அய்யா ஆசிரியர் அவர்களின் தந்தை, திரு.சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவரல்லர். அதனைப் பற்றி அய்யா ஆசிரியர் அவர்கள், "என் தந்தையார் கடவுள் பக்தராகவும், மதவுணர்வாளராகவும் இருந்தார். அவற்றை எதிர்க்கும், சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்கும் பிள்ளைகளைத் தடுக்காத பரந்த மனம் _ பாச அடிப்படையில் _ பெரிதும் உதவிற்று என்பதே எனது ஊகம்’ என்று குறிப்பிடுகிறார்.
"என்னை இந்தக் கொள்கைக்குக் கொண்டு வந்தவர் எனக்கு ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றிய அய்யா ஆ.திராவிடமணி பி.ஏ. அவர்கள் ஆவார்கள். என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. நான் _ சாரங்கபாணி _ ‘வீரமணி’ 'என்று அழைக்கப்பட்டேன். அண்ணா அவர்கள் “திராவிட நாடு’’ ஏட்டில் எழுதிய ‘கலிங்க ராணி’ என்னும் நாவலில் ‘வீரமணி’ ஒரு பாத்திரம்" என்று தன்னுடைய பெயர் மாற்றத்தை அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகிறார். "என்னுடைய படிப்புச் செலவுகளில் கூட பெரும்பகுதியை என் ஆசிரியர் திராவிடமணியே செய்து உதவினார்' என்றும் குறிப்பிடுகிறார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அய்யா ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாருக்கு, அன்னை மணியம்மையாருக்கு நன்றி சொல்வதைப் போலவே தனது ஆசான் ஆ.திராவிடமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மாணவரைப் பெற்ற அந்த ஆசிரியர் அய்யா ஆ.திராவிடமணி நமது போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவரே.
அய்யாவின் அடிச்சுவட்டில் முதல்பாகத்தில் தந்தை பெரியாரை முதன்முதலில் சந்தித்த அனுபவம் பற்றிக் குறிப்பிடுகிறார். பெரியார் அவர்களை முதன்முதலாகச் சந்தித்ததில் என் பிஞ்சு உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி _ உற்சாகம் என்பது ஒரு புறமிருந்தாலும், அன்று நடந்த பல்வேறு சம்பவங்களின் தாக்கம் _ பொதுவாழ்வில், பலரும் ஏற்கத் தயங்கும் கசப்பான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும்போது ஏற்படும் எதிர்ப்புகளை எப்படிச் சந்திப்பது, எதிரிகளை எப்படி வெற்றி காண்பது என்பதற்கு ஓர் ஒத்திகையாகவும் அடித்தள-மாகவும் அமைந்துவிட்டது என்று கூறி, கடலூர் முத்தையா டாக்கீஸ் திரைப்பட அரங்கில் நடைபெற்ற மாநாட்டையும், தந்தை பெரியார் பேசும்போது எதிர்ப்புத் தெரிவித்த கதர்ச்சட்டை இளைஞர் பற்றியும், அப்போது நிகழ்ந்த கூச்சல் போன்றவற்றையும் விவரிக்கும் ஆசிரியர் அவர்கள், “அய்யா (பெரியார்) அவர்கள் அந்தக் கூச்சல், எதிர்ப்பு கண்டு கொஞ்சமும் சலிக்காமல், கலங்காமல் மேலும் தீவிரமாகத் தோழர்களைச் சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச்சொல்லி ஆணை பிறப்பித்துவிட்டு வெண்கல நாதக் குரலில், சிலிர்த்த சிங்கமாகிக் கர்சித்தார்.’’
“நான் சொல்வதை அப்படியே நம்புங்கள்; ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல இங்கு வரவில்லை; உங்களுக்கு அறிவு, பகுத்தறிவு இருக்கிறது.அதனைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள்; சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையேல் விட்டுத் தள்ளுங்கள். எனது கருத்தை மறுக்க எவருக்கும் உரிமை உண்டு; அதனால்தான் அதை எடுத்துச் சொல்லும் உரிமை எனக்கும் உண்டு’’ என்று சொல்லி, காரணகாரிய விளக்கங்களை அடுக்கடுக்காக ஆணித்தரமாகக் கூறியது கண்டு பலரும் தந்தை பெரியார் வழி நிற்கும் அளவுக்கு மனமாற்றம் அடைந்தனர். “என்ன நிதானம்! கொள்கை உறுதி! அஞ்சாமை! பதற்றப்-பட்டவர்களைப் பக்குவப்படுத்திய அந்தப் பண்பாட்டுப் பொழிவு என்னுள் பதியத் தொடங்கியது’’ என்று குறிப்பிடுவார்.
'வளமையை விரும்பா இளமையைக் கண்டேன்" என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றிப் பாடினார். அந்த வளமையை விரும்பா இளமை என்பது தனது வாழ்க்கை அனுபவத்தில் எப்படிக் கிடைத்தது என்பதனை அய்யா ஆசிரியர் அவர்கள் தனது ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள். மாணவப் பருவப் பிரச்சாரம் என்ற பகுதியில், "சேலம் நகரத்தில் செவ்வாய்ப்பேட்டை சுயமரியாதைச் சாலை வாசகசாலைக் கட்டடத்தில் தங்கி, தோழர்கள் வீடுகளில் உணவு அல்லது உணவு விடுதிகளில் உணவு; அங்கே செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயக்கத் தோழர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்த முடி திருத்தகம் _ இவைகளில்தான் பகலில் பெரும்பாலான நேரங்களைச் செலவழிப்போம். முடிவெட்டும் நிலையத்தில் உள்ள இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருப்போம். முடி வெட்டிக்கொள்ள யாராவது வந்தால், அவர் தொழில் தடையின்றி நடக்க நாங்கள் உடனே இரண்டு மூன்று தெருக்களில் சுற்றி வலம் வந்து திரும்புவோம். அதற்குள் அவர் 'வேலையை முடித்து' அனுப்பி விடுவார். எங்களுக்குத் தேநீர் முதலியவை அவரே வாங்கித் தந்து அன்புடன் உபசரிப்பார்" அய்யா ஆசிரியர் அவர்கள் தனது தொடக்க கால இயக்கப் பணிகளை விவரிக்கிறபோது வியப்பின் எல்லைக்கே போகிறோம். பட்டினி கிடந்த அனுபவம், தந்தை பெரியார் அவர்கள் தந்தி மணியார்டர் அனுப்பி மாணவத் தோழர்கள் பசியாற வழி வகுத்தது என்று அவர் குறிப்பிடும் பல நினைவுகள் நம்மை நெகிழ வைக்கின்றன.
தான் அரசு உதவித்தொகை பெற்றதையும், அதற்குக் காரணமான நிகழ்வையும் அய்யா ஆசிரியர் அவர்கள் சொல்லும் பகுதியில், திருக்குறள் அவர் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு உதவியதைக் குறிப்பிடுகிறார். அய்யா ஆசிரியர் அவர்கள் நான்காம் வகுப்பு படிக்கும்போது கல்வி அதிகாரி வந்ததையும், அவர் மாணவர்களிடம் ‘திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்’ என்று கேட்க, அய்யா ஆசிரியர் அவர்கள் மடமடவென்று பல திருக்குறள்களை ‘உரத்த குரலில் மேடையில் பேசுவதுபோல சொல்லத் தொடங்கினேன்' என்று குறிப்பிட்டு தான் திருக்குறள்களைச் சொன்னதையும், அதற்குக் காரணம் திராவிட இயக்கம் என்பதையும், அதனால் தான் பெற்ற அந்தக் கல்வித்தொகை, அந்தக் காலத்தில் அந்த நேரத்தில் தனக்கு எவ்வளவு பெரிய உதவி என்பதையும் நன்றியோடு குறிப்பிடுகிறார். “வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது. அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும். அய்யாவின் அடிச்சுவட்டினைப் பின்பற்றியதால் 'பல கற்கும்' வாய்ப்பும், துணிவுடன் கூறவுமான சூழலும் ஏற்பட்டது. அது கல்விக் கண்ணைப் பெறவும் எவ்வளவு தூரம் உதவியுள்ளது பார்த்தீர்களா? ‘பெரியாரைத் துணைக்கோடல்' தந்த பயன் அல்லவா இது" என்று குறிப்பிடுகிறார்.
தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் அய்யா ஆசிரியர் அவர்கள்; அய்யா ஆசிரியர் அவர்களின் அடிச்சுவட்டில் நம்மைப் போன்றோர். தந்தை பெரியார் மறைவுக்குப் பின், திராவிடர் கழகம் இருக்காது, தந்தை பெரியார் கொள்கை தழைக்காது என்று நினைத்தார்கள். ஆனால், தந்தை பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவரது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் எதிரிகளின் தூக்கம் தொலைகிறது. இரத்த அழுத்தம் கூடுகிறது. அதற்குக் காரணம், தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் அய்யா ஆசிரியர் அவர்களின் பெரும்பணி. உடல் பிணிகளைப் புறந்தள்ளி, தந்தை பெரியாரின் கொள்கைப் பெரும்பணியை பல வகையில் அய்யா ஆசிரியர் அவர்கள் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். புதிய புதிய வழிகளில், புதிய புதிய நோக்கில் தந்தை பெரியாரின் கருத்துகள் மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன உலகம் முழுவதும்.
வாழ்க பெரியார்! வாழ்க அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! அனைவருக்கும் மீண்டும் 'சுயமரியாதை நாள்' வாழ்த்துகள்.
முனைவர் வா.நேரு
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ்- 01-12-2021
No comments:
Post a Comment