Tuesday 28 November 2023

அவரைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் ....


திரு.வே.வீரிசெட்டிசாரின் நினைவேந்தல் நிகழ்வும், 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் எனது நூல் வெளியீட்டு நிகழ்வும் 26.11.2023 காலை மதுரையில் உள்ள அல்-அமீன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.அந்த நிகழ்வைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட விடுதலை,தினமணி,தமிழ் இந்து ,தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளுக்கு மனமார்ந்த நன்றி.மதுரையில் உள்ள நட்பு தமிழ் வட்டத்தின் தலைவர் அய்யா நா. நா.ஆறுமுகம் அவர்கள், 10 மணி நிகழ்வுக்கு 9.30க்கே  இணையரோடு வந்திருந்து நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றியதோடு இணைப்புரையும் கொடுத்து நிகழ்வை சிறப்புக்குரியதாக ஆக்கினார். அல்-அமீன் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஷேக் நபி அவர்கள் 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் நூலை வெளியிட்டதோடு ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார்.திரு.வே.வீரிசெட்டி சாரின் அவர்களின் உடன்பிறந்த சகோதரர்கள் திரு.வே.சிவராஜ் அவர்கள்(ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் மேலாளர் -பணி நிறைவு) அவர்களும் திரு.வே.பாலசுப்பிரமணியம்(பொறியாளர்,பொதுப்பணித்துறை-பணி நிறைவு) அவர்களும் திரு.வே.வீரிசெட்டி சாரின் மகள்,பெரியகுளத்தில் முது நிலை ஆசிரியராகப் பணியாற்றும் வீ.மணிமொழி அவர்களும் ,அவரின் இணையர் திரு.த.கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டது மன நிறைவு அளித்தது. வீரிசெட்டி சாரின் உடன் பணியாற்றிய திரு.குபேந்திரன்(கல்வி அதிகாரி-ஓய்வு)  அவர்கள்,அவரின் மாணவர் திரு.ரவீந்திரன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரும் உரையாற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்வில் முன்னிலை ஏற்று உரையாற்றிய, நூலைப் பெற்றுக்கொண்டவர்கள் என அனைவரும் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் சுப,முருகானந்தம் அவர்கள் ஒரு நிறைவான உரையை நிகழ்த்தினார்.கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றி. வர இயலாமல்,இருக்கும் இடத்தில் இருந்து நிகழ்வை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி.
நூலைக் குறிப்பிட்ட காலத்தில் அச்சடித்து மதுரைக்கு அனுப்பிய கீழடி பதிப்பகத்தின் உரிமையாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 
மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு  பெரும் நன்றி.






நிகழ்வு முடிந்த மறுநாளான நேற்று(27.11.2023) எழுத்தாளர் தோழர் மு.சங்கையா அவர்கள் செல்பேசியில் பேசினார். நூலைப் படித்துவிட்டேன் என்று வெகுவாக நூலைப் பாராட்டினார். பாராட்டியதோடு,இதைப் போல எனக்குக் கற்பித்த ஒரு ஆசிரியர் மனதிற்குள்ளேயே இருக்கிறார்."  நான் பள்ளியில் படிக்கும்போது ,ஓரிரு நாள் காய்ச்சல் என்று பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை.அந்த ஆசிரியர் வந்து என்னை வீட்டில் வந்து பார்த்து,'ஏன் பள்ளிக்கு வரவில்லை ' என்று கேட்டு ,காய்ச்சல் என்றவுடன் என்னை சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து மூன்று மைல்தூரம் ஓட்டிச்சென்று,மருத்துவரிடம் காட்டி,ஊசி போட்டு ,அதற்கு அவரே பணம் கொடுத்து,மறுபடியும் என்னை வீட்டில் வந்து விட்டுப்போனார்' என்றார்.அவரைப் பற்றி இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது.மூன்று வருடம் அவரிடம் நான் படித்தேன். இதுவரை ஒரு கட்டுரை கூட அவரைப் பற்றி  எழுதவில்லை.இந்த நூலைப் படித்து முடித்தவுடன் அவரைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன் தோழர்,எழுதப்போகிறேன் என்றார். தோழர் ,இந்த நூலின் மிகப்பெரிய வெற்றியாக  நான் கருதுவது,உங்களின் இந்த எண்ணம்தான் எழுதுங்கள்,எழுதுங்கள்  என்றேன்.





 

2 comments:

Anonymous said...

நன்றி என்ற சொல்லுக்குப் பொருளானீர், படிப்போர்க்கும் தூண்டல் தந்தீர்! சிறப்புங்க அய்யா!

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க....பெயர் இல்லை..