Showing posts with label வா.நேரு-வின் கவிதைகள். Show all posts
Showing posts with label வா.நேரு-வின் கவிதைகள். Show all posts

Wednesday, 29 July 2026

கழற்றி எறியும் நாள் எந்நாள்?...

 

திருவண்ணாமலை

இடுக்குப் பிள்ளையார்

கோவிலுக்குள் நுழைய

முடியாமல்  நுழைந்து

வெளியே வர இயலாமல்

சிக்கத்தவித்த ஆந்திர பக்தர்

மணிக்குமார் இறந்துபோனார்..

 

தோழர் ம.கு,வைகறையின்

முக நூல் பதிவு ஒன்றிற்கு

பல ஆயிரம் பேர்  

விருப்பக்குறி இட்டிருக்கின்றனர்..

“வாழைப்பழம் இரண்டை

வைத்திருக்கும் சிம்பன்சியிடம்

எனக்கொரு பழத்தைக் கொடுத்தால்

உனக்குச் சொர்க்கத்தில்

நூறு வாழைப்பழம் கிடைக்கும்

எனச்சொல்லி நம்பவைக்க இயலாது..

அப்படிச்சொல்லி ஏமாற்றி ஒரு

வாழைப்பழத்தை வாங்கவும் முடியாது…

ஆனால் சிம்பன்சியைவிட

பல மடங்கு அறிவுடைய

மனிதனை நம்பவைக்க இயலும் ‘

யுவா நோவா ஹராரி சொன்னது இது..

 

இடுக்குப் பிள்ளையாருக்குள்

போய் வந்தால்  நல்ல வாழ்க்கை

கிடைக்கும் என நம்பி

தங்கள் உயிரை இழக்கும்

‘மணிக்குமார்’கள் மாறும்

நாள் உலகில் எந்த நாள்?...

 

சின்பன்சியை விட உயர்ந்தவர்கள்

நாங்கள் என இந்த

சொர்க்கம் நரகம் கற்பிதங்களை…

காணிக்கை கொடுத்து

கும்பிட்டால் நல்வாழ்வு கிடைக்கும்

எனத் திணிக்கப்பட்ட கருத்துகளை…

மண்டைக்குள் இருந்து

கழற்றி எறியும் நாள் எந்நாள்?





                              வா.நேரு, 29.07.2026

Saturday, 11 July 2026

கிளியும் எலியும்….

 



கிளியும் எலியும்….







                       

அன்றொரு நாள்

ஓர் இரவில்

அவன் அலறிய அலறல்

இன்னும் கூட என்

காதுகளில் ஒலிக்கிறது

 

அவன் ஆசை ஆசையாய்

வளர்த்த கிளியை

பூனை ஒன்று கவ்விக்

கடித்துக் குதறுவதை

விழிப்பிலிருந்து எழுந்து

பார்த்து அவன் கதறிய கதறல்

இன்னும் கூட என்

காதுகளில் ஒலிக்கிறது

 

உறவு ஒன்றைப்  பறி

கொடுத்ததுபோல பெரும்

குரலெடுத்து அழுதான்

இரத்த வெள்ளத்தில் கிடந்த

கிளியைப் பார்த்து

 

அதனாலேயே இளமையில்

பூனைகள் மீது பெரும்

வெறுப்புக் கொண்டிருந்தான்

பூனைகளைப் பார்த்தாலே

கல்லெடுத்து எறிவான்

 

பல ஆண்டுகளுக்குப் பின்

சந்தித்த வேளையில் தான்

வளர்க்கும் பூனைக்குட்டியின்

அன்பையும் பாசத்தையும்

நேசத்துடன் விவரித்தபோது

வியப்பாக இருந்தது எனக்கு..

 

இடையூறு செய்யும் எலிகள்

எல்லாம் மட்டுப்பட்டிருக்கிறது

என்றான் அவன்..

 

                              வா.நேரு, 11.07.26

 

 

Friday, 10 July 2026

கொடிய நோய் எந்த நோய்?...

 

                              கொடிய நோய் எந்த நோய்?...

 

இருக்கும்  நோய்களில்

கொடிய நோய்

எந்த நோய்…?

நம் முன் இக்கேள்வி

எழுப்பப்பட்டால்

நம் ஒவ்வொருவர் மனதிலும்

ஒவ்வொரு நோயின்

பெயர் வரும்..

 

கொத்து கொத்தாய்

மனிதர்களைக் கொன்ற

நோய்கள் பிளேக்..காலரா…

கொரனா எனப்பெயர் வரும்..

அந்த நோயைத் தீர்க்க

தங்கள் உயிரைப்

பயணம் வைத்து

மருந்துகள் கண்ட

அறிஞர்கள் நினைவில் வருவர்…

 

இருக்கும்   நோய்களில்

கொடிய நோய்

மூடநம்பிக்கை எனும் நோய்..

என்றாரே தந்தை பெரியார்…

விரித்துப் பார்க்கின்

இந்நோயால் செத்தார்..

சிதைந்தார் பெயரெல்லாம்

நினைவுகளில் வரும்…

 

மூட நம்பிக்கை

தீர்க்கும் மருந்தையும்

ஊர் ஊராய்ச்

சென்று சரிபடுத்தும்

வழி சொன்ன மருத்துவரும்

அவரின்றி வேறு யார் ?

 

                       வா.நேரு, 10.07.26

 

  நன்றி : பெரியார் மருந்தியல் கல்லூரி தொகுத்த

          ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்

         ‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ நூல்..

Friday, 29 May 2026

கரப்பான் பூச்சிகளின் ‘ தீ பரவட்டும்….’

 #CJP

     கரப்பான் பூச்சிகளின் ‘ தீ பரவட்டும்….’

 

எங்கேயோ பற்றும் பொறி

எரிதழலாய் மாறி

வேண்டாதவற்றை எல்லாம்

எரித்து முடித்து அணையும்..

 

அப்படித்தான் ஒரு பொறி..

‘இந்த நாட்டு இளைஞர்கள்

எல்லாம் கரப்பான்பூச்சிகள்’

எனும் சொல் ‘கனம் கோர்ட்டார்’

அவர்களின் வாயில் இருந்து

உதிர்ந்ததால்  கிளம்பியது…

 

சமூக ஊடகம் பற்றி எரிகிறது..

கரப்பான் பூச்சி ஜனதா தளம்

எனும் பெயரில் இளம்வயதினர்

ஒன்று கூடுகிறார்கள்….

இருவேறு இந்தியாவாக இந்தியா..

இதற்கு யார் காரணம் ? எனும்

கேள்வியை இயல்பாக எழுப்புகிறார்கள்…

 

குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல்

குப்பை மேட்டில் குடியிருக்கும்

கோடான கோடி மக்களின் இந்தியா ஒன்று!

கொழுத்துப்போய் பக்தியெனும் பேரில்

பல்லாயிரம் லிட்டர் பாலை

ஆத்துக்குள் ஊத்திப் பாழாக்கும்

அவாளின் இந்தியா ஒன்று!..

 

உழைக்க நாங்கள் தயார் !ஆனால்

வேலை கொடுப்பாரில்லை..

என 30 கோடி இளைஞர்கள்

காத்திருக்கும் இந்தியா ஒன்று !

முறுக்குக் கடை வையுங்கள் இளைஞர்களே

என வாயில் வடை சுட்டு

பத்து இலட்சம் மதிப்புக்கு கோட்டு

போட்டு உல்லாசமாய் இருக்கும்

‘உயர் பதவியினர்  ‘ இந்தியா ஒன்று !

 

அமெரிக்காவில் போட்ட வழக்கை

இரத்து செய்யும் ஆற்றல் பெற்ற

அதானிகளின் இந்தியா ஒன்று!

வழக்குக்கு என அழைத்துச்சென்று

கேட்பாரற்று தாக்கப்பட்டு

பிணமாய்த் திரும்பும் அப்புராணிகளின்

இந்தியா இன்னொன்று !..

 

சமூக ஊடகங்களில் இளைஞர்கள்

எழுப்பும் கேள்விகள்..

அவர்களின் பாடல்கள்…

அவர்களின் நியாயமான

கோபக் குமுறல்கள்.…

அதற்கு விழும் ஆதரவுக் குறியீடுகள்..

தொடர்ந்து ஏறும் பின்தொடர்வோர்

எண்ணிக்கைகள் என

இந்தியா முழுவதும் பரவும் தீ..

புதிய இந்தியாவைச் சமைக்கும் தீ

எனத் தெரிகிறது..

‘தீ பரவட்டும், பரவட்டும் தீ ‘

                                        வா.நேரு,

                                        29.05.2026

 

Thursday, 21 May 2026

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி முழக்கம்..

 

கரப்பான் பூச்சி

ஜனதா பார்ட்டி(கஜேபி)

X பக்கம் முடக்கம்…

பயந்துபோன ஒன்றிய

அரசு வேர்த்து விறுவிறுத்து

முடக்கச்சொல்லி வேண்டல்..…

 

ஒன்றிய அரசு ஆட்களுக்கு

படபடப்பு  வந்திருக்குமோ?

வங்கதேசம், இலங்கை என

ஜென்சி இளைஞர்கள்

வீதிகளில் இறங்கிப் போராடி

ஊழல் அரசுகளைப் பந்தாடி

நாட்டை விட்டு ஓட்டியது

நினைவுக்கு வந்திருக்குமோ?

 

மதத்தால் மக்களை

மோதவிட்டு..

இரத்தம் குடித்து

கட்சி வளர்க்கும்…

வித்தைகள் புரிந்துவிடுமோ

எனும் புரிதல் வந்திருக்குமோ?

 

வருடத்திற்கு இரண்டு கோடி

இளைஞர்களுக்கு வேலை

தருவோம் என்றோம்…..

வங்கிக் கணக்கில்

பதினைந்து இலட்சம்

வந்து விழும் என்றோம்....

ஊழலை ஒழிப்போம் என்றோம்

நீட் ஊழல் நாடெங்கும்

நாறுகிறது..

ஊழலில் ஊறிக்கிடக்கிறது நாடு..

உல்லாச இளைஞராய்

உலகம் சுற்றி வருகிறார் ஒருவர்…

 

இளைஞர்கள் இதையெல்லாம்

கரப்பான் பூச்சி பக்கங்களில்

விலாவாரியாப் பேசுகிறார்கள்..

இந்தியாவுக்கு ஏன் இந்த நிலை

என வேகத்தோடு கேட்கிறார்கள்..

அவர்களின் கோரிக்கையெல்லாம்

பிஜேபி ஆட்சியின் அடிமடியில்

கைவைக்கும் கோரிக்கைகள்...

 

ஒன்றிணைந்து விடுவார்களோ..

தலைநகர் தில்லியில்

இலட்சக்கணக்கில் குவிந்து

விடுவார்களோ என அஞ்சி

அடக்குமுறையை ஏவுகிறது

மத்திய ஒன்றிய அரசு…

 

தன் வினைத் தன்னைச்சுடும்..

ஊடகப்பொய்களால்

அரியணையில் ஏறிய

பிஜேபி அஞ்சி நடுங்குகிறது..

நடுக்கம் தொடரட்டும்..

கஜேபி முழக்கம்

நாடு முழுக்க ஒலிக்கட்டும் !.

 

                                 வா.நேரு, 21.05.2026

.

 

Thursday, 14 May 2026

வீழட்டும் அநியாய நீட் தேர்வு…

 

திருடனைப் பிடிங்க

திருடனைப் பிடிங்க

எனத் திருடியவனும்

சேர்ந்து ஓடுவதைப்போல

நீட் தேர்வு முறைகேட்டைக்

கண்டித்து ஏபிவிபி அமைப்பு

போராடுகிறதாம்!

 

நீட் தேர்வில், மோசடி

என்பது தவறு...

 நீட் தேர்வே மோசடிதான்"

 முன்னாள் முதல்வர்

மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல

மோசடிக்காகவே மோடி அரசால்

நிலைநிறுத்தப்பட்ட நீட் தேர்வு…

 

உச்சநீதிமன்றத் தடையை மாற்றி…

வேண்டும் என்று சொன்னவரை

குழுவுக்குத் தலைவராய்ப் போட்டு…

பணிரெண்டு வருடங்களாய்

பம்மாத்துப் பண்ணும் மோடி அரசு..

 

இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து

வினாத்தாளை வாங்கியவன் பிஜேபி

அதை வாங்கிப் பலருக்கு விற்று

பணம் பார்த்தவன் பிஜேபி..

பிஜேபியின் மாணவர் அமைப்பு

இதற்கு எதிராய்ப் போராடுகிறதாம்!

உலக மகா நடிப்படா சாமி !

 

ஒட்டு மொத்த தமிழ்நாடும்

வேண்டாம் எங்களுக்கு

நீட் என்றபோதும்…

சட்டசபையில் நிறைவேற்றி

அனுப்பிய் நீட் வேண்டாம்

 தீர்மானத்தைக் காணோம்

என்று பசப்பியதும் பிஜேபி…

 

ஒட்டு மொத்த நாடும்

கொந்தளித்து எழும் நிலையில்

பொங்கும் பாலைத் தண்ணீர்

ஊற்றி அணைப்பதுபோல

தங்கள் கட்சி மாணவரணியாம்

ஏபிவிபி-காரர்களை போராட்டம்

செய்யச் சொல்லி அனுப்பி

வைத்திருக்கிறது பிஜேபி…

 

வேண்டாம் வேண்டாம்

நீட் தேர்வு வேண்டாம் எனும்

ஒற்றை கோரிக்கையோடு

இந்திய ஒன்றியம் முழுவதும்

மாணவர்கள் பொங்கி எழட்டும்..

அந்தந்த மாநில அரசே

மருத்துவ மாணவர் சேர்க்கையை

நடத்தும் எனும் பழைய

நிலைமை வரட்டும்…

அதுவுரை மனதில் தீப்பந்தம் ஏந்தி

மாணவர்களே மாணவிகளே

தெருவுக்கு வாருங்கள் !

அநீதிக்கு எதிராய்

அணிதிரண்டு வாருங்கள் !

வெல்லட்டும் உங்கள் போராட்டம் !

வீழட்டும் அநியாய நீட் தேர்வு…

 

                              வா.நேரு,

                             14.05.2026.

Monday, 20 April 2026

எம் மனங்களில் வாழ்கிறாய் நீ !...

 



 

மறைந்தாயா நீ!

இல்லை!இல்லை !

எம் மனங்களில்

வாழ்கிறாய் நீ!

 

நின்றுபோனதா நின்

தமிழ்ப் பாக்கள்?...

இல்லை ! இல்லை !

திகட்டாத தேனாய்

தினம் வாழ்வில்

காலையும் மாலையும்

வாசிக்க வாசிக்க

வந்து கொண்டேயிருக்கும்

வசந்தமாய் நின் பாக்கள் !

 

நின்று போனதா ..”

நீ ஊட்டிய

தன்மான உணர்ச்சி ?..

நின் ஒவ்வொரு

கவிதையும்

‘தீ எரிய ‘

பற்ற வைக்கும்

நெருப்புக் குச்சிகளாய்…

 

எழுத்தாளர்களை

ஊக்குவித்த உன் செயல்

நின்று போனதா?...

புதிதாய் எழுத  நினைக்கும்

எவருக்கும் உன் எழுத்துகளே

தனக்குத்தானே திருத்திக்கொள்ளும்

எழுத்துத் திருத்திகளாய் !..

 

எதையாவது பாடாமல்

விட்டுச்சென்றாயா?

உன் கவிதைகளுக்குள்

தேடிப்பார்க்கிறேன் நான்…

கர்ப்பபை சாத்தல் முதல்

முதியோர் காதல்வரை

பாடாமல் விட்டவை ஏதேனும்

இருக்கிறதா என யோசிக்கிறேன் நான்..

ஞான் அறிந்துவரை ஏதுமில்லை காண் !


பார்ப்பனிய வேர்களில்

வெந்நீர் ஊற்றும் வித்தையைக்

கற்றுத் தருகிறாய் !

ஆதிக்க இந்தியினை

விரட்டி அடிக்கும்

வேகத்தை சொல்லித்தருகிறாய் !

 

ஈரோட்டுத் தாடிக்கிழவர்

தொட்டதுபோல்

வாழ்வின் எல்லா

நிலையையும் பாடியிருக்கிறாய் !


 நீ உடலால்

மறைந்த நாள் இது!

உள்ளத்தால் எமது பாட்டனாய்..

நூல்களின் வழிக்

கற்பிக்கும் ஆசானாய் !

எமது இல்லத்து  

நூலகத்தில் கம்பீரமாய்

கால்மேல் கால்போட்டு

அமர்ந்து கற்பிக்கிறாய் நீ!

 

மறைந்தாயா  நீ !

இல்லை ! இல்லை !

எம் மனங்களில்

வாழ்கிறாய் நீ !


                                வா.நேரு,21.04.2026

(இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள்)

 

 

 

 

 

 


Sunday, 12 April 2026

கேட்பார் இல்லையா?...

 

முடை நாற்றம் வீசும்

மூட நம்பிக்கைகள்தான்

முதலீடு..

ஒன்றிய அரசின்

அமைச்சர்கள் முதல்

எளிய மனிதர்கள்வரை…

 

மூளைக்குள் போடப்பட்ட

மூட நம்பிக்கை விலங்கு…

கழட்ட முடியாத அளவிற்கு

பின்னிப் பிணைந்து கிடக்கிறது

இந்திய ஒன்றியத்தில் !

அரசியல்வாதிகளுக்கும்

சாமியார்களுக்கும்

கள்ள உறவு…

களவாணிகள் உறவு ..

 

செயற்கை நுண்ணறிவு

பாம்பு கடிக்கு விரைவான

மருத்துவம் கொடுக்கலாம்!

மருத்துவமே கொடுக்காமல்

இப்படிக் கங்கை நீரில்

மிதக்க விட்டால்…

அநியாயமாய் ஓருயிர்

போனது ஊடகத்தின்

வாயிலாகத்தான் தெரிகிறது..

 

சாமியார் சொன்னான் எனப்

பாம்பு கடித்த பையனை

கங்கை நீரில் கட்டிலில்

படுக்கவைத்து மிதக்க

விட்ட பெற்றோர்கள்!

அதை வேடிக்கை பார்த்த

அத்தனை மனிதர்கள்!

மருத்துவமனைக்கு

கொண்டுபோங்கடா முட்டாள்களே

எனச் சொல்ல ஒருவனுக்கும்

வாய் வரவில்லையா?

துணிவில்லையா சொல்வதற்கு ?…

 

மூடநம்பிக்கை எனச்சொல்லி

நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது

என உச்ச நீதிமன்றத்தில்

ஒன்றிய அரசு எதிர்

மனுதாக்கல் செய்கிறது…

என்னங்கடா நாடு இது!

கேட்பார் இல்லையா !

சொல்வார் இல்லையா !

 

                              வா.நேரு,13.04.2026



 

(அம்ரோகா: உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.

அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய பெற்றோர் அவர்களது மகனை கங்கைக்கு அழைத்துச் சென்றனர்..

மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக மிதவை போன்ற அமைப்பில் சிறுவனை கட்டிவைத்த உறவினர்கள், சுமார் 12 மணி நேரம் அவனை கங்கை தண்ணீரிலேயே மூழ்கி இருக்குமாறு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அசைவற்றுக் கிடக்கும் சிறுவனை சுற்றி ஏராளமான மக்கள் வேடிக்கை பார்ப்பதும், ஏதேனும் அதிசயம் நடக்கும் என காத்திருப்பதும் பதிவாகியுள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்தும் எந்த அற்புதமும் நிகழவில்லை. முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், நீண்ட நேரம் கடும் குளிரில் நீரில் இருந்ததாலும் பாம்பு கடித்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

நன்றி: தி இந்து தமிழ்

.