Showing posts with label அண்மையில் படித்த புத்தகம் :. Show all posts
Showing posts with label அண்மையில் படித்த புத்தகம் :. Show all posts

Sunday, 15 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்... பாலகுமார் விஜயராமன்

 

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்

( ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2025- குறும்பட்டியல்)

ஆசிரியர் : பாலகுமார் விஜயராமன்

வெளியீடு : எழுத்து பிரசுரம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

மொத்தம் 222 பக்கங்கள் விலை ரூ 270

இந்த நாவலைப் படித்து முடித்தபொழுது, ஒரு சினிமாப்படத்தைப் பார்த்து முடித்ததுபோல் இருந்தது.அவ்வளவு கச்சிதமாகச் சொற்களால் விவரிக்கப்பட்ட ,காட்சியாகக் காட்டப்படுகிற நாவலாக இந்த நாவல் இருக்கிறது.தனஞ்சயன் என்னும் தனா,கணக்குக்கு அஞ்சி நடுங்கிப் பின்பு கணக்குப் புலியாகும் சுயோதன்,கோவையிலிருந்து போடி கல்லூரிக்கு சமூகப்பணிக்காக வரும் கல்லூரி மாணவி நித்யா என்று அறிமுகமாகும் கதாபாத்திரங்கள்,கதை ஓட்டத்தில் கச்சிதமாகப் பொருந்தி நிற்கிறார்கள்.




தொலைபேசித்துறையில் பொறியாளராகப் பணியாற்றும் பாலகுமார் விஜயராமன் அவர்கள் தன்னுடைய பொறியியல் அனுபவம், மென்பொருள் அனுபவம், மாணவ மாணவியர்களுக்கான புராஜக்ட் அனுபவம் என்று அனைத்தையும் இணைத்து உயிரோட்டமாக இந்த நாவலைப் படைத்துள்ளார்.எல்லாமே எதார்த்தமாக ,இயல்பாக இருக்கிறது.

 நான் தொலைபேசித்துறையில் 1995-2000ம் களில் வேலைபார்த்தபொழுது, மதுரையில் திரு. மாதீரன் அவர்கள் தொலைபேசி மேற்பார்வையாளராக இருந்தார்.படித்தது அந்தக்கால எஸ்.எஸ்.எல்.சி. என்றாலும் அவருக்குக் கணினியின் மேல் இருந்த ஆர்வம் மிகப்பெரியது, அவர் ஃபாக்ஸ்பேசில்  எழுதிய புரோகிராம்தான் மதுரை மாவட்டம் முழுவதும் இருந்த தொலைபேசி நிலையங்களில் சில ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது அதுபோலத் தானாக ஆர்வத்தால் உருவாகும் கணினி புரோகிராமர் தனா கதாபாத்திரம் அருமை..


இந்த நாவல் ஆசிரியர் எழுத்தில் பிரமாண்டமாய் வளர்ந்தோங்கி நிற்கிறார்.அவர் எடுத்திருக்கும் கதைக்களம் நாம் அக்கம்பக்கம் பார்க்கும்,கேட்கும் ஆன்லைன் சூதாட்டம்,அதனால் பாதிக்கப்படுபவர்கள், அந்தச் சூதாட்டம் எப்படி வடிவமைக்கப்படுகிறது,அந்தச் சூதாட்டம் நடத்துபவர்களின் வலிமை என்ன?,எப்படி பிரமாண்டமான கட்டிடங்கள் வழியாக நடைபெறுகிறது,அதற்கு அரசியல்வாதிகள் எப்படிப் பணம் வாங்கிக்கொண்டு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள்  என்பதை எல்லாம் அற்புதமான கதை ஓட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை என்னும் பெயரில் தனாவுக்கு ஏற்படும் அனுபவம் ,வாசிக்கும் அனைவருக்கும் படிப்பினையாகவும் இருக்கும். தனா , நான் தான் தப்புச்செய்யவில்லையே, நான் ஏன் பயப்படவேண்டும் என இருக்கும் நிலையில் அவருக்கு ஏற்படும் துயரம் ,அதில் இருந்து அவர் தப்பிக்கும் இடமும் கதையின் மிக விறுவிறுப்பான பகுதி.

சில அத்தியாயங்கள் மட்டும் வந்தாலும் மரியா கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.மரியாவின் தற்கொலையே இந்த நாவலின் திருப்புமுனையாகவும்  அமைகிறது.அதுபோலச் சுயோதன் பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்றி, பொறுக்கமுடியாமல் தனது வேலையை விடும் மாயந்தி…சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் மிகக் கவனமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுயோதன் ,தனது வாழ்க்கைக்கு அத்தனை வசதி கிடைத்தாலும் நாம் செல்லும் வழி தவறு,சமூகத்திற்கு எதிரானது  என்பதை உணர்ந்து மாறுவதும் அதன் தொடர்ச்சியாக அவனது செயல்பாடுகளும் மிக நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்.

வெறுமனே ஒரு நாவலாக இல்லாமல், இன்றைக்குச் சமூகத்தின் புற்று நோயாக மனிதர்களை அழித்துக்கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டம் பற்றி விரிவாக எழுதி இருப்பதற்குப் பாலகுமார் விஜயராமன் அவர்களை எவ்வளவு பாரட்டினாலும் தகும். இன்றைக்குக் கல்லூரிகளில் இருக்கும் மாணவ,மாணவிகளிடம் மற்றும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள எல்லோரிடமும் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். மலையாளத்தில் ஜோஸ் பாலுக்காரன் எழுதிய ‘அரிவாள் ஜீவிதம் ‘ நாவல் பலரின் வாழ்க்கை அரிவாள் ஜீவிதம் நோயிலிருந்து மீள்வதற்கு  வழி வகுத்தது போல ஆன்லைன் சூதாட்ட நோயில்  இருப்பவர்கள் மீள்வதற்கான நாவல் இந்த நாவல். இந்த நாவல் நிறையப் பேரிடம் போய்ச்சேரவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு,பணமிழந்து தற்கொலை செய்து கொண்ட உறவினர் வீட்டிற்கு, திருநெல்வேலியில் நானும் எனது மனைவியும் போனோம். அவ்வளவு அமைதியானவர்,பண்பானவர்,எப்படி இந்தச் சூதில் ஈடுபட்டார் ,இழந்தார்,இறந்தார் என்பது புதிராக இருக்கிறது என்று இறந்தவரின் மனைவி புலம்பியது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.இந்த நாவலைப் படித்தபொழுது எப்படிச் சிக்கி இருப்பார் என்பது புரிந்தது. இன்னும் நம்மைச்சுற்றி பலர் இந்தச் சுழலுக்குள் சிக்கி இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.அவர்களுக்கெல்லாம் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். சினிமாவாக எடுப்பதற்கு அத்தனை கூறுகளும் உள்ள இந்த நாவல் சினிமாவாக எடுக்கப்பட்டால், இந்த ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவிற்கு மக்களுக்குப் போய்ச்சேரும். சீட்டு என்று மட்டும்அல்ல ஆன்லைன் தாயம் என்றாலும் அலர்ட்டாக இருக்கவேண்டும் என்னும் படிப்பினையைக் கொடுப்பதாக நாவல் முடிகிறது.

விருது ,பரிசு என்பதையெல்லாம் தாண்டி, இந்தச் சமூகத்தில் நடைபெறும் ,ஓர் அவலத்தை,அந்தத் துறையைப் பற்றிப் புரிந்தவர் என்கிற முறையில் அற்புதமாகப் படிக்கும் எவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நாவலைக் கொடுத்திருக்கிறார். அதுவே மிகப்பெரிய பரிசுதான். இந்த நாவலைப் படித்தேன், ஆன்லைன் சூதிலிருந்து விடுபட்டேன் என்று சிலர் சொன்னாலே ,அது பாலகுமார் விஜயராமன் அவர்களுக்குச் சாகித்ய அகாதமி விருது  கிடைத்தது போலத்தான்.

“ராசி,தூசி எல்லாம் ஒண்ணும் இல்ல. நீ செய்ற விஷயம் சரிதான்னு உன் மனசுக்குத் தோணுதுல.அதுலயே தொடர்ந்து முயற்சி பண்ணு.ரிசல்ட் எங்கே போகப்போகுது. கண்டிப்பா ஒரு நாள் வந்தே தீரும்” இந்த நாவலில் பக்கம் 92-இல்




மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் இப்படிப்பட்ட ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு…தொடர்ந்து  எழுதுங்கள் .

தோழமையுடன்

வா.நேரு,15.02.2026

 

 

Monday, 27 October 2025

அண்மையில் படித்த புத்தகம்: தோன்றாத் துணை...பெருமாள் முருகன்

 

அண்மையில் படித்த புத்தகம்: தோன்றாத் துணை

 ஆசிரியர்                  : பெருமாள் முருகன்

பதிப்பகம்                    காலச்சுவடு

முதல் பதிப்பு  ஜூலை 2019; நான்காம் பதிப்பு  செப்டம்பர் 2022

மொத்தப் பக்கம் 176 விலை ரூபாய் 220

கலைஞர் நூற்றாண்டு நூலக எண் : 928.94811 PER;2.

 

சில புத்தகங்களை வாசிக்கும் போது முழுமையாக அந்தப்  புத்தகம் நம்மை வசியப் படுத்திக்கொள்ளும். அந்தப் புத்தகம்  மீண்டும் மீண்டும் நம்மை வாசிக்கத் தூண்டும். அப்படி வாசிப்பதின் மூலமாக   நம்முடைய நினைவுக் கிடங்கிலிருந்து பல விவரங்கள் தோண்டி எடுக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். ஒப்பிடப்படும். அப்படி ஒப்பிடப்பட்ட சில நினைவுகள் நம்மைத் துள்ளிக் குதித்து பால்ய நினைவுகளில் போய் விளையாடச்சொல்லும்.

 

அப்படித்தான் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய இந்தத் தோன்றாத் துணைஎன்ற புத்தகம் என்னை ஈர்த்தது.  இது புதினம் அல்ல, சிறுகதை அல்ல, தன்னுடைய தாயைப் பற்றி பெருமாள் முருகன் அவர்கள் எழுதி இருக்கக் கூடிய வாழ்க்கை வரலாறு.’  எந்த இடத்திலும் புனைவுகள் இல்லாத ஆனால் அதே நேரத்தில் எதார்த்தத்தை மிக இயல்பாக சொல்லக்கூடிய ஒரு புத்தகமாக இந்தப் புத்தகம் இருக்கிறது.


 

 

ந்தப் புத்தகம்  ஒரு வகையில் பெருமாள் முருகனின் அம்மாவான பெருமாயி பற்றியது. இன்னொரு வகையில் பெருமாள் முருகன் அவர்களின் இளமைக் காலம் பற்றியது. இருவரது வாழ்க்கையையும் ஒரு சேரச் சொல்லிச்செல்லும் புத்தகம் இது. தன்னைப் பற்றி பெருமாள்முருகன் சொல்லி இருக்கக்கூடிய பல்வேறு செய்திகள் சில நேரங்களில் சிரிக்க வைக்கின்றன,பல நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன.  தனது நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் சில வாங்கியவை,சில  இரவல் பெற்றவை,சில  திருடியவை என்று சொல்கிறார்.புத்தகத்தில் நிறைய விசயங்களை வெளிப்படையாகப் பேசுகிறார். ன்னுடைய அம்மாவின் இயல்பைப் பற்றிச் சொல்லுகிற போது அவர் எவ்வளவு கோபக்காரர் என்பதையும் எவ்வளவு வைராக்கியம் உடையவர் என்பதையும் இணைத்துச் சொல்லியிருக்கிறார். பல அத்தியாயங்களை வாசிக்கும்போது, எனது அம்மா முத்துக்கிருஷ்ணம்மாளை  ,பெருமாள் முருகனின் தாயார் பெருமாயி நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தார்.

 

 முதல் அத்தியாயத்திலேயே கம்மங்காட்டில்  இருந்த  அந்த கம்மந்தட்டைகளை இரவோடு இரவாகச் சென்று அதிலும் சின்னப் பிள்ளைகள் இரண்டுபேரையும்  உடன் அழைத்துக் கொண்டு சென்று அந்தக் கம்மங்காட்டில் இருந்த அத்தனை கம்மந்தட்டைகளையும் நீக்கியது என்பது மிகப்பெரிய செயல்..’குடல் கறிக் கதை ‘ பற்றி நூலாசிரியர் அருமையாகச் சொல்லி இருக்கிறார்.ஆனால் அதற்குப் பின் அவரது அண்ணன் வாழ்க்கை முழுவதும் குடல் கறியைச் சாப்பிடவில்லை என்று குறிப்பிடும்போது, வருத்தம்தான் ஏற்படுகிறது.



 

முறுக்குச்சுடுதல் எங்கள் ஊரில் இருந்த எண்ணெய்ச் செக்கை,அந்த அமைப்பை,அதனை ஓட்டியவரை என்று அனைத்தையும் நினைவு படுத்தியது.மொய்க்கணக்கு கந்தாயிப்பாட்டி நினைவில் நிற்கிறார்.ஓராயிரம் கண்சட்டை,பெருமாள் முருகனின் கோபத்தை,அதற்கான நியாயத்தை,அதை அவரது தாயார் புரிந்துகொண்டதை எல்லாம் அற்புதமாக விவரிக்கிறது.  

 

குழந்தையாக இருக்கும்போது நானும் கூட குண்டாகத்தான் இருந்திருக்கிறேன் .சாப்டூரில்  எங்கள் தெருவில் இருந்த அண்ணன் காய்கறிக் கடை ராமகிருஷ்ணன் அவர்கள் எனது இளம் வயதில் சொல்லிக் கொண்டே இருப்பார் சேடப்பட்டி ஒன்றிய அளவில் , குண்டு குழந்தைக்கான போட்டி வைத்தார்கள் நான் உன்னை ஒன்றைரை வயதில் தூக்கிக் கொண்டு போனேன். உனக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது என்று சொல்லிக் கொண்டிருப்பார். அப்படித்தான் பெருமாள் முருகனும் மிகச்சிறிய வயதில் குண்டாக இருந்தது பற்றிக் குறிப்பிடுகிறார். தன்னுடைய வீட்டில் இருந்த எருமை மாடுகளைப் பற்றி, தங்கள் வீட்டில் சில நேரங்களில் அமைந்த வறுமை நிலையைப் போக்குவதற்கு அந்த மாட்டின் பால் மற்றும் பணம்தான் மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று எழுதி இருக்கிறார். எனது வாழ்வில் கூட அப்படித்தான் பல நேரங்களில் கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என்றாலும் பள்ளிக்கூடத்திற்கு பணம் கட்ட வேண்டும் என்றாலும் கூட பால் பண்ணைகளில் போய் நின்றிருக்கிறேன்,எருமை மாட்டுப் பாலை ஊற்றுகிறோம் என்று சொல்லி அட்வான்ஸாக பணம்  வாங்கி வந்திருக்கிறேன் .

 

அதேபோல தன்னுடைய அம்மாவுடைய இயல்பு பற்றி சொல்லும் பொழுது படபடவென்று பேசுவார்கள் சில நேரங்களில் நேருக்கு நேர் திட்டிப்  பேசி விடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார் எப்படி எல்லாம் திட்டுவார் என்பதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார் போன தலைமுறை இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். மனதிற்குள் ஒளித்து வைப்பது எல்லாம் கிடையாது. அப்பனாக இருந்தாலும் ,புருசனாக இருந்தாலும் கோபம் வந்தால் வசவுதான். எங்கள் அம்மாவும் ப்படித்தான் திட்ட வேண்டும் என்று தோன்றினால்  நன்றாகத் திட்டி விடுவார்.

 

கல்லூரியில் வேலை பார்க்கும் மருமகளான எழிலரசி தன்னுடைய அத்தையான பெருமாயி பற்றிஅத்தையம்மா ‘ என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.அத்தையம்மா என்னும் சொல்லே அம்மா பெருமாயி அவர்களின் பெருமையைச் சொல்லி விடுகிறது. மாத மாதம் பணம் கட்டி எடுக்கும் ஏலச் சீட்டு பற்றி எனக்குத் தெரியாது, சீட்டு விளையாடத் தெரியாது, நீச்சல் அடிக்கத் தெரியாது.வை யாவும்  என்னுடைய அத்தைக்குத் தெரியும் அவற்றைச் சொல்லி என்னிடம் எப்போதும் பெருமைப்பட்டது கிடையாது, என்னை எப்போதும் அவர்  குறைத்து பேசியது  இல்லை என்று குறிப்பிட்டு ‘ என்னை என் படிப்போடும் பணியோடும் பொருத்தி மரியாதையாக நடத்தியவர்,உணர வைத்தவர் ‘ எனக் குறிப்பிடுகிறார்..

 

தனது அம்மாவிற்கு மூட நம்பிக்கை எவ்வளவு இருந்தது என்பதை அதனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை எல்லாம் ‘இரும்புக் கைவிலங்கு ‘அத்தியாயத்தில் விவரிக்கிறார்.இன்னும் ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் எழுதலாம்.நானும் ஒரு நூல் எழுதும் அளவிற்கான நினைவுகளை இந்தப் புத்தகம் கிளறி விட்டிருக்கிறது அருமையான அனுபவத்தைக் கொடுத்த புத்தகம்.அருமையான அட்டைப்படம். எப்போதும் போல நல்ல புத்தகத்தை நூலகத்தில் எடுத்துப் படித்தால்,அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கி வீட்டில் வைப்பது போல இந்தப் புத்தகத்தையும் வாங்கி வீட்டில் வைக்கவேண்டும்.


                                                                                                                                     வா.நேரு,

                                                                                                                                     27.10.2025

 

Saturday, 21 October 2023

அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்((சிறுகதைத் தொகுப்பு)

 அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்(சிறுகதைத் தொகுப்பு)

 நூல் ஆசிரியர் : ரெஜினா சந்திரா

பதிப்பகம்           : எழிலினி பதிப்பகம்,எழும்பூர்,சென்னை-8

முதல்பதிப்பு     : அக்டோபர் 2023

விலை                  : ரூ  250          மொத்த பக்கங்கள் 122

தோழர் ரெஜினா சந்திரா அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு' இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்'. சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களுக்கு இந்தத் தலைப்பு சட்டெனப்புரியும். 13 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்த நூல்.

ஒரு சிறுகதைக்கான கதைக்கருவினை எங்கிருந்து எடுப்பது ?... இதற்கான தெளிவான விளக்கத்தைத் தனது கதைகள் மூலம் கொடுத்திருக்கிறார் தோழர் ரெஜினா சந்திரா. அவருடைய எல்லாச் சிறுகதைகளும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பேசுகின்றன .சின்னச் சின்ன மகிழ்ச்சியை ,சின்னச் சின்ன துக்கங்களை ,சின்ன சின்ன  மனப்பிணக்குகளை,சின்னச்சின்ன அறியாமையை உணரும் தருணங்களை  விவரிக்கும் இச்சிறுகதைகள் நம் தோள் மீது தோள் போட்டுக் கொண்டு உரையாடும் ஒரு தோழனைப் போல ,அறிவுரையாக அல்லாமல் நட்பாக பல விஷயங்களைப் பேசுகிறது. இந்தச் சிறுகதைகளின் குரலும் புதிது, அணுகும் முறையும் புதிது ,எழுத்து நடையும் புதிது.இயல்பாகப் பேசும் நடையாக இந்தப் புத்தகம் அமைந்திருப்பது சிறப்பு.

அண்ணன் கோ.ஒளிவண்ணன்,பேரா.உமா மஹேஸ்வரி அவர்களின் முன்னேற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 'வாருங்கள் படிப்போம்','வாருங்கள் படைப்போம் ' குழுக்களின் துடிப்பான உறுப்பினர்களில் ஒருவர்.அதில் நடைபெற்ற சிறுகதைத் திறனாய்வு போட்டிகளில் கலந்துகொண்டு திறனாய்வுகள் செய்தவர்.சிறுகதை எழுதுவது எப்படி என்பதனை ஒரு 6 மாதத்திற்கு முன்னால் சென்னை பெரியார் திடலில்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்டு கற்றுக்கொண்டவர்..பயிற்சி முடிந்த மறுநாளே.ஒரு சிறுகதை முயற்சியைக் கைக்கொண்டு,அந்தக் கதையை தோழர்களுக்கு அனுப்பிக் கருத்தினைக் கேட்டவர்.இன்று மிகச்சிறப்பாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார் பாராட்டுகள்.



இத்தொகுப்பில் விண்மீன்கள்,ரோலர் கோஸ்டர்,மேட்டிமை,நெஞ்சே! நெஞ்சே!,இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்,தீ நுண்மி,நாங்க ஒரு தினுசுதான்,எண்10-புதுத்தெரு,சில்லுனு ஒரு மெட்ரோ காதல்,செல்வி இஆப,வைத்தியம்,மே மாதக் கல்யாணம்,ஜெனிபர் என 13 கதைகள்.இந்தக் கதைகளுக்கு முக நூலில் வந்த பின்னோட்டங்கள் பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள 'தீ நுண்மி 'என்னும் சிறுகதை மிகவும் பிடித்தது. கீழ்க்கண்ட இணைப்பில் அந்தக் கதை பற்றி விரிவாகப் பேசியுள்ளேன். இதில் உள்ள பல கதைகள்,ஒவ்வொன்றையும் அரைமணி நேரம் பேசலாம்.

புதுச்சேரி ஒரு துளிக்கவிதை அமைப்பும்,தமிழ் அமெரிக்கா மற்றும் வல்லினச்சிறகுகள் மின் இதழ் அமைப்பாளர்கள் இணைந்து நடத்தும் இணைய வழிக்கூட்டத்தில் இந்தப் புத்தகத்தினைப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பேசியிருக்கிறேன். இணைப்பும் அளித்துள்ளேன். வாய்ப்பு உள்ளோர் கேட்டுப்பாருங்கள். உங்கள் கருத்துகளையும் வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.




https://youtube.com/live/0uNKnq8JsFc?feature=shared


Wednesday, 30 August 2023

அண்மையில் படித்த புத்தகம் : என் இளம்பிராயத்துக் கதைகள்....சரத்சந்திரர்

 

அண்மையில் படித்த புத்தகம் : என் இளம்பிராயத்துக் கதைகள்

ஆசிரியர்                    : சரத்சந்திரர் தமிழில் ஆர்.சி.சம்பத்

வெளியீடு                   : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,

                                                             சென்னை-98, 044-26241288

முதல் பதிப்பு                :      செப்டம்பர் 2014,மொத்தப் பக்கம் 62

                                                                                                     விலை ரூ 55

மதுரை மாவட்ட மைய நூலக எண்   215637

மொத்தம் 5 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். : சரத்சந்திரர் ஒரு நூறாண்டுக்கு முன்னால் எழுதி மறைந்தவர்.அழியாத கதைகளை அளித்ததால் வாசிப்பவர்களின் மனதில் என்றும் நிற்பவர்.’தேவதாஸ் ‘போன்ற அழியாப் புகழ் நாவல்களை அளித்தவர். பின்னர் திரைப்படமாகவும் வந்து எல்லோரையும் ‘ஓ தேவதாஸ்’ என்னும் பாட்டை முணுமுணுக்க வைத்த கதைக்கு சொந்தக்காரர். இந்தத் தொகுப்பில் உள்ள 5 கதைகளும்(காளிதேவிக்கு பலி,வந்தார் குருதேவர்,ஐயாவை யாருன்னு நினைச்சே?, பிள்ளை பிடிக்கிறவன்,அது ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னே) இப்போது வாசிப்பதற்கும் மிகவும் ஈர்ப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பது சிறப்பாக உள்ளது.

காளிதேவிக்கு பலி என்னும் சிறுகதை ‘லல்லு’ என்பவரைப் பற்றி பேசுகிறது. நமக்கு பீகாரின் லல்லு பிரசாத் அவர்களைத் தெரியும்.நகைச்சுவையாக பாராளுமன்றத்தில் பேசி பிஜேபிக்காரர்களை ஓடவிட்டவர்.’லால் ‘என்றால் செல்லமானவன்,பிரியமானவன் என்னும் பொருளாம்.தேவி பூஜைக்கு ஆடு வெட்டுகிறவர் வரவில்லை. லல்லுவைக் கூப்பிடுகிறார்கள்.இளைஞனான லல்லு வர மறுக்கிறான்.அவனது அப்பா வற்புறுத்த ,சென்று விருப்பம் இல்லாமல் பூஜைக்கு ஆட்டை வெட்டுகிறான்.ஆட்டை வெட்டிப் பலி கொடுத்துவிட்டு ,அடுத்த பலி எங்கே என்று சாமி வந்தவன் போல கேட்க ,இல்லை என்று சொல்ல  புரோகிதரைப் பலி கொடுக்க வா என்று சொல்கிறான்.புரோகிதர் பயந்து ஓடுகின்றார். இன்னும் சிலரும் பயந்து ஓடுகின்றார்கள்.இந்தக் கதையைப் படித்துவிட்டு நன்றாக வாய்விட்டுச்சிரிக்கலாம்.இதில் உள்ள எல்லாக் கதைகளுமே  நமக்கு சிரிப்பை வரவழைக்கும் கதைகளாகவே இருக்கின்றன்.வீட்டிற்கு வந்த குருதேவரை, லல்லு கவனிக்கும் கவனிப்பு அடுத்த கதை. நல்ல நகைச்சுவை.

இந்த 5 கதைகளின் வழியாக அன்றைய வங்காளத்தையும், அன்று மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளையும் கண்டு கொள்ளமுடிகிறது.நயன் என்னும் கதாபாத்திரம் அது ஒரு ஐம்பது வருஷத்திற்கு முன்பு என்னும் கதையில் வருகின்றது.அதில் வரும் ஒரு உரையாடலை அப்படியே தருகிறேன்

“ அன்றிலிருந்து அவன் முழுமையான வைஷ்ணவனாகி விட்டான்.

நயன் தரையில் சிரம் வைத்து என் பாட்டிக்கு நமஸ்காரம் செய்வான்.

அவள் பிராமண விதவை.அதனால் நயனைத் தீண்டக்கூடாது.எனவே,அவன் ஏதாவது தழைக் கொத்துகளைப் பறித்துக்கொண்டு வந்து அவள் பாதத்தருகே வைப்பான்.பாட்டி அதைத் தன் பாதங்களால் தீண்டுவாள்.

அவன் அந்தத் தழைகளைத் தலைமீது வைத்துக்கொண்டு “அம்மா ! என்னை ஆசிர்வதியுங்கள்.இந்தத் தடவை நான் இறந்தால் மீண்டும் உயர்ந்த குலத்தில் பிறக்கவேண்டும் என்று ஆசியளியுங்கள்.அதனால் நான் என் கைகளினாலேயே உங்கள் பாத துளியை எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கட்டும் “ என்பான்.

பாட்டியும் அன்புடன் சிரித்துக்கொண்டே “ நயன்,என் ஆசிர்வாதத்தால் அடுத்த ஜென்மத்தில் நீ பிராமணனாகவே பிறப்பாய்,போ!” என்பாள்.

நயன் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும்.” 

அந்தக் கால நிலைமை.ஆசிர்வாதம் பண்ணக் கூடக் கால்களில் விழுந்துவிடக்கூடாது.தீட்டுப்பட்டு விடும். சாதி என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் புகுத்தப்பட்டது என்று உளறிக்கொட்டும் சனாதன ஆளுநர் ‘இரவிக்கு ‘ இந்தக் கதையை யாராவது படித்துக்காட்ட வேண்டும்.

ஒரு கதை என்பது நகைச்சுவையும் எதார்த்தமும்  கலந்து எழுதப்படும்போது எந்தக் காலத்திலும் வாசிக்க ஈர்ப்பாக இருக்கும் என்பதற்கு இந்தச்சிறுகதைத் தொகுதி எடுத்துக்காட்டு.அந்தக் காலகட்டத்தில் நடந்த காலரா இறப்புகள்,மூட நம்பிக்கை குருதேவர்கள் நடமாட்டம்,சடங்குகள் மூலம் வழிப்பறி செய்பவர்கள் போலவே இருட்டில் சாலையில் செல்பவர்களைக் கொன்று கொள்ளையடிக்கும் கும்பல் என்று பல செய்திகளைச்சொல்லும் சிறுகதைகளாக இந்தக் கதைகள் இருக்கின்றன.வாசித்துப்பார்க்கலாம். வாய்விட்டுச்சிரிக்கலாம்.அக்கால நிலைமைக்கும் இக்கால நிலைமைக்குமான வேறுபாட்டை சிந்தித்துப்பார்க்கலாம்.

நூலகத்தில் எடுத்துப் படித்த நல்ல புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வீட்டில் வைப்பது என் பழக்கம்.அப்படி இந்தப் புத்தகத்தையும் வாங்கி வைக்கவேண்டும்.


 

 

 

 

Monday, 21 August 2023

செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்...ஞான வள்ளுவன்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் எட்டாவது நூல் அண்மையில் வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே பெரியார்-95,தமிழர் வாழ்வில் சாதியும் மதமும் அன்றும் இன்றும்,திராவிட இயக்கமும் எங்கள் ஊரும்,இசைவேளாளர்,ராஜநாயகம்(வரலாற்றுப்புதினம்),ஆச்சாரம்(சமூகப்புதினம்),வரலாற்றில் வென்ற அவர்தாம் பெரியார் என்னும் ஏழு நூல்களின் ஆசிரியர்.மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கும் இந்த 'செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும் ' என்னும் இந்த நூல் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரையை இத்துடன் இணைத்துள்ளதோடு,புத்தகம் எப்படிப்பெறுவது என்பதற்கு தொடர்பு எண்ணும்,மின் அஞ்சல் முகவரியும் பதிவு செய்துள்ளேன். வாங்கிப் பயன் பெறுக.





                              அணிந்துரை

                          முனைவர்.வா.நேரு,

            தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

                  பெரியார் திடல், சென்னை-600 007.

 

இந்த நூலை ஆக்கியிருக்கும் நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் தமிழ்நாடு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர். தந்தை பெரியாரியலை களப்பணி வழியாகவும்,கருத்துப்பணி வழியாகவும் பரப்புவதோடு அதனை வாழ்வியலாகக் கடைப்பிடிப்பவர். தன் தந்தை காலந்தொட்டு திராவிடர் கழகத்தில்,தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பயணித்து,பல்வேறு பணிகளைச்செய்து வருபவர்.

அவரால் எழுதப்பட்டு ,அவரின் எட்டாவது நூலாக ‘செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்’ என்னும் இந்த நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.பரந்து பட்ட வாசிப்பு அறிவும்,எப்பொருளையும் மெய்ப்பொருள் காணும் அறிவோடு அணுகுவதும் இவரின் சிறப்பு. வாசிப்பவர்கள் ‘மெய்ப்பொருள் அறியும்’ நோக்கோடு படைக்கப்பட்டிருக்கும் நூல் இந்த நூல்.தனக்குத் தோன்றியதை மட்டுமே எழுதிய நூல் அல்ல இது, பலவகைப்பட்ட தரவுகளைப் பட்டியலிட்டு அதனின் விளக்கமாகவும் ஆய்வு நூலாகவும் இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ‘பார்ப்பனர்களும் சாஸ்திரங்களும் ‘என்னும் இயலில் தொடங்கி,’அடிமையாகப்போன அரசர்கள் ‘ என்னும்  இயல்வரை 19 இயல்களைக் கொண்டுள்ளது.’செப்பேடுகளையும் சதுர்வேதி மங்கலங்களையும் பற்றிக் கூற வந்த இடத்தில் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றியும் கூற வந்தது ஏன்? ‘ என்னும் கேள்வியோடுதான் இந்த நூல் தொடங்குகிறது. இந்தக் கேள்விக்கான பதில் ,இந்த நூலை வாசித்து முடிக்கும்போது மிகத் தெளிவாகத் தெரியும்.

மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு கிடைத்த ‘திருவிந்தளூர்ச் செப்பேடு’ என்னும் நூல்தான் இந்த நூலை அவர் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்திருக்கிறது.’தமிழக வரலாற்றில் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான செப்பேடுகள் தொடங்கி சமீபத்திய செப்பேடுகள் வரையிலும் பெரும்பான்மையானவை பார்ப்பனர்களுக்கான சதுர்வேதி மங்கலங்கள்,பிரம்மதேயங்கள்,கொடைகள் அளித்த செய்திகளைக் கொண்டவையே.அவைகளைப் பற்றியும் ,அச்செப்பேடுகளில் கூறப்படாத விரிவான ,நிலக் கொடையளிக்கப்படும் நடைமுறையை விளக்கும் திருஇந்தளூர் செப்பேடு பற்றி முழுமையாகவும் எழுதிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொகுக்கப்பட்டதே இந்த முயற்சி ‘ என்று இந்த நூலின் ஆசிரியர் ,இந்த நூல் ஆக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். மிக நல்ல முயற்சி.அந்த முயற்சியின் விளைவு நமக்கு இந்த ஆராய்ச்சி நூல் கிடைத்திருக்கிறது.

இந்த நூல் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றிய உண்மையையும் எளிமையான சொற்களால் விளக்குவதோடு சோழ மன்னர்கள் அதிலும் குறிப்பாக பிற்காலச்சோழ மன்னர்கள் எப்படி பக்தி என்னும் மயக்கத்தால் ஏமாந்தார்கள் என்பதை விரிவாகக் குறிப்பிடுகிறது.அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் நூல்களின் சிறப்பே, நம்முடைய கருத்திற்கு நேர் எதிராக இருக்கக்கூடியவர்களின் நூல்களில் இருந்தே  நம்முடைய கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களைத் தருவதாகும். ஒவ்வொரு இயலிலும் அவர் கொடுத்திருக்கும் ஆதாரங்களை நாம் வாசிக்கும்பொழுது அவரின் உழைப்பு நமக்குத் தெரிகிறது.

இந்த நூலில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன.பல்வேறு செப்பேடுகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.தமிழர்களும் தமிழ் மன்னர்களும் பார்ப்பனர்களிடம் எப்படி ஏமாந்தார்கள்,என்ற விவரமும் இருக்கிறது.இந்த நூல் வாசித்துவிட்டு வைத்துவிட்டுப் போகும் நூல் அல்ல.ஆங்கிலத்தில் Reference Book என்று சொல்வார்களே,அதனைப் போல நாம் பாதுகாத்து,பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நூல்.பல்கலைக் கழகங்களில்,கல்லூரிகளிலும்  பாட நூலாக வைக்கும் அளவுக்கு செழுமையான கருத்துகளைக் கொண்ட நூல்.

இதனைப் போல இன்னும் பல நூல்களை பெரியாரிய நோக்கில் அய்யா ஞான.வள்ளுவன அவர்கள் படைக்கவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவிப்பதோடு,இந்த நூலை நல்ல முறையில் திராவிட இயக்கத்தைச்சார்ந்த தோழமைகளும்,அம்பேத்கரிய,பொதுவுடமை இயக்கத் தோழமைகளும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றேன், நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

                                              தோழமையுடன்

                                              வா.நேரு,15.07.2023


நூலின் தலைப்பு : செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்

நூல் ஆசிரியர்   : ஞான வள்ளுவன்

வெளியீடு       :  இனியன் பதிப்பகம்,வைத்தீஸ்வரன் கோவில்

தொடர்பு எண்   :  9443985889,valluvan54@gmail.com

மொத்த பக்கங்கள் : 142,விலை ரூ 150






 

Friday, 4 June 2021

சிந்தனைக் கட்டுரை : ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்....முனைவர் வா.நேரு

முழுமையாக ,படங்களுடன் வாசிக்க உண்மை இணையதளம்:

http://www.unmaionline.com/index.php/6079-oru-nutrandil-eluthu-satsiyam.html 


தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பதித்த  கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 17.5.2021 அன்று மறைந்திருக்கின்றார். நூறு ஆண்டுகள் தொட்டுவிட ஒரே ஓர் ஆண்டும் சில மாதங்களும்  இருந்த நிலையில் கி.ரா. இயற்கை எய்தியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்’ என்று தலைப்பிட்டு, எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவிற்கு மிகச் சிறப்பான இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். (‘விடுதலை’ 18.5.2021). புதுச்சேரியில் மறைந்த கி.ரா. அவர்களுக்கு புதுச்சேரி அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தி, உடல் தமிழகத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கி.ரா. அவர்களின் சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில், குண்டுகள் முழங்க, அரசு மரியாதையோடு அவருக்கு இறுதி நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு கோவில்பட்டியில்  சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல; “கி.ரா படித்த இடைச்செவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அவருடைய படைப் பாளுமையை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்“ என்றும் மாண்புமிகு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஓர்  எழுத்தாளன் என்கிற வகையில், ஓர் எழுத்தாளர் கி.ரா.விற்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரிய மனநிறைவை நமக்கு அளிக்கிறது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், கி.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஒப்பிடும் போது சில ஒற்றுமைகளைக் காண்கின்றோம். இருவரும் 35 வயதிற்கு மேல் தாங்கள் எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்கு வந்தவர்கள். தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு பிறந்தவர். 1915-களுக்குப் பிறகுதான் பொது வாழ்வுக்குள் வருகின்றார். ஆனால் 95 ஆண்டு காலம் வாழ்ந்து யாரும் எட்ட முடியாத பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகப் புகழ் பெற்றார். தொண்டு புரிந்தார். மக்கள் மனதில் நின்றார். அதனைப்போலவே 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் பிறந்தவர் கி.ரா. அவர்கள். தன்னுடைய முதல் கதையை 1958இல் தான் எழுதுகிறார். அன்றைய ‘சரஸ்வதி’ இதழில்  வெளிவருகிறது. 1958இல் தொடங்கி தனது இறுதிவரை எழுத்துப் பணியை அவர் நிறுத்தவேயில்லை. தனது பணி எழுத்து என்று எடுத்துக் கொண்டபின், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்திருக்கின்றார். தந்தை பெரியார் தனது இறப்புக்கு முந்தைய சில நாள்களுக்கு முன் கூட எப்படி பேசிக் கொண்டிருந்தாரோ, அதனைப் போலவே எழுதிக் கொண்டும், இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தவர் கி.ரா.  ஆவார்.

தந்தை பெரியார் மூன்றாம் வகுப்புவரைதான் படித்தவர். கி.ரா. படித்தது 4ஆம் வகுப்பு வரை என்றும், ஏழாம் வகுப்பு வரை என்றும் இருவேறு செய்திகள் வருகின்றன. எப்படி இருந்தபோதிலும் அவர் ஏழாம் வகுப்பைத் தாண்டவில்லை என்பது உறுதியாகிறது. தந்தை பெரியார் தன்னைச்சுற்றி இருந்த சமூகத்தைப் படித்தார். இதற்கான காரணம் என்ன என்பதனைச் சிந்தித்தார். இதனைச் சீர்படுத்த பிரச்சாரமும் எழுத்துமே தனது வழி எனத் தீர்மானித்தார். அப்படித் தீர்மானித்த பிறகு தன்னுடன் யார் வருவார், தன்னை விட்டு யார் போவார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்  எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக இரவும் பகலும் பாடுபட்டார். ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ நிலைக்குத் தந்தை பெரியார் உயர்ந்தார்.

கி.ரா. அவர்கள் தனது 35ஆம் வயதில் எழுத ஆரம்பிக்கிறார். 99ஆம் வயதில் மறைந்திருக்கும் அவரின் படைப்புப் பட்டியல் நம்மைத்  திகைக்க வைக்கிறது. கண்ணிமை, மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு உள்ளிட்ட 24 தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், (சாகித்திய அகாடமி விருது பெற்றது), அந்தமான் நாயக்கர் என்னும் மூன்று நாவல்கள் வெளியிட்டிருக்கிறார். கிடை, பிஞ்சுகள் என்னும் தலைப்பில் குறுநாவல்கள். ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, புதுமைப்பித்தன், மாமலை ஜீவா. இசை மகா சமுத்திரம். அழிந்து போன நந்தவனங்கள், கரிசல் காட்டுக் கடுதாசி என்னும் தலைப்புகளில் அவரது கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. இது தவிர நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு, இதனைத் தவிர கரிசல் வட்டார வழக்கு அகராதி என்னும் சிறப்பான அகராதியினைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.


தந்தை பெரியார் படாத உடல் நோவு இல்லை. ஆனால், அந்த உடல் நோயினை உள்ளத்தில் எடுத்துக்கொண்டவர் இல்லை. தனது கடைசிக் கூட்டத்தில், சென்னையில் 19.12.1973 அன்று உடல் நோயினால், வலியினால் துன்பப்பட்டாலும், அந்தத் துன்பத்தை கண நொடியில் தாண்டிவிட்டு, இன இழிவினை ஒழிப்பதற்காக அவர் முழுங்கிய முழக்கம், எம்மைப் போன்று ஒலி நாடாவில் கேட்பவர்களின் கண்களிலேயே கண்ணீரை வரவைத்து, உணர்ச்சி மேலோங்கி நிற்கச் செய்கிறது. தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி போன்றவர்கள், அன்னை மணியம்மையார் போன்றவர்கள், அந்த நிகழ்விலே தந்தை பெரியாரின் உடன் இருந்தவர்கள் உள்ளத்திலே எத்தனை வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும் கூட நமக்காக அந்த வேதனையிலும் கர்ச்சனை செய்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கத்தின் குரல் நம்மை “இன்னும் வேலை செய்!’’ என்று அன்புக் கட்டளை இடுவதாகத்தான் எடுத்துக் கொள்கிறோம். உயர்ந்த நோக்கத்திற்காக தனது வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்களுக்கு நோய் அஞ்சத்தான் செய்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. எழுத்தாளர் கி.ரா. அவர்கள் காச நோயால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு திருமணமான போது அவருக்கு வயது 19. அவரது துணைவியார் பெயர் கணவதி அம்மாள். 19- வயதில் கி.ரா.வுக்கு திருமணம்  நடந்தபோதே அவருக்கு காச நோய் இருந்திருக்கிறது. காச நோய் உள்ள கி.ரா.வை. தைரியமாக மனமுவந்து திருமணம் முடித்துக் கொண்டதாக கணவதி அம்மாள் தெரிவித்திருக்கிறார். அன்னை நாகம்மையார் தனது கணவர் தந்தை பெரியாருக்கு செய்த பணிவிடைகள் போல கி.ரா.விற்கு கணவதி அம்மாள் பணிவிடைகள் செய்திருக்கிறார். காதலால் கசிந்துருகிக் கவனித்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினர்களை நன்றாகக் கவனித்து  விருந்தோம்பல் செய்திருக்கிறார். தன் கணவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற நேரத்தில், தனி ஆளாக நின்று சமாளித்து, தனது இரு பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார். (நன்றி: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்).


தன்னுடைய வாழ்க்கையிலிருந்து, தன்னுடைய இலட்சியத்தை அமைத்துக் கொண்டவர் தந்தை பெரியார். தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தனது வீட்டிற்கு வந்தடையும் பார்ப்பனர் களையும் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை, செல்வாக்கை உள்வாங்கிய தந்தை பெரியார் ஏன் எனச் சிந்தித்தார். பின் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார். கி.ரா.வைப் பொறுத்தளவில் அவர் ஒரு விவசாயி. இடைச்செவல் கிராமத்தில் நாற்பது வயதான நிலையில் தனது நிலத்திற்கு வரிகட்ட, தாசில்தார் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஏன் இந்தக் கதவு தனியாக நிற்கிறது என்று கேட்டிருக்கிறார். ஒரு விவசாயி கிஸ்தி (நில வரி) கட்டவில்லை. அதற்காக, அவரது வீட்டில் இருந்து கதவு பிடுங்கப்பட்டு இங்கு வந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதனை வைத்துத்தான், ‘அந்தக் கதவு’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அந்தக் கதைக்கான அடித்தளம் வாழ்வில் ஒரு விவசாயிக்கு ஏற்பட்ட நிகழ்வு. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்து கதைக் கருவை எடுத்துக் கொண்டவர் கி.ரா. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மொழிகளை, தனது கதைகளின் மொழியாக எடுத்துக்கொண்டவர் கி.ரா. அவரது  கதை மாந்தர்கள் கள்ளங் கபடமற்றவர்கள்.  எதார்த்தவாதிகள். பிழைக்கத் தெரியாதவர்கள். ஆனால், பெரிய மனதுக் காரர்கள். வட்டார வழக்கில் எழுதுவது எப்படி என்பதற்கான அகராதி கி.ரா ஆவார். இன்று பலர் வட்டார வழக்கு என்று எழுதுகின்றனர். ஆனால், அவையெல்லாம் கி.ரா.வின் வட்டார வழக்கு எழுத்துக்கு முன்னால் மிகச் சாதாரணமாக இருப்பதைப் படிக்கும்போது உணர்கின்றோம். அவரின் முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்‘ நாவலைப் படித்து முடித்தவுடன் அந்தக் கதைக்குள் இருந்து நாம் விடுபட நாள்கள் ஆகும். அப்படித்தான் அவரின் ஒவ்வொரு நாவலும் சிறுகதையும். 

இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில் மூட நம்பிக்கையைப் பரப்புவதிலேயே குறியாய் இருக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினரே கூட, பி.ஜே.பி.யைச் சார்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர், மாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா சரியாகிவிடும் என்றும், குஜராத்தில் மாட்டுச் சாணியில் குளியல் எடுத்தால் கரோனா சரியாகி விடும் என்றும் பொய்கள் பரப்பப் படுவதைப் பார்க்கின்றோம். மனிதர்களுக்கு ஏற்படும் கரோனாவைப் போல மாடுகளுக்கு ஏற்படும் தொற்றான கணை நோய் பற்றியும், தங்களுடைய கடவுள் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிட்டு மாடுகளுக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடும் மருத்துவர்களை, மனிதர்களைக் கேலி பேசும் அயிரக்கா, தொட்டணன் பாத்திரப் படைப்பும், எப்படி பாதிக்கப்படும் மக்களிடத்தில் மூட நம்பிக்கையைச் சிலர் பரப்புகிறார்கள் என்பதனைக் கதையாகச் சொல்லும் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கி.ரா.வின் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இந்தக் கரோனா காலத்தில், கரோனா பாதித்த தாயை வீட்டிற்குள் விடமாட்டேன் என்று சொல்லி, மகளும் மருமகனும் கதவைப் பூட்டிக்கொண்ட செய்தி சில நாள்களுக்கு முன் செய்தித்தாளில் வந்தது. அந்த நிலையில் மனிதர்கள், தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்குக்கூட எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள், ‘குடும்பத்தில் ஒரு நபரா’க நினைக்கிறார்கள் என்பதனை விவரிக்கும் கதை ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கதை.

தந்தை பெரியார், “தாகம் எடுப்பது போல, பசிப்பது போல, பாலியலும் ஓர் உணர்வு’’ என்றார். ஒரு உணவு விடுதியில் சென்று சாப்பிடுவது போல அது தனிப்பட்டவரின் விருப்பம் என்றார். கி.ரா. தனது  கதைகளில் பாலியல் என்பதும் ஒரு பசி என்பதனை மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் விரசமில்லாமல் மிக நளினமாகவும் எடுத்துச் சொன்னவர். அவரின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும் ‘ என்னும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு இதனை விரிவாகப் பேசும்.


திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல “தமிழகத்தின் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் என்னும் கிராமத்தில் பிறந்து, அம்மக்களின் பண்பாட்டை, வாழ்வியலைக் கதைகளாக்கி உலகெங்கும் உலவ விட்டவர். கரிசல் எழுத்துகளுக்கென்று களம் அமைத்தவர். தமிழின் மிகச் சிறந்த படைப்பாளியாகவும், படைப்பாளிகளை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பெரும் பங்காற்றியவராகவும் அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்டம், இடதுசாரி இயக்கம் என்று அரசியல் பாதைகளிலும் பயணம் செய்தவர். இறுதி வரைக்கும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியமாகத் திகழ்ந்தவர்” என்று சிறப்பாகக் குறிப்பிட்டு, அந்த ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம் தந்தை பெரியார் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதையும் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிக்கையில் குறிப்பிடுகின்றார். “திராவிட இயக்க எழுத்தாளர்களின் மீதான சிலரின் வன்மைப் பார்வைக்கு பார்ப்பனிய சிந்தனையே காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்காதவர். தந்தை பெரியாரின் மனித நேயத்தையும் சமூகப் பணியையும் போற்றி, ‘புதிய வழிகாட்டி’ என்று விளித்து மதித்தவர். மனதில் பட்டதை மறைக்கும் தன்மையின்றி உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர்” என்று கி.ரா. அவர்களைப் பற்றி புகைப்படம் போல விவரித்திருக்கின்றார்.

சில நாள்களுக்கு முன்னால், கோ.ஒளிவண்ணன் அவர்கள் நடத்திய ‘வாருங்கள் படிப்போம்‘ நிகழ்வில் கலந்து கொண்டு, கி.ரா. அவர்கள் கருத்துகளைத் தெரிவித்தார். அவருடைய ‘கிடை’ குறு நாவல், அவருடைய 96ஆம் வயதில் எழுதப்பட்டது. அதற்குப் பின் அவருடைய ‘மிச்சமிருக்கும் கதைகள்’ நூல் வெளிவந்தது. இப்படி இறுதிவரை இலக்கியம் குறித்து பேசிக் கொண்டும், இலக்கியப் படைப்புகளை அளித்துக் கொண்டும் இருந்தவர் கி.ரா. அவர்கள். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனக்கு பேராசிரியர் பதவி கிடைத்தபோது, வேண்டாம் என்று மறுத்தார். ஆனால் துணைவேந்தர் நேரிடையாக வந்து கேட்டுக் கொண்ட பின்பு ஏற்றுக்கொண்டு, நாட்டுப்புற இலக்கியம் குறித்து பல மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டினார்.

ஓர் எழுத்தாளரைப் போற்றுவது என்பது, அவரது எழுத்துகளை வாசிப்பது. ஓர் எழுத்தாளரை நினைவில் கொள்வது என்பது அந்த எழுத்தாளரின் படைப்புகளில் சிலவற்றையாவது படித்து மனதில் இருத்துவது. அந்த வகையில் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கும், தன்னுடைய எழுத்தால் ஒரு நூற்றாண்டின் சாட்சியமாகத் திகழ்ந்து மறைந்திருக்கும் கி.ரா. அவர்களின் படைப்புகளைப் படிப்பதோடு, மற்றவர்களுக்கும் அதனை சிறப்பாக எடுத்துக் கூறும் ஆண்டாகவும் இந்த ஆண்டை அமைத்துக் கொள்வோம்.


நன்றி உண்மை 01-06-2021