Friday 3 February 2012

அண்மையில் படித்த புத்தகம் : இளைய தலைமுறைக்கு

நூல் தலைப்பு : இளைய தலைமுறைக்கு
ஆசிரியர் : தங்கவேலு மாரிமுத்து
பதிப்பகம் : விஜயா பதிப்பகம் ,20 ,ராஜ வீதி, கோயம்புத்தூர்-641001- 0422-2394614/2382614
முதல் பதிப்பு : மார்ச் 2008
பக்கங்கள் : 104 விலை ரூ 33

இருபது தலைப்புகள் , 104 பக்கங்களில் தங்கவேல் மாரிமுத்து அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் . SPARK- என்று சொல்வார்களே , அப்படிப்பட்ட ஒரு தீப்பொறி நூல் முழுக்க ஓடுகின்றது. சரியான திசையை, வழியை இன்றைய இளைய தலைமுறைக்கு காட்ட வேண்டுமே என்னும் தீப்பொறிதான் இப்புத்தகம்.

உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளாய், அனுபவத்தால் சொல்லப்படும் அறிவுரைகளாய், தடம் புரண்ட பலரைப் பார்த்து இப்படிப் போனார்களே எனும் மனம் பதை பதைப்பால், சொல்லித் திருத்த வேண்டுமே எனும் மனித நேயத்தால் மலர்ந்த புத்தகம் இது எனலாம்.

பக்கம் 12,13-ல் எதற்காகப் படிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பட்டியல் இட்டிருப்பது அருமை. பள்ளிக்கூடங்களில் இல்லாத கடவுளுக்கு காலையில் கடவுள் வாழ்த்துப்பாடுவதை விட இப்பக்கங்களை வாசிக்கச் சொல்லலாம்.மீண்டும் , மீண்டும் மாணவ, மாணவியர் காதுகளில் எதற்காகப் படிக்கவேண்டும் என்று ஒலிக்கும்போது , அது ஆழ்மனதில் ஆழமாகச் செல்ல வழி பிறக்கலாம்.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்க கொடுத்திருக்கும் ஆலோசனைகள் (பக்கம் 17,18) நன்று. தடம் புரண்ட பலர், தறுதலைகளாய் அமைந்த நட்புகளால் என்னும் எதார்த்தத்தை எழுத்துக்களில் வடித்து கொடுத்திருக்கிறார். மனிதர்களிடம் என்ன படிக்கவேண்டும் (பக்கம் 29 ) இன்றைய தேவை.

" கிடு கிடுவென்று ஏறுகின்றவர்களைப் படி , அந்த இரகசியத்தை தெரிந்துகொள், கிடு கிடுவென்று இறங்குபவர்களைப் படி , அந்த இரகசியத்தை தெரிந்து கொள் " நல்ல கருத்து. வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெற முயற்சித்து தோற்றவர்கள் குறித்து ஆராய்ச்சி செய்து , பிரபல ஆங்கில எழுத்தாளர் நெப்போலியன் கில் அவர்கள் கூறியது ஞாபகம் வந்தது எனக்கு " Procastination " - தள்ளிப்போடுகிறவர்கள் தோற்றுப்போகிறார்கள் என்பதனை விளக்கியிருப்பார்.

இன்றைய தலைமுறை , குறிப்பாக கல்லூரிக்குப் போகும் பெண்கள் 1 இட்லியும், 2 இட்லியும் மட்டுமே சாப்பிடும் நிலையைக் கண்டிருக்கிறேன். ஆரோக்கியம் குறித்து (33) தெளிவான அறிவுரை இருக்கின்றது.

நற்பண்புகள் ஏன் தேவை என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கின்றார். இன்றைய தலைமுறையை சமாளிக்க முடியாமல் திணறும் பெற்றோர்கள் இப்புத்தகத்தை வாங்கி , பிள்ளைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்லலாம். மதுரை மாவட்ட மைய நூலக எண் :184728. நூலகத்தில் வாங்கிப் படித்தாலும் இப்புத்தகத்தை விலைக்கு வாங்கி என் பிள்ளைகளிடம் கொடுக்க நினைத்திருக்கிறேன்.

No comments: