பல்லுயிர் வாழும் இடங்களும் மனிதர்களும்
(முனைவர் வா.நேரு)"இயற்கையை நல்லவண்ணம் உணர்ந்து கொள்வதும்,அதற்கேற்பதான் வாழ்வை அமைத்துக்கொள்வதுமான அறிவுதான் ஞானமாகும்" என்று குறிப்பிட்டார் தந்தை பெரியார்.இன்றைய உலகத்தில் இயற்கையை நல்லவண்ணம் அறிந்துகொள்வது மிகவும் தேவைப்படுகிறது.அப்படி இயற்கையை உணர்ந்து கொள்ளும் நாளாக,இயற்கையில் இருக்கும் பல்வகை உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் நாளாக,ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட நாள்தான் உலகப் பல்லுயிர் நாள்(World Biodiversity day) ,மே-22 ஆகும்.
இந்த உலகம் ஒரு நாளில் கட்டமைக்கப்பட்டது அல்ல.படிப்படியாக பரிணாம வளர்ச்சியால் வளர்ந்து இன்று உலகம் உயிரினங்களால் நிறைந்து இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் முதல் கண்ணுக்குத் தெரியும் உயிரினங்கள் வரை,நம் கண் முன்னே ஊர்ந்து செல்லும் மண்புழு முதல் பார்த்தவுடன் நாம் பயந்து விலகும் பெரிய யானை முதல் உலகம் சிறியதும் பெரியதுமான உயிரினங்களால் நிறைந்து இருக்கிறது.பாலில் உறைமோர் ஊற்றிவைத்தால்,அது தயிராகி மாறி நிற்பதுதான் நமது கண்களுக்குத் தெரிகிறது.அறிவியலில் படிக்கும்போதுதான் அது பாக்டீரியாவின் வினை எனப்புரிகிறது.இப்படிக் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமல் நம் வாழ்வில் பிணைந்திருக்கும் பல்லுயிர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் நாள்தான் மே22.
ஒவ்வொரு ஆண்டும் உலகப்பல்லுயிர் நாளில் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.அப்படி இந்த 2023-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "உணர்தலில் இருந்து செயலில் இறங்குவோம்.மீண்டும் பல்லுயிர் கட்டமைப்பை உருவாக்குவோம்(From Agreement to Action: Build Back Biodiversity) என்பதாகும்.தஞ்சை- வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சென்றால்,காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மரங்களுக்கு நடுவில் மேற்கொள்ளலாம்.பலவகைப் பறவைகள் நம் முன் பறக்கும்.அடர் கானகத்தில் கேட்பதுபோல பூச்சிகள் ரீங்காரமிடும் ஒலிகள் கேட்கும்.மூங்கில் மற்றும் செம்மரங்களுக்கு நடுவில் சலசலக்கும் அணில் போன்றவை இங்குமங்கும் ஓடி விளையாடும்.சில நேரங்களில் பாம்புகள் கூட நம்மைக் கடக்கும்.பல்கலைக் கழகத்தில் படிக்கவரும் மாணவ,மாணவியர்களுக்கு இயல்பாகவே பல்லுயிர் சூழல் பழகும்.இப்படி ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் அமையவேண்டும் என்ற எண்ணம் அங்கு வந்து பார்க்கும் கல்வியாளர்களுக்குத் தோன்றும்.இப்படி நம்மால் முடிந்தளவு பல்லுயிர் வளரும் சூழலை உருவாக்குவதுதான் இந்த ஆண்டின் கருப்பொருள்.,அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள்தான் மே22.
உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.நூறாண்டுகள் வாழும் உயிரினம் முதல் நூறு நிமிடங்கள் மட்டுமே வாழும் உயிரினம்வரை இந்த உலகம் பல்லுயிர்களால் நிரம்பிக் கிடக்கிறது.இவை எல்லாம் இயல்பாக வாழும் சூழ்நிலை பண்டைய காலத்தில் மனிதர்கள் குரங்குகள் போல வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கிறது.இன்று அப்படி இல்லை.
இயற்கையாக ஓர் ஆறு உருவாகிறது..பல நூறு சிற்றோடைகள் இணைந்து ஒரு பெரும் ஆறாக உருவெடுக்கிறது.அது ஓரிரு ஆண்டுகளில் உருவானதில்லை.ஆயிரக்கணக்கான ஆண்டுகளால் ஒரு பெரும் ஆறு உருவாகி ஓடிக்கொண்டிருக்கிறது.ஆற்றின் கரையில் மனிதர்கள் குடியேறுகிறார்கள்.ஆற்றங்கரை நாகரிகம் பிறந்தது..தெள்ளிய நன்னீராக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீர்,மனிதர்கள் கலக்கும் கழிவுகளால் நாசமாகிறது.தொழிற்சாலைகளில் வெளியேறும் வேதியியல் கழிவுகளும் மாசுபட்ட நீரும் ஆற்றில் கலக்கிறது.மனிதர்களின் பேராசை மட்டுமல்ல,,மத நம்பிக்கைகளும் ஆற்று நீரை நாசமாக்குகின்ற்ன.
இந்தியாவின் புனிதமான நதி என்று கங்கை சொல்லப்படுகிறது.. கங்கையை உருவாக்கியதில் மனிதர்கள் பங்கு ஏதும் இல்லை. மனிதர்கள்,மனிதர்களாகப் பரிணாமம் அடைவதற்கு முன்னரே தோன்றி அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது.மனிதன் ஆற்றங்கரைகளில் குடியேறினான. மனதிற்குள் மத நம்பிக்கைகளை ஏற்றினான்.மதத்தின் பேரால் ஆறுகளை அசுத்தப்படுத்த ஆரம்பித்தான்.அப்படித் தொடங்கிய அழிவு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கங்கை எப்படிக் கெட்டுப்போய்,மாசுபட்டுக் கிடக்கிறது என்பதை விக்கிபீடியா குறிப்பிடுகிறது."திருவிழாக் காலங்களில், 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் கடந்த கால பாவங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக கங்கையில் நீராடிடுகின்றனர்.. உணவு, கழிவுகள் அல்லது இலைகள் போன்ற சில பொருட்கள் கங்கையில் விடப்படுகின்றன, அவை அதன் மாசுபாட்டிற்கும் காரணமாகின்றன. அதன் கரையில் தகனம் செய்வதும், கங்கையில் மிதப்பதும் இறந்தவர்களின் பாவங்களை சுத்தப்படுத்தி, அவர்களை நேரடியாக முக்திக்கு கொண்டு செல்லும் என்று பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன. வாரணாசியில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் நாற்பதாயிரம் உடல்கள் எரிக்கப்பட்டு கங்கையில் வைக்கப்படுகின்றன. பல குடும்பங்கள் போதுமான அளவு தகன மரங்களை அதிக விலைக்கு வாங்க முடியாததால், கங்கையில் வைக்கப்பட்டுள்ள பல உடல்கள் பாதி எரிந்த நிலையில் உள்ளன." என்று குறிப்பிடும் அந்த இணையதளம் பக்கம் பக்கமாக கங்கை நதியின் மாசுபட்ட தன்மையை,குடிப்பதற்கு அல்ல,குளிப்பதற்கு கூட அருகதை அற்ற நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.அந்த மாசுபட்ட நீரை புனித நீர் என்று சொல்லி ஒன்றிய அரசு பாட்டில்களில் அடைத்து,தபால் அலுவலகம் மூலமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறது.என்ன கொடுமை இது!.
கங்கை என்று இல்லை, காவிரியாக இருந்தாலும் வைகையாக இருந்தாலும் மக்களின் மத மட நம்பிக்கைகளும்,பேராசையால் கலக்கப்படும் வேதியியல் கழிவுகளும் எதிர்கால உலகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆற்றின் தெள்ளிய நீரில் வாழ்ந்து கொண்டிருந்த மீன்களும் தவளைகளும்,முதலைகளும்,ஆமைகளும் மற்றும் பல உயிரினங்களும் இந்த நச்சுக் கலப்பால் இறக்கின்றன.இறந்து மிதக்கின்றன. ஆறு மாசாவதோடு ஆற்று நீரைக் குடிக்கும் மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.பல்லுயி
இயற்கையாக பல்லுயிர் வாழும் இடங்களாக சில இடங்கள் இருக்கின்றன.இந்தியாவைப் பொறுத்த அளவில் உலகிலேயே அதிக அளவு மழை பெய்யும் சிரபுஞ்சியும்,மழை மிகக் குறைவாகப் பெய்யும் தார் பாலைவனமும் இருக்கின்றன. மிகக் குளிரான இடங்களும் மிக வெப்பமான இடங்களும் இருக்கின்றன. இப்படி இருப்பதால் பல ஆயிரக்கணக்கான விலங்குகளும்,தாவரங்களும் வாழும் பகுதியாக இந்தியா விளங்குகிறது.இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்படி வேறுபட்ட தன்மையில் இருக்கும் இடங்களில் வேறுபட்ட உயிரினங்கள் இருக்கின்றன. அண்டார்டிகா கண்டத்தில் இருக்கும் பனிக்கரடிகள் நம் தமிழ் நாட்டிற்கு வந்தால் ஓரிரு நாளில் இறந்துவிடும்.இங்கு இருக்கும் சாதாரணக் கரடி அண்டார்டிகா கண்டத்தில் விட்டால் அது விறைத்து இறந்துபோய்விடும்.ஆக ஒவ்வொரு தட்ப வெப்ப நிலையிலும் ஒவ்வொரு வகையான உயிரினங்கள் வளர்கின்றன.வாழ்கின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் மனிதர்கள் எண்ணிப்பார்ப்பதும்,அந்த விலங்குகள்,தாவரங்கள் வளரும் சூழலைக் கெடுக்காமல் ,சூழலியலைப் பாதுக்காக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நாள் மே 22 ஆகும்.
தமிழ்நாடும் அப்படித்தான்.பல்லுயிர் வாழும் இடங்கள் பல உள்ளன.அவற்றைப் பற்றியெல்லாம் அக்கறை எடுத்து தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது.தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, பல்லுயிர் பாரம்பரிய தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.
அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது.
அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள் (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus) மற்றும் அரிய வகை தேவாங்கு (Loris spp) ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. அரிட்டாபட்டியை பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக அறிவிப்பதற்கான முடிவு கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த அறிவிக்கை, இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும்" என்று தெரிவித்துள்ளது.மிகச்சிறப்பான முன்னெடுப்பு. நமது பாரட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அரிட்டாபட்டி மட்டுமல்ல,இந்த மாதிரியான பல்லுயிர் தளங்கள் பலவும் நம்மைச்சுற்றி உள்ளன.பல்லுயிர் தளமான அரிட்டாபட்டியை இன்றைக்கு மதுரைக்கு வரும் பலரும் சுற்றுலா இடமாகச் சென்று பார்க்கின்றனர்.அரிய வகை பறவைகளை ஆற அமரப்பார்த்து இன்புறுகின்றனர்.மலைக்குன்றுகளி
மனிதனால் செயற்கை உயிரினங்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும்.அப்படி உருவானாலும் இயற்கையான உயிரினங்கள் போல அவை அமையாது.இயற்கையான உயிரினங்கள் இந்த உலகின் உணவுச்சுழற்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.எடுத்துக்காட்டாக தேனியை எடுத்துக்கொள்ளலாம். "பூக்களிலிருந்து தேனை எடுக்கும் நேரத்தில் அவற்றின் காலில் ஒட்டிக் கொள்ளும் மகரந்தம், வெவ்வேறு பூக்களில் அவை மாறி மாறி அமரும் போது பரவுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இதனால் பூக்கள் பிஞ்சாகி, காயாகி,கனிகின்றன.அதன் மூலம் வித்துக்கள் பரவுகின்றன.தாவரங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. உயிரினங்களுக்கு உணவு கிடைக்கின்றது.தாவரங்களால் உலகில் உயிர் வாழ்க்கை நிலைத்து நிற்கிறது.
அந்த வகையில் தேனீ பசுமையின் பாதுகாவலனாகத் திகழ்கிறது. இப்படி மனித குலத்தின் நண்பனான தேனீக்கள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக மாறி விட்டன.அதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகள் , செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்!உணவுச் சங்கிலியில் பெரும்பங்கு வகிக்கும் நிலையில், தேனீக்களை நாம் காப்பாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்....உலகி
பல்லுயிர் உலகில் வாழும் சூழலை அழிக்காமல் காப்பாற்றுவோம். நம்மால் முடிந்த அளவு பங்களிப்பை மரங்கள் நடுவது போன்றவற்றால் செயல்படுத்துவோம்.மத நம்பிக்கைகளின் பேரால் ஆறுகளை,சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் மத நம்பிக்கையாளர்களுக்கு உண்மையை எடுத்துக்கூறுவோம்.
நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ்( மே-16-31),2023
4 comments:
நிறைய தகவல்கள், அருமை.வாழ்த்துகள்
நன்றி.மகிழ்ச்சி.
அருமையான தகவல் மட்டுமல்ல, அரிதான தகவல்களும், பல்லுயிர்களை தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் காக்கின்றது இன்னொரு இடத்தில் புனித நதியான கங்கை நதியின் பல்லுயிர்களை அழிக்கின்ற சூழலை ஒப்பிட்டு சுட்டுக்காட்டுவது. மிக அருமை ஐயா!
நன்றிங்க அழகுபாண்டி. நான் அப்படி நினைத்து எழுதவில்லை.இயல்பாக இருப்பதை எழுதினேன்.தாங்கள் அந்த நோக்கில் கவனித்துச் சொன்னது மகிழ்ச்சி தருகிறது.
Post a Comment