Wednesday 12 June 2013

சொல் போதும் எனக்கு !

பல்கலைக் கழகங்கள்
பல தருகின்ற
'மதிப்புறு முனைவர்'
பட்டங்கள்
எனக்கு வேண்டாம் !
பசித்திருக்கும் ஒருவன்
என் செயலால் பசியாறி
'நன்றி அய்யா '
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு !

சாத்னையாளன்
நான் எனச்
சட்டைக் காலரைத்
தூக்கிவிட்டுத்
திரிதல் வேண்டாம் !
சக மனிதன் என்னை
'மனிதன் இவன் '
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு !

முற்றும் துறந்தவன்
எனச்சொல்லி
முனிவரைப் போல் வேடமிடல்
வேண்டாம் எனக்கு !
உடன் வேலைபார்க்கும்
சக மனுசி
ஆபத்தில்லை இவரால்
என்று அகம் மகிழ்ந்து
சொல்லும் சொல்
போதும் எனக்கு !

மாட மாளிகையும்
பவனி வரக் காரும்
பவுசும் வேண்டாம் எனக்கு !
நல்ல மகன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
என்று எனது
உறவுகள் சொல்லும் சொல்
போதும் எனக்கு !

  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 6-Jun-13, 9:46 pm
  • nantri: eluthu.com

2 comments:

முனைவர். வா.நேரு said...

இக்கவிதைக்கு எழுத்துவில் வந்த எதிர்வினைகள்

1)agan 07-Jun-2013 8:27 am
மிக அருமை தோழரே....எளிமை வ(ள)ழமை...

2)C.SHANTHI 07-Jun-2013 9:14 pm
மிக நல்ல எண்ணங்கள் அய்யா உங்களுக்கு.

3) எழுத்து சூறாவளி 08-Jun-2013 4:35 am
மிக நல்ல சிந்தனை!...

4)மங்காத்தா 10-Jun-2013 3:16 pm
எளிமை, நேர்மை, தெளிவு, வெளிப்படைத்தனம் அனைத்துமே வரிகளில்.... படைப்பாளியின் மனதின் கண்ணாடி இந்த வரிகள்...

NITHYA said...

simply superb mama..