உண்மையின் ஒளிச்சிதறல்
(முனைவர் வா.நேரு)
திராவிட இயக்கம் மக்களுக்கு உண்மையை உணர்த்த கையில் எடுத்த கலை நாடகம். நாடகக் கலையின் மூலமாக பகுத்தறிவுக் கருத்துகளை,முற்போக்குக் கருத்துகளை,சாதி ஒழிப்பை,பெண்ணுரிமைக் கருத்துகளை மக்கள் மனங்களிலே விதைத்த இயக்கம் திராவிட இயக்கம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,பேரறிஞர் அண்ணா, ,டாக்டர் கலைஞர் ,சி.பி.சிற்றரசு,தில்லை வில்லாளன்,,எஸ்.எஸ்.தென்னரசு,கே
“ இனி வரப்போகும் நாடக உலகமானது இதுவரை இருந்தது போலவே இல்லாமல்,உண்மையிலேயே மனித சமூகத்திற்குப் பயன்படக்கூடியதாகவும் அதாவது,மக்கள் யாவரும் சமம்-பகுத்தறிவே பிரதானம்-உலக இயற்கைப் போக்குகள் ,இன்ப துன்பங்கள் யாவர்க்கும் பொது; இவற்றை யாரும் சரிசமமாக அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள்;அத்ற்கேற்ற கொள்கைகளே வாழ்க்கை முறையாகவும் ஆட்சி முறையாகவும் இருக்க வேண்டும்; இவற்றிற்கு விரோதமாய் இருப்பவைகள் எல்லாம் அழிந்து ஒழிந்து மறையவேண்டும் என்கின்ற கருத்துக்கும் அனுகூலமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கவேண்டுமென்று விரும்பி,இன்றைக்கு கொடுமையும் பட்சபாதமும் நிறைந்த உலகத்தை அன்பும் சமுத்துவமும் கொண்ட உலகமாயச்செய்ய உதவி புரிய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் “ என்றார் தந்தை பெரியார்.அந்த அறிவுரைக்கு ஏற்றபடி திராவிட இயக்கத்தவர்கள் நாடகக் கலையை 1940,1950,1960களில் பயன்படுத்தினர்.
1970-களுக்குப் பிறகு நாடக வடிவம் மாறியது. நிஜ நாடக இயக்கம் தோன்றியது. நிஜ நாடக வடிவத்தை முதலில் கையில் எடுத்தவ்ர்கள் இடது சாரி இயக்கத்தினர். மேற்குவங்காளம்,கேரளா போன்ற மாநிலங்களில் வீதி நாடகம், நிஜ நாடக இயக்கம் பெரும் புகழ் பெற்றது.
தமிழ் நாட்டிலும் நிஜ நாடக இயக்கத்தை இடதுசாரி இயக்கத்தவர்களே முன்னெடுத்தனர்.ஆரம்ப கால கட்டங்களில் அவர்களின் நாடகங்களின் கருப்பொருளாக தந்தை பெரியார் கருத்துகள் இல்லை. வர்க்க உணர்வு அடிப்படையிலான கருத்துகளே இருந்ததே தவிர வர்ணாசிரம ஒழிப்புக் கருத்துகள் இல்லை. ஆனால் இப்போது நிஜ நாடக இயக்கத்தினர் தந்தை பெரியாரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பல நாடகங்களைக் கொடுக்கின்றனர்.
.தமிழ் நாட்டின் நிஜ நாடகத்தின் தந்தை என்று போற்றப்படும் பேரா.மு.இராமசாமி அவர்கள் தொடர்ச்சியாக ‘கலகக்காரர் தோழர் பெரியார்’,’பெண் ஏன் அடிமையானாள்(கலகக்காரர் தோழர் பெரியார் -2) என்னும் நாடகங்களைக் கொடுத்து தமிழ்நாட்டின் கருத்தியல் தளத்தில் ஓர் அதிர்வைக் கொடுத்தார்.அதனைத் தொடர்ந்து அண்மையில், மதுரையில் 28.10.2023 அன்று ‘வைக்கம் போராட்டம் ஈ.வெ.ரா.நாயக்கர் கதை அல்ல, ஈ.வெ.ரா. நாயகர் ஆன கதை (கலகக்காரர் தோழர் பெரியார் -3) என்னும் நாடகத்தை அரங்கேற்றினார்.
இந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு. தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச்சிறப்பாக இந்த வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கல்லூரிகள் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருந்தார்..அதனை மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரி மாணவ-மாணவிகள்,ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மிகச்சிறப்பாக நிறைவேற்றினர்.
மதுரை இராஜா முத்தையா மன்றம் அரங்கு. முழுவதுமாக நிரம்பி வெளியே நின்றும் நாடகத்தைப் பார்த்தனர்.கல்லூரி மாணவ மாணவிகளால் அரங்கம் நிரம்பியிருந்தது. இளையவர்கள் நடிப்பதை இருபால் இளைஞர்கள் வரவேற்று கைதட்டி மகிழ்ந்து வரவேற்றனர்.ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகள் இருமுறை நடத்தப்பட்ட இந்த நாடகத்தைக் கண்டு உணர்வு பெற்றனர் என இக்கல்லூரியின் துணை முதல்வர் பெரி.கபிலன் அவர்கள் குறிப்பிட்டார்.
““வைக்கம் பற்றிய நாடகம் ஒன்றை நான் வரைய, ஒரு தூண்டுதலாய் அமைந்தது, வைக்கம் போராட்ட நூற்றாண்டைத் தமிழ்நாடு அரசு ஓராண்டு நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததும், ஒரு காரணம்! அதையொட்டித்தான், என்னின் வைக்கக்களப் பணிகளும், வைக்கம் தொடர்பான நூற்களின் வாசிப்புகளும்! ஆயின், அதற்குமுன், ‘பெண் ஏன் அடிமை ஆனாள்? என்கிற கலகக்காரர் தோழர் பெரியார் 2’ நாடகம் எனக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கையிலேயே, சாதிய வருணாச்சிரமத்தைத் தொட்டு, அது பேசும் வருண அரசியலைக் கொண்டு,நாடகம் ஒன்று பண்ண வேண்டும் என்கிற சிறு பொறியொன்று, பட்டாம்பூச்சியாய் எனக்குள் படபடத்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம், பெண்களைப் பாவ யோனியாகவே வருணாச்சிரமம் பார்க்கும் பார்வையைப் ’பெண் ஏன் அடிமை ஆனாள்?’ நாடகம் தன் உள்ளிலிருந்து பேசியிருந்தது. பார்த்தவர்கள் வெடவெடத்து அதிர்ந்து போயிருந்தனர். “ (கணையாழி,நவம்பர் 2023) என்று இந்த வைக்கம் நூற்றாண்டு நாடகம் நடத்தவேண்டும் எனும் எண்ணம் எப்படி உருவானது என்பதனை இந்த நாடக இயக்குநர் பேரா.மு.இராமசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இந்த நாடகம் பல நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருச்சியில் இந்த நாடகத்தை நடத்தவேண்டும் என்னும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். .இருட்டை அகற்றுவதற்கு வெளிச்சத்தைத்தான் உருவாக்கவேண்டும்.இன்றைய இளைய சமுதாயத்திடம் பரப்பப்படும் சாதி இருட்டை அகற்றத் தந்தை பெரியார் என்னும் வெளிச்சத்தைத்தான் அவர்களுக்கு காட்டவேண்டும்.அந்த வெளிச்சத்தைக் காட்டும் வேலையை இந்த நாடகம் மிக அற்புதமாக நிகழ்த்துகிறது. பார்க்கும் ஒவ்வொரு மாணவரும் சாதிய இழிவை உணரும் வண்ணம்,வைக்கம் போராட்டத்தின் வழியாக மனிதர்களுக்குள் இருக்கவேண்டிய சம நீதியை உணரும் வண்ணம் இந்த நாடகம் அமைந்திருப்பது சிறப்பு.
கறுப்புச்சட்டை போட்ட தந்தை பெரியாரை நாம் அறிவோம்.ஆனால் கதர்ச்சட்டை போட்ட பெரியாரை, பெரியார் என்ற பெயர் வருவதற்கு முன்னால் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னும் பெயரோடு கதர்க்குல்லாய் அணிந்து பொதுவாழ்வில் புடம் போட்டத்தங்கமாய் மிளிர்ந்த பெரியாரை,அடுக்கடுக்காய் சிறைத்தண்டனைகள் அடைந்தபோதும் அயராமல்,அஞ்சாமல் போராடிய பெரியாரை,தன்னுடைய மனைவி நாகம்மையாரிடம் ‘நான் சிறைக்குப் போகிறேன். போராட்டம் தொய்வு அடையக்கூடாது,தொடர்ந்து நீ நடத்து போராட்டத்தை ‘ என்று சொல்லிச்சென்ற பெரியாரை,தன் தங்கை கண்ணம்மாவும்,தன் மனைவி நாகம்மையும் போராட்டத்தை நடத்துகிறார்கள் எனும் செய்தியால் மகிழ்வுற்ற பெரியாரை,சிறையில் புழுக்களோடு உணவை கவலைப்படாமல் சாப்பிட்ட பெரியாரை,அதனைப் பார்த்து இராசாசி பாராட்டிய பெரியாரை,எந்த விதக் கவலையும் இல்லாமல் சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்ட பெரியாரை, காந்தியார் வந்து நேரில் சந்தித்து ,போராட்டம் பற்றி உரையாற்றிய பெரியாரை,வைக்கம் போராட்ட வெற்றிவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பெரியார் எனப் பார்ப்போர் கண்முன்னால் பேரா.மு.இராமசாமி அவர்கள் நடித்துக்காட்டினர்.
வைக்கம் போராட்டம் ஆரம்பித்த மார்ச்30,1924 முதல் அது முடிவு பெற்ற நவம்பர் 23,1925வரை தேதிகளைக் காட்டி அந்தத் தேதிகளில் நிகழ்ந்த போராட்டங்களை,நீதிமன்ற நடவடிக்கைகளை, பத்திரிக்கை செய்திகளை என அந்த நாள் நிகழ்வுகளைத் தேதிப்படி ,கல்லூரி மாணவ மாணவிகள் கூர்மையான விமர்சனனகளோடு நடித்துக்காட்டியபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து கைதட்டல்கள் பலமாக எழுந்தது.
கல்லூரி மாணவ மாணவியர்கள்தானா அல்லது நிரந்தர நாடகக் கலைஞர்களாக இவர்கள் என்று எண்ணத்தக்கவகையில் ஒவ்வொரு காட்சியிலும் மாணவ மாணவியர்கள் வசனங்களைப் பேசி அற்புதமாக நடித்தனர்.105 நிமிடம் நாடகம் , நேரம் போனதே தெரியாதவண்ணம் மிக விறுவிறுப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடத்தப்பட்டது வியப்பளித்தது.வைக்கம் போராட்ட வரலாறு கண்முன்னால் காட்சிகளாக விரிந்து,உண்மையை வெளிச்சமிட்டது.
தந்தை பெரியாரின் கருத்துகள் எவரையும் ஈர்க்கும் வல்லமை மிக்கவை. திறந்த மனதோடு தந்தை பெரியாரின் கருத்துகளை உள்வாங்கும்போது அது செய்யும் மன மாற்றங்கள் ஆச்சரியப்படத்தக்கவை.1933-ல் தந்தை பெரியாரின் ஒரு 3 மணி நேரப்பேச்சை முதன் முதலில் கேட்டு, மனம் மாறி தந்தை பெரியாரின் கருத்துகளை கவிதைகளாக ஆக்கினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்பது வரலாறு. இது 90 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு ஆனால் தந்தை பெரியாரின் கருத்துகளின்,போராட்டங்களின் அடிப்படையில் நிஜ நாடகங்களை வடிவமைக்கும் அய்யா பேரா.மு.இராமசாமி அவர்கள்,தந்தை பெரியாரின் கருத்துகள் தனக்குள் ஏற்படுத்திய வேதியியல் மாற்றத்தைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இந்த நாடகம் எனக்குள் செய்திருக்கிற மாற்றம் என்னவாயிருக்கிறது என்பதாய்த் தனித்து யோசித்துப் பார்க்கையில், அது எனக்குள் செய்திருக்கிற கிரியை ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கிறது. உண்மையின் மேலான பற்றுறுதி கூடியிருக்கிறது. என்னை என் வளர்ச்சியில் இயல்பாகப் பக்குவப்படுத்தியிருந்த, உண்மையாயிருப்பது என்பது எத்தனை உன்னதமானது என்பதை, இலக்கியமாய் எனக்குள் இந்த நாடகம் இறக்கியிருக்கிறது என்று கம்பீரமாகச் சொல்ல முடியும். அது, நாடகத்தில் நடிக்கிற நடிகனுக்குள் நிகழ்ந்திருக்கிற வேதியல்மாற்றம்! கலவரத்தையோ, காட்டுமிராண்டித் தனத்தையோ நம்பாமல், எதையும் பகுத்தறிவுடன் யோசிக்க வைக்கிற பக்குவத்தை இது உள்வயமாய் உருவாக்கியிருப்பது அதிசயமாயிருக்கிறது.
உண்மையின் ஒளிச்சிதறல்தான் பெரியார் என்பதையும், சமூகத்தின் மேலான பற்று/ அக்கறை என்பதே பெரியாரியம் என்பதாயும், அது மனிதத்துவத்தை மேன்மையுறச்செய்யும் மாமருந்து என்பதாயும், எனக்குள், உரத்து உள்வாங்க வைத்திருக்கிறது இந்த நாடகம்! நடிக்கையில், பெரியாராக நான் என்னை எப்படிப் பார்க்கிறேன்? உண்மை-மனிதனை மையப்படுத்தும் சமூகப் பற்று-சமூக நீதியை உள்ளத்தில் பற்றவைக்கும் நெருப்பு-யோசிக்கவே வைக்கிற பகுத்தறிவுக் குறும்பு-பொதுவாழ்வில் நேர்மை-அஞ்சாமை எனும் அச்சாணி-போராட்டமே வாழ்க்கையாகும் ரசவாதம்-இவற்றின் நேரிசைக் கலவையில் உருவாகும் குணச்சித்திரம், பெரியார் என்கிற நிறம் என்பதாய் எனக்குள் புகுந்து, என்னின் ’நான்’-ஐயே என்னை மதிக்கவைக்கிற மகத்துவத்தைச் செய்திருக்கிறதாய் உணர்கிறேன்.
இந்தப் பொறி, நாடகத்தில் உடன் நடித்தவர்களிடமும் உருவாக ஆரம்பித்திருப்பதை மெல்ல மெல்ல என்னால் உணர முடிகிறது. இனி, நாடகத்தைப் பார்ப்பவர்களிடமும் புதிய குணமாய் அது பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே, பெரும் ஆதாயங்களை எதிர்பார்க்காத இந்த நாடகக்காரனின் எளிய ஆசை! இது நிறைவேறும் வரையும் உழைத்தாலே, இந்த வாழ்க்கையின் அர்த்தம் கைகூடிவரும் என்பதாய் நான் நம்புகிறேன்!” (கணையாழி,நவம்பர் 2023) என்று மிகச்சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.
ஆம், இந்த நாடகத்தைப் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்தப் பெரியார் என்னும் உண்மையின் ஒளிச்சிதறல் மூளைக்குள் ஊடுருவும். பத்தாம் பசலித்தனமான கருத்துகளால் நிரம்பிக்கிடக்கும் மூளையின் இருட்டை இந்தப் பெரியார் என்னும் ஒளிச்சிதறல் நீக்கும்.புதிது புதிதாய் சிந்திக்க வைக்கும்.அதன்மூலம் பெரியார் விரும்பிய உலகத்தை ‘அன்பும் சமுத்துவமும் கொண்ட உலகத்தை’ படைப்பதற்கு உந்து சக்தியை அளிக்கும். அப்படிப்பட்ட நாடகத்தை அளித்திருக்கக்கூடிய பேரா.மு.இராமசாமி அவர்களையும் அதில் மிக இயல்பாக,தேர்ந்த நாடகக் கலைஞர்களைப் போல நடித்திருக்கக்கூடிய மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரி மாணவ,மாணவிகளையும் ,அதற்குத் துணை நின்று பணியாற்றிய அக்கல்லூரியின் முதல்வர்,துணை முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்களையும் ,ஊழியர்களையும்,முன்னாள் மாணவர்களையும் பாராட்டி மகிழ்வோம்.அது மட்டுமல்ல இந்த நிகழ்வு நிகழக் காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும்,நிகழ்வில் கலந்து கொண்டு உற்சாகப்படுத்திய தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மாண்புமிகு பி.மூர்த்தி அவர்களையும்,உரையாற்றிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களையும்,மதுரை வடக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அவர்களையும்,தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மா.இராஜேந்திரன் அவர்களையும், மதுரை துணை மேயர் நாகராசன் அவர்களையும் மற்ற ஆளுமைகளையும் பாராட்டி மகிழ்கின்றோம். தந்தை பெரியார் நாடகங்களால் ‘கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்’ என்று ஆனந்த நடனம் புரிவோம்.
நன்றி : உண்மை,மாதம் இருமுறை இதழ் 16-30,11,2023
No comments:
Post a Comment