Wednesday 9 July 2014

சாப்பிடலாம் வாங்க ......

                                                         சாப்பிடலாம் வாங்க ......
                                                                (வா. நேரு )

அதிகாலைப் பொழுது. பொழுது புலரப்போவதை அறிவிக்கும்வண்ணம் பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. வித விதமான பறவைகள், விதவிதமான ஒலிகள், வாழ்வில் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகள் போலவே. ஒலி எழுப்பும் ஒரு பறவையைப் பார்த்த மணி , அதன் குரலைப் போலவே ஒலி எழுப்ப முயன்றான்.முடியவில்லை, போலச்செய்தல்-எப்போதும் முடிவதில்லை மணிக்கு. தனது குரலுக்கும், பறவையின் குரலுக்குமான வேறுபாடு மணிக்கு வெட்கத்தை அளித்தது. பக்கத்துவீட்டுக்காரர்கள் யாரும் தான் ஒலி எழுப்புவதைப் பார்த்தார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. அந்தப் பறவைகளின் ஒலியும் , அதிகாலைப் பொழுதின் இளங்காற்றும் ஓர் உற்சாகத்தை மணிக்கு அளித்தன. மெல்ல சீட்டி அடித்துக்கொண்டே, சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் மணி.

மதுரை கற்பக நகர் வீட்டிலிருந்து ,நெல்பேட்டை வரை சைக்கிளில் செல்லவேண்டும். மெல்ல வீட்டிலிருந்து அழகர்கோயில் மெயின்ரோட்டை வந்தடைந்து , தெற்கு நோக்கிச் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அந்த அதிகாலைப் பொழுதிலேயே அழகர்கோயிலுக்குச்செல்லும் பேருந்துகள் பெரியாரிலிந்து போய்க்கொண்டிருந்தன. அழகர் கோயில் செல்லும் ரோடு, ரோட்டில் செல்லும் வித விதமான மனிதர்கள், அவர்களின் அதிகாலைப் பரபரப்பு எனப்பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்தான் மணி. புதூர் பேருந்து நிலையம், புதூர் மார்க்கெட், தமிழ்நாடு ஹோட்ட்ல், தல்லாகுளம், கோரிப்பாளையம் எனக் கடந்து நெல்பேட்டை அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தான் மணி. உள்ளே நுழைந்து சைக்கிளை நிறுத்துவிட்டு நேரத்தைப் பார்த்தான் . மணி 6.30 . டூட்டிக்கு இன்னும் 10 நிமிடம் இருக்கிறது . விட்டல் ராவ் ஒரு கதையில் தனக்கு 16.40 டூட்டி எனச்சொல்லியிருந்தார். சொல்லிவிட்டு, இது யாருக்கு புரிகிறதோ , இல்லையோ தொலைபேசி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு, அவர்களது உறவுகளுக்கு எளிதாகப் புரியும் எனச்சொல்லியிருந்தார். அப்படித்தான் இந்த 6.40 டூட்டி என்பது உங்களுக்கும்.காலையில் 6.40 க்கு வேலைக்கு வரவேண்டும் . 1.30 மணிக்கு வேலை முடிந்து விடும் . அப்புறம் மறு நாள் காலையில் 6.30க்கு வந்தால் போதும். எப்போதும் மணிக்கு இந்த அதிகாலை டூட்டி பிடிக்கும். மற்றவர்கள் அரை நாள் விடுமுறை எடுத்து செய்வதை மணி மதிய வேளைகளில் எளிதாகச்செய்து விடுவான்.

சைக்கிளை நிறுத்திவிட்டு மேலே பார்த்தான் .ஏட்டு. அவர் இய்ற்பெயர் வேறு என்றாலும் , அலுவலகத்தைப் பொறுத்தளவில் அவர் எல்லோருக்கும் ஏட்டுத்தான் . எல்லோரும் அவரை ஏட்டு என்று அழைக்க, அவரும் பார்க்கும் அனைவரையும் ஏட்டு என்றுதான் அழைப்பார். வணக்கம் ஏட்டு என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்க்கொண்டிருந்தார். மணியை விட 30 வருடம் மூத்தவர். இவனும் பதிலுக்கு வணக்கம் ஏட்டு சார் என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான். வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, கையில் வைத்திருக்கும் கர்சீப் கூட வெள்ளைதான் . உடை வெள்ளையை விரும்பவதாலோ என்னமோ, உள்ளமும் வெள்ளை. அவ்வளவு வெகுளியாக இருப்பார். அவர்தான் சூபர்வைசர் இன்றைக்கு, படிகளில் தாவித்தாவி , இரண்டு இரண்டு படியாய்ப், போனான். இவனுக்கு முன்னால் மேலே ஏறிக்கொண்டிருந்த முனியாண்டி," ஏய் மணி, பார்த்துப்போப்பா, இள ரத்தம் தாவித்தாவி போகத்தூண்டுது, அடியேய், நாங்களும் இப்படி 30 வருடத்துக்கு முன்னாடி போனவங்கதான், இப்போ ஒவ்வொரு படியா நின்னு நின்னு போய்க்கொண்டிருக்கோம், பார்த்துப்போ " என்றார். சரி, சரி என்று தலையாட்டிக்கொண்டே நடக்காமல் தாவித்தாவி மேல் மாடியை அடைந்தான் மணி.

வருகைப் பதிவேட்டில் கையெழுத்தைப் போட்டுவிட்டு , தனது போர்டில் அமர்ந்தான் மணி. பக்கத்துப்போர்டில் அந்தோனி சார் இருந்தார். அவர்தான் மணி இந்த அலுவலத்திற்கு வந்தவுடன் வேலைகள் எல்லாம் சொல்லிக் கொடுத்தவர். ஏதோ எர்த் ஏ, எர்த் பி, டி பாரின் என்றெல்லாம் சொல்லப்படும் வார்த்தைகளை கண்டு மிரண்ட மணியை , அழைத்து ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார். ஏங்க, மணி தொலைபேசிக் கம்பி எப்படிப்போகும் என்பார், சார் ரெண்டு வயர் போகும் சார் என்றான் மணி, இரண்டு வயரும் ஒன்றை ஒன்றைத் தொட்டுக்கொண்டால் டி பாரின் என்பார் , இப்படி தொலைபேசி சம்பந்தப்பட்ட பல விசயங்களை சொல்லிக் கொடுப்பவர் அவர். நேரம் 6.40 ஆனதும் அனைத்துப் போர்டுகளிலும் ஊழியர்கள் உட்கார்ந்திருந்தனர்.

ரொட்டின் டெஸ்ட் எல்லாம் 20, 25 நிமிடங்களில் முடிந்தது.நேரத்தைப் பார்த்தான் . 7.30 ஆகி இருந்தது . இனி லைன்மேன்கள் வந்த பின்புதான் வேலை. 8 மணிக்குத்தான் ஒவ்வொருவராக அழைப்பார்கள். இரண்டாவது போர்டில் பாலன் உட்கார்ந்திருந்தார். சூபர்வைசர் ஏட்டு முதல் ரிலீப் போற ஆள் போங்க , போய் சாப்பிட்டு வாங்க என்றார். பாலன் , அகமது, கனி, தீரன், என்று 4, 5 ப்ர் கேண்டினில் காலைச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ஓய்வறைக்கு வந்தனர். ." பாலா, ஏதாவது பாட்டு பாடுங்க" என்றார் கனி. . "அப்படியா", என்று யாராவது சொல்லட்டும் என்று காத்திருந்தவர் போல பாலா ' கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் " என்று பாட ஆரம்பித்தார். பாலாவுக்கு அப்படி ஒரு குரல் . டி.எம்.எஸ். போல, எஸ்.பி. போல பாடக்கூடியவர்.இசையில் அவ்வளவு ஆர்வம், அவ்வளவு ஈடுபாடு. அவர் பாட ஆரம்பிக்க அவருக்கு அகமது மெல்ல தாளம் போட ஆரம்பித்தார். இரண்டு மூன்று பாடல்கள் பாடிய பாலன் அடுத்து 'இறைவனிடம் கையேந்துங்கள், அவர் இல்லையென்று சொல்லுவதில்லை " எனும் பாடலைப் பாடி முடித்தார்.பாட்டைக் கேட்டுத்தாளம் போட்டுக் கொண்டிருந்த மணி, "ஏன் இப்படி ஆல் இண்டியா ரேடியா மாதிரி ஒவ்வொரு மதப்பாட்டாப் பாடிக்கிட்டு இருக்கேங்க அண்ணே, நெஞ்சமுண்டு, நேர்மையுண்டுன்னு தத்துவப்பாட்டைப்பாடுங்க, இல்லையென்றால் டூயட் பாட்டைப் பாடுங்க, எல்லா மதத்துக்காரர்கள், நாத்திகர்கள் எல்லோரும் கேட்கலாம் "என்றான். உடனே கனி அதனை மறுத்து பக்திப்பாட்டையே பாடுங்க என்றார். . "என்ன இருந்தாலும், இன்னும் கல்யாணம் முடிக்காத பையன், டூயட் பாட்டு கேட்கிறார், பாடுகிறேன்" என்று சொல்லி விட்டு டூயட் பாட்டு இரண்டைப் பாலன் பாடினார். சிரிப்பொலி, மகிழ்ச்சி , பாடல் என நேரம் கழிந்திருந்தது. . கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சுந்தரம் மட்டும் இந்த சிரிப்பொலி, பாட்டு , மகிழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் தனியாக் உட்கார்ந்து ரொம்ப நேரமாக சாப்பிட்டுக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்.

காலையில் எழுந்து வந்த உற்சாகமும் பின்பு இசை கேட்ட உற்சாகமும் காலை 8 மணி முதல் பிடித்துக்கொண்டது. வரிசையாக வந்த போன் பழுதான அழைப்புகள், அந்த அழைப்புக்களை லையனில் செல்லும் லைன்மேன்களுக்கு ஆர்டர் கொடுத்து சரி செய்வதென தொடர்ச்சியான வேலை. காலை சாப்பாடு சாப்பிட்டுவந்து இப்போதுதான் அமர்ந்ததுபோல் இருக்கிறது. நேரம் ஓடிவிட்டது. மாமுண்டி ஒரு லைன்மேனோடு தொலைபேசியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். "நீ சொல்வதற்காக எல்லாம் பால்ட்டை குளோஸ் பண்ண முடியாது, போன் வாடிக்கையாளரைப் பேசச்சொல்" என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். நன்றாக வேலை பார்க்கும் 10 பேரையும் சமாளித்து வேலை வாங்கி, நாமும் வேலை செய்து விடலாம், ஆனால் ஒரு ஆள் எக்குத்தப்பாக மாட்டினால் தொலைந்தோம். அவரோடு சத்தம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். வந்த புதிதில் மணிக்கு ஒன்றும் புரியவில்லை. வந்த மூன்றாம் நாள் , மேலதிகாரி அழைத்து விட, அவரது அறைக்குள் சென்று வணக்கம் தெரிவித்தான். "வாங்க சார், இந்தப் பழுதை நீங்கள்தான் குளோஸ் செய்தீர்களா" என்றார் . "ஆமாம்" என்றான். "வாடிக்கையாளர் போன் பழுது சரியாகாமல், சரியானதாக குளோஸ் செய்து விட்டார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறார்" என்றார். இவன் அப்பாவியாக " சார், லைன்மேன் சரியாகிவிட்டது என்று போனில் சொன்னார், நான் கம்யூட்டரில் குளோஸ் செய்தேன் " என்றான். சிரித்த அவர், "இது முதன் முறை என்பதால் உங்களுக்கு மெமோ இல்லை, லைன்மேன் சொல்வதால் பழுதை நீங்கள் குளோஸ் பண்ணக்கூடாது, டெஸ்ட் செய்து பார்த்து சரியா என்று பார்க்கவேண்டும். வாடிக்கையாளரை அழைத்து போன் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் . அவர் திருப்தி என்று சொன்னால்தான் குளோஸ் செய்ய வேண்டும்.சீனியர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் " என்றார். இது என்னடா வம்பா போகிவிட்டது என்று வெளியில் வந்தான், இந்த 6 மாதத்தில் பழகிவிட்டது ..

சீனியர்கள் பலர் வெகு திறமைசாலிகளாக இருந்தார்கள். டேவிட் சார் டையல் டெஸ்ட் எடுத்தால், 30 கி.மீ தூரம் செல்லும் எல்.டி. வயரில் எந்த இடத்தில் பால்ட் என்று கண்டுபிடித்து விடுவார். அவரிடம் டிமிக்கி கொடுக்கும் லைன்மேன் வேலையெல்லாம் செல்லுபடியாது .ஆனால் பால்ட் பார்ப்பவர்கள் ஒவ்வொரு பாயிண்டாக டெஸ்ட் கொடுக்க, கொடுக்க இந்தப் பக்கம் பால்ட் இல்லை, அந்தப் பக்கம் இன்னும் போங்கள், போங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஜோசப் தன்னுடைய ஆங்கிலம் கலந்த தமிழ் பேச்சில் அவ்வளவு தோழமையாய், ஆனால் அதே நேரத்தில் வெகு நேர்த்தியாய் வேலை செய்து கொண்டிருப்பார். .வியப்பாக இருக்கும். பெரிய அளவு படிப்பெல்லாம் இல்லை. பெரும்பாலும் 11-ஆம் வகுப்பு படித்தவர்கள், பழைய எஸ்.எஸ்.எல்.சி. ஆனால் அவர்களின் வேலைத்திறனும், கமிட்மெண்டும், ஆங்கிலத்தில் எழுதுவதும் இன்றைய எம்.ஏ.க்களிடம் கூட கிடைப்பது அரிது.

மணி நேரத்தைப் பார்த்தான். மணி ஒன்று . இன்னும் அரைமணி நேரத்தில் வேலை முடிந்துவிடும். கொஞ்ச நாள் அம்மா கூட இருந்து சாப்பாடு ஆக்கிப் போட்டார்கள். இப்போது கிராமத்திற்குப் போய்விட்டார்கள். இவனாக சில நாள் சமைத்துப் பார்த்தான் . சரியாக வரவில்லை. சாப்பாடு ஆக்குவது கூட பெரிதாகத் தெரியவில்லை.சமைத்த பிறகு பாத்திரங்களைக் கழுவுவது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஏற்கனவே கொஞ்சம் சமைத்துப் பழகியிருந்தான். மணியின் தாய்மாமா மிக நன்றாக சமைப்பார். ஒரு தடவை நக்கலப்பட்டியில் வாத்தியார் வேலைபார்த்த மாமாவைப் பார்க்கப் போயிருந்தான் . சாம்பாரும் ரசமும் மண மணக்க சமைத்துப் போட்டார். சாப்பிடும் போது சிரித்துக்கொண்டே சொன்னார், வெளியூரில் போய் வேலை பார்க்க வேண்டியிருக்கும், சில நேரம் திருமணம் முடித்தபிறகுகூட ஏதோ சண்டையில் திடீரென்று பெண்டாட்டிகாரி 2, 3 நாள் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விட்டால், சாப்பாடு நமக்கு திண்டாட்டமாகிவிடும். ஆம்பளையும் நல்லா சமைக்க கத்துக்கறனும் என்றார். மணியும் கொஞ்சம் பழ்கி வைத்திருந்தான். கஞ்சி வைப்பது, வெறும் சோற்றை வடித்து தயிர் வாங்கி வந்து ஊத்துவது, ரசம் வைப்பது தாண்டி சமையல் போக மறுக்கிறது. அதுவும் மதுரைக்கு வந்த பின்பு அலுவலகத்தை சுற்றிச்சுற்றி இருக்கும் ஹோட்டல் எல்லாம் அப்பப்போ சுண்டி இழுத்தது. அதனால் பெரும்பாலும் மதியச்சாப்பாடு என்பது உணவு விடுதிகளில் சாப்பிடுவதாகவே போய்க்கொண்டிருந்தது.

இன்றைக்கு எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தான். பக்கத்து தெருவில் இருக்கும் ஹோட்டலில்தான் இன்று சாப்பாடு. மதுரையில் மிகப்பிரபலமான அசைவ ஹோட்டல். ஏற்கனவே அசைவ உணவு பிடிக்கும் அவனுக்கு, அந்த உணவு விடுதியின் சாப்பாடும் ,ருசியும் மிகவும் பிடித்துப்போய்விட்டது. ஆனால் பெரும்பாலும் சாப்பிடப் போகும் போது தனியாகப் போவதில்லை, கூட எவரையாவது அழைத்துப்போய் அவர்களுக்கும் பிரியாணி வாங்கித்தந்து தானும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் மணி.

காலையில் அருமையாகப் பாடிய பாலன் சாரை அழைத்துப்போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். மணி 1.30 ஆனதும் , 1.30 டூட்டிக்காரர்கள் வேலைக்கு வந்து கையெழுத்துப் போட ஆரம்பித்தவுடன், ஆப் டூட்டியில் கையெழுத்துப்போட்டு விட்டு, பாலன் சார் கையெழுத்துப்போடும் வரை காத்திருந்தான். வெளியில் பாலன் சார் வந்தவுடன் , "சார் வாங்க இன்றைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம்" என்றான்.ஏற்கனவே இரண்டு நாளுக்கு முன்னால் சார், நாம் இரண்டு பேரும் போய் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தான். பார்ப்போம், பார்ப்போம் என்று அன்றைக்கு சொல்லியிருந்தார். எனவே அழுத்தமாக சார் இன்றைக்கு நாம் ஹோட்டலுக்கு போறோம் என்றான். "இல்லை மணி, நீங்கள் போய் சாப்பிடுங்கள், நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுக் கொள்கின்றேன் " என்ற பாலனிடம் , பணம் யார் கொடுப்பது என்று யோசிக்கின்றாரோ என்று நினைத்த மணி " சார், நான் பணம் நிறைய வைத்திருக்கின்றேன், நான் பணம் கொடுத்து விடுகின்றேன் , வாருங்கள் அசைவ உணவு அந்த ஹோட்டலில் மிக நன்றாக இருக்கும் ,வாருங்கள் " என்றான்.

"இங்கே வாங்க மணி" என்று தனியாக அழைத்துச்சென்ற பாலன் , " மணி, நான் விரும்பி சாப்பிட வேண்டும் என்று அழைக்கின்றீர்கள், அந்த ஹோட்டலில் சுவையாக இருக்கும் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இன்றைக்கு நீங்கள் பண்ம் கொடுப்பீர்கள், இன்னும் 4, 5 நாள் கழித்து அங்கு போய் சாப்பிட வேண்டும் என்று நான் நினைத்தால், யார் பணம் கொடுப்பார்கள் ? " என்றார்.
என்ன சொல்ல வருகிறார் என்று தன்னை குழப்பமாகப் பார்க்கும் மணியிடம் தொடர்ந்தார் பாலன் " என் குடும்பத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் மட்டும்தான் வேலை பார்க்கின்றேன். எனது மனைவி, என் தந்தை, என் அம்மா வீட்டில் இருக்கின்றார்கள், மூன்று பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கி, உப்பு எவ்வளவுக்கு, புளி எவ்வளவுக்கு, பிள்ளைகள் படிப்பு எவ்வளவுக்கு, மருத்துவச்செலவுக்கு எவ்வளவு என்று பட்டியல் போட்டுத்தான் செலவு செய்கிறேன் " என்றார். மேலும் ' உங்களைப் போல நான் தனிக்கட்டை இல்லை, குடும்பம் இருக்கிறது " என்றார். " சார், எனக்கும் அம்மா, இருக்கின்றார்கள், கூடப்பிறந்தவர்களெல்லாம் இருக்கின்றார்கள். நானும் சம்பளம் வாங்கி பணத்தை அம்மாவிடம் பாதி கொடுக்கின்றேன் " என்றான் மணி.

                                                    கூட வாங்க சாப்பிட என்றால் மனுசன் என்னென்னமோ பேசுகிறாரே என்று நினைத்துக்கொண்டு இருந்த மணியிடம் " மதுரையில் ஒரு இலட்சம் ரூபாயை ஒரு நாளில் செலவழித்து விடலாம் , அதற்கான இடங்கள் இருக்கின்றன. சூது ஆடும் இடமும், குடிக்கும் இடமும் இன்னும் பல பல இடங்களும் இருக்கின்றன். மதுரை போன்ற இடங்களில் கெட்டுப்போவதற்கான சூழல்கள்தான் நிறைய நம்மைச்சுற்றி இருக்கின்றன. இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டியிருக்கிறது. என் குடும்ப சூழலில் பிரியாணியும் கூட எனக்கு ஆடம்பரம்தான். ஒரு நாள் ஓசியில் சாப்பிட்டால் , நாலு நாள் கழித்து எனக்கு சாப்பிட வேண்டும் போல் தோன்றும். இப்படி மாதத்திற்கு நாலு, ஐந்து நாள் போனால் நானும் கடன் வாங்க வேண்டும். பின் சுந்தரம் சார் போல ஒளிந்து ஒளிந்து வாழ வேண்டும் " என்றார்" ஏன் சார், ஒரு நாள் வந்து சாப்பிடுவதாலா நீங்கள் கடன் காரராகப் போய்விடுகிறீர்கள் ? " என்றான்
.
                      " இல்லை தம்பி, சில வரைமுறைகள் தேவைப்படுகின்றன, இப்போதுதான் உங்களுக்கு இருபது வயது ஆகிறது. உலகம் உங்களுக்குத் தெரியாது. சுந்தரம் சார் இருபது வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் தெரியுமா ? "எங்களையெல்லாம் விட மகிழ்ச்சியாக இருந்தார், மிக நல்ல மனிதர், யாருக்கும் ஒன்று என்றால் ஓடிப் போய் செல்வு செய்வார், பணத்தைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். வீடு கட்டுகிறேன் என்று கடன் வாங்க ஆரம்பித்தார். பின்பு அதனைக் கட்ட முடியாமல், வட்டி கட்டுவதற்கு வட்டிக்கு வாங்கி , வட்டி கட்டி கட்டியே , இப்படி ஆகிப்போனார். இப்போது யாரிடமும் பேசுவதில்லை, தனித் தீவாக வந்து கொண்டிருக்கின்றார். சில நேரம் கடன் வாங்கியவன் வந்து விட்டால், ஒரு மணி நேரம் , 2 மணி நேரம் ஆபிசை விட்டு வெளியில் போகாமல் உள்ளேயே பதுங்கிக் கொண்டிருப்பார் . பாவம். சில வரைமுறைகள் இல்லாததால் இவ்வளவு துன்பப்படுகின்றார். அப்படி நான் ஆக விரும்பவில்லை " என்றார்.

" மனிதன் பணத்தைக் கண்டுபிடித்தான் . ஆனால் அந்தப் பணத்தால் அவனுக்கு ஏற்படும் அவமானங்கள் உனக்குத் தெரியாது தம்பி . பணம் எவ்வளவு பெரிய ஆளையும் கண நேரத்தில் அசிங்கப்படுத்திவிடும், அவமானப்படுத்தி விடும். எனக்குத்தெரிந்த ஒரு மனிதர் பொது நோக்காளர். மிக நல்ல மனிதர் .அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் மூன்று நாட்கள் அவரைத் தனி அறையில் வைத்து வைத்து அடித்தார்கள் தெரியுமா? ஒரு பத்திரத்தை அவரது உறவினர்கள் எடுத்துவந்து , சொத்தை எழுதிக் கொடுத்த பின்புதான் அவரை வெளியில் விட்டார்கள். காவல்துறையையும் மீறி சில விசயங்கள் இருக்கின்றன. நீங்கள் எல்லாம் புதியவர்கள். கை நிறையச்சம்பாதிக்கிறோம் என்று நினைத்து கண்டபடி செலவழிக்காதீர்கள். சின்னச்சின்ன செலவுகள்தான் பிறகு பெரிதாகி நம்மை கடனாளி ஆக்கி விடும். கொஞ்சம் மிச்சம் பிடித்து ப்ழகுங்கள். வாழ்க்கையில் கடனே இல்லாமல் வாழ்ந்து விட்டால் நீங்கள்தான் இராஜா, இல்லையென்றால் சிக்கல்தான் " என்றவரிடம் மணி " சார் ,நீங்கள் என்னோடு சாப்பிட வ்ரவேண்டாம் , வீட்டிற்குச்சென்று சாப்பிடுங்கள், நானும் கூட ஏதாவது சின்னக் கடையில் இன்று சாப்பிட்டு விட்டு , நாளை முதல் சமைக்க முயற்சி செய்யப்போகிறேன் " என்று சொல்லிவிட்டு நடந்து கொண்டிருந்தான் மணி

நன்றி : எழுத்து.காம்


3 comments:

முனைவர். வா.நேரு said...

தோழி துர்க்கா :
அருமையான உள்ளடக்கம்...நல்ல முடிவு ஐயா....சிக்கனம்தான் வாழ்வை உயர்த்தும். வரவுக்கேற்ற செலவு இருந்தால் கடன்படவேண்டிய நிலை வராது. `விரலுக்கேற்ற வீக்கம்`தான் வேண்டும்...மீறினால் வாழ்க்கை நாசம்தான். சிறுகதை அருமை.

புனித வேளாங்கன்னி :
மிகவும் நல்ல கதை அய்யா!

நன்றி : எழுத்து. காம்

கருப்பையா.சு said...

அனேகமாக பாலன் கடைசி வரை வறுமைக்கோட்டிலே இருந்து செத்திருப்பார் என்று கருதுகிறேன். அவர் சொன்னதற்காக மணி சாதாரணக் கடையில் சாப்பிடுவது என்பது செயற்கையாக உள்ளது. என்ன மனிதர் இவர்! என்று நினைத்துக் கொண்டு பிரியாணிக் கடைக்குள் நுழைந்தான் மணி என்று இந்தக் கதை முடிந்திருக்க வேண்டும்.

முனைவர். வா.நேரு said...

"என்ன மனிதர் இவர்! என்று நினைத்துக் கொண்டு பிரியாணிக் கடைக்குள் நுழைந்தான் மணி என்று இந்தக் கதை முடிந்திருக்க வேண்டும்." நன்றி , தங்களின் கருத்திற்கு. இது ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை என்று எடுத்துக்கொண்டால், அன்றைய சம்பளத்திற்கு பாலன் சார் சொன்னது சரி என்று ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.