தரவுகளே இன்றைய சொத்து
(முனைவர் வா.நேரு)
25 ஆண்டுகளுக்கு முன்னால் ,மதுரைக்கு வந்த புதிதில், நான் மதுரைக்கு புதியவன்.நிறைய அறிமுகமில்லை. ஒரு வாடகை புத்தக நிலையத்தில் இணைந்து புத்தகங்கள் எடுத்துவந்தேன்.ஒரு 25 புத்தகங்கள் எடுத்த நிலையில், ஒரு நாள் அந்தப் புத்தக கடைக்குச்சென்றேன். புதிதாக உட்கார்ந்திருந்த ஒருவர் என்னோடு கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்றார் "நீங்கள் யார்?" என்றேன்." நான் இந்தக் கடையின் உரிமையாளர்..எப்போதும் இருக்கும் பணியாள் இன்று வரவில்லை." என்றவர் "நீங்கள் எடுத்தப் படித்த 25 புத்தகங்கள் பட்டியலைப் பார்த்தேன். அதனால் உங்களோடு பேசவேண்டும் என்று நினைத்தேன்" என்றார். பேசினோம்.நண்பர்கள் ஆனோம்.
நான் எடுத்துப்படித்த 25 புத்தகங்கள் பட்டியலைப் பார்த்து ஒருவருக்கு என்னைப்பற்றி ஒரு முடிவு செய்ய முடிந்திருக்கிறது..இவரோடு நட்பு பாராட்டலாம் என்று நினைக்கத் தோன்றியிருக்கிறது. இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய முக நூல் என்னும் சமூக ஊடகத்தை நினைத்துப்பாருங்கள். அனைத்தையும் நாம் அதில் பதிவிடுகிறோம். நாம் என்ன படிக்கிறோம்,பார்க்கிறோம்,கேட்கிறோம், யாரோடு நாம் நட்பாக இருக்கிறோம். யாருடைய கருத்திற்கு எதிராக இருக்கிறோம். நமக்கு பிடித்த உணவு என்ன,நமக்குப் பிடிக்காத உணவு என்ன, எந்த விசயங்களில் நாம் பலவீனமாக இருக்கிறோம் அல்லது சில விசயங்களை கண்டு கொள்ளாமல் செல்கிறோம் என்று அனைத்தும் ,புத்தகக் கடைக்காரர் நோட்டில் பதிந்து வைத்துள்ள பட்டியல்போல முக நூல் பதிந்து வைத்துக்கொண்டுள்ளது.முக நூல் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் நம்மைப் பற்றிய அத்தனை செய்திகளையும் சேகரித்து வைத்துக்கொண்டே இருக்கிறது.
முக நூலை நாம் பயன்படுத்துகிறோம். அதற்கு கட்டணமில்லை,இலவசமாகப் பயன்படுத்துகிறோம். பின்பு எதற்கு நம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் சேர்த்து வைக்கிறார்கள். நமக்கு இலவசமாக அவர்கள் கொடுக்கிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு கட்டணம். நாம் கட்டணமா? என்றால் ஆம்,நாம்தான் அவர்களுக்கு கட்டணம். நாம் என்ன படிக்கிறோம், என்ன பார்க்கிறோம், என்ன விரும்புகிறோம், என்ன சாப்பிடுகிறோம்,எங்கு இருந்து எங்கு போகிறோம்? என நம்மைப் பற்றி நாம் கொடுக்கும் நமது தரவுகள்தான் அவர்களுக்கு கட்டணம். அதனை அவர்கள் வியாபார நிறுவனங்களுக்கு விற்கின்றார்கள்.அந்த நிறுவனங்கள் நமக்கு இணையதளம் மூலமாக விளம்பரத்தைக் கொடுக்கிறார்கள். அதன் மூலம் முக நூல் நிறுவனமும், வியாபார நிறுவனங்களும் பயன் பெறுகின்றன..
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 2016-அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவர் உறுதியாக தோல்வியடைவார் என்றுதான் உலகம் எதிர்பார்த்தது.ஆனால் அவர் வெற்றி பெற்றார்.எப்படி? 2016 அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஸ் அனலிடிகா என்னும் நிறுவனம் முக நூல் பயனாளிகள் 5 கோடி பேரின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.அமெரிக்க நாட்டின் குடிமக்கள் பயன்படுத்திய முக நூல் பயன்பாட்டை வைத்து அந்த நாட்டின் தேர்தல் முடிவையே மாற்றுவதற்கு முக நூல் விவரங்கள் பயன்பட்டிருக்கிறது.இப்போது புரிந்திருக்கும் முக நூலின் வலிமை...
2018-ல் மித்ரன் என்னும் இயக்குநர் இயக்கிய 'இரும்புத்திரை' என்னும் திரைப்படம் வெளிவந்தது.அதில் மனிதர்களின் அந்தரங்க தகவல்களை சேகரிப்பதன் மூலம் எப்படி எல்லாம் குற்றங்களைச்செய்ய முடியும் என்பதனை விரிவாக விளக்கியிருப்பார். சாதாரண மக்கள் கைகளில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன்களால் எப்படிப்பட்ட ஆபத்துகள் எல்லாம் வரலாம் என்பதனை அந்தப் படம் விவரிக்கும். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இன்று தேவை மனிதர்களைப் பற்றிய விவரங்களே(தரவுகளே) என்று அந்தப் படத்தில் வில்லன் வசனம் பேசுவார்.ஆம் தரவுகளே இன்றைய சொத்து.
வாட்சப் முக நூல் போன்று அல்ல. அதனை ஆரம்பிக்கும்போதே ,இருவருக்கு இடையிலான உரையாடல்களை நாங்கள் கண்காணிக்க மாட்டோம்,சேகரிக்க மாட்டோம்,சேமிக்க மாட்டோம். அதனை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்று தான் ஆரம்பித்தார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தார்கள்.வாட்சப் செயலி நன்றாக அனைவருக்கும் அறிமுகமாகி, புகழ் அடைந்தவுடன், அதனை முக நூல் நிறுவனம் விலைக்கு வாங்கியது.ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய்க்கு அல்ல ,1900 கோடிக்கு வாட்சப் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முக நூல் நிறுவனம்.
இப்போது வாட்சப், தன்னைப் பயன்படுத்துவோரின் தரவுகளை எல்லாம் முக நூலுக்கு கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.முக நூலுக்கு மட்டுமல்ல மற்ற மூன்றாம் நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். " நீ உன்னைப் பற்றி என்னென்ன சொல்கிறாயோ, அதையெல்லாம் அடுத்தவர்கள்கிட்ட நான் சொல்லிக்கிட்டே இருப்பேன். உனக்கு விருப்பமுன்னா சொல்லிக்கிட்டே இரு, இல்லையின்னா போ" என்று ஒருவன் அடுத்தவனிடம் சொல்வதை நினைத்துப்பாருங்கள். அப்படித்தான் இப்போது வாட்சப் சொல்கிறது. உன்னைப் பத்திய எல்லா விவரத்தையும் அடுத்தவங்க கிட்ட நான் கொடுப்பேன்..விருப்பமுன்னா வாட்சப்ல இரு, இல்லையென்னா போ...
என்னதான் நடக்கிறது?...வாட்சப் இல்லாமல் இருக்கும்போது நிறைய குறுஞ்செய்திகள்(SMS) பயன்படுத்தினோம்.வாட்சப் வந்தபிறகு குறுஞ்செய்திகள் அனுப்புவது நின்றது. குறுஞ்செய்திகள் பயன்படுத்தியதுபோலவே மின்னஞ்சலும் நிறையப் பயன்படுத்தினோம் வாட்சப்,முக நூல் வருவதற்கு முன்னால்.இப்போது அதுவும் குறைந்து போனது.நம்மை வாட்சப்பிற்கும் முக நூலுக்கும் நன்றாகப் பழக்கப்படுத்தி விட்டார்கள்.காலையில் எழுந்தவுடன் வாட்சப் செயலியைப் பயன்படுத்துவதுதான் முதல் வேலையாக இருக்கிறது. கழிப்பறைக்கு செல்வது கூட அடுத்துத்தான்..அவ்வளவு தூரம் அந்தச்செயலிகளுக்கு நாம் பழக்கமாகிவிட்டோம்..இப்போது 'இருந்தா இரு,இல்லைன்னா போ " என்று சொல்கிறார்கள்...என்ன செய்வது என்று பல பேருக்கு குழப்பம்.பலர்,வாட்சப் நமக்கு வேண்டாம்,நாம் சிக்னல், டெல்கிராம் என்னும் செயலிகளுக்கு மாறிவிடுவோமா? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சிக்னல் செயலியும் வாட்சப் போலத்தான்.வாட்சப் ஆரம்பிக்கும்போது சொன்னதுபோல சிக்னல் இப்போது சொல்கிறார்கள்.நாளைக்கு அவர்களும் வாட்சப் போல மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன அடிப்படை? அப்போ எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவோமா? செல்பேசியைத் தூக்கி எறிந்து விடுவோமா? வேண்டாம் என்று மறுத்து விடுவோமா?இல்லை,அப்படி எல்லாம் முடிவு செய்ய இயலாது....
" ஒவ்வொன்றுக்கும் 'ஏன்' என்ற கேள்வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது.மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகின்றது. இதற்காகத்தான் நாம் உழைக்கின்றோம் " என்றார் தந்தை பெரியார்.முக நூல், வாட்சப் போன்றவை நமது கையில் இருக்கும் கத்தி போன்றவை. கையில் இருக்கும் கத்தியை வைத்து,காய்கறியை நறுக்கி,சுவையான உணவைச்சமைத்தும் பரிமாறலாம். அடுத்தவருக்கு காயம் ஏற்படுத்துவதற்கும் கத்தியைப் பயன்படுத்தலாம். அப்படிப்பட்டதுதான் இந்த முக நூல்,வாட்சப் போன்ற பல்வேறு செயலிகள்.இந்தச்செயலியைப் பயன்படுத்துபவர்களில் நல்லதற்கு பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,கெட்டதற்கு பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
ஒரு செய்தி படித்தேன்."வாட்சப் குழு அமைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி ,2020ல் மதுரை அருகில் உள்ள அலங்கா நல்லூரில் கஞ்சா விற்பனை செய்வதற்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட வாட்சப் குழுவில் இணைந்து, வாடிக்கையாளர் போல் நடித்து அந்தக் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை, அவருக்கு உதவிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தது பற்றிய செய்தி படித்தேன்.இதைப் போன்ற ஆயிரக்கணக்கான சமூக விரோத செயல்களுக்கு இந்த வாட்சப்,முக நூல் குழுக்கள் பயன்படுகின்றன.
அதனைப் போல அற்புதமான பல நல்ல செயல்களுக்கு வாட்சப்,முக நூல் குழுக்கள் பயன்படுகின்றன. எத்தனையோ பேருக்கு படிக்க,மருத்துவ செலவிற்கு உதவிகளை இந்தக் குழுக்கள் செய்கின்றன.பழைய நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும், பல புதிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் என முகநூல், வாட்சப் குழுக்களின் பயனைப் பல நூறு பக்கங்கள் எழுதலாம்.
சரி,முக நூல்,வாட்சப் போன்றவை கத்தி போல.நல்லதிற்கு பெரும்பாலும் பயன்படுகிறது. தீமைக்கும் பயன்படுகிறது. சரி, இந்தக் கத்தி போன்ற முக நூல், வாட்சப்,கூகுள் போன்ற செயலிகளை உருவாக்குபவர்களின் நோக்கம் என்ன? பெரும்பாலும் பணம் சம்பாதிப்பது என்பதாக இருக்கிறது.அவர்களைப் பயன்படுத்துபவர்கள் ஆட்சியிலிருப்பவர்களாக இருக்கிறார்கள்.
அறிவியலையும் உளவியலையும் இணைத்து, சமூக ஊடகங்கள் மூலமாக சிலர் மட்டும் வசதியாக வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகிறார்கள்.சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் உழைப்பதற்கு அடிமைகள் தேவைப்பட்டார்கள் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டுவதற்கு. இன்றைக்கு சமூக ஊடக அடிமைகள் தேவைப்படுகிறார்கள்,முதலாளிகள் பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு. முதலாளிகள் கோடி கோடியாய் உட்கார்ந்த இடத்திலிருந்தே கொள்ளை லாபம் அடிப்பத்ற்கு வழிவகுக்கிறார்கள்.இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொடங்கியவுடன்,முழுவதுமாக இலவசமாக பேசவும்,டேட்டாவும் கொடுத்ததை நினைத்துப்பாருங்கள்.இந்தியாவில் அதானியும் அம்பானியும் ஆட்சியாளர்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
கணினி மூலமாக பெரும் பணக்காரர் ஆகலாம் என்பதனை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் பில்கேட்ஸ்தான்.தன்னுடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் உலகின் முதல் பணக்காரராக பல ஆண்டுகள் இருந்தவர். லினக்ஸ் என்னும் ஆப்ரேசன் சிஸ்டம்(OS) உருவாக்கியவர் அதனை இலவசமாக அறிவித்தார். யார் வேண்டும் என்றாலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால் எம்.எஸ்.டாஸ்,எம்.எஸ்.வின்டோஸ் என்னும் ஆப்ரேசன் சிஸ்டம்களை உருவாக்கிய பில்கேட்ஸ் அதனை விற்பனை செய்தார்.ஒரிஜினில் இல்லாமல் நகல் எடுத்து பயன்படுத்தியவர்கள் மீது அந்த நிறுவனம் வழக்கு தொடுத்தது. பயந்து போய் அனைவரும் அந்த நிறுவனத்திடம் பணம் கொடுத்து வாங்கினார்கள்.உலகின் முதல் பணக்காரர் ஆனார்.கீழே இருக்கும் பட்டியலைப் பாருங்கள்.
உலகின் இரண்டாவது பணக்காரர் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ்(Jeff Bezos),உலகின் மூன்றாவது பணக்காரர் மைக்ரோஜாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ்,உலகின் 5-வது பணக்காரர் பேஸ் புக் நிறுவனத்தின் மார்க் ஜீக்கர்பெர்க்( Mark Zuckerberg),உலகின் ஏழாவது பணக்காரர் கூகுள் நிறுவன பங்குதாரர் லேரி பேஸ் Larry Page....பட்டியலை மீண்டும் பாருங்கள் எல்லாமே கணினி,இணைய,சமூக ஊடகங்கள் அடிப்படையில் அமைந்த நிறுவனங்கள். உலகத்தின் சொத்துகள் அனைத்தும் இவர்கள் கையில் உள்ளது.இந்தியா அம்பானி,அதானி கைகளில் இருப்பது போல, உலகம் இந்த அமேசான்,பேஸ் புக்,மைக்ரோ ஜாப்ட்,கூகுள் நிறுவன அதிபர்களின் கைகளில் இருக்கிறது.ம்னித இனம் முழுவதுமாக வறுமை இல்லாமல் ஆவதற்கு இவர்கள் நினைத்தால் செய்ய முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.பணக்காரர்களுக்கு மேலும் மேலும் பணக்காரர் ஆக வேண்டும் என்று தோன்றுமே தவிர, எல்லோரும் ஒன்று போல் வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்கத் தோன்றாது. ஆனால் நாம் அவர்களை அப்படி நினைக்க வைக்கவேண்டும்.
" நாம் உலகம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்கின்றோம். நம் இயக்கம் உலக இயக்கம்.உலக இயக்கம் என்றதும் மனிதன் மலைப்பான்;இவர்கள் இங்கிருந்து கொண்டுதானே பேசுகின்றார்கள் என்று.முற்காலத்தில் மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால் உள்ளதே மலைப்பாக இருக்கும்.அன்றைக்கு உலகத்தினை உணர அவனுக்குச்சாதனங்கள் இல்லை..." என்றார் தந்தை பெரியார்.உலகத்தை வாட்சப்,முக நூல் போன்ற சமூக ஊடகங்கள் ஒன்றாக ஆக்கி வைத்திருக்கிறது.ஒரு காலத்தில் அமெரிக்கா போன்ற வெளி நாட்டில் இருப்பவர்களோடு பேசுவதற்கு நிறையப் பணம் செலவழித்து,பலமணி நேரம் காத்திருந்து பேசவேண்டியிருந்தது.ஆனால் இன்றைக்கு எளிதாக நினைத்தவுடன் பேசமுடிகிறது.தொடர்பு கொள்ள முடிகிறது.இதனைப் போன்ற பல முன்னேற்றம் இவைகளால் ஏற்பட்டிருக்கிறது.உலகத்தினை உணர்வதற்கு அற்புதமான சாதனங்களாக வாட்சப்,முக நூல் போன்ற செயலிகள் உள்ளன.
."எல்லா மக்களுக்கும் எல்லாவிதமான சவுகரியமும் ஏற்படத்தான் போகின்றது;ஏற்பட்டே ஆகவேண்டும்.நாம் நமது சில்லரை எண்ணங்களை மாற்றிக்கொண்டு,உலகம் எல்லாம் ஒன்றாக வேண்டும் என்பதற்கும் ஏற்ப நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்.மக்கள் எல்லாம் ஒன்றாக ஆக,பேதங்களை ஒழிக்க வேண்டும்; பேதம் இனி நிலைக்கவும் முடியாது,பொருளாதார பேதமும்,சாதி பேதத் தன்மையும் ஒழிக்கப்பட்டு விடுமானால், மற்றுள்ள பேதங்கள் எல்லாம் நிலைக்கமாட்டா; உலகம் ஒன்று என்ற தன்மைக்குத்தான் வந்துவிடும்".('விடுதலை' 14-11-1972) என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதைப் போல எல்லா மக்களுக்கும் எல்லாவிதமான சவுகரிகயமும் ஏற்பட சமூக ஊடகங்கள் பயன்படல் வேண்டும்.
.வாட்சப்,முக நூல் போன்றவை தேவையா?தேவையில்லையா என்று இன்று நாம் பேசமுடியாது. முக நூல்,வாட்சப் போன்றவை தவிர்க்க இயலாதவை.ஆனால் லாப வெறிகொண்டு தனி மனித அந்தரங்கங்களை மதிக்கமாட்டோம் என்று சொன்னால் அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வாட்சப் நிறுவனம் ஐரோப்பா நாடுகளுக்கு கொடுத்துள்ளதுபோல இந்தியாவிற்கும் தனிப்பட்ட விதிகளை உருவாக்க கேட்க வேண்டும்.
"மக்கள் மன்றம் அனைத்தையும் விட மேலானது" என்பார் திராவிடர் கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள்.ஆம், .மக்கள் மன்றத்தில் இந்த செயலிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பயன் படுத்துபவர்கள் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அறிவுக்கு முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தவேண்டும்.மனிதம் மேம்படவும், மனித இனம் மேம்படவும் இந்தச்செயலிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் வாட்சப், முக நூல் போன்ற செயலிகள் " நல்லவனுக்கு நல்லவன் ' மட்டுமல்ல 'கெட்டவனுக்கும் நல்லவன்''.என்பதப் புரிந்து கொள்வீராக...
நன்றி :உண்மை மார்ச் 16-31,2021