தீவிர சிகிச்சைப் பிரிவு-
சிறுகதை.
கதாசிரியர்:- வா.நேரு அவர்கள்
கதாசிரியர் பகுத்தறிவாளர் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்.கதையிலும் அது கலக்காமல் இருந்தால் எப்படி?
பிறப்பும், இறப்பும், சர்வசாதாரணமாக வந்துபோகும், சகல வசதிகளையும்( எல்லாம் மதம் சார்ந்த கோயில் உட்பட) உடைய,மிகப்பிரம்மாண்டமான மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின், உள்ளே, வெளியே தான் ,கதையின் களம் .
கதையின் கதாநாயகனான முத்து, அவன் தனது தாயின் சிகிச்சைக்காக 15 நாட்களாக, அந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
தேவையில்லைன்னா கடவுளிடம் ஏன் போகிறான்? பயமும் சுயநலமும் தான் கடவுள் பக்திக்கு அடிப்படை என்ற முத்துவின் எண்ண ஓட்டம், பெரியார் சிந்தனையைத் தெளிக்கிறது.
வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் அம்மா, பேச முடியாமல் கண்ணீர் விடுவது கொடுமை முத்துவுக்கும்,நமக்கும்.
அங்கு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த குழாய்களில் இணைப்புகள், அதன் மின் கருவிகளின் சப்தங்கள் தான், அந்த அமைதியை கலைப்பதாக இருந்திருக்க வேண்டும். ஒரு முறை அதற்குள் சென்று வந்தாலே, வாழ்க்கை இவ்வளவுதான் என்ற பக்குவம் வந்துவிடும்.
இதை சுடுகாடு அமைதி என ஆசிரியர் குறிப்பிடுவது பொறுத்தமே.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளே நோயாளியைப் பார்க்க, ஒரு நாளுக்கு ஒரு முறை தான்,அனுமதி அளிக்கிறார்கள்.அங்கி அணிந்து கொண்டுதான் உள்ளே அனுமதி.முத்து, மருத்துவரின் வெள்ளை நிற அங்கியை அணிந்து கொண்டு செல்வது, அந்த கதையின் இறுக்கத்தை தளர்த்தும் நிகழ்வு.
அந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்,மூட்டை முடிச்சுகளோடு,,
கண்ணீர், கதறல் ,அழுகைகளோடு காத்திருக்கும் முகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
நேரில் பார்ப்பது போன்ற நேரடிக்காட்சி.
பலவித நோயாளிகள் 20 வயது, 42 வயது, 20, 30 ,10 வயது என பலவித நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவின் உள்ளே.அவர்களின் உறவுகள் வெளியே தள்ளாடும் தள்ளாட்டம்,
உள்ளே நோயாளிகள் படும் துன்பத்தைவிட, வலிகள் நிறைந்த பதைபதைப்புடன் கூடிய வலி.அதை அப்படியே காட்சிப்படுத்திய கதாசிரியருக்குப் பாராட்டுகள்.
20 வயதே ஆன பாம்பு கடித்த தன் மகனை எப்படியாவது பிழைக்க வைக்கும் தவிப்புடன் , அப்பா கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருக்க ,அவன்
அம்மா ஒப்பாரியுடன்
,கண்ணீர் மல்க காத்திருப்பதும்
எவ்வளவு வேதனை..?!!
இன்னொருவர், சாலைவிபத்தில் அடிபட்ட தன் மகனை பற்றிப் புலம்பி புலம்பி தவிப்பதும்,அவர்
சிலுவையும்,பைபிளும், ஆக ஒருபுறம் பிரார்த்தித்துக் கொண்டு,
குடும்பத்தின் மேல் அன்பைப் பொழிகின்ற ஒரு ஆசிரியர், அளவுக்கு அதிகமான காய்ச்சலினால்,உள்ளே.அவரின்
பெண் குழந்தை செல்வி
ஒரு கடவுள் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கடவுளிடம், என் நேரமும் பிரார்த்தித்தபடி இருந்தது, நெஞ்சை கவ்வியது.
அவள் அப்பா
இறந்து விட்டார் என குழந்தை உணரும்போது, அவள் கையிலிருந்த, அந்த கடவுள் படம், விழுந்து, உடைந்து போவதாகவும் அவள் அதை கண்டுகொள்ளாமல், கடந்து போவதாகவும் எழுதியிருப்பார் கதாசிரியர்.சிறப்பான எழுத்து.
அந்த குடும்பத்தின் அன்பில் நான் உருகிவிட்டேன்.
அவசரத் தேவைக்காக மருந்து வாங்கச் சென்றால் ,அங்கு அலட்சியமாக மருந்து எடுத்துக் கொடுப்பது, ராக்கெட் வேகத்தில் செலவு.பொருள்களை அடகு வைத்தும், காடு ஆடு, மாடு இதனை விற்று கொண்டு வந்து, நோயாளிகளை காப்பாற்ற, உறவுகள் தவிக்கும் தவிப்பும்,கலக்கமும், மருத்துவமனை ஒரு தொழிற்சாலை போல, என முத்துவுக்கு தெரிவது வியப்பொன்றுமில்லை.
பிறப்பவர்கள்,இறப்பவர்கள்,இருப்பவர்கள், நோயாளிகளுக்கு மத்தியில், வாழ்ந்து பழகிவிட்ட, அந்த மருத்துவமனை ஊழியர்கள், மனசு மறுத்துப் போவதில் ஆச்சரியமில்லை.அவர்களை
காசுக்கு படுக்கும் ஒருத்தியோடு ஒப்பிட்டு இருப்பது,சரியாகப்படவில்லை.ஆசிரியர் வேறு உதாரணம் கூறியிருக்கலாமே?
ஒவ்வொருவருக்காகவும் வருத்தப்பட்ட மனநிலையில் அவர்கள் இருந்து கொண்டிருந்தால், பணியில் எப்படி செயல்பட முடியும்??என்பது என் கேள்வி.
கடவுள் உண்டா?மனிதம் உண்டா? என்பதே இந்தக் கதைக்குள் உள்ள
கேள்வி.
எதைத் தின்னால் பித்தம் தெளியும் "என்பவர்களுக்கு,மதம், கடவுள் ஒரு பிடிப்புத்தான்.
இக்கதையில்,
" இழந்தவன் குடும்பத்தில் இறைவன் இறக்கிறான் .
பிழைத்தவன் குடும்பத்தில் இறைவன் இருக்கிறான்."
"ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான். அதில் மதம் அந்த நம்பிக்கையைக் கொடுக்கிறது."என்பது என் கருத்து.
No comments:
Post a Comment