Tuesday, 17 March 2026

அண்மையில் படித்த புத்தகம் : அன்பிற்கினியாள் –சிறுகதைத் தொகுப்பு

 

அண்மையில் படித்த புத்தகம் : அன்பிற்கினியாள் –சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர்                    : க.சரவணன்

பதிப்பகம்                    : பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு                :  செப்டம்பர் 2024,216 பக்கங்கள்,விலை ரூ 240

 

மதுரையைச் சார்ந்த நண்பர் க.சரவணன் அவர்களின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இந்த நூலுக்கு ஒரு சிறப்பான  அணிந்துரையை ஆற்றொழுக்காய்ப் பரவும் மானுடம்!என்னும் தலைப்பில் தோழர் ஸ்ரீரசா கொடுத்திருக்கிறார். அவர் தனது அணிந்துரையில் ,”குழந்தைகளுக்குக் கதைசொல்லியான மதுரை சரவணன் குழந்தைகளுக்கான இலக்கியங்களைத் தொடர்ந்து படைத்துவருபவர். இதுவரை 11 குழந்தை இலக்கிய நூல்களை வழங்கியுள்ளார். கல்விப் புலம் குறித்த 4 கட்டுரை நூல்களை வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், சிறுகதை, நாவல் எனவும் தனது எழுத்துப் பரப்பை விரித்து வருபவர். பரவலான வரவேற்பைப் பெற்ற அகிலாவும் பிரேசில் பெண்களும்என்ற சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து வரும் மதுரை சரவணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அன்பிற்கினியாள்’.

 சரவணன் அடிப்படையில் ஓர் ஆசிரியர். அதுவும் பள்ளித் தலைமை ஆசிரியர். வெறுமனே பாடம் நடத்திவிட்டுச் சம்பளம் வாங்கிச் சென்று விடும் ஆசிரியராக அல்லாமல் தன்னை ஒரு குழந்தைகள் உலகச் செயல்பாட்டாளராக மாற்றிக் கொண்டவர்.என்று சரவணன் அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்திப் பின்பு கதைகளைப் பற்றியும் தனது கருத்துகளைக் கூறியுள்ளார்.



 இந்தச் சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் 14 தைகள் உள்ளன நண்பர் சரவணன் இயல்பாகவே கலகலவென்று பேசும் இயல்புடையவர். அவரது கதைகளும் அது போலவே நிறையப் பேசும் கதைகளாக இருக்கின்றன.  கல்வி சார்ந்த துறையில் இருப்பதால் ,கல்வி குறித்த தனது பல்வேறு எண்ணங்களை, நடைமுறை எதார்த்தங்களை, பிரச்சனைகளை எல்லாம் தன்னுடைய கதைகளக்குள் கொண்டு வந்திருக்கிறார். வாசிப்பவர்கள் எளிதாக இன்றைய நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

சந்தேகப்படுகிற ஒரு கணவனைப் பற்றிய கதை முறி மருந்து.அந்த முறி மருந்து என்ன என்பதை நீங்களும் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம் உடலின் மொழி என்பது திருநங்கையாக மாறும் ஒருவனின்/ ஒருவளின் உணர்வு பற்றியது.படிப்படியாய் பள்ளிக்கூடத்திற்குள் மாறும் ஓர் உடல்மொழியைக் கவனித்து,கண்காணித்து எழுதி இருக்கின்றார்.   வெள்ளைக்காரியுடன் கால் நகைச்சுவையாக ஆரம்பிக்கும் கதை. முடிவில் ஒரு மிகப்பெரிய வலியுறுத்தலோடு முடிகிறது. முடியவில்லை என்றால் முடிக்காமல் இருப்பதுதான் சிறந்த வழி என்பதைச் சிறப்பாகச் சொல்கிறது. இந்தக் கதையைப் படித்த பிறகு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இருக்கும் ஒருவரை ஏன் திருமணம் முடிக்காமல் இருக்கிறீர்கள் என்னும் கேள்வியைக் கேட்காமல் இருப்பது தான் மிகப்பெரிய நாகரிகம் என்று தோன்றுகிறது அதைப் போலவே நீத்திமிங்கலம் என்னும் கதை ஒரு 30 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமையையும் இன்றைக்கு இருக்கும் நிலைமையும் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டையும் எதார்த்தமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் இன்றைய நிலைக்கு  ரொம்பச் சீரியஸா எடுத்துக்கிட்டு, மனசுக்குள்ள புகுத்திக்கிட்டு அவஸ்தப்பட வேண்டியது இல்லை என்று சொல்கிறார்.விவாதிக்கப்படவேண்டிய கருத்து. அப்படியே ஒத்துக்கொள்ள இயலவில்லை.அன்றைக்கு இவ்வளவு காணொளிகள் இல்லை.இன்றைக்கு எல்லாமே விசுவலாக இருக்கும் நிலையில் பாதிப்பு என்பது மிக அதிகம்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பாக இருக்கும் ‘அன்பிற்கினியாள்’ கதை அற்புதமான கதை. கொரனா காலத்து நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் சில நிகழ்வுகள் நடப்பதாகக் கதைக்குள் கொண்டுவந்து சிறப்பாக எழுதி இருக்கிறார். எதார்த்தமும் இடித்துரைத்தலும் சேர்ந்து இருக்கும் கதை.

கால்பந்தாட்டக்காரன் என்னும் கதை படித்து முடித்த பின்பும் வெகு நேரம் வலித்தது இந்தத் தொகுப்பிலேயே மிகவும் அழுத்தம் திருத்தமான கதை இது என்று சொல்லலாம். பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமையும் கதை என்னவென்பதை நீங்களும் படித்துப் பாருங்கள்.

தொடாமல் மலர்வேன்’ என்னும் கதை அந்தக் காலக் காதல்,இன்றைய காதல் எனப் போகிறது. அதில் ஓர் இடத்தில் ஆணவக் கொலைக்கு ஆதரவாக ஒரு கதாபாத்திரம் பேசுவதாக அமைந்துள்ளது.(பக்கம் 169) இந்த உரையாடலைத் தவிர்த்திருக்கலாம எனத்தோன்றியது.

எனது கதைகள் அன்றாட நிகழ்வுகளில் இருந்து எடுக்கப்பட்டு, அவை புனைவுகளாக மாற்றப்பட்டவை. எதார்த்த வாழ்வின் சிக்கல்களைக் கதைகள் பேசுகின்றன. உண்மையில், நான் கடக்க இயலாத வலிகளை இந்தக் கதைகளின் வழியாக எழுதிக் கடத்திக் கடந்துவிடுகின்றேன்.என்று இந்த நூலின் ஆசிரியர் க.சரவணன் தனது என்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கதைத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ‘செம்மலர்’ இதழில் வெளிவந்தவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.செம்மலர் இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும், அணிந்துரை அளித்திருக்கும் தோழர் ஸ்ரீரசாவின் பங்களிப்பு, இந்தச் சிறுகதைத்தொகுப்பு வெளிவருவதற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் சரவணன் அவர்கள் தனது என்னுரையில் கொடுத்திருக்கிறார்.

எழுத்தாளர் சாம்ராஜ் தனது ‘கொடைமடம் ‘  நாவலில் மதுரையின் பல  நிலப்பகுதிகளை மிக விரிவாக எழுதி இருப்பதுபோல இந்த நூலின் ஆசிரியரும் தனது கதைகள் பலவற்றிலும் மதுரையின் பல  நிலப்பகுதிகளை விரிவாக எழுதி இருக்கிறார்.வாழ்த்துகள் எழுத்தாளர் க.சரவணன் அவர்களுக்கு. தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.



 

2 comments:

Anonymous said...

நன்றி தோழர்.

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சி. நன்றி தோழர்.