Showing posts with label அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள் --- வா. நேரு. Show all posts
Showing posts with label அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள் --- வா. நேரு. Show all posts

Tuesday, 25 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(22)...முனைவர் வா.நேரு

 

அய்யா,என் மகனை உருப்படி ஆக்கி விட்டீர்கள்…

 

ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கும் மரியாதை என்பது சொற்களால் விளக்க முடியாதது.இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் நன்றி உணர்ச்சியால் வரும் மரியாதை அது.மதுரையில் இருக்கும் பிரபல வழக்கறிஞர் அண்ணன் சுந்தரம் அவர்கள்.எனது சொந்த ஊரான சாப்டூருக்கு மிக அருகில் இருக்கும் வண்டப்புலியைச்சார்ந்தவர். என்னோடு பத்தாம் வகுப்பில் அந்த ஊரைச்சேர்ந்த நண்பர்கள் ராஜாராம்,கிருஷ்ணமூர்த்தி(இப்போது காவல்துறை உதவி ஆய்வாளர்) ஆகியோர் உடன் படித்தனர்.அண்ணன் கல்யாணசுந்தரம் என்ற சுந்தரம் என் அண்ணனோடு பதினொன்றாம் வகுப்புவரை படித்தவர்.படிக்கும் காலத்தில்  சேட்டை என்றால் அப்படி ஒரு சேட்டை பண்ணும் கோஷ்டியைச்சார்ந்தவர்.வாழ்க்கையில் உறவினர் ஒருவர் சொன்ன சொல்லால் மனக்காயம் பட்டு ,ஒரு திருப்புமுனையால் வாழ்க்கையில் உந்தப்பட்டு பல மொழிகளைக் கற்று,இன்றைக்கு மிகப்பெரிய வழக்கறிஞராக மதுரையில் வசிப்பவர்.சாப்டூரில் அவர் 6-ஆம் வகுப்பில் மூக்கையா வாத்தியாரிடம் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக்கொண்டதை,ஆங்கில மனப்பாடப் பாட்டை தமிழில் எழுதிக் கொண்டு வந்து அதை வாசிக்கும்போது திரு.கோதண்டராமன் வாத்தியாரிடம்  மாட்டிக்கொண்டதை எல்லாம் சொல்லும்போது வாய்விட்டுச் சிரிக்கலாம்.அவரோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகப்பிடிக்கும்.நிறைய விசயங்களைப் பேசுவார்.உரிமையோடு எதார்த்தமாகவும் எங்கள் வட்டார மொழியையும் இணைத்துப் பேசுவார்.


“டேய், நான் சுப்புலாபுரம் போய்,மூக்கையா வாத்தியாரைப் பார்த்து,காலில் விழுந்து வணங்கி வந்தேன்” என்றார் ஒருமுறை.அண்ணன் சுந்தரத்திற்கு 6-ஆம் வகுப்பு பாடம் எடுத்தவர் திரு.மூக்கையா ஆசிரியர் அவர்கள்.’அவர் எல்லாம் இல்லாவிட்டால், நான் எல்லாம் உருப்பட்டிருக்கவே மாட்டேன்’என்றார்.ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஆசிரியரைச்சென்று பார்த்து அவரை வணங்கி வந்தேன் என்று சொல்லும்போது அவரிடம் இருந்த அந்த நன்றியுணர்ச்சி சொற்களில் தெரிந்தது. மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.உயரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம்,எந்த இடத்தில் ,எப்படிப்பட்ட சூழலில் இருந்து படித்து இன்றைக்கு உயரத்தில் உட்கார்ந்திருக்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர்கள் ஆசிரியர்கள்தான்.


திரு.வீரிசெட்டி சார் அவர்களை நான் தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்க்கும்போது அடிக்கடி பார்ப்பேன்.சில நேரங்களில் இப்போது தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கும் இடத்திற்கு முன்னால் இருக்கும் டீக்கடையில் டீ குடிப்போம்.எப்போதும் டீயை ஆற்றித்தான் எனது தலைமை ஆசிரியர் குடிப்பார். பல் பிரச்சனையால் சூடாக சாப்பிடுவதில்லை என்றார் ஒருமுறை.பல நேரங்களில் அவருக்கு கொடுக்கும் டீயை வாங்கி முழுமையாக ஆற்றி நான் கொடுப்பேன்.அப்புறம் எனது டீயை நான் குடிப்பேன்.டீ குடிப்பதற்கும் அவர் கொஞ்சம் நேரம் எடுத்துக்குடிப்பார்.அப்படி ஒருமுறை நான் டீயை வாங்கி ஆற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்தப் பக்கம் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் எனது தலைமை ஆசிரியரைப் பார்த்தவர் ,வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு எங்கள் அருகில் வந்தார்.தமுக்கம் மைதானத்திற்கு முன்னால் ரோட்டில் இருக்கும் டீக்கடை அது.எப்போதும் வாகனங்களும் ஆட்களுமாக வெகு பரபரப்பாக இயங்கும் சாலை அது. நிறுத்திவிட்டு மேலே ஏறி வந்தவர்,எனது தலைமை ஆசிரியரின் காலில்  நெடுஞ்சாங்கிடையாக முழுமையாக விழுந்து வணங்கினார்.நானும் அவர் அருகில் இருக்கிறேன்.நான் சட்டென்று விலகினேன்.எனது தலைமை ஆசிரியர் அவரது பெயரைச்சொல்லி,’எழுந்திருங்க,எழுந்திருங்க,ஏன் இப்படி ரோட்டில்’ என்றார்.பின்பு அந்தக் காலில் விழுந்த நபர் எனது தலைமை ஆசிரியரிடம் நலமெல்லாம் விசாரித்தார்.இவரும் அவரிடம் நலமெல்லாம் விசாரித்தார்.அவர் சென்ற பிறகு அவர் யாரென்று நான் விசாரித்தேன்.

தான் வேலை பார்த்த … பள்ளியில் வேலை பார்த்த அலுவலர் அவர் என்றார். ஒரு சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டார்.அந்த நேரத்தில் அந்தச்சிக்கலில் இருந்து அவர் வெளியே வர நான் உதவினேன்.அந்த நன்றியுணர்ச்சியோடு இருக்கிறார் என்றார்.இப்படி பல பேருக்கு இக்கட்டான நேரங்களில் எனது தலைமை ஆசிரியர் உதவியிருக்கிறார்.


சாப்டூரில் தலைமை ஆசிரியராக திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் வேலை பார்த்த போது நடந்த ஒரு நிகழ்வு.அவரே சொல்லியது.எங்கள் ஊர் பெரியராஜா அவர்கள் எங்கள் தலைமை ஆசிரியரின் செயல்பாட்டால் ஈர்க்கப்படடு,பல முறை இவரிடம் பேசியிருக்கிறார்.இவரும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து பேசியிருக்கிறார்.


எங்கள் சாப்டூர் பேருந்து நிலையத்திலிருந்து எங்கள் ஊர் அரசு உயர் நிலைப்பள்ளி 1 கி.மீ.தூரத்திற்கு மேல் இருக்கும். பேருந்தை விட்டு இறங்கி,ஊரின் நடுத்தெரு வழியாக நடந்து ,ஊரைக் கடந்து அழகாபுரிச்சாலைக்குச்செல்லும் வழியில் இருக்கும் பள்ளிக்கு செல்லவேண்டும்.அந்த அழகாபுரிச்சாலையில்தான் எங்கள் ஊர் ஜமீந்தார்கள் திரு.பெரியாராஜா,திரு.தர்மராஜா அவர்களின் பங்களாக்கள் இருக்கிறது.அப்படி ஒரு முறை எங்கள் ஊர் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி,ஜமீந்தார் பங்களாவுக்கு அருகில் வரும்போது,பெரியராஜா அவர்கள் அங்கு நின்று கொண்டு இருந்திருக்கிறார்.எங்கள் தலைமை ஆசிரியர் வணங்கி இருக்கிறார் .எங்கள் தலைமை ஆசிரியருடன் பெரியராஜா அவர்கள்  பேச ஆரம்பித்திருக்கிறார்.இவரும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்..அப்போது அந்த வழியாக தலையில் கடலைக் கொடிக் கட்டை தூக்கிக்கொண்டு வந்த விவசாயி,எங்கள் தலைமை ஆசிரியரைப் பார்த்தவுடன் ,தலையில் இருந்த சுமையை ஓரமாக இறக்கிவைத்துவிட்டு, ‘அய்யா எனது பிள்ளையைப் படிக்க வச்சுட்டீங்க,ஆர்வமாகப் படிக்கிறான் இப்போது.அவனை உருப்பட வைத்து விட்டீர்கள் “ என்று சொல்லி எனது தலைமை ஆசிரியர் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.எங்கள் ஊரின் மிகப்பெரும் பணக்காரரான ஜமீந்தார் பெரியராஜா அவர்களுக்கு எங்கள் தலைமை ஆசிரியரின் மேல் மரியாதையும் ஈர்ப்பும் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.


என்னைப் பொறுத்த அளவில் நான் காலில் விழுவதை ஏற்றுக்கொள்ளாதவன்.என்னுடைய சிறு வயதில்,எனது அம்மாவைப் பெற்ற பாட்டி,(எங்கள் அவ்வா..சண்முகத்தாய்) ‘டேய் ,உங்க அப்பா இறந்தபிறகு,உங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க அம்மா வளக்கிறா,அவ காலில் விழுந்து கும்பிடு ‘ என்று சொன்னபோது, “என் காலில் மட்டுமல்ல,வாழ்வில் எவர் காலிலும் விழக்கூடாது “என்று எனது அம்மா சொன்ன சொல் இன்றும் கூட மனதில் நிற்கிறது.தந்தை பெரியாரின் பெரியாரியலைப் பின்பற்ற ஆரம்பித்த பின்பு,அரசியல்வாதிகள் எல்லாம் அவரவர் தலைவர்கள் காலில் விழுந்து வணங்குவதைப் பார்க்கும்போது மனதிற்குள் ஒரு மெல்லிய புன்னகை ஓடும்.அவை எல்லாம் பிரதிபலன் பார்த்து காலில் விழுவது.அதைச்சிலர் கலையாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூத்தவர்கள் காலில் விழுவது,தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் காலில் விழுவது என்பது மரியாதை காராணமாக பலர் விழுந்து வணங்குகிறார்கள்.அது சரியா?தவறா என்ற விவாததிற்குள் நான் போக விரும்பவில்லை.ஆனால் திரு.வீரிசெட்டி சார் அவர்களின் காலில் அவ்வளவு நன்றி உணர்ச்சியோடு பலர் விழுந்து வணங்கியதை நான் பார்த்திருக்கிறேன்.அப்படி பல மாணவ,மாணவிகள் ,உடன் பணியாற்றிய ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மை புரிந்தவராக,அவர்கள் மனதில் என்றும் நன்றி உணர்ச்சியை .ஏற்படுத்தக் கூடியவராக எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்…

                            (தொடரும்) 

Tuesday, 18 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(21)

 

 சக ஆசிரியருக்கும் பாடம் நடத்திய தலைமை ஆசிரியர்.

எங்கள் ஊரைச்சேர்ந்த திரு.கோதண்டராமன் அவர்கள் சாப்டூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் வேலை பார்த்தார்.நாங்கள் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது அவர்தான் எங்களுக்கு கணிதப் பாடம் எடுத்தார்.மிக நன்றாக புரியுமாறு நடத்துவார்.எங்கள் ஊர்  மாணவ-மாணவிகளுக்கு எல்லாம் அவர்தான் வழிகாட்டி.என்ன படிக்கவேண்டும் என்பதுமுதல்,படிப்பதற்கு வங்கிக் கடன் வாங்குவதுவரை பல பேருக்கு அவர் கணித ஆசிரியராக இருந்தபோதும் சரி,அதற்குப் பின் ஏ.இ.ஓ.வாக இருந்தபோதும் சரி,ஓய்வு பெற்ற பிறகும் சரி சாப்டூரைச்சார்ந்த மாணவ-மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு நீண்டகால வழிகாட்டியாக இருந்து வருகின்றார்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஊரைச்சேர்ந்த தமிழ் அய்யா குழந்தைவேல் அவர்கள் தமிழ்ப்பாடம் எடுப்பார்.ஒரு முறை தமிழ்ப்ப்பேப்பரைக் கொடுக்கும்போது ‘உனக்கு மதிப்பெண் குறைத்துப்போட வேண்டும்,போடவேண்டும் என்று நினைத்து திருத்துகிறேன்,ஆனால் நீ எழுதி இருப்பதைப் பார்க்கும்போது அதிக மதிப்பெண் போட்டுவிடுகின்றேன்” என்றார்.அப்போது கிடைத்த மிகப்பெரிய ஊக்க டானிக் அது எனக்கு.அமைதியாக ஆனால் மிக ஆழமாக பாடம் நடத்துவார். ஓய்வு பெற்ற பின்பும் உயர்கல்வி படித்தார்.இப்போது நினைவுகளில் வாழ்கிறார்.

அதைப்போல எங்கள் ஊரைச்சேர்ந்த சுப்பிரமணியம் வாத்தியார்..செஸ் விளையாடுவதில் அப்படி ஒரு ஆளுமை அவருக்கு செஸ் விளையாட்டு புரிந்ததால் என்னவோ பாடம் நடத்துவதிலும் அப்படி ஒரு புரிதலோடு நடத்துவார்.அதைப்போல செம்பட்டியில் இருந்து வந்த ஆசிரியர் திரு.தர்மக்கண்ணு அவர்கள் நினைவில் நிற்கிறார்.

இப்படி பல ஆசிரியர்கள் நினைவில் வருகிறார்கள்.எங்களுக்கு 6-ம் வகுப்பு பாடம் எடுத்த திரு.மூக்கையா ஆசிரியர் அவர்கள் மறக்க முடியாத ஆசிரியர்.6-ம்வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்க அவர் எடுத்த முயற்சிகள் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாதது.அண்மையில் சுப்புலாபுரத்தில் தலைமை ஆசிரியராக இருக்கும் எனது தங்கை வா.சாராதாவைப் பார்க்கச்சென்றிருந்தபோது திரு.மூக்கையா வாத்தியாரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அவரையும் அவரது இணையர் திருமதி கருப்பாயி டீச்சர் அவர்களையும் பார்த்துப்பேசினேன்.அப்போது திரு.வீரிசெட்டி சார் அவர்களின் பேச்சு வந்தது.அப்போது திரு.மூக்கையா வாத்தியார் சொன்னார்,” நேரு, நான் அப்போது ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரமாக பி.எட்.படித்தேன். எனக்கும் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் பாடம் எடுத்தார் “ என்றார்.வியப்பாக இருந்தது எனக்கு.  மாணவர்களுக்கு மட்டுமல்ல,சாப்டூரில் இருந்த நேரத்தில் சக ஆசிரியருக்கும் பாடம் எடுத்திருக்கிறார்.

மரியாதைக்கும் பேரன்பிற்கும் உரிய எனது ஆசிரியர் திரு.மூக்கையா வாத்தியார் அவர்களோடு நான் ...

இதுதான் எனது தலைமை ஆசிரியர்.தன்னைச்சுற்றி இருக்கும் ஆசிரியர்கள்,பணி ஆட்கள் இவர்கள் அனைவருக்கும்  நேர்மையான முறையில் எந்தெந்த வகையில் எல்லாம் உதவ முடியுமோ அத்தனை வகையிலும் அவர் உதவி செய்து இருக்கிறார் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்

ஒரு உயர்ந்த நோக்கத்தை மனதில் வைத்து அதற்காக உழைக்கின்றபோது ,இயல்பாகவே எல்லோருடைய ஆதரவும் கிடைக்கிறது. நாங்கள் படிக்கின்ற காலத்தில் ஆறுமுகம் என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார்.அவரைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்கள்.அவருக்கும் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சாருக்கு முன்னால் இருந்த தலைமை ஆசிரியருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டை,சத்தம் இருக்கும். ஆனால் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் வந்தபிறகு அவரின் செயல்பாடு முழுவதுமாக மாறியது.அப்படி ஒரு ஒத்துழைப்பை பள்ளியின் வளர்ச்சிக்கு கொடுத்தார்.எங்கள் ஊரைச்சேர்ந்த ஆசிரியர்கள்,வெளியூர் ஆசிரியர்கள்,பள்ளியின் நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்தனர்.

காலையில் 9.30க்கு பள்ளி ஆரம்பிக்கும் .அதற்கு முன்னால் 8.30 முதல் 9.30 வரை ஸ்டடி இருக்கும்.அதாவது எல்லா மாணவ,மாணவிகளும் வந்து அவரவர் இருக்கையில் உட்கார்ந்து முதல் நாள் பாடத்தைப் படிக்கவேண்டும்.அதனைக் கண்காணிப்பதற்கு ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வரவேண்டும்.இந்தக் காலை ஸ்டடியைக் கவனிப்பதற்கு பல ஆசிரியர்கள் தன்னார்வமாக முன்வந்தார்கள்.

எங்கள் ஊர் ஜமீந்தார் அவர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு. ‘என்ன நடக்குது நம்ம பள்ளிக்கூடத்திலே,படிக்கிற பையன்கள்தான் பள்ளிக்கூடத்திற்கு வேகமாக ஓடுகிறார்கள் என்றால்,வேலை பார்க்கிற ஆசிரியர்களும் அப்படி ஒரு ஓட்டமும் நடையுமாக போகின்றார்கள் “ என்று பார்த்து வியந்து பின் எங்களது தலைமை ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்டு,அவர் அங்கு வேலை பார்க்கின்றபோதும் சரி,அதற்கு பின்னாலும் சரி மிகப்பெரிய ஆதரவாக இருந்தார் என்பதை அடிக்கடி எனது தலைமை ஆசிரியர் அவர்கள் கூறியிருக்கின்றார்.

எங்கள் ஊரில் வேலைபார்த்தபோது,கல்விக்கு கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்தை பள்ளிக் கட்டமைப்புக்கும் கொடுத்தார்.அவர் காலத்தில்தான் பள்ளிக்கு மின்சாரம் வந்தது ,பின்பு கிணற்றுக்கு மோட்டார் பைப் போடப்பட்டது.பள்ளிக்கூடம் இருக்கும் நிலப்பரப்பை ரிக்கார்டுகளை வைத்து சரிபார்த்து பின்பு முழுவதுமாக ஒரு கேட் போல பள்ளியைச்சுற்றி கருவேலை மர வேலி அமைக்கச்செய்தார்.அதைப்போல பள்ளி நுழைவு வாயில் அமைக்கப்பட்டு எல்லோரும் வந்து போவது போல அந்த  நுழைவு வாயில் அமைந்தது.பள்ளியில் சின்ன மேடை கட்டப்பட்டு ,அதில் கொடிக்கம்பம் நடப்பட்டது.சுதந்திர தினத்திற்கும்,குடியரசு தினத்திற்கும் அந்த மேடையில் இருக்கும் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

மாணவர்களிடம் எவ்வளவு அக்கறையாக இருக்கிறாரோ அவ்வளவு கண்டிப்பாகவும் இருப்பார். நான் வாழ்க்கையில் ஆசிரியர்களிடம் அடிவாங்கியது மிகக்குறைவு .இப்போது  எங்கள் ஊரில் ,காங்கிரசு கட்சியில் இருக்கும் கொத்தனார் சுப்பையா என்னோடு படித்தவன்.பத்தாம் வகுப்பறையில் எதற்காக சண்டை போட்டோம் என்று நினைவில்லை.ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் அடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது திரு.வீரிசெட்டி சார் அவர்கள் வந்து விட்டார். ஏண்டா சண்டை போடுறீங்க என்று கேட்டு,அவர் எனது கன்னத்தில் அறைந்த அறை இன்றைக்கும் பசுமையாக நினைவு இருக்கிறது.அதைப்போல சுப்பையாவுக்கு அப்படி ஒரு அடி.அதற்குப் பின் நானும் சுப்பையாவும் வகுப்பறையில் சண்டை போடவே இல்லை.

பிற்காலத்தில் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, மாணவர்களை அடிப்பது தவறு என்று சட்டம் வந்தது குறித்து எல்லாம் அவருக்கு மனக்குறை இருந்தது. ‘தவறு செய்யும் மாணவனை எப்படித் திருத்துவது,அறியாத வயது,தான் செய்வது என்னவென்றே தெரியாமல் செய்யும் வயது. கண்டிக்காமல் விட்டு விட்டால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறைச்செய்து ,நாசமாகிப் போவானே , “ என்பார்.

“மாணவர்களை அடிக்காமல் ஆசிரியர்களால் திருத்த முடியும்தானே சார் “ என்றேன் நான் ஒருமுறை. ‘இல்லை, நீங்கள் எல்லாம் மேல் நாட்டு கல்வி முறையைப் பார்த்து விட்டு அதனைப்போல நமது நாட்டிலும் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.  நமது நாட்டில் இப்போதுதான் முதல் தலைமுறை,இரண்டாவது தலைமுறை படிக்க வருகின்றார்கள்.அவர்களுக்கு படிப்பு என்றால் என்ன?படிப்பினால் நமக்கு கிடைக்கும் உயர்வு என்ன? என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை.நாம்தான் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.அதற்கு கண்டிப்பு வேண்டும் ” என்றார். கடைசிவரை மாணவர்களை,மாணவிகளை அடித்துத் திருத்தும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு இருந்தது.

                                                  (தொடரும்)

 

Tuesday, 11 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(20)

 

                சாப்டூரில் இரவு நேரப்படிப்பு


இதுவரை வெளிவந்த 19 கட்டுரைகளும் எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் தன் நினைவுகளாக என்னிடத்தில் கூறியவை.சாப்டூரில் தான் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றிக் கூறுகின்றபோது,அதுதான் உங்களுக்குத் தெரியுமே என்று சொல்லிவிட்டார்.

உண்மைதான் 1979-பள்ளிக்கூடம் திறந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்.நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.அவர் வந்த நாள் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,சராசரியான உயரத்தைவிட சற்றுக்குறைவாக இருந்த எங்கள் தலைமை ஆசிரியர் வந்தவுடன் பொறுப்பு ஏற்பதற்கு முன் பள்ளிக்கூடத்தில் இருந்த மேசை,நாற்காலிகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு,கணக்குப்படி பெற்றுக்கொண்டது நினைவு இருக்கிறது.

அப்போது சாப்டூர் பள்ளிக்கூடத்தில் ஒரு கூரை போடப்பட்ட வகுப்பறையும் இருந்தது.இப்போது சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நுழைந்தவுடன் வரும் முதல் பள்ளிக்கூடக் கட்டடம் இருந்த இடத்தில் இருந்தது.எங்கள் ஊரில் முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் திரு.சுப்புராமன் அவர்களின் தம்பி நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன் என்னோடு படித்தான்.நவ நீதகிருஷ்ணனின் அண்ணன்கள் சுப்புராமன்,நடராசன்,மோகன்,மூர்த்தி என அனைவரும் மிக நன்றாகப் பழகுவார்கள்.பேசுவார்கள்.அவர்களில் திரு.மோகன் அவர்கள் படித்து பட்டம் பெற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வேலைக்குச்சென்றார் .தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏதாவது ஒரு ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அந்த  நிறுவனம் ஒரு கட்டடம் கட்டித்தரலாம் என்று முன்வந்தபோது,அந்தக் கட்டடத்தை எங்கள் ஊருக்கு வாங்கித்தந்து,அருமையான கட்டடமாக அந்த நிறுவனம் கட்டிக் கொடுத்தார்கள்.அதுவரை அது கூரை வேயப்பட்டதாகத்தான் இருந்தது.திரு.மோகன் அவர்கள் அந்த வாய்ப்பை எங்கள் ஊருக்கு வாங்கிக் கொடுத்தது மிகப்பெரும் செயல்.இப்படிப் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்கும் பசுமையான நினைவுகளாக இருப்பது பள்ளிக்கூடத்து நினைவுகளே..அந்தப் பள்ளிக்கூடத்து கல்வியால்தான் பட்டம் பெற்றோம்,பதவி பெற்றோம் என்னும் நன்றி உணர்ச்சியே.

எங்கள் ஊருக்கு அரசுப்பள்ளி வந்த  நிகழ்வை பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1964-ல்தான் எங்கள் ஊருக்கு அரசுப்பள்ளி வந்திருக்கிறது.அப்போதெல்லாம் அரசுப்பள்ளி ஒரு ஊருக்கு வருவது என்றால் அரசாங்கத்திற்குப் பணம் கட்டவேண்டுமாம்.எங்கள் ஊர் ஜமீந்தார் குடும்பத்தின் சார்பாகத்தான் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கான (20 ஏக்கர் என நினைக்கிறேன்) இடம் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.அது மட்டுமல்லாது அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய பணத்திற்காக சாப்டூர் ஜமீந்தார் திரு.பெரியராஜா அவர்களும் வசூலுக்கு வந்து பெரியவர்கள் எல்லாம் பணம் போட்டு,அரசாங்கத்திற்குப் பணம் கட்டி அதன் மூலமாக பள்ளிக்கூடம் வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

1979-ல் அரசாங்கப் பள்ளிக்கூடம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது.எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. சில ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.சிலர் நடத்த மாட்டார்கள்.படிக்கும் மாணவர்கள் படிப்பார்கள்.படிக்காத மாணவர்களைப் படியுங்கள் என்று சொல்வதற்கோ,உனக்கு என்ன பிரச்சனை ,ஏன் படிக்க மாட்டேங்கிறாய்,ஏன் குறைவாக மார்க் எடுக்கிறாய் என்று கேட்பதற்கோ பெரிய முன்னெடுப்புகள் ஒன்றும் இல்லை.

நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பத்தாம் வகுப்பு படித்த முதல் மதிப்பெண் எடுத்த மாணவரின் மதிப்பெண் 59 சதவீதம்.அப்படி இருந்த நிலையில்தான் எங்களுக்கு திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் தலைமை ஆசிரியராக வந்தார்கள்.

மிகவும் பின் தங்கிய சூழல்.எதற்குப் படிக்கவேண்டும் என்பதோ ,எப்படி படிக்கவேண்டும் என்பதோ தெரியாத பின்னணி.வயக்காட்டுக்கு,செவக்காட்டுக்கு அலைந்துகொண்டு மாணவர்க்ள் பள்ளிக்கு வந்த நேரம்.முதலில் அவர் பெற்றோர் கூட்டம் போட்டு,இந்த வருடம்,உங்கள் பிள்ளைகளுக்கு அரசுத்தேர்வு,எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சை இருக்கிறது.தயவுசெய்து இந்த வருடம் உங்கள் பிள்ளைகளைப் படிக்கவிடுங்கள்.வேறு வேலைகளைச்செய்யச்சொல்லாதீர்கள்.லீவு போடச்சொல்லாதீர்கள்.உறவினர்கள் திருமணம்,உறவினர்கள் ஊரில் திருவிழா,கோவில் விழா போன்றவைகளுக்கு எல்லாம் நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு லீவு போடச்சொல்லி கூப்பிட்டுப் போக நினைக்காதீர்கள் என்று சொன்னார்.இதைத் தான் வேலைபார்த்த எல்லாப்பள்ளிக்கூடத்திலும் அரசுப்பொதுத்தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறார்.

எங்கள் கிராமமான சாப்டூரில் 1979-ல் ஒரு சில வீடுகளில்தான் மின்சாரம் இருந்தது.பள்ளிக்கூடத்தில் மின்சார வசதி இல்லை.வந்தவுடன் ஒரு பக்கம் மின்சாரம் வேண்டும் என்று எழுதிப்போட்டு,அதற்கான ஏற்பாடுகளைச்செய்து கொண்டிருந்த நேரத்தில் எங்கள் ஊரின் ஜமீந்தார் பங்களாவிலிருந்து ஒரு மின்சார வயரை மரங்களில் கட்டி இழுத்து வந்து,தற்காலிமாக மின்சார வசதியை ஏற்படுத்தினார்.எங்களை எல்லாம்  நைட் ஸ்டடிக்கு வரச்சொன்னார்.மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டு,மீண்டும் இரவு 7 மணிக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவோம்.இரவு 9.30 மணிவரை அங்கு உட்கார்ந்து படிப்போம்.கணக்கு,ஆங்கிலம் பாடம் சந்தேகங்கள்,புரியாதவற்றை திரு.வே.வீரிசெட்டி சாரிடம் கேட்போம்.அவரும் சொல்லிக்கொடுப்பார்.டியூசன் போலத் தனிக்கவனம் எடுத்து நடத்தினார்.ஆனால் கட்டணமாக ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை.

நேற்று என்னோடு படித்த நண்பன் சாப்டூர் மா.சுந்தரசேகரிடம்(பி.காம்) பேசியபோது,’அவர் நைட் ஸ்டடி வச்சு ,என்னையெல்லாம் வரச்சொல்லவில்லை என்றால் நான் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியிருக்க மாட்டேன்’ என்றான்.திருப்பூரில் எஸ்.எம்.பேக் டிரேடர்ஸ் என்னும் கடையை ஆரம்பித்து .பொருளாதார ரீதியாக மிக வலுவான நிலையில் இருக்கும் எனது நெருங்கிய நண்பன் கா.சுப்பிரமணியத்திடம்(B.Sc) பேசியபோது “ஏய்,வீரிசெட்டி சார் வரவில்லை என்றால் நான் எல்லாம் எப்படி பாஸ் செய்து இருப்பேன்.எங்க வீட்ல ஒத்த அரிக்கேன் லைட்தான் இருந்துச்சு.அவர் கரண்ட் ஏற்பாடு செய்து,பள்ளிக்கூடத்திற்கு இராத்திரியில் வரச்சொல்லி,தினந்தோறும் 2,3 மணி நேரம் படிப்பதற்கான வசதி ஏற்படுத்தி,படிக்க வைக்கவில்லை என்றால் எப்படி பாஸ் பண்ணியிருப்பேன் .அவர் வந்து என்னென்ன செயல்கள் செய்தார் “ என்று வரிசையாக பட்டியலிட்டு நன்றியுணர்ச்சியோடு பேசினான்.இதுதான் பல மாணவர்களின் நிலைமை.அந்த  நைட் ஸ்டடி என்பது ,ஒரு இடத்தில் எந்தவிதமான தொந்தரவுகளும் இன்றி நாங்கள் படிக்க உதவியது. நாங்கள் பத்தாம் வகுப்பில் வெற்றி பெறவும்,நல்ல மதிப்பெண் எடுக்கவும் உதவியது.

இன்றைக்கும் பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது,அவர் பள்ளிக்கூடத்திலேயே தங்கியிருந்தது.அவராக சமைத்து,வெறும் சோற்றுக்கஞ்சியை தேங்காய்ச்சில்லை வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தது,கழிப்பறை வசதி கூட இல்லாத காலகட்டத்தில் ,தனியாகக் காட்டுக்குள் இருந்த பள்ளிக்கூடத்தில்  தங்கி இருந்தது என அவர் தன் வாழ்வில் கடைப்பிடித்த எளிமை வேறு எந்த அரசுப் பணியாளருக்கும் இல்லாதது…

இந்த உலகம் பேசுவதைவிட ,நம் செயல்களைத்தான் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறது.அப்படி நல்ல செயல்களின் மூலமாக மாணவ,மாணவிகளின் மனதில் இடம்பெறும் நல்ல ஆசிரியர்கள்,அவர்களின் வாழ்நாள் முழுவதும் நன்றிக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்..

         ( தொடரும்…)

Tuesday, 4 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(19)

 


                மாவட்ட விளையாட்டு போட்டி..

பாகனேரியில் தனது பள்ளி அனுபவத்தை எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி அவர்கள் தொடர்ந்தார்.” அங்கே(பாகனேரியில்) ஏற்கனவே ஒரு பெரிய பொறுப்பை ,அந்தப் பள்ளிக்கூடத்திற்கு கொடுத்திருந்திருக்கின்றார்கள். நான் போய் ஒருமாதம்தான் ஆகிறது.இராம நாதபுரம் மாவட்ட ஸ்போர்ட்ஸ் போட்டி அங்கே நடத்த வேண்டும்.மாவட்ட விளையாட்டுப்போட்டி.அன்றைக்குத் தேதியிலேயே(1978-79) கிட்டத்தட்ட ரூ 50,000 செலவு ஆகக்கூடிய ஒரு போட்டி.பிறகுதான் எனக்கு இந்தத் தகவல் வந்தது.முதலில் தெரியாது.ஆகா,பெரிய பாரத்தையல்லவா வந்தவுடன் நம் மீது தூக்கி வைத்துவிட்டார்கள் என்று யோசித்தேன்.சரியென்று சொல்லிவிட்டு,ஆசிரியர்களைக் கூப்பிட்டுக்கொண்டு நேரே எம்.எல்.ஏ. உ.சுப்பிரமணியம் அவர்களின் வீட்டிற்குப் போய்விட்டோம்.

அவரிடம் நேரே சென்று “ என்னங்கையா,நீங்கதான் வாங்கிக் கொடுத்திருப்பீர்கள் போலிருக்கிறது,மாவட்ட விளையாட்டுப் போட்டி நடத்துறதுக்கு..ரூ 50,000 பணத்திற்கு நாங்கள் எங்கே போறது? “ என்றேன்.” ஒன்னும் கவலைப்படாதீங்க சார், வண்டியை எடுத்துக்கிட்டு நாலு ஊருக்குப் போவோம்.வசூல் பண்ணுவோம்.கணக்கு கமிட்டி நானே போட்டுவிடுகின்றேன்.” என்றார்.அவருடைய ஒரு தம்பி ,தி.மு.க.,அவருடைய இன்னொரு தம்பி அ.தி.மு.க..ஊர்ப்பொதுக் காரியம் என்பதால் எல்லோரையும் இணைத்துவிட்டார்.அப்பவே கமிட்டியைப் போட்டு ,இதை-இதை எல்லாம் செய்யவேண்டும் என்று செலவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.வசூல் பண்ணியும் கொடுத்துவிட்டார்கள்.பணத்தை என்னிடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.நீங்களே ஒரு ஆளைப்போட்டு,அவர் பொறுப்பில் விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டேன்.இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நான் மதுரைக்கு வரும் போதெல்லாம் ,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை(CEO) அதிகாரியைப் பார்த்து எனக்கு மதுரை மாவட்டத்திற்கு மாற்றல் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.

மாவட்ட விளையாட்டுப் போட்டி நடத்துவது என்பது எனது சக்திக்கு மீறிய பணி.ரொம்ப,ரொம்ப சக்திக்கு மீறிய பணி.ஆனால் நல்லபடியாக விளையாட்டுப் போட்டியை நடத்தினோம்.மாவட்ட விளையாட்டுப்போட்டி என்றால் மாவட்டத்தில் இருக்கிற எல்லா உடற்கல்வி ஆசிரியர்களையும் அழைக்கவேண்டும்,நடத்தவேண்டும்.அப்போது பாகனேரி பள்ளியில் ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியர்தான் இருந்தார்.எல்லா அரசுப்பள்ளிகளிலும் ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியர்தான் இருப்பார்கள். மாவட்ட விளையாட்டுப்போட்டி என்று சொல்கிறபோது மாவட்டத்தில் இருக்கும் அத்தனை பள்ளிகளிலும் இருக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களை அழைக்கவேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.அவர்கள் சொல்வதைத்தான் தலைமை ஆசிரியர்கள் கேட்கவேண்டும் என நினைப்பார்கள். விளையாட்டுப் போட்டியை நடத்திய தலைமை ஆசிரியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால்,ஒழுங்கில்லாத கணக்கை வைத்துக்கொண்டு அதில் இருந்து நிறைய உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிறைய செலவுகள் செய்திருக்கின்றார்கள்.

நாம் ஒழுங்காகக் கணக்கு வைத்திருக்கின்றோம்.முறையற்ற செலவுகளுக்குச் செலவு செய்வது எனக்கு சரிப்பட்டு வராது.முடியாது என்று சொல்லிவிட்டேன்.அவர்களுக்கு வேண்டிய வசதியெல்லாம் செய்து கொடுத்தாகிவிட்டது.போக்குவரத்து படிகள்,தங்க இடம்,தங்கி இருக்கும்போது உணவு எல்லாம் கமிட்டியனரே செய்து கொடுத்தார்கள்.அவர்கள் அங்கேயே ஒரு மெஸ்ஸையே தொடங்கி வந்த அனைவருக்கும் சாப்பாடு போட்டார்கள்.பள்ளிக்கூடத்திலேயே சமைத்து,விளையாட வந்த மாணவ,மாணவிகள் மற்றும் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார்கள்.மிக நன்றாகவே அதனைச்செய்தார்கள்.

விளையாட்டுப்போட்டி எல்லாம் முடிந்தது. நிம்மதி என அமர்ந்த வேளை,விளையாட்டுப்போட்டிகள் முடிந்த மறு நாள் எனக்குச் சாப்டூருக்கு மாறுதல் என்று ஆர்டர் வருகின்றது.ஆர்டரை வாங்கிக் கொண்டு சாப்டூர் வந்தேன்.” என்று குறிப்பிட்டார்.

பள்ளிக்கூடம் என்பது படிப்பதற்கு மட்டும் அல்ல. மாணவ,மாணவிகளை அனைத்து நிலைகளிலும் உருவாக்குவதற்கு என்று சொல்கின்றோம்.திறமையுள்ள மாணவ,மாணவிகளைக் கண்டுபிடிப்பதற்கு போட்டிகள் நடத்துவது மிகத் தேவையாக இருக்கிறது.மதுரையில் இருக்கும் சில தனியார் பள்ளிகளை நான் பார்த்திருக்கிறேன்.மதுரையில் மாணவ,மாணவிகளுக்கான எந்தப் போட்டிகள் நடந்தாலும் ..பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,மாறுவேடப்போட்டி,இசைப்போட்டி,விளையாட்டுப்போட்டி என நடக்கும்போட்டிகளுக்கு தங்கள் மாணவ,மாணவிகளை அனுப்புவார்கள்.அதற்கு மாணவ,மாணவிகளைத் தயார் செய்வார்கள்.அவர்களும் தங்கள் பள்ளியில் போட்டிகளை நடத்துவார்கள்.

அரசுப்பள்ளிகளில் அப்படி மாணவ,மாணவிகளை போட்டிக்கு அனுப்புவதாக இருந்தாலும் சரி,போட்டிகளைத் தங்கள் பள்ளியிலேயே நடத்துவதாக இருந்தாலும் அடிப்படைத் தேவை பணம்.எந்தத் தலைமை ஆசிரியராக இருந்தாலும் தங்கள் கைப்பொறுப்பாக பணத்தைப் போட இயலாது.வசூல் செய்துதான் நடத்த வேண்டும். இன்றைக்கு எப்படிப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன என்று தெரியவில்லை.அரசாங்கமே இப்படி போட்டிகள் நடத்துவதற்கு பல முன்னெடுப்புகளை எடுக்கிறது என்று நினைக்கின்றேன்.

நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பதக்கங்களை வெல்வதற்கு அடிப்படையாக அமைவது அவர்களை இளம் வயதிலேயே அடையாளம் காண்பது.அப்படி அவர்களை அடையாளம் காண்பதற்கான இடம் ஆரம்ப,உயர் நிலைப்பள்ளிக்கூடங்களே.அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான களம் விளையாட்டுப்போட்டிகளே.அப்படி விளையாட்டுப்போட்டி நடத்துவதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்களை எனது தலைமை ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.இன்றைக்கும் கூட அப்படிப்பட்ட நிலைமைதான் இருக்கிறது.

“மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால், அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கின்றார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ளவராகவும் மாறுகிறார்.

விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின்போது, ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது. விளையாட்டில் ஈடுபடும்போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவற்றை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர்கள் தங்களது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன.. விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் ஏனையோரை மதிக்கும் பழக்கம் பின்னர் அவரை வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்கச் செய்கின்றது. விளையாட்டில் ஈடுபடும்போதும் அதற்கான பயிற்சிகளின்போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும்போது அவர்கள் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும். இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. “ இது மாலைமலர் பத்திரிக்கையில் வந்த கட்டுரை.

 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் போட்டி பின்பு ஒன்றிய அளவிளான போட்டிகள்,பின்பு மாவட்ட அளவிளான போட்டிகள்…என்று அடுத்தடுத்த போட்டிகளுக்கு மாணவ,மாணவிகள் செல்லும்போதுதான்  நாட்டிற்கு மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் கிடைக்க முடியும். ஆனால் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நன்கொடை வசூல் செய்வதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.அப்படி போட்டிகளை நடத்துவதற்கு ஊர்க்காரர்களின்,ஊரின் முக்கிய மனிதர்களின் உதவி தேவை என்பதனை தனது அனுபவத்தின் மூலமாகச்சொல்லி இருக்கின்றார் என நினைக்கின்றேன்.அப்படி வசூல் செய்யும் பணம் முறையாகச்செலவு செய்யப்பட வேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருந்திருக்கின்றார்.இந்த அனுபவமும் மிக முக்கியமான அனுபவம் என நினைக்கின்றேன்,

                              (தொடரும்)

 

 

Tuesday, 27 June 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(18)

 

                       வகுப்பிற்குப் போன ஒரே தலைமை ஆசிரியர்


 தொண்டியிலிருந்து பாகனேரி என்னும் ஊருக்கு எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்களுக்கு மாறுதல் கிடைத்திருக்கிறது.அந்த மாறுதலைப் பற்றியும் அந்த ஊரில் வேலை பார்த்த அனுபவத்தையும் சார் சொல்வதைக் கேட்க நகைச்சுவையாகவும் ஈர்ப்பாகவும்  இருந்தது .பாகனேரி என்னும் ஊருக்கு நான் சென்றதில்லை. பாகனேரியைப் பற்றி இணையத்தில் தேடியபோது  …

 “(பாகனேரிஊராட்சி )தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2857 ஆகும். இவர்களில் பெண்கள் 1574 பேரும் ஆண்கள் 1283 பேரும் உள்ளனர்.” எனத் தகவல்கள் கிடைத்தது.

இனி எங்கள் தலைமை ஆசிரியர் சொற்களில்..“எனக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சொன்னதைப் போலவே இரண்டு நாளில் தொண்டியிருந்து மாறுதல் உத்தரவு பாகனேரி என்னும் ஊருக்கு வந்தது.பாகனேரி என்னும் ஊர்,காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த உ.சுப்பிரமணியம் அவர்களின் சொந்த ஊர்.அந்த ஊரில் அப்போது வேலை பார்த்த தலைமை ஆசிரியர் மேல் ஏகப்பட்ட புகார்கள்.அன்றைக்கு உ.சுப்பிரமணியம் அவர்கள்தான் அந்தப்பகுதியின் எம்.எல்.ஏ.அவரே நேரிடையாக வந்து சி.இ.ஓ.விடம் புகார் பண்ணியிருக்கின்றார்.அவரை மாற்றி விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.இவர்கள் அதற்கு,அவரை மாற்றி விட்டு புதிய ஆளைப் போடுவதற்கு ஆளைத் தேடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.என்னை பாகனேரியில் போட்டுவிட்டு,அவரை மாற்றி விட்டார்கள்.

 என்னிடம் சி.இ.ஓ. “ “நேரே நீங்கள் இங்க சி.இ.ஓ.ஆபிசுக்கு வந்து விடுங்கள்.பாகனேரியில் மீட்டிங் இருக்கிறது.என்னோடு நீங்கள் அங்கு வாருங்கள்.உங்களை நானே அறிமுகம் செய்து வைக்கின்றேன் “ என்று சொன்னார்.நான் போனேன்.அதே மாதிரி சி.இ.ஓ.வே என்னை அறிமுகம் செய்து வைத்தார்.சி.இ.ஓ,உ.சுப்பிரமணியம் அவர்களைப் பார்த்து “இந்தாங்கய்யா,புது ஆளைப் போட்டாச்சு,சரிதானே “ என்றார். அவர் “ சந்தோசம் “ என்று பதில் சொன்னார்.

 அந்தப் பள்ளிக்கூடமும் அப்படித்தான்.பள்ளிக்கூடம் நம்ம ஊர்(சாப்டூர்) மாதிரி ஊரை விட்டு வெளியே ரொம்ப தள்ளி…ஆனால் மெயின்ரோட்டில் பஸ்ஸில் போய் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இறங்கிக் கொள்ளலாம்.அந்தப் பள்ளிக்கூடத்திலும் எல்லா வசதியும் இருந்தது.அதுவும் ஒரே ஒருவர்,மலேசியா போய்விட்டு வந்தவர் ,அந்தப் பள்ளிக்கூடத்தை முழுவதும் அவரே கட்டிக் கொடுத்திருக்கின்றார்.மலேசியாவில் இருந்ததனால்,எல்லா வசதியும் பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றார்.அரசுப் பள்ளி என்றாலும் பர்னிச்சர்,டைப்ரைட்டர் எல்லாம் புதிதாக இருந்தது.எல்லா கிளாஸ் பிள்ளைகளுக்கும் உட்கார பர்னிச்சர் இருந்தது.கரண்ட் எல்லாம் இருந்தது. ஆனால் நான் வேலைபார்த்த இடங்களிலேயே ஒர்ஸ்ட்(worst) ஸ்கூல் அதுதான்.நிர்வாகம் சரியாக இல்லை.ஆசிரியர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.நிர்வாகம் சரியில்லாததால் அந்த இடம் ஒரு தண்டனைக்கு உரிய இடமாகவே கருதப்பட்டது.

 மிகப்பெரிய ஊருங்க பாகனேரி,மிகப்பெரிய ஊர். இரண்டு ஜாதிகள்தான் பெரும்பான்மை.ஒரு ஜாதிக்காரர்களில் பெரும்பாலோர் மலேசியா சென்று வந்தவர்கள்.அவர்களின் வீடுகள்,வணிகர்களின் வீடுகள் எல்லாம் பார்த்தால் பெரிய,பெரிய வீடுகள்.வசதியான ஊர்.அந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்தேன்.போய் எல்லாவற்றையும் பார்த்தேன்.எனக்கு முன்னால் இருந்த தலைமை ஆசிரியரின் தவறான நிர்வாகத்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் முரடர்களாக மாறிவிட்டார்கள்.எதுக்கும் கீழ்ப்படிவதில்லை என்று முடிவெடுத்து அங்கு இருந்தார்கள்.

 நான் அவர்களிடம் பேசினேன்.“ வாங்க,உங்கள் குறைகள் எல்லாம் என்னன்னு சொல்லுங்க..எல்லாம்(அடிப்படைக் கட்டமைப்பு) இங்கே இருக்கு.இங்கே வேண்டாதது எதுவும் இருந்தால் சொல்லுங்கள்,மாற்றிக் கொள்வோம்.இங்கு படிக்கிற எல்லாருமே கிராமத்து ஏழை வீட்டுப்பிள்ளைகள்தான்.பாகனேரி பணக்கார வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் மதுரையில் படிக்கின்றார்கள்.நாம ஏதாவது இந்தப் பிள்ளைகள் நன்றாக படிக்க வைப்பதற்கு செய்யணும் “ என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் மனதை எல்லாம் மாற்றினேன்.

அவர்கள் மனம் மாறுவதற்கு நான் வகுப்பு எடுப்பதும் ஒரு காரணமாக அமைந்தது.தலைமை ஆசிரியர் ஆன பிறகு ,வகுப்பிற்குப் போன ஒரே தலைமை ஆசிரியர் நான்தான்.அது ரொம்ப முக்கியமானதுங்க.10-ஆம் வகுப்பிற்கு கண்டிப்பாக நான் ஆங்கிலப்பாடம் எடுப்பேன்.கணித ஆசிரியர் இல்லையென்றால் கணிதப் பாடம் எடுப்பேன்.அது ஒரு பிளஸ் பாயிண்டுங்க எனக்கு.அதனால் மற்ற ஆசிரியர்களால் நான் சொன்னதை ஒன்றும் தட்ட முடியவில்லை.அதே மாதிரி அந்தப் பள்ளியில் வேலை பார்த்த பல ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைகள் போன்றவை எல்லாம் வராமல் இருந்தது.அவற்றையெல்லாம் நானே எழுதி,அலுவலகத்திற்கு அனுப்பி வாங்கிக் கொடுத்தேன்.அதனால் அவர்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.” என்று குறிப்பிட்டார்.

 ஒரு தலைமைப்பொறுப்பில் இருப்பவர்,தனக்குக் கீழே இருப்பவர்களை எப்படிக் கருதுகிறார் என்பதுதான் அந்த இடத்தில் வேலை நடப்பதற்கான அடிப்படை.சிம்பதி,எம்பதி என்ற இரண்டு சொற்களைச்சொல்லும்போது,ஒருவரை அவர் இடத்தில் பொருத்திப்பார்த்து, நமது செயல்பாடுகள் அமைவதை எம்பதி என்று சொல்வார்கள். பெரும்பாலான தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் வெற்றி பெறுவதற்கு இந்த எம்பதி என்பதுதான் அடிப்படை.

 எனது தலைமை ஆசிரியர் அவர்களை நான் சந்தித்த வேளைகளில் சில நேரங்களில் சில கருத்துகளில் அவரோடு நான் முரண்பட நேர்ந்ததுண்டு. ஆனால் அவர் எதிர்கருத்தைச்சொல்கிறேன் என்றோ, நீ என்னிடம் படித்த பையன்..எனக்குத் தெரியாததா? என்ற நோக்கிலோ எப்போதும் என்னை அணுகியதில்லை. சில நேரங்களில் அவரின் மாணவனான நான் சொல்வதை அவர் மாணவரைப் போல அமைதியாக முழுமையாகக் கேட்பதைப் பார்த்து நான் வியந்து இருக்கிறேன். ஆனால் முழுமையாகக் கேட்டுவிட்டுத் தனது கருத்தை நான் சொன்னதையும் வைத்து இணைத்துச்சொல்வார்.அந்த அணுகுமுறைதான் அவரின் வெற்றிக்கு அடிப்படை என்று நினைக்கிறேன்.

 அந்த ஜனநாயகத்தன்மை,அடுத்தவர்கள் சொல்வதை முழுமையாகக் கேட்கவேண்டும் என்ற புரிதல்…அந்த அணுகுமுறைதான் அவரோடு வேலைபார்த்த பல ஆசிரியர்களையும் அவரோடு இணைந்து பல வேலைகளைச் செய்வதற்கு தூண்டியிருக்கிறது.பாகனேரி ஊரில் அவர் சொல்லிய “இங்கு படிக்கிற எல்லாருமே கிராமத்து ஏழை வீட்டுப்பிள்ளைகள்தான்.” என்ற புரிதல்,அரசுப்பள்ளிகளில் படிக்கிற பிள்ளைகள் ஏழை வீட்டுப்பிள்ளைகள்,அவர்கள் முன்னேற கல்வி ஒன்றே வழி.அதனைக் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்தப்பள்ளி மூலமாக நமக்குக் கிடைத்திருக்கிறது.அதனைக் கொடுப்போம் என்ற அணுகுமுறைதான் அவரின் வாழ்க்கை முழுவதும் இருந்திருக்கிறது.

 புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் “ ஐயா,நான் தங்களுக்குக் கடன்பட்டவன்” எண்று தனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களைச்சுட்டிக் காட்டுவார் .(கனவு ஆசிரியர் புத்தகத்தில்).தான் ஏழாவது படிக்கும்போது,தன்னைக் கண்டுபிடித்தது தனது தமிழ் ஆசிரியர்தான் என்பதைச்சொல்லிவிட்டு “ஆசிரியர்கள் என்பவர்கள் மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள்,வெளிகளின் காற்றை உங்களுக்கு,நமக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள்,எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஒளி தந்தவர்கள்,அவர்கள் கைகளில் விளக்குகள் இல்லை,அவர்களே தீபங்களாக இருக்கிறார்கள் “ என ஒளி கொடுக்கும் தீபங்களாக ஆசிரியர்களைச்சுட்டிக் காட்டுவார்.அப்படித் தான் வேலை பார்த்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் இருட்டை விளக்கி ஒளி தந்தவராக எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் இருந்திருக்கின்றார்.பாகனேரியில் வேலைபார்த்த மீதி அனுபவத்தை எங்கள் தலைமை ஆசிரியர் சொன்னதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

                                                     (தொடரும்)