Thursday, 22 May 2025

திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் உரை…

 

 

மதுரையில் 27-04-2025 ஞாயிறு மாலை 5-30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் நடைபெற்ற அய்யா பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் உரை…

 

“திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தமட்டில் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் மூத்த ஆளுமை அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள். ஆளுமை என்று சொல்கின்ற பொழுது ஏதோ மதுரைப் பகுதியை மட்டும் சார்ந்த ஆளுமை என்று எடுத்துக் கொள்ள முடியாது, திராவிட இயக்கம் என்பது மதுரையைத் தாண்டியது, தமிழ்நாட்டைத் தாண்டியது, உலகமெல்லாம் பரவி இருக்கக்கூடியது. அந்த இயக்கத்தின் மூத்த ஆளுமை , வயதால் மட்டுமல்ல கொள்கைவாதியாகத் திராவிட இயக்க கொள்கையில் ஊறித் திளைத்தவராக இருக்கக்கூடிய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் அவர்களுக்கு, இந்த 85 ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழாவிற்குத் தாய்க்கழகம் எடுக்கின்ற இந்த விழாவிற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் அவர்களே, இந்த நிகழ்வுகளைத் தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து, நேர்த்தி என்று சொன்னாலே செல்வம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம் அவர்களே”,என்று குறிப்பிட்டு அனைவரையும் விளித்தார்.தொடர்ந்து,

 

“இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டதைப் பற்றிச் செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்கள் பொதுவாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில் இருந்தார் என்றால் அவர் திடலுக்கு வராமல் இருந்தது இல்லை. சென்னையில் இருந்தால் காலை அல்லது மாலை உறுதியாக வந்து விடுவார்., அதுதான் அவரது வழக்கம்.ஆனால் சென்ற வாரத்தைப் பொறுத்த அளவிலே, அண்மையிலே அவர் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்ட நிலையில் ஆனால் தமிழ்நாட்டை விட மிகச் சுறுசுறுப்பாக அங்கு அவர் பணியாற்றி வந்த பிறகு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால் மூன்று நாட்கள் அவர் வீட்டில் ஓய்வெடுத்தார். அப்படிப்பட்ட நிலையில்தான் செல்வம் அவர்கள் அய்யா ஆசிரியர் அவர்களைத் தொடர்பு கொண்டு, இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறியிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் திடலுக்கு வந்தபின் அதனை நினைவூட்டி, நான் ஆசிரியரிடம் கேட்டபோது “கொள்கையாளருக்குத் தாய்க்கழகம் எடுக்கின்ற விழா, எனவே தலைமை நிலையத்தின் சார்பாக நீங்கள் சென்று கலந்து கொள்ள வேண்டும்” என்று எனக்கு ஆசிரியர் அவர்கள் கட்டளையிட்டார். அதோடு ஒரு வாழ்த்து மடலையும் என்னிடம் கொடுத்து அனுப்பினார்.

 

அங்கிருந்து வரும்போது  நான் தலைமைக் கழகப் பொறுப்பாளராகத்தான் வந்தேன். ஆனால் இங்கு வந்து மதுரை முகங்களை எல்லாம் பார்த்த பிறகு, நான் இங்கு மதுரைக்காரனாகத்தான் பேசப்போகிறேன். அண்ணன் பொன்முத்து அவர்களைப் பற்றி அரசியலில் அவரோடு பயணித்தவர்கள்,அய்யா துரை எழில்விழியன்,அய்யா குழந்தைவேலு,அய்யா வேலுச்சாமி போன்றவர்கள் எல்லாம் அவருடைய ஆற்றலைப் பற்றி அருமையாக எடுத்துரைத்தார்கள். என்னைப் பொறுத்த அளவில் நான் தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தவன். நான் அரசுப் பணியில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றதற்குப் பிறகு முழு நேரப் பணியாளராகத் திராவிடர் கழகத்திற்கு வந்தவன். 40 ஆண்டுகளாக இயக்கத் தொடர்பு இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் முழுநேரப்பணி என்பது. திராவிடர் கழகத்திற்கு நான் வருவதற்கு முன்னாடி இருந்த காலகட்டத்தைப் பற்றித்தான் நான் இப்போது பேசப் போகிறேன். இது என்னுடைய சுயபுராணம் என்று தயவு செய்து எண்ண வேண்டாம் .இது இயக்கம் சார்ந்தது, கொள்கை சார்ந்தது.

 

 இன்று சென்னையிலிருந்து ரயிலில் வந்த பொழுது ஓர்  ஆங்கிலப் புத்தகத்தினைப் படித்துக் கொண்டு வந்தேன் அந்த ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பு ‘Why we’re getting poorer-A Realist’s Guide to the Economy and How We Can Fix it,authored by Cahal Moran.’. நாம் ஏன் ஏழைகளாக இருக்கிறோம் என்பதுதான் அதனுடைய தலைப்பு. உலகமயமானபோது எல்லா மக்களும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள் என்ற மாயையை உண்டாக்கினார்கள். ஆனால் அந்தக் கற்பனை உடைக்கப்பட்டு விட்டது. அந்த உலகமயம் என்பது பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான். அது ஒரு சில பணக்காரர்களை மட்டும் உருவாக்கி இருக்கிறது .ஆனால் பெரிய அளவில் ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கி இருக்கிறது என்பதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தப் புத்தகத்தை எழுதியவர் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ்ஸில் படித்த ஒரு ஆங்கிலப் பொருளாதார நிபுணர். அவரது பெயர் மோரான். இந்தப் புத்தகத்தில் ஒரு வரலாற்று ஆசிரியரின் குறிப்பை நினைவுபடுத்துகிறார். அந்த வரலாற்று ஆசிரியரின் பெயர் யங். ஒருவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவர் 20 வயதாக இருக்கும் போது அவரைச் சுற்றி இருந்த உலகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டால் அவரைப் புரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார் இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஒருவர் 20 வயதில் என்ன சூழலில், என்ன கொள்கையில் இருக்கிறாரோ அதுதான் அவரை வளர்த்தெடுக்கும்   என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

 

அப்போது எனக்கு வயது 18 1971 ஆம் ஆண்டு, கல்லூரிப்  படிப்பு படிப்பதற்காக, தேனியிலிருந்து நான் மதுரைக்கு வந்தவன். படித்து முடித்து வேலை என்று மதுரையிலேயே தங்கி விட்டேன். ஒத்தக்கடை அருகிலுள்ள வேளாண்மை  கல்லூரியில்தான் நான் பட்டப்படிப்பை படித்தேன். அடிப்படையில் எங்கள் குடும்பம் என்பது காங்கிரஸ் குடும்பம், தீவிரமான காங்கிரஸ் குடும்பம். தேனியில் இருந்த என் ஆர் தியாகராஜன் என்பவர் எங்கள் உறவினர். காங்கிரஸ் கட்சிக்காரர். எனது தந்தை அவரின் ஆத்மார்த்தமான சீடர். நான் காங்கிரஸ் உணர்வோடு இளம் வயதில் இருந்தவன். 1967 தேர்தல் காங்கிரஸ் தோற்று திமுக வெற்றி பெற்றுவிட்டது.  1968 ல் ஓர் இடைத்தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலில் திருமங்கலம் என்று நினைக்கிறேன்.அதில் காங்கிரசு வெற்றி. அப்போது தினத்தந்தியில்  கார்ட்டூன் போடுவார்கள். காங்கிரஸ்காருக்கு ஒரு பெரிய தொந்தியைப் போட்டு ,ஒரு கதர் குல்லாயைப் போட்டு, குளத்திலே வலைவீசிப் பிடிக்கும்போது ஒரு மீன் கிடைச்சிருச்சு, அப்படிங்கிற மாதிரி ஒரு கார்ட்டூன் போட்டாங்க.

  

நான் கல்லூரிக்குப் போகும்போது கதர்ச்சட்டை, கதர் வேட்டிதான் கட்டி இருப்பேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது கல்லூரியில் எனக்குச் சீனியராக இருந்தவர் அக்ரி கணேசன். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். மதுரையில் உள்ள காலேஜ் ஹவுசில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வு. ‘வாங்க குமரேசன்’, என்று என்னை அக்ரி கணேசன் அழைத்தார். நாங்கள் மாணவர்கள் பலர் அந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குச்  சென்றோம். அந்தப் புத்தக வெளியீடு என்னவென்று சொன்னால், என்சிபிஹெச் வெளியீடு. இந்து மதம் கிறிஸ்தவ மதம் இஸ்லாமிய மதம் புத்த மதம் என்று ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் இராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் ஒருவர் பேச வேண்டும் என்று அந்தக் கூட்ட்த்தை  ஏற்பாடு  செய்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர்  மொழிப்போர் தியாகி அண்ணன் எல். கணேசன் அவர்கள்.



 

அண்ணன் பொன்முத்து அவர்களுக்கு  நன்றாக நினைவிருக்கும். அதில் ஒரு புத்தகம் பற்றி அண்ணன் பொன்முத்து அவர்கள் பேசினார்கள். எனக்கு அப்போது 18 வயது. எனக்கு இருந்த புரிதல் எல்லாம் தி.மு.க.காரர்கள் என்றால் அலங்காரமாகப் பேசுவார்கள்  என்பதுதான். அவ்வளவுதான்  அந்த வயதில் எனக்குப் புரிதல். அந்தப் புரிதலை மாற்றிய பேச்சு என்பது அண்ணன் பொன்.முத்து அவர்களுடைய அன்றைய பேச்சுதான். அது லேசுப்பட்ட புத்தகம் அல்ல. இராகுல் சாங்கிருத்தியாயன் என்பவர் தத்துவஞானி. தத்துவ வித்தகர். அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு,மிக எளிமையாக விளக்கிச் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தி.மு.க-விலிருந்து வந்து இப்படி விளக்கி பேசுகிறார்களே என்று. அதுதான் எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை பெரியாரைப் பற்றிய ஒரு புரிதல் எனக்கு இருந்தது ஆனால் அதற்குப் பிறகுதான் திமுகவிலும் இவ்வளவு ஆழமாகப் பேசுவார்கள் என்பது எனக்குப் புரிந்தது.

 

அந்தக்கூட்டத்தில்  அண்ணன் பொன்முத்து அவர்கள் ஆற்றிய உரையில் கூடுதலாக ஒரு செய்தி. பொதுவாக 20 வயதில் எல்லோரும் கம்யூனிஸ்டாக இருப்பார்கள், அந்தக் கொள்கையெல்லாம் படிக்கும் போது ஓர் ஆர்வம் இருக்கும். ஆனால் அந்த வயதில் கம்யூனிச புத்தகங்களை  நான் படித்த போது அது நம் நாட்டுக்கு ஒத்து வராது என்ற  தயக்கம் எனக்கு இருந்தது.அந்தக் கூட்டத்தில் அந்தப் புத்தகத்தை ஆய்வு செய்கிற போது அண்ணன் பொன்முத்து அவர்கள் பேசும்போது  ஒரு கருத்தைச் சொன்னார்கள்.அந்தக் கருத்து  எனக்குப் பல ஆண்டுகளாகப் புரியாத ஒரு விசயத்திற்கு விடை கிடைத்தது போல இருந்தது. அவர் பேசும்போது சொன்னார், மார்க்சின் கோட்பாடு என்பது ஒரு கையேடு. அதை நேரடியாக எடுத்து நம் நாட்டில் பொருத்த முடியாது. அதை ஒரு வழிகாட்டி நெறிமுறையாக வைத்துக் கொண்டு அதை நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என்ற  கருத்தைச் சொன்னபோது இன்னும் எனக்கு ஒரு டைமென்சன் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் நம் நாடு என்ற பத்திரிக்கையை வாங்கிப் படிக்கும் பழக்கம் எனக்கு வந்தது .அப்போது அண்ணா அவர்கள் நம் நாடு பத்திரிக்கையை நடத்தவில்லை. அதைச் சிட்டிபாபு அவர்கள் நடத்தினார். எனவே எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது அண்ணன் பொன்முத்து அவர்களின் பேச்சுதான்.

 

எனக்கு அது மிகப் பெரிய திருப்புமுனையாக, ஈர்ப்பாக இருக்கலாம் ஆனால் அண்ணனைப் பொறுத்தளவில் அது இயல்பான ஒன்று. .அவருடைய பேச்சால் என்னைப்போல  மாற்றம் ஏற்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். எனவே பேசும்போது கருத்து அடிப்படையில் பேசக்கூடிய ஓர் ஆற்றல் மிக்கவர் அண்ணன் பொன்முத்து அவர்கள். தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பதவி ஏற்றது பற்றி இங்குச் சொன்னார்கள். 1971-ல் அண்ணன் அவர்கள் இரும்பாடி ஊராட்சி மன்றத் தலைவர், வாடிப்பட்டி யூனியன் சேர்மன். அந்தக் காலத்தில் சேர்மன் பதவி என்பது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட அதிகாரம் மிக்கது. அதாவது ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், பாருங்கள், “ஒரு கொள்கைவாதிக்குத் தாய்க்கழகம் எடுத்து நடத்துகின்ற விழா என்று.  வாடிப்பட்டி சேர்மன் பதவியில்  ஆரம்பித்துப் பல்வேறு உயர் பதவிகளுக்கு அவர் வந்திருக்கிறார். அதிகாரம் மிக்கப் பதவியில் இருந்திருக்கிறார். ஆனால் கொள்கைவாதி என்று வருகின்றபொழுது, அதிகாரத்திற்கு வருகின்றபொழுது, கொள்கை கரைந்து போகக் கூடிய அளவிற்கு நிறையப் பேர் இருப்பார்கள் அண்ணனைப் பொறுத்தளவில் அந்தக் கரைப்பு என்பது அண்டக்கூட முடியவில்லை. அன்றைக்கு எப்படித் தொடங்கினாரோ, அதேபோல இன்றைக்குவரை அதிகாரம் வரும் போகும்,கொள்கைதான் நமக்கு நிரந்தரம் என்று இன்றுவரை கொள்கைவாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் அண்ணன் பொன் முத்து அவர்கள்.

அடுத்து ஒரு நிகழ்வு அவருடைய நன்றி உணர்வு எப்படிப்பட்டது என்பதற்கு. மதுரை

தல்லாகுளத்திலிருந்த பெரியார் மாளிகையில் அய்யா ஆசிரியர் அவர்கள் தலைமையிலே ஒரு கலந்துரையாடல் கூட்டம். அப்போதெல்லாம் நான் கூட்டங்களிலே கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன் . அப்போது அண்ணன் பொன்முத்து  வந்திருக்கிறார் அப்போது முத்து அண்ணனும் அங்கு வந்திருக்கிறார். அப்போது அவர் அதிமுகவுக்குப் போய்விட்டார் ,ஆசிரியர் அவர்கள் மற்றும்  எல்லோரும் கலந்து கொண்டிருக்கும்பொழுது,மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.செயலாளராக இருந்த  தாவுது அவர்கள் பேசும்போது எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய  அன்றைய ஆசான் முத்து அண்ணன் என்று ஆரம்பித்தார். உடனே முத்து அண்ணன்  என்ன சொன்னார் என்றால்,’ ஏண்டா அன்னைக்கு  நான் ஆசான் என்றால், இன்னைக்குக் கிடையாதா?” என்று கேட்டார். அவருக்கே உரிய பாணி அது அடுத்து அண்ணன் பொன் முத்து அவர்கள்  பேசும் பொழுது,’ எங்கு இருந்தாலும் எங்களுக்கு ஆசனாக இருக்கக்கூடிய அண்ணன் முத்து’ என்று ஆரம்பித்தார். இது ஒரு மிகப்பெரிய மாண்பு. அமைப்பு ரீசியாக அவர் வேறு இடத்தில் இருக்கலாம், ஆனால் வளர்த்து விட்டவரை, அந்தப் பண்பைக்  குறிப்பிட்டு சொல்வது இது அண்ணனிடம் நான் கண்டது, கற்றுக் கொண்டது. நிறைய இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் .

 

நான் கடந்த 20 வருடங்களாகத்தான் சென்னை போய் விட்டேன் அதற்கு முன்பு மதுரைதான், திருப்பரங்குன்றம் பகுதியில்தான்  நான் இருந்து கழகப்பணி ஆற்றினேன். அப்போது எங்களுக்கு ஓர் ஆசை திருப்பரங்குன்றத்திலே, தந்தை பெரியார் சிலையை நிறுவ வேண்டும் என்பது.  எந்த இடம் என்பதைக் கூட நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். திருமங்கலத்தில் இருந்து வரக்கூடிய வழியில்,திருப்பரங்குன்றத்தில் அந்தப் பூங்காவிற்குப் பிரிகிற இடத்தில். அந்தச் சமயத்தில் நாங்கள் எடுத்த முயற்சி எல்லாம் செல்வம் அவர்களுக்கும் அண்ணன் எடிசன் அவர்களுக்கும் தெரியும். திருப்பரங்குன்றம் நகராட்சி கூட்டத்திலும் தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதி கொடுத்து  ஒரு தீர்மானம்  நிறைவேறி விட்டது.

 

அண்ணன் பொன்முத்து அவர்களின்  ஆற்றல், செயலுக்கு எல்லாம் ஒரு சவாலாக இருக்கக்கூடிய ஒரு கோரிக்கையைத் தலைமைக் கழகத்தின் சார்பாக நான் இந்த நேரத்தில் வைக்கிறேன்.தந்தை பெரியார் அவர்களுக்குத் திருப்பரங்குன்றத்தில் ஒரு சிலையை வைக்க வேண்டும். . உங்கள் காலத்தில் அந்தச் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன் .கொள்கைவாதியாக இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், இவருக்குப் பின்னாடி பிள்ளைகள்?  என்ற ஒரு கேள்வி வரும். பிள்ளைகளையும் கொள்கைவாதிகளாகத்தான் வளர்த்திருக்கிறார்.

 

அண்ணனின் மகள் பேரா தேன்மொழி அவர்கள் இங்கே பேசினார்கள் அவர் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருக்கிறார். திராவிட இயக்க கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். அது மட்டுமல்ல ஆசிரியர் அவர்களைப் புரவலராகக் கொண்டு  இயங்கும் திராவிட வரலாற்று ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. வரலாற்றுப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் எல்லாம் பொறுப்பாளராக இருக்கக்கூடிய அந்த அமைப்பின் இணைச் செயலாளராக இருந்து, திடலுக்கு வந்து ஆசிரியர் அவர்களைச் சந்தித்துப் போகக் கூடியவராகப் பேராசிரியர் தேன்மொழி அவர்கள் இருக்கிறார். அப்படிப்பட்ட ஓர் அருமையான வாரிசையும் அண்ணன் அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையிலே முழுக் கொள்கைவாதிக்காக  நடத்தப்படுகின்ற விழா இந்த விழா. அண்ணன் அவர்கள் நிச்சயமாகக் கொள்கைவாதியாக வாழ்கிறார் என்பதற்கு   இந்த விழாவின் அழைப்பிதழின் கடைசி பக்க அட்டையே போதும்.அய்யாவோடு இருந்த படம், அண்ணாவோடு இருந்த படம், கலைஞரோடு இருந்த படம், இன்றைக்கு ஆசிரியர் அவர்களோடு அதே மாதிரி  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களோடு இருக்கக்கூடிய படம்.அருமையாக உள்ளது. இப்படி எல்லாக் காலகட்டத்திலும் கொள்கைவாதியாக இருக்கக்கூடிய ஓர் ஆளுமை என்பது மிக மிக அபூர்வமானது. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு, கொள்கை வீரருக்கு,பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்த  பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்து அண்ணன் பொன்முத்து  அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த இயக்கத்தின் பிதாமராக இருக்கக் கூடிய தந்தை பெரியாரின் வாழ்நாளையும் தாண்டி வாழ வேண்டும். நூறாண்டையும் கடந்து வாழ வேண்டும் அதனால் சமுதாயம் பலன் பெறவேண்டும்  என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன் “ என்று உரையாற்றினார்.

 


Saturday, 17 May 2025

Friday, 16 May 2025

அண்மையில் படித்த புத்தகம் “ லவ் யூ சென்னை ‘( நாவல்)...

 

அண்மையில் படித்த புத்தகம் “ லவ் யூ சென்னை ‘( நாவல்)

ஆசிரியர் : கோ.ஒளிவண்ணன்

பதிப்பகம் “ எழிலினி பதிப்பகம் சென்னை-7 பேச: 9840696574

முதற்பதிப்பு : ஜனவரி 2025,மொத்த பக்கங்கள் 144 விலை ரூ 300

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலப்பொறுப்பில் என்னோடு உடன் பணியாற்றுபவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள்.அவரது தந்தை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறந்த பெரியாரிஸ்ட்.ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியவர்.பதிப்பகத்தை நிறுவி திறம்பட நடத்தியவர்.அவரின் வழித்தோன்றலான அண்ணன் ஒளிவண்ணன் பதிப்பாளர்,எழுத்தாளர்,ஆங்கிலத்திலும் தமிழிலும் பேச்சாளர்.ரோட்டரி சங்கத்தில் மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தவர்.பல ஆளுமைகளோடு மிக நெருங்கிய தொடர்பு உடையவர்.2015 வெள்ளம்,கோவிட் போன்ற காலங்களில் பலரோடு இணைந்து நிவாரணப்பணிகளைச் செய்தவர். கோவிட் காலத்தில் சிறுகதை எழுதத் தொடங்கி,இரண்டு அருமையான சிறுகதைத் தொகுப்புகளை கொண்டுவந்தவர்.தற்போது ‘ லவ் யூ சென்னை ‘ என்னும்  நாவலைக் கொண்டு வந்திருக்கிறார்.

காரைக்குடி சுபா ‘சென்னையின் உயிர் ஓசை ‘என்னும் தலைப்பில் அணிந்துரையும் ‘ச.தமிழ்ச்செல்வன்’ நவீன காலத்து நாவல் ‘ என்னும் தலைப்பில் வாழ்த்துரையும் இந்த நூலுக்கு வழங்கியுள்ளனர்.



கதிரவன்,சந்தியா,தமயந்தி என்னும் மூன்று கதாபாத்திரங்கள்.மூவரின் பின்புலமும் வெவ்வேறு.மிகச்சோகமான பின்புலத்தைக் கொண்ட மூவரும் ஒரு மிகப்பெரிய ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார்கள். மூன்று பேரும் ஒரே வீட்டில் வாடகைக்கு வீடு பிடித்து தங்குகிறார்கள்.‘ லவ் யூ சென்னை’  புத்தகத்தை எடுத்து 10 ,15 பக்கங்கள் தாண்டிய பின்பு புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு விறுவிறுப்பாகவும் பல்வேறு திருப்பங்களோடும் எழுதப்பட்டுள்ள கதை. உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது.

பல்வேறு மாநகரங்கள், நாடுகளைப் பற்றிய வர்ணனைகள், இந்த சைபர் கிரைம் எப்படி ஏமாற்றுகிறார்கள்?, அதற்கு எப்படி எல்லாம் வேடம் போடுகிறார்கள், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கக்கூடிய மெத்தப் படித்த  மூன்று பேரும் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை ,அவர்கள் ஏமாந்து விட்டார்கள் என்பதை வாசிக்கும் போதுதான்  நானும்  உணர்ந்தேன்.அதுவரை அதற்கான அறிகுறி எங்கும் கதையில் இல்லை. 

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு,பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் தேவகி என்னும் கதாபாத்திரம்,மிகப்பெரிய படிப்பினை.சில நேரங்களில் கேட்பவர்களுக்கு  நாம் விரும்பி கொடுப்பது என்பது வேறு.ஆனால் நம்பி,ஏமாந்து விட்டோம் என்பது தெரிகிறபோது வரும் வலி என்பது கொடுமையானது.அதனை மிக நன்றாக எழுத்தாக்கி அண்ணன் ஒளிவண்ணன் அவர்கள் கொடுத்திருக்கிறார்.சினிமாப்படம்  எடுப்பதற்கு மிக உகந்த கதை இந்தக் கதை. நல்ல முயற்சி. அருமையான நடை. மிகச் சிறப்பாக வந்துள்ளது, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 



முனைவர் வா.நேரு,

தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

ஆசிரியர் குழு,திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழ்

Tuesday, 13 May 2025

படாதபாடுபடும் முனைப்பில்...

 பக்திப்பழம் அவன்…

பக்தியைக் காப்பாற்ற

படாத பாடுபடுகிறான்…


‘எல்லாம் வல்ல’ கடவுளைக்

காப்பாற்ற மனிதன் எதற்கு

இத்தனை சண்டை போடுகிறான்..

இளம்வயது முதல் எனக்கு

இது புரியவேயில்லை..


ஆளுக்கொரு கடவுள்

ஆளுக்கொரு ஆயுதமென

இவர்களின் சண்டையே

ஆகப்பெரும் சண்டை

வரலாறு முழுவதும்…


பக்தியைக் காப்பாற்ற

படாதபாடுபடும் முனைப்பில்

ஒழுக்கத்தைக் காப்பாற்றத்

தவறுகிறான் என்பது

செவி வழிச்செய்தி…

பக்தி போனால் நட்டமில்லை..

ஒழுக்கம் போனால்…?

                              வா.நேரு,
                              13.05.2025

Wednesday, 7 May 2025

காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் நூல்கள் !-..

காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் நூல்கள் !-

முனைவர் வா.நேரு


 கையில் ஒரு புத்தகம் இருந்தால் காத்திருக்கும் நேரம் கூட மகிழ்ச்சியாக மாறி விடுகின்றது. எந்த இடத்தில் என்றாலும் வாசிக்கும் மனநிலை இருந்துவிட்டால், இருக்கும் சூழலை மறந்து வாசித்துக்கொண்டு இருக்க முடிகிறது. சில நாட்களுக்கு முன்னால் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வரும்போது இரவு இரண்டு மணி. டூவீலரில் சென்றால், தெரு நாய்களின் தொல்லை. மேலும் இந்த நேரத்தில் சென்று வீட்டில் இருப்பவர்களைத் தொந்தரவு படுத்தவேண்டாமே, ஒரு 6 மணி போல, விடியும் நேரத்தில்  வீட்டுக்குப் போனால் போதும் என்று நினைத்து எனது பைக்குள் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கொசுக்கடி அதிகமாகவே வீட்டுக்குச் சென்ற எனக்கு ஒரு செய்தியைப் படித்தபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச் செய்தி – மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள், அந்த நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த, மாநகராட்சி நிருவாகம் சார்பில் முதல் முறையாக நூலகம் அமைக்கப்பட உள்ளது என்பதுதான்!



பேருந்து நிலையத்தில் ஓர் அறை உருவாக்கி அதில் பயணிகள் அமர்ந்து படிக்க இருக்கைகள் போட்டு, நாளிதழ்கள், புத்தகங்கள், வாங்கிப் போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சி நிருவாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

“வீட்டுக்கோர் புத்தகசாலை அவசியம் வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், புத்தக சாலைக்குத் தரப்படவேண்டும்.” என்று சொன்ன அறிஞர் அண்ணா மேலும் “புத்தக சாலை அமைக்கும்போது  அர்த்தமற்ற, அவசியமற்ற எண்ணங்களை நிலைநிறுத்தக்கூடிய நூல்களைச் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் மனவளம் ஏற்படாது. உலக அறிவையும் உருப்படியான காரியத்துக்குப் பயன்படுத்தும் அறிவையும் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்” என்றார். வீடுதோறும் புத்தகசாலை அமைக்கவேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், எங்கெல்லாம் முடிகிறதோ அங்கு ஒரு நூலகம் அமைக்கவேண்டும்.

மதுரையின் மிகப்பெரிய சொத்தாக இன்றைக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம் ‘திகழ்கிறது. ஒருபக்கம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவ மாணவிகள் வளாகம் முழுவதும் மற்றும் உள் அரங்குகளில். ஓய்வுபெற்ற ஆண்கள், பெண்கள் எனப் பலரும்  குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்  அமர்ந்து படிப்பது நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. புரட்சிக்கவிஞரைப் பற்றிப் பேசவேண்டுமா? கலைஞர் நூற்றாண்டு நூலக உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி நான்கு நூல்களை எடுத்துக்கொண்டு வரமுடிகிறது. இப்படி எந்தத் தலைப்பில் பேசுவது என்றாலும் எழுதுவது என்றாலும் மிகப்பெரிய வாய்ப்பாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் அமைந்துள்ளது. கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திட்ட வேலைகளை முடிப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.

அதைப்போல மதுரையில் சிம்மக்கல் பகுதியில் மதுரை மத்திய நூலகம் உள்ளது. பல ஆயிரம் புத்தகங்கள் உள்ள நூலகம். இப்போது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நாம் தேடும் ஒரு நூல் இருக்கிறதா என்பதை அந்த நூலகத்தின் இணைய இணைப்பு வழியாக வீட்டில் இருந்தே உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அதைப்போல மற்ற நூலகங்களிலும் இருக்கிறதா  என்பதை இணையத்தின் மூலமாக அறிந்துகொள்ளும் வசதி வேண்டும்.

வாசிப்போர் கழகம் அமைத்து ஒவ்வொரு வகுப்பிலும், ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் தாங்கள் படித்த நூல்களை நூல் மதிப்புரை செய்ய அனுமதிக்கவேண்டும்.எத்தனை யூ டியூப் சேனல்கள் வந்தாலும் அதனை விட வாசிப்பு என்பது மிகச் சிறந்தது.அதனை மாணவ, மாணவர்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “மனிதர்களைப் பீடித்த மிகப்பெரிய கொடிய நோய் அறியாமைதான்” என்றார்.

அறியாமை – அறிவுப் போதாமை ஆகிய இருட்டைப் போக்கும் அறிவொளி – அறிவியல் அடிப்படையில், ஏன், எதற்கு, எப்படி, எங்கு என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அறிவை விரிவு செய்து,

நமது எதிரிகள் அறியாமையைப் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.நமது பரம்பரை எதிரிகள் ஒன்றிய அரசால் நடத்தப்படும்  தேஜஸ், வந்தே பாரத் போன்ற இரயில்களில்  நம் இனத்திற்கு எதிரான பத்திரிகைகளை நாம் கேட்கமாலேயே நமது இருக்கைகளில் வைத்துவிடுகின்றனர்.  நாம் கட்டும் பயணக் கட்டணத்தில் அதற்குரிய பணத்தை எடுத்துக்கொண்டு விடுகின்றனர்.மிகப்பெரிய விற்பனையைப் பார்ப்பனப் பத்திரிகைக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். 5 மணி நேரம் 4 மணி நேரம் என இரயிலில் பயணம் செய்யும் அனைவரும் அவர்களின் பத்திரிகையைப் படிக்கும் நிலைமையை வலிந்து ஏற்படுத்துகின்றனர். நமது விரலை வைத்தே நம் கண்ணைக் குத்திட வைக்கும் வேலையைச் செய்கின்றனர்.

இவர்களுக்கு மாற்றாக பொதுத்தன்மையில் உள்ள பத்திரிகைகள், நூல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். சிந்திக்க வைக்கும் நூல்கள் எளிதில் கிடைக்க வேண்டும். 2023இல் நூலகங்களின் எண்ணிக்கை என்று ஒன்றிய அரசு ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 4622 என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கும். 100 நூலகங்கள் மேலும் திறக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கிறார்.வரவேற்கின்றோம்!

இந்த ஏடுகளும் புத்தகங்களும் தமிழ் நாட்டின் தெருக்கள் தோறும் பெருகவேண்டும். பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்திற்காக  மக்களிடம் இறங்கி வசூல் செய்து அதனை நடத்தியதுபோல, மக்களின் பங்களிப்போடு இந்த நூலகங்கள் மேலும் வலுவாக்கப்படவேண்டும். தன்னை வரவேற்பவர்கள் சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் கொடுக்கலாம் என்ற தமிழ்நாட்டு முதல்வர் அவர்களின் அறிவுரையைக் கேட்டு அவரின் தொண்டர்கள், நலம் விரும்பிகள் எல்லாம் நல்ல நல்ல புத்தகங்களைத் திராவிட மாடல் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.அவையெல்லாம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் முதல்வருக்குக் கொடுக்கப்பட்டவை என்னும் பதிவோடு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் மற்ற அமைச்சர்களும், இதே வழிமுறையைப் பின்பற்றினால் இன்னும் அதிகமான புத்தகங்கள் நூலகங்களுக்கு கிடைக்கும். புதிது புதிதாய் அமையும் நூலகங்களுக்கு எல்லாம் சென்று சேரும்.

அரசு ஆரம்பிக்கும் புதிய நூலகங்கள் மட்டுமல்ல, தனி மனிதர்கள், நிறுவனங்கள் ஆரம்பிக்கும் நூலகங்களும்   நிறையத் தோன்றவேண்டும். வாசிப்பில் ஈர்ப்பு உள்ள பலர் தங்கள் தங்கள் பகுதிகளில், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நூலகங்கள் அமைப்பதை அரசு ஆதரிக்கவேண்டும். அவர்களுக்கு உதவிட வேண்டும். கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படித் தனியார் நூலகங்கள் அமைத்தால் அவர்கள் பெயர் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு, பாராட்டப்படல் வேண்டும்.

எத்தனை மின்னணுச் சாதனங்கள் வந்தாலும் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிப்பதென்பது சுகமானது. கண்களுக்கும் பாதுகாப்பானது. பல நூறு கோடி செலவழித்து, கோயில்களைக் கட்டி, அதற்கு விழாக்களை நமது பரம்பரை எதிரிகள் முன்னெடுக்கிறார்கள். எப்போதும் அறியாமையில்  மக்களை மூழ்க வைத்திருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள் அடித்தட்டு மக்களை ஏமாற்ற கோயில்களுக்குச் செலவழிக்கிறார்கள். அறியாமையிலிருந்து விடுபட்டு, அறிவு வயப்பட்டால்தான் நமது மக்கள் உழைக்கும் மக்கள் முன்னேற முடியும் என்பதை உணர்ந்த திராவிட மாடல் அரசு நூலகங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். கல்விதான் நம்மை விடுதலை செய்யும். கல்விதான் உழைக்கும் மக்களை உயர்த்தும்.அதற்கு வழிவகுக்கும் நூலகங்களுக்கு நாம் முழு ஆதரவை அளிப்போம். அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மே 1-15,2025

Tuesday, 6 May 2025

கனவு போலத்தான் நடந்தது நூல் பற்றி திரு.இறையன்பு சார் அவர்கள்...












இன்றைக்கு வெளி வந்த ராணி இதழில் ,தமிழ் நாட்டின் மேனாள் தலைமைச்செயலாளர் திருமிகு.வெ.இறையன்பு அவர்கள் எனது நூலான 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் நூல் பற்றியும் ,எனது பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சார் அவர்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். மிகவும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.மிகப்பெரிய விருது பெற்ற உணர்வும் , நிறைவும் எனக்கு ஏற்பட்டது. திரு வீரிசெட்டி சாரின் மகள் திருமதி மணிமொழி ஆசிரியர் அவர்கள் இன்று(06.05.2025)  பெரியகுளத்தில் இருந்து   செல்போனில் அழைத்து அழுவது  போல உருக்கமாக அவரது அப்பாவைப் பற்றிப் பேசினார்.
 நன்றி தெரிவித்தார்.பலரும் தொலைபேசியில் அழைத்துப்பாராட்டினர்.இந்த நூலை அழகாக அச்சடித்துக்கொடுத்த கீழடி வெளியீட்டகத்திற்கும்,அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,ஓர் அருமையான அணிந்துரையை அளித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா.கி.ஆழ்வார் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த  நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.