Thursday, 18 November 2021

தீவிர சிகிச்சைப்பிரிவு ....திறனாய்வு

எனது சிறுகதைகளைத் தொகுத்து,சென்னை எம்ரால்ட் பதிப்பகத்தின் எழிழினி பதிப்பகம் 'நெருப்பினுள் துஞ்சல்' என்னும் தலைப்பில் வெளியிட்டது. அந்தத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையான 'தீவிர சிகிச்சைப்பிரிவு  ' என்னும் சிறுகதையை 'வாருங்கள் படிப்போம்' வாட்சப் குழுவில் திறனாய்வு செய்வதற்கான போட்டி அறிவித்து இருந்தார்கள்.அதில் 6 பேர் பரிசு பெற்றார்கள்.முதல் பரிசினை  சித்ராதேவி அவர்களும்,இரண்டாம் பரிசினை அர்ஷா மனோகரன் அவர்களும்,மூன்றாம் பரிசினை வாசுகி தேவராசன் அவர்களும்,நான்காம் பரிசினை பார்வதி நல்லியண்ணன் அவர்களும்,ஐந்தாம் பரிசினை இருவர்,வெண்ணிலா காமராஜ் அவர்களும் ம.வீ.கனிமொழி அவர்களும் பெற்றனர்.ஆண்களும் போட்டியில் கலந்து கொண்டாலும் பரிசு பெற்ற ஆறு பேருமே பெண்கள். அத்தனை பேருக்கும் பாராட்டுகளும்,வாழ்த்துகளும்... அதில் கலந்து கொண்ட சகோதரி பூங்கோதை கனகராஜன் அவர்களின் திறனாய்வு இது. ஒரு எழுத்தாளனுக்கு கொட்டிக் கொடுக்கும் பரிசே,படித்து விட்டுத் தனது கருத்தை எழுதுவதுதான்.படித்து,திறனாய்வு எழுதிய அத்தனை தோழமைகளுக்கும் இதயம் கனிந்த நன்றி. முக நூலில் ,'தீவிர சிகிச்சைப் பிரிவு " சிறுகதை பற்றி தனது திறனாய்வுக் கருத்துகளைப் பதிந்துள்ள கவிஞர் பூங்கோதை கனகராஜன் அவர்களின் கருத்து.....


தீவிர சிகிச்சைப் பிரிவு

ஆசிரியர்:முனைவர்.வா.நேரு 

பதினைந்து நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளேயும்,வெளியேயும் அல்லலுறும் மனிதர்களின் உணர்வுகளை வலியோடு வடித்தெடுக்கிறார் ஆசிரியர். வார்த்தை உளி கொண்டு கதைச்சிலையில் படாமல் உள்ளத்தில் வலியாக கொத்துகிறது கதை.

மூட்டை முடிச்சுகளோடு அவசர ஆத்திரங்களுக்கு ஒதுங்கக் கூட பக்கத்திலிருந்தவரைப் பார்த்துக் கொள்ளக் கூறி மனம் நிறைய சுமையோடு ஆடியோடி அயராமல் உழைத்த அம்மா வாய் பேச முடியாமல் கண்ணில் நீர் வழியப் படுத்துக் கிடக்க, காசு தண்ணீராய்க் கரைய தாயைக் காப்பாற்ற வேண்டி பாடுபடும் முத்துவின் கண்களில் துயரக் காட்சிகள் விதவிதமான மனிதர்களோடு. 

பாம்பு கொத்திப் படுத்துக் கிடக்கும் மகனுக்காக மருத்துவமனைக் கோவிலில் வேண்டிக் கொள்ளும் குடும்பமும், சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து விபத்துக்குள்ளான மகனின் தவறைக் கவலையோடு விவரிக்கும் தந்தையின் சொற்களும் துயரத்தின் மறுஉரு.

காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட தந்தைக்காக கையில் சாமி படத்துடன் செல்வி வேண்டிக் கொண்டிருக்க, செல்வியின் அப்பா மருத்துவமனையில் காப்பாற்ற முடியாமல் அவளை விட்டு விட்டுப்போனதறிந்து கத்திக்கதறி ஓடிய செல்வியின் கையிலிருந்து விழுகிறது சாமிப்படம் . 

எத்தனை எத்தனை உணர்வுகள் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளன உறவினர்களின் மனதிலென திடுக்கிடும் சம்பவங்கள் கோர்த்து நம்மையும் கலங்க வைக்கிறார் ஆசிரியர். 

அவசரமாக மருந்து வாங்கச் சென்ற இடத்தில் அவர்கள் விளையாட்டாக பேசிக்கொண்டே தாமதப் படுத்த உங்கள் வீட்டில் இப்படி யாராவது படுத்திருந்தால் தாமதப்படுத்துவீர்களா என்று கேட்கும் இடம் வேதனையான யதார்த்தம்.

கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோவில் கட்டியவர்கள்,பணம் கட்ட செல்லும் இடத்தில்  தீவிர சிகிச்சைப் பிரிவினருக்கு மட்டும் தனி மருந்துக்கடை வைக்க மாட்டார்களா, மத வழிபாட்டுத் தலங்கள் இத்தனையை வைத்தவர்கள் இதனை வைக்கக்கூடாதா என எண்ணம் முத்துவின் மனதில்  ஓடியது.

இந்த இடத்தில் முத்துவின் ஆதங்கமாக சரியான கேள்வியில் முன் வைக்கிறார் ஆசிரியர். 

எத்தனை பணம் செலவானாலும் சுற்றத்தார் உயிரைப் பெரிதாக மதிக்கும் உள்ளங்களை இதைவிடத் தெளிவான வரிகளில் விளக்க முடியாது. படிக்கும் நம் மனம் சில்லுசில்லாக சிதற வலி நிறைந்த வார்த்தைகளை மருத்துவமனை வராந்தா வழியெங்கும் சிதற விட்டிருக்கிறார். 

கதை படித்து முடித்த பின் ஒரு நல்ல கதை படித்த திருப்தியுடனும், மனம் கொஞ்சம் சோகத்துடனும்  நிறைவது நிச்சயம். 

பூங்கோதை கனகராஜன்.

No comments: