பள்ளிக்கூடத்துக்கு
மின்சாரம் கிடைக்க விவசாயிகளைப் பாருங்கள்…
நல்ல
செயல்களுக்காகக் நன்கொடைகள்,உதவி பெறுவதில் தவறு ஒன்றுமில்லை.மறைந்த எங்கள் கல்லூரியின்(திருச்செந்தூர்
ஆதித்தனார்) முன்னாள் முதல்வர் டாக்டர் திரு.இரா.கனகசபாபதி சார் அவர்கள் அடிக்கடி சொல்வார்.”
நல்ல காரியங்களுக்கு பணம் கொடுக்க நிறையப் பேர் இருக்கிறார்கள்.கொடுக்கும் பணம்,எதற்குக்
கொடுக்கிறார்களோ அந்தப் பொதுக்காரியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதியாகத்
தெரிந்தால் அள்ளிக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள் “ என்று சொல்வார்.
முதன்
முதலாக தான் பணி செய்த பண்ணக்காடு பள்ளிக்கூடத்தில்,மாணவர்களுக்காக தனிப்பட்ட ஒருவரிடம்
கேட்க,விலை உயர்ந்த டேபிள் டென்னிஸ் போர்டும்,விளையாட்டுப் பொருட்களும் அவர் கொடுக்க,அப்போது
முதலே கேட்பதில் ஒன்றும் தவறில்லை என்று எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார்
அவர்கள் இருந்திருக்கிறார்.தனக்காக என எந்த நிலையிலும் கேட்காத அவர்,மிக எளிமையான வாழ்க்கையை
வாழ்ந்த அவர்,ஊழல் பேர்வழிகள்,சட்டத்தை மீறி நடப்பவர்கள் அவரைக் கண்டு பயந்து நடுங்கும்
வண்ணமே தனது அரசுப்பணியை நிறைவேற்றி முடித்தவர் என்றாலும்,தனது பள்ளி மாணவ,மாணவிகளுக்காக
பணி முழுக்கக் கேட்டிருக்கின்றார்.
கல்விக்
கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள்,” மதிய உணவுத் திட்டம் நல்ல திட்டம்தான்.ஆனால்
அந்தத் திட்டத்தை அமுல்படுத்தப் பணம் வேண்டுமே,என்ன செய்வீர்கள் ?” என மற்றவர்கள் கேட்டபோது
“ மடிப்பிச்சை எடுத்தாவது ,எனது மாகாணப் பிள்ளைகளைப் படிக்கவைப்பேன்” என்று சொன்னதுபோல
எனது தலைமை ஆசிரியரும் தனது பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல அலுவலங்களை ,தனிப்பட்ட
கொடை உள்ளம் கொண்டோரை நாடி இருக்கின்றார்.அவர்களின் உதவிகளைத் தனது மாணவர்களின் நலனுக்காகப்
பயன்படுத்தி இருக்கின்றார்.அவர் வேலை பார்த்த அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் இந்தச்
செயலை முனைப்பாகச் செய்து முடித்திருக்கின்றார்.திகைப்பாக இருக்கிறது.இவ்வளவு பெரிய
உதவிகளைச் செய்தார்களா? தனிப்பட்டவர்கள் என்று… .ஆமாம்,செய்திருக்கிறார்கள்,உதவி இருக்கிறார்கள்
என்பது கடந்து கால வரலாறு.அப்படி சிறுகுடி என்னும் ஊரில் தான் செய்த சில செயல்களைப்
பகிர்ந்து கொள்கின்றார் எனது தலைமை ஆசிரியர்…
“
தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று நத்தம் அருகில் உள்ள சிறுகுடி என்னும் ஊருக்குப்
போனேன்.அரசுப் பள்ளிக்கு ஊரிலிருந்து தள்ளிப் போகணும். நம்ம ஊர்( சாப்டூர் ) மாதிரி.பள்ளிக்கூடம்
மலை மேலே இருக்கிறது.நன்றாக இருக்கும். சூழல் மிக நன்றாக இருக்கும்.
(திண்டுக்கல்
மாவட்டம் நத்தம் அருகில் உள்ள இந்த ஊரைப் பற்றி நிறைய செய்திகள் இணையத்தில் கிடைக்கின்றன.சிறுகுடி
என்னும் பெயர் தாங்கிய 4 ஊர்கள் இருப்பதாக இணையதளத்தில் செய்தி கிடைக்கிறது.சிறுகுடி
நலம் விரும்பிகள் என்னும் முக நூல் பக்கத்தில் இந்த ஊரின் அழகிய,எழிலான தோற்றம் காணக்
கிடைக்கிறது.இந்த ஊருக்கு நான் சென்றதில்லை.ஒரு நாள் சென்று வரவேண்டும்)
சிறுகுடியில்
அரசுப் பள்ளி கட்டுவதற்காக அந்தக் காலத்தில் ஒருவர் 5 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.அரசாங்கம்
கட்டிடம் கட்டியிருக்கிறார்கள்.நல்ல கேணி.நல்ல அருமையான தண்ணீர்.அந்தக் காலத்திலேயே
டாய்லெட் எல்லாம் மிக நன்றாகக் கட்டிக் கொடுத்திருந்தார்கள்.
பள்ளியில்
எல்லா வசதியும் இருக்கிறது.ஆனால் மின்சாரம் இல்லை.ஏன் இல்லை என்று ஆராய்ந்தபோது,மலை
மேலே பள்ளிக்கூடம் இருந்ததனால்,7 மின்சார போஸ்ட் நட்டால்தான் அங்கு மின்சாரம் வரும்.இதுதான்
அங்கு நிலைமை.அத்தோடு பள்ளியில் மின்சாரம் வந்தால் அதைப் பயன்படுத்துவதற்கு உரிய வயரிங்கும்
செய்யப்படவில்லை.
நான் என்ன செய்தேன் என்றால்,முதலில் வயரிங் செய்யவேண்டுமே,அதற்குப்
பணம் வேண்டுமே…உள்ளூர்க்காரர் ஒருவர் மதுரையில் பெரிய ஜவுளிக்கடை வைத்திருக்கிறார்.அவரது
வீடு சிறுகுடியில்.ஊரில் மலேசியாவுக்குப் போய் வாழ்ந்து சம்பாரித்து வந்தவர்கள் அதிகம்.அதில்
இவரும் ஒருவர்.அவரைப் போய் வீட்டில் பார்த்தேன்.”சார்,இப்படி இருக்கிறது,லைட் இருந்தால் நைட் ஸ்ட்டி எல்லாம் வைத்து மாணவர்களைப் படிக்கவைக்கலாம்
“ என்றேன்.
“யாரும்
வந்து கேக்கலைங்க..நீங்கதான் இப்ப வந்து கேக்குறீங்க..எது வேணுமின்னாலும் வாங்கிக்
கொள்ளுங்கள்.நாளைக்கே ஆள் அனுப்புகிறேன்.எத்தனை டியூப் லைட் ,பேன் வேணுமோ அத்தனையும்
வாங்கிக் கொள்ளுங்கள்.” என்று சொல்லிவிட்டார்.அதனைப் போலவே ஆட்களை அனுப்பினார்.அந்த
ஆட்கள் பொருட்களோடு வந்து,பள்ளிக்கூடம் முழுவதிற்கும் வயரிங் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள்.
எந்தந்த இடத்தில் லைட் மாட்டவேண்டுமோ,பேன் மாட்ட வேண்டுமோ மாட்டிக் கொடுத்துவிட்டார்கள்.இப்போது
கரண்ட் வாங்கவேண்டும்.
சிறுகுடியில் மின் இணைப்பு வேண்டுமென்றால் நத்தத்திற்குத்தான்
வரவேண்டும்.நத்தம் ஈ.பி.(மின்சார) ஆபிசுக்குப் போய் இன்ஜினியரைப் பார்த்தேன்.அவரைப் பார்த்து ,” சார்,இப்படி பள்ளிக்கூடத்திற்கு
வயரிங் பண்ணி விட்டோம்.கொஞ்சம் எங்களுக்கு கரண்ட் சர்வீஸ் வேண்டும் “ என்று கேட்டேன்.
உடனே
அந்த EB இன்ஜினியர் அவங்க ஆட்களைக் கூப்பிட்டுக் கேட்கிறார்.” என்னய்யா,பள்ளிக்கூடத்துக்கு கரண்ட்
வேணும்ன்னு சாரே வந்து கேட்கிறாரு,கொடுத்துரலாமா” என்றவுடனே அவர்கள் “ சார்,கொடுக்கலாம்
சார்,ஆனா 7 போஸ்ட் வேணும் சார்,அவ்வளவு தூரத்தில் இருக்கு “ என்றார்கள்.(இந்த போட்ஸ்
ஊன்ற வேண்டும் என்ற பிரச்சனை கரண்ட் இணைப்பு கொடுப்பதற்கு மட்டுமல்ல,புதுத் தொலைபேசி
வேண்டும் என்றாலும் பிரச்சனை இருந்தது என்பது இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்குத்
தெரியும் என்று தெரியவில்லை.கையில் செல்போன் வைத்துக்கொண்டு டவர் சரியாகக் கிடைக்கவில்லை,கிடைக்கவில்லை
என்று பதறும் இக் காலத்தலைமுறைக்கு இந்த போஸ்ட் ஊன்றி தொலைபேசி இணைப்புகள் கொடுத்த
கதையையும் அதற்காக பல ஆண்டுகள் நமக்கு முந்தைய தலைமுறை காத்துக்கிடந்த கதையை எல்லாம்
சொல்லவேண்டும்).
அந்த
இன்ஜினியர்,” ஓகோ,அப்படியா “ என்றார். என்னைப் பார்த்து “7 போஸ்டுக்கு நீங்கள் எல்லாம்
பணம் கட்டமுடியாது.தாங்காது. நீங்க ஒண்ணு பண்ணுங்க சார், வழியில் இருக்கிற இரண்டு விவசாயிகளைப்
பார்த்து சர்வீஸ் கேட்கச்சொல்லுங்க,எழுதிப் போடச்சொல்லுங்க,அதோடு இதையும் சேர்த்து
இணைத்து விட்டு விடுகின்றேன் “ என்று சொன்னார். அதே மாதிரி பள்ளிக்கு வரும் வழியில்
இருக்கும் இரண்டு காட்டுக்காரர்களைப் பார்த்து பேசி,மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கச்சொன்னோம்.அவர்களும்
விண்ணப்பித்தார்கள்.அந்த இன்ஜினியர் சொன்னமாதிரி மின்சார இணைப்பு பள்ளிக்கூடத்திற்கு
கொடுத்து விட்டார்.
(தொடரும்)
No comments:
Post a Comment