கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்பதே...
23.04.2023... உலகப்புத்தக நாள். எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்களிடம் பகிர்ந்துகொண்ட புத்தகங்கள்,அதன்மூலமாக பகிர்ந்துகொண்ட கருத்துகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.அருப்புக்கோட்டை கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்த பேரா.ச.மாடசாமி அவர்கள் 'எனக்குரிய இடம் எங்கே ?' என்னும் நூலை எழுதியிருக்கின்றார்.தான் பணியாற்றிய அனுபவங்களை வைத்து புனைவுகளையும் இணைத்து சொல்லப்பட்ட ஓர் அருமையான நூல் அது.கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும்,ஒவ்வொரு மாணவிக்கும் 'அவர்களுக்குரிய இடத்தைக்' காட்ட வேண்டியது ஓர் ஆசிரியரின் கடமை என்பதையும்,நன்றாகப் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு மட்டுமே வகுப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்படுவதையும் குறிப்பிட்டு எழுதியிருப்பார். நன்றாகப் பாடத்தைப் படிப்பவர்கள் மட்டும்தான் நல்ல மாணவர்களா? இசையில்,ஓவியத்தில் ,விளையாட்டில்,கவிதை,கதை,கட்டுரை எழுதுவதில் எல்லாம் வல்லவர்கள் நல்ல மாணவர்கள் இல்லையா என்னும் கேள்வியை எழுப்பியிருப்பார்.அவர்கள் எல்லாம் அடையாளம் காணப்படாததால்,ஆசிரியர்கள் அவர்களுக்குரிய இடத்தைக் காட்டாததால் நிகழும் நிகழ்வுகளை அந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருப்பார்.
பேரா.ச.மாடசாமி அவர்கள் 'வகுப்பறையில் கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்பதுதான் ஓர் ஆசிரியரின் வேலை ' என்று குறிப்பிட்டிருப்பார்.
கலங்கிய கண்களை அவ்வளவு எளிதாகக் கண்டு பிடிக்க முடியுமா? கலங்கிய கண்களுக்கு தன் ஆசிரியர் ஆறுதலைக் கொடுப்பார் என்னும் நம்பிக்கை வரவேண்டும். தனக்கோ தன் குடும்பத்திற்கோ இருக்கும் பாதிப்பை தனது ஆசிரியரிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்னும் எண்ணம் வருமளவிற்கு மாணவனுக்கோ மாணவிக்கோ தன் ஆசிரியரிடம் பிடிப்பும் அன்பும் வ்ரவேண்டும்.ஒரு முழுமையான ஜனநாயகப்பண்பு உள்ள வகுப்பறைக்குள்தான் இவையெல்லாம் சாத்தியம்.அன்றைய வகுப்பறைகள் எப்படி இருந்தன?..மாற்றம் எப்படி ஏற்பட்டது..
(அவர் வேலை பார்த்த தேவதானப்பட்டி பற்றி இன்றைய இணையதளம் தரும் செய்திகள்)
தேவதானப்பட்டி (ஆங்கிலம்:Devadanapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது வத்தலகுண்டு - பெரியகுளம் நெடுஞ்சாலையில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,952 மக்கள்தொகையும், 6 உட்கிடை கிராமங்களும் கொண்ட தேவதானப்பட்டி பேரூராட்சி, 14 சகிமீ பரப்பும், 4298 குடியிருப்புகளும், 18 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவதானப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். தேவதானப்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்தப் பகுதி தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர்.
இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது.
இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு தொடக்கப்பள்ளியும், ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியும் , இன்னொரு தனியார் தொடக்கப்பள்ளியும் உள்ளன . இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவையும் உள்ளன. இங்கு வாரந்தோறும் கூடும் சந்தையில் காய்கறிகளும், மளிகை சாமான்களும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன.
நான் பெரியகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்த்தபொழுது தேவதானப்பட்டிபோயிருக்கிறேன்.பெரியகுளம்,தேவதானப்பட்டி,வத்தலக்குண்டு எல்லாமே பச்சைப்பசேல் என்று இருக்கும் வயல்களால் நம்மை வரவேற்கும் பூமி.கொடைக்கானல் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்...அந்த இடத்தில் 70களின் தொடக்கத்தில் வேலை பார்த்த அனுபவம் இதோ என் தலைமை ஆசிரியர் மொழியில்
" தேவதானப்பட்டிக்கு அருகில்தான் எனது சொந்த ஊர்.நத்தத்திலிருந்து தேவதானப்பட்டிக்கு மாறுதல் கேட்டிருந்தேன்.கொடுத்து விட்டார்கள்.அப்போதுதான் எனது துணைவியாருக்கும் பணி வாங்கினோம்.தேவதானப்பட்டியிலேயே அவர்களும் கணித ஆசிரியராக இருந்தார்கள்.அங்கே எப்படி இருந்தது என்றால் ஆக மோசமாக இருந்தது.இடம் இல்லை.நாடார் பேட்டையில்தான் பள்ளிக்கூடத்தை வைத்து இருந்தார்கள்.ஒரு சத்திரம் மாதிரி இருந்தது.வகுப்புகளை பிரிப்பதற்கு ஊடே ஊடே மூங்கில்தட்டிகள்தான் பார்ட்டிசன்...தரையில்தான் பிள்ளைகள் அனைவரும் உட்காரவேண்டும்.பர்னிச்சர்கள் எல்லாம் இல்லை.
பண்ணைக்காடு,நத்தத்தில் எல்லாம் மாணவ,மாணவிகள் அமர்வதற்கு பர்னிச்சர் இருந்தது.இங்கு இல்லை.நான் நத்தத்திலேயே பணியைத் தொடர்ந்திருந்தால் அந்தப் பள்ளியை இன்னும் நன்றாகக் கொண்டு போயிருக்கலாம்.நத்தத்தில் நிறைய முஸ்லீம்கள்.பள்ளியின் மேல் அவ்வளவு ஈடுபாடு,மரியாதை.எல்லோருமே பெரிய,பெரிய பணக்காரர்கள்.நான் முழுமையாக என் ஆற்றலைப் பயன்படுத்தும் அளவிற்கு தேவதானப்பட்டி பள்ளி இல்லை..
இருந்தாலும் கூட நாங்கள் பணியாற்ற ஆரம்பித்த காலத்தில் இருந்த நிலைமையைக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.கல்லூரிப் படிப்பை முடித்த பலரும் விழிப்புணர்வு அடைந்தார்கள். படிப்பின் மேன்மையை உணர்ந்தார்கள்.கல்லூரிப் படிப்பை முடித்து கிராமங்களில் போய் பணியாற்ற ஆரம்பித்தார்கள்.தாங்கள் பெற்ற விழிப்புணர்வை கிராமங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள்.பட்டதாரி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் எல்லோருமே மனச்சாட்சிக்கு உண்மையாக இருந்தார்கள்,பணியில் மிக உண்மையாக இருந்தார்கள்.
எப்படிப்பட்ட பின் தங்கிய ஊராக,கிராமமாக இருந்தாலும் கூட பட்டதாரி ஆசிரியர்கள் நன்றாக இருந்தார்கள்.அவர்களிடம் இருவழிப்பாதை இருந்தது. தாங்கள் மட்டும் பேசுவது வகுப்பு அல்ல,மாணவர்களும் பேசவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தினார்கள்.எப்படி என்றால் மாணவர்கள் வகுப்புகளில் கேட்கலாம்,என்னனாலும் கேட்கலாம்.பாடம் தெரியலைன்னு கேட்கலாம்.'நீங்க இப்படி எல்லாம் செய்றீங்களே சார்-ன்னு கேட்கலாம்.கல்லூரியில் படித்த மெஜ்ஜூரிட்டி இருந்ததால்,அது அந்தப் பக்கம் கிராமத்திற்கும் வந்துவிட்டது.எப்படி கல்லூரியில் எங்களை ஆசிரியர்கள் கேள்வி கேளுங்கள்,கேள்வி கேளுங்கள் என்று ஊக்கப்படுத்தி கேள்வி கேட்க வைத்தார்களோ அது போல, பட்டதாரி ஆசிரியர்கள் கிராமப்புற மாணவ,மாணவிகளைக் கேள்வி கேட்கத்தூண்டினார்கள்.
மாணவர்களுடைய கேள்விகள் ,எங்களுக்கு நம்முடைய குறை என்ன என்பதனை தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.மாணவர்களைக் கேட்கலாம் என்று அனுமதித்தால் " சார், நேற்று நீங்கள் இதைச்சொல்லிக் கொடுத்தீங்க,விளங்கவே இல்லை சார்" என்று எந்திரிச்சு சொல்லிடுவான் . இது எப்போ? படிப்பறிவே வராத காலம் அது(1966-67) அதுவுரை வகுப்பறைகள் ஒரு வழிப்பாதையாக இருந்தது. ஆசிரியர் மட்டும்தான் பேசுவார்.ஆசிரியர் சொல்வதுதான் சரி என்று துவக்கப்பள்ளி முதல் இருந்தது.நாங்கள்தான்,பட்டதாரி ஆசிரியர்கள்தான் இதனை உடைக்கின்றோம்.அவனைக் கேள்வி கேட்க வைக்கிறோம்.கேள்வி கேட்பதை அனுமதிக்கிறோம்.கேட்பதை பகைமையாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை." என் கீழேதாண்டா ,நீங்கள் இருக்கணும் ' என்று நாங்கள் நினைக்கவில்லை.அது ஒரு மிகப்பெரிய மாற்றம்.எழுச்சி.அரசாங்கம் அதனை எதிர்பார்த்தார்களோ இல்லையோ,அது ஒரு மிகப்பெரிய புரட்சி.
அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் இல்லாமல் தேவதானப்பட்டி பள்ளி இருக்கிறது.அதோடு அப்போதெல்லாம் உயர் நிலைப்பள்ளியை ஊருக்குக் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் பணம் கட்டவேண்டும்.அந்தப்பணம் கூட கட்டாமல் இருக்கிறது அந்த ஊரில்.அங்கு இருக்கிற எல்லோருமே ஏழைகள் இல்லை.பணக்காரர்களும் அந்த ஊரில் இருக்கிறார்கள்.அரசாங்கத்திடம் இருந்து அந்தப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியருக்கு ஓலை வந்துவிட்டது.இந்த ஆண்டு மார்ச்சு மாதத்திற்குள் பணம் கட்டவேண்டும்,இல்லையெனில் ஒன்பதாம் வகுப்பு மூடப்படும் என்று ஓலை வந்துவிட்டது.அப்போது இருந்த தலைமை ஆசிரியரும் நானும் மீட்டிங் போட்டுப்பேசினோம்.
பணம் கட்ட என்ன செய்யுறது?மக்கள் கிட்ட போகத்தைரியம் இல்லை.போனால் என்ன ஆகுமோ?ஏது ஆகுமோ? இப்படி எல்லாம் ஒரு பயம்.தலைமை ஆசிரியரிடம் நான் பேசினேன். " சார்,வாங்க,பஞ்சாயத்துத் தலைவர்,பெரிய பணக்காரர்.அவர்தாம் ஊர் மக்களை எல்லாம் ஆளுமை செய்பவர்(கட்டி மேய்ப்பவர்).அவரை வீட்டிலேயே போய் எல்லோருமாகச்சேர்ந்து பார்ப்போம்.என்ன சொன்னாலும் சரி,அதனை எதிர்கொள்வோம்.அரசாங்கத்திடமிருந்து வந்த அந்தத் தபாலையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவரைப் போய்ப் பார்த்தோம்.
(தொடரும்)
2 comments:
நல்ல மதிப்பெண்கள் எடுப்பது தான் மாணவர்க்கு அழகு நல்ல மதிப்பெண்களை எடுக்க வைப்பது தான் நல்ல ஆசிரியருக்கு அழகு என்ற எழுதப்படாத தத்துவத்தை எடுத்து நொறுக்கி மாணவர்களின் கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்பதும் அவர்களின் திறமையைக் கண்டு கைதூக்கி விடுவதும் தான் ஒரு ஆசிரியருக்கு அழகு என்ற அருங்கருத்தை இப்பதிவு பேசுகிறது. பரவ வேண்டிய கருத்து! 🙏
ஆமாம்..ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்தன்மை இருக்கிறது.மாணவப்பருவத்தில் அதைக் கண்டுபிடிக்கும் ஆசிரியரே ,மாணவ மாணவிகளின் உயர்வுக்கு காரணமாகிறார்கள் என்பது பலரின் வாழ்க்கை சொல்லும் பாடம். கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
Post a Comment