்தக வாசிப்பும்
Posted on : Friday 22nd May, 2020

எனக்கு வயது இப்போது 55. புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. நான் 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் ‘பொன்னியன் செல்வன்’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு, சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்காரந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஒரு அடி அடித்து, சாப்பிடாமக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது.

உயர் நிலைப் பள்ளி படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் கூட பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.

கல்லூரி படிக்கும் காலத்தில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்துக்கொண்டே நூலகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதனால், அப்போது மெஸ் கட்டணம் கட்ட பணம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு.  சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது. 1983-& 84-ல் பெரியாரியல் பட்டயப் பயிற்சிக்காக எனது பேரா.கி. ஆழ்வார் அவர்கள்  மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது. பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந. இராமநாதன் அவர்களை நேரிடையாகச் சந்தித்ததும், புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக ‘செவியுணர்வுச் சுவையுணர்வோடு ‘சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை.  தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ என்னும் புத்தகத்தை படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. படித்து முடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை.

படித்து முடித்து, திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது, வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்காரந்து வேலை செய்துகொண்டிருந்தனர். குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார். 1984 & 85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய் – தம்பி, பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதை புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர். கேள்விகள் இல்லாமல் எல்லாவற்றையும் வாசிப்பது என்பது அப்போது முடிவுக்கு வந்தது. திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது, உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர். நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர். பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான். 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார்.

1991-ல் மதுரைக்கு மாறுதல். மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது. ‘புதிய காற்று ‘ எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. ந.முருகன் வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தகங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும். பல கண்ணோட்டமுள்ளவர்கள் குழுவில் இருந்தனர். இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும்  புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது.

மதுரைக்கு வந்த பின்னர், காரமுகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு, ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.’ ‘ஸ்பார்ட்டகஸ்’ போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும், பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், ‘நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்து விடுகின்றேன்’  என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.

 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக ‘படித்த பார்ப்பன நண்பரே’ என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்’ என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது.

பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்கத் தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார். ‘புத்தகத் தூதன்’ எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை  விற்று பெருமை சேர்த்தவர். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் நா.கணேசன், க.அழகர், அழகுபாண்டி, மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்கத் தோழர்களாக இருக்கின்றனர்.

மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன், இந்து பத்திரிக்கை மேலாளர் முரளி, துணை ஆசிரியர் அண்ணாமலை  எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்….எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை…மதுரையில் கணினி பயிற்சியகம் வைத்திருந்த தோழர் ஓவியா, அவரின் கணவர் ஏ.பி.வள்ளிநாயகம் இருவரும் படிப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருந்தனர். புதுக்கோட்டை கவிஞர் ந.முத்து நிலவன் அறிமுகம் கிடைத்தது.இப்படி பல திசைகளிலிருந்தும் புத்தகங்களை விரும்பிப் படிப்பவர்கள், படைப்பவர்கள் என அறிமுகமாயினர்.

எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் பாண்டிச்சேரி தோழர் அகனின் முயற்சியால் ‘சூரியக்கீற்றுகள்’’ என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.

எனது முதல் சிறுகதைத்தொகுப்பு ‘நெருப்பினுள் துஞ்சல் ‘‘சென்னை எமரால்டு பதிப்பகத்தால் 2019-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.சிறுகதைகளைப் படித்துவிட்டு பாராட்டுவது, கதைகளைப் பற்றித் தங்கள் கருத்துக்களை நண்பர்கள் தோழர்கள் பதிவு செய்வது மிகப்பெரிய ஊக்க சக்தியாக அடுத்தடுத்து எழுதுவதற்கு துணை செய்கிறது.

எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். 80 வயது கடந்தவர்.படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடமும், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக் கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்…

மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது. நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது.

புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் ‘‘காரல் மார்க்ஸ் நூலகம்’’ என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். ‘‘எனக்குரிய இடம் எங்கே’’ என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும் நான் என்றார்.மிக நல்ல புத்தகம் அது.  45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா. மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்காரந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி அவர்கள்  பேசினார். வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார். 

எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது.எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தை கல்லூரி முதுகலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் எனது மகள் சொ.நே.அறிவுமதி எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ‘ நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே’ என்று சொன்ன நேரத்தில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால், மனதார அதுதான் உண்மையான சொத்தாக,எனது பிள்ளைகளுக்கு நான் அளிப்பது  என நான் நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,

மதுரையில் அய்.ஏ.எஸ். அதிகாரி திரு.உதயசந்திரன் அவர்கள் முயற்சியால் புத்தகத் திருவிழா ஆரம்பமாகியது.தொடர்ந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.ஆயிரம் திருவிழாக்கள் மதுரையில் நடைபெற்றாலும் நம்மைப்போன்றவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் திருவிழா புத்தகத்திருவிழாதான். பல நகரங்களில் தமிழகத்தில் புத்தகத்திருவிழாக்கள் நடைபெறவது மகிழ்ச்சிக்குரியது.

 எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும். பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன்.

எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் (vaanehru.blogspot.in) அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு, தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும். பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. புத்தகக் கடைகளும்தான். நாட்டில் மாற்றம் வருவதற்கு புத்தகங்களே அடிப்படை.புத்தகங்களை நேசிப்போம். வாசிப்பை நேசிப்பாக ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற முயற்சிகள் செய்வோம்.

வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.


நன்றி : கைத்தடி 


இந்தக் கட்டுரை 22.05.2020 அன்று கைத்தடி வலைத்தளத்தில் வெளியானது. இதன் பல பகுதிகள் ஏற்கனவே விடுதலையில் வெளியானது,எனது வலைத்தளத்திலும் வெளியானது.படித்ததை மீண்டும் படிப்பதாக தோன்றினால் பொறுத்துக்கொள்க

No comments: