Friday, 4 August 2023

நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழுந்து பணியாற்றிய பறவை…

 நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழுந்து பணியாற்றிய பறவை…அய்யா புலவர் மா.நன்னன்

முனைவர் வா.நேரு

 

தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தாங்கள் உயர்கிறார்கள்,மற்றவர்கள் உயர்வதற்கு வழிகாட்டுகிறார்கள்,தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டுகிறார்கள்.தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தன்னம்பிக்கையின் கொள்கலனாக இருக்கிறார்கள்,மற்றவர்கள் தன்னம்பிக்கை பெற வழிகாட்டுகிறார்கள்.இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்,இதற்கு எடுத்துக்காட்டாக  ,நம் கண் முன்னே நிற்பவர் 30.07.2023 அன்று   நூற்றாண்டு  நிறைவு கண்ட  புலவர் மா.நன்னன் ஆவார்.ஆமாம் புலவர் மா.நன்னன் அவர்களுக்கு 101-ஆவது பிறந்த நாள் ..

புலவர் மா.நன்னன் அவர்களைப் பற்றிக் கூறும்போது ‘நூல்களைப் படித்து பெரியாரை அறிந்தவர்கள் உண்டு.பெரியாரை அணுக்கமாகப் பார்த்து ,நெருக்கமாகத் துய்த்து உணர்ந்த பேறு அவருக்குரியது.தனித்தன்மையான விளக்கம் தருபவர்.” என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.பெரியாரை அணுக்கமாகப் பார்த்ததை, நெருக்கமாகத் துய்த்து உணர்ந்ததையெல்லாம் எழுத்து வடிவில் எழுதி வரும் தலைமுறைக்குக் கொடுத்து சென்றவர் புலவர் மா.நன்னன் . தமிழ் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும்  பல தலைப்புகளிலும் சிறியதும் பெரியதுமாகிய 124 நூல்களைப் படைத்தவர்  புலவர் மா.நன்னன் அவர்கள்.பகுத்தறிவு எழுத்துகளாகத் தன் எழுத்துகளை அமைத்துக்கொண்டவர் -பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் பொறுப்பை ஏற்று ,பல ஊர்களுக்கும் சென்று தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியவர்  மா.நன்னன் ஆவார்.

தன்னுடைய வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடித்ததால் எப்படி எல்லாம் வாழ்வில் உயர முடிந்தது என்பதை ‘தம்மைப் பற்றித் தாம்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். “ எம் சிக்கனம் திருவள்ளுவரிடமிருந்தும் ,பெரியாரிடமிருந்தும் எமக்கு வந்தது.எம் துணைவரும் மக்களும் இதற்கு முழுவதுமாக ஒத்து உதவினர்.” ஆகாறள விட்டிதாயினும் “ என்னும் குறளும் ,”வருமானத்துக்கு மேல் செலவு செய்பவன் விபசாரம் செய்பவனுக்கு ஒப்பாவான்” என்னும் பெரியாரின் பொன்மொழியுமே எம்மைக் காத்தன “ எனத் தமது குணமாக சிக்கனம் எப்படி அமைந்தது என்பதை விளக்குகின்றார்.இணை ஏற்பு விழாவிற்கும்,புதிய வீடு கட்டுகிறேன் என்றும் மிக ஆடம்பரமாக கடன் வாங்கி செலவழிப்பவர்கள்  நன்னன் அவர்களின் பிறந்த நாளான இந்த நாளில் சிக்கனம் குறித்து கவனம் கொள்ள வேண்டியது படிப்பினையாகும்.



புலவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்ற  நன்னன் அவர்கள் தன்னுடைய பள்ளிப்பருவத்தில் சில ஆண்டுகள் படிக்க வாய்ப்பில்லாமல் கற்றலில் இருந்து நிறுத்தப்பட்டவர் என்னும் செய்தி நாம் உணரவேண்டிய செய்தி.1923-ல் பிறந்த  நன்னன் மூன்றாம்வகுப்பு வரை கிளிமங்கலம் என்னும் ஊரில் படித்துப் பின் 8-ம்வகுப்புவரை திருமுட்டம் என்னும் ஊரில் படித்திருக்கிறார்.அதற்குப்பின் சில ஆண்டுகள் உழவுப்பணியில் இருந்திருக்கிறார்.பின் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1940-44) புலவர் பட்டம் பெற்றிருக்கிறார்.3,4 ஆண்டுகள் வகுப்புகளுக்கே செல்லாமல் இருந்து மீண்டும் படிக்கச்சென்று வாழ்க்கையில் கல்வியிலும் ஆசிரியர்ப்பணியிலும் முத்திரை பதித்தவராக  நன்னன் அவர்களைப் பார்க்கமுடிகிறது.

ஒரு பணிக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து கல்வி கற்றுக்கொண்டே இருந்ததற்கும் எடுத்துக்காட்டாக நன்னன் திகழ்கின்றார்.தான் பிறந்த ஊரான காவனூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக தனது கல்விப்பணியைத் தொடங்கிய  நன்னன்  வேலை பார்த்துக்கொண்டே மெட்ரிகுலேசன்,இண்டர்மீடியட்,பி.ஏ.,எம்.ஏ., ஆகியவற்றைப் படித்து முடித்திருக்கின்றார்.அவர் படித்த 1950,1960களில் நிறைய அஞ்சல்வழிக் கல்விகள் எல்லாம் இல்லாத காலம்.அந்தக் காலத்தில் மிகுந்த முயற்சி எடுத்து நன்னன் அவர்கள் படித்திருக்கின்றார்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.முடித்தபின் பேராசிரியரின் தொல்காப்பிய உரைத்திறன் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.இத்தோடு தமிழாசிரியர் பயிற்சிச்சான்றிதழும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்றிருக்கிறார்.திராவிட இயக்க நூல்களைப் படித்துக்கொண்டே தனிப்பட்ட தனது கல்விக்காகவும் படித்துக்கொண்டே இருந்திருக்கின்றார்.

மா..நன்னன் அவர்கள் சிறந்த சொற்பொழிவாளர்.தான் நினைக்கும் கருத்தை மிக எளிதாகக் கேட்பவர்கள் மனதில் பதியும் வண்ணம் கடத்துவதில் மிக வல்லவர்.தன்னுடைய பேச்சைப் பற்றி பல இடங்களில் அய்யா நன்னன் அவர்கள் பதிந்திருக்கின்றார்கள்.அதில் மிக முக்கியமானது தந்தை பெரியார் தலைமையில் பேசியதாகும்.’பெரியார் பின் சென்றோம் ‘ என்று தலைப்பிட்டு அந்த மகிழ்வான உரையைப் பற்றி அய்யா நன்னன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.” கி.பி.1944ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களின் பிற்பகுதியில் முன்னிரவு நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியிலிருந்த எம் அறைக்குப் பேராசிரியர் அன்பழகனாரின் தந்தை மணவழகனார்(கல்யாண சுந்தரனார் ) வந்தார்.” எனக்குறிப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் மயிலாடுதுறையை அடுத்துள்ள வடகரை என்னும் ஊரில் உரையாற்ற வருவதாகவும் அங்கு பேச மாணவப்பேச்சாளராக தன்னை அழைத்ததாகவும் நன்னன் அவர்கள் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்டு “ கற்றுக்குட்டிப் பேச்சாளராக இருந்த யாம் அதைப் பெருலறும் வாய்ப்பாகக் கருதி ஏற்று வடகரை சென்று அவ்விழாவில் பேசினோம்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே பேசிய அது எமது இரண்டாம் பேச்சாக இருக்கக்கூடும்.பெரியாரின் கொள்கைகளை ஓரளவு மட்டுமே புரிந்துகொண்டு அதில் ஈடுபட்டு ஓரிரண்டு ஆண்டுகளே ஆகி முரட்டுப் பேச்சாளராக இருந்த எமது முரட்டுப்பேச்சை விழா முடிந்த பின் பெரியார் பாராட்டியதோடு அதில் இருந்த சில குறைகளையும் கூறிய முறையையும் சுட்டி எம்மைத் திருத்தினார் “ என்று குறிப்பிடுகிறார். 

நன்னன் அவர்களுக்கு அன்றைய வயது 21.தந்தை பெரியாருக்கு வயது 65.மாணவரான நன்னன் பேசியதை முழுமையாகக் கேட்டு அதில் இருந்த சில குறைகளையும் சுட்டிக்காட்டித் தந்தை பெரியார் திருத்தினார் என்று  நன்னன் குறிப்பிடுகிறார்.அப்போது தந்தை பெரியாரிடம் கற்ற பாடத்தை மேடைப்பேச்சுகளில் தன் வாழ்க்கை முழுவதும்  நன்னன் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்.அதுமட்டுமல்ல தந்தை பெரியார் கருத்துக்களை மிக எளிய முறையில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்கள்.

நன்னன் அவர்களின் உரையினைப் பற்றி “ பல தளங்களிலும் அவருக்கே உரித்தான வகையில் கருத்துகளை எளிமையாக எடுத்துக்கூறி மக்களைத் தம் ஆளுகைக்குள் கொண்டு வந்து விடுவார்.சிறப்பாகத் ,திருமணங்களில் அவர் ஆற்றும் உரை கூர்மையான –தனித்தன்மையுடையது.எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றே எதிரிகளூக்குக் கூட தோன்றும் ஈர்ப்பு “ என்று திராவிடர் கழகத்தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுகிறார்.

“தொலைக்காட்சி வாயிலாக ஒவ்வொருவர் வீட்டுக் கூடத்திலும் அவர் எடுத்த எளிய தமிழ் வகுப்பு இலக்கணப்பிழையின்றித் தமிழ் பேசவும் எழுதவும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பயிற்சி தந்தது.தமிழின் இனிமையை பலரும் உணரும் வகையில் ,வீட்டிற்கே வந்து வகுப்பெடுக்கும் ஆசிரியர் போல  நன்னன் அவர்கள் ,தன் முன் மாணவர்கள் அமர்ந்திருப்பதாகக் கருதி,ஏற்ற இறக்கத்துடன் ,நிறுத்தி நிதானமாகப் பாடம் நடத்திய பாங்கு,இன்றைய காணொளிப் பாடங்களுக்கெல்லாம் முன்னோடியாகும் “ என்று இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

“புலவர் நன்னன் அவர்களுடைய ஆளுமையே பேரமைதியைக் குடி கொண்டது.விரைந்து பேச மாட்டார்.பேசத்தொடங்கினால் அழுத்தம் திருத்தமாகக் கருத்துகளைச் செழுமைமிக்கச் சொற்களைக் கொண்டு செறிவோடு முன் வைப்பார்.அவர் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பேசுவதைவிட அவர் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேச கேட்போரைப் பின்பற்றும்படி செய்துவிடுவார்.அவர் பேச்சு வாழ்வின் உண்மைகளை எதிரொலிப்பதாகவே இருக்கும் “ என்று திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வாளர்  க.திருநாவுக்கரசு சொல்வது முற்றிலும் உண்மை என்பதை  நன்னன் அவர்களை நேரடியாக அறிந்தவர்கள் அறிவார்கள்.

 

பெரியாரியலைப் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையிலும் இடி விழுவது போன்ற சோகங்கள் உண்டு.ஆனால் அந்த சோகங்களைத் தாண்டி வர பெரியாரியல் துணை செய்கிறது. .”எமக்கு வாய்த்த ஒரு திருமகன்(அண்ணல்) தன் முப்பத்தாறாம் அகவையில் உலகம் முழுவதும் ஒரு துறையில் புகழ்க் கொடி நாட்டி ஓங்கி இருந்தபோது மறைய நேர்ந்த அவலக் கொடுமையின் பிடியிலிருந்து யாம் பகுத்தறிவாளராயிருந்ததோடு அதை வாழ்க்கையில் ஆண்டு பழக்கப்பட்ட ஒரே காரணத்தால் மீள முடிந்தது.ஒரு சில நாள்கள் அத்துயர் எம்மை வாட்டி வதக்கியதாயினும் மிக விரைவில் மாந்தரின் உயிரியற்கையை நன்கு உணர்ந்து ,நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழும் பறவை போல் யாம் புறப்பட்டு சிறப்பாக வாழ முடிகிறது” என்று  நன்னன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் குறிப்பிடுகின்றார்.பெரியாரியலைக் கற்றுக்கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைக் காட்டும் கண்ணாடி இந்த சோகத்திலிருந்து மீண்டு வருதல்.அதிலும் பெரியாரியல் மாணவர்களுக்குப் பாடமாகத் திகழ்கிறார் அய்யா  நன்னன் .

“மானமிகு புலவர் நன்னன் அவர்களைப் பொறுத்தவரை,பேச்சும் மூச்சும் பெரியார்-பெரியார் –பெரியாரே!வாய்ச்சொற்கள் அல்ல-வாழ்ந்து காட்டிய பெரியார் நெறியாளர்.’பெரியார் பேருரையாளர் ‘என்னும் பட்டம் அவருக்கு அளித்தது நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடியதாகும்.” என்று குறிப்பிடும் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தான் என்னெவெல்லாம்  புலவர் நன்னன் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

ஜூலை-30,2023 மாலை மாப்புலவர் மானமிகு மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.மானமிகு  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்றிட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..நன்னன் குடி சார்பாக நடத்தப்பட்ட இவ்விழாவில் நன்னன்குடி நடத்தும் பரிசளிப்பும் நடைபெறுகிறது.மொத்தம் 1 இலட்சத்து தொன்னூற்றோயிரம் உரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது.

"புலவர் நன்னன் அவர்கள் நம்மிடத்தில் இல்லை. புலவர் நன்னன் கொள்கையால்-நடப்பால் நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ளார்.அவர் கொடுத்துச் சென்றுள்ள  பல்வகைப் பெரியாரியல் நூல்களும்,தொகுப்புகளும் காலக்கணினியாய் நம் அருகில்தான் அவர் இருந்துகொண்டே இருக்கிறார் என்பதற்கான அடையாளங்களாகும்.

தான் சம்பாதித்த சொத்துகளை தனக்குப்பின் தன் பெண்டு பிள்ளைகளுக்குச் சேதாரம் இல்லாமல் போய்ச்சேரவேண்டும் என்கிற உள்ளம் படைத்தவர்கள் வாழும் உலகில் தமக்குப் பின் தன் வாழ்வின் செம்மாந்த தன்மைக்கு  இலட்சிய ஆசானாக ஒளிர்ந்த தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை பரவிட வேண்டும் என்னும் நோக்கில் நூல்கள் பல யாத்தும்,அய்ந்து சுயமரியாதை இணையர்களுக்கும் ஆண்டுதோறும் மாணவ,மாணவிகளுக்கும் பரிசுகள்,நிதிகள் வழங்கியும் சாவாப் புகழ் பெற்று வாழ்கிறார் மானமிகு புலவர் நன்னன் “ என்று திராவிடர் கழகத்தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.

ஆமாம்,சாவப் புகழ் பெற்று  நம் நினைவுகளில் வாழ்கிறார்  புலவர் மா.நன்னன் அவர்கள்

அவரின் தொண்டைத் தொடர்ந்து தங்கள் .கரங்களில் ஏந்திச்செல்லும் ‘நன்னன் குடி’ தோழர்கள் வாழ்க! வாழ்க!

 நன்றி : விடுதலை 04.08.2023

No comments: