Sunday 16 May 2021

கல்வி நிலை : கல்வியும் மாநிலங்களும்.....

 உண்மை -இணையதளத்திற்குள் சென்று வண்ணப்படங்களுடன் படிக்க ;;;இணைப்பை கிளிக் செய்க

http://www.unmaionline.com/index.php/6059-kalviyum-manilangalum.html


திராவிடம் வெல்லும்’ என்னும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கூற்று மெய்யாகியிருக்கிறது. தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது தலைமையில் பதவி ஏற்றிருக்கும் அமைச்சரவைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் கல்வி. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே” என்னும் நயவஞ்சகத்தால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு தடுக்கப்பட்ட கல்வியை வழங்குவதற்காகத் திராவிட இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. ஒரு நூற்றாண்டு காலப் போராட்டம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்காக திராவிட இயக்கம் பட்ட பாட்டை, எடுத்துக்கொண்ட முயற்சியை, இடையில் இந்திய ஒன்றிய அரசு ஏற்படுத்தியிருக்கும் தடைகளை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தன் வயதில் இருக்கும் மற்ற இளைஞர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

திராவிடர் கழகத்தின் சார்பாக வெளியிடப்படும் புத்தகங்கள் காலத்தின் தேவையாகவும், கலங்கரை வெளிச்சத்தை மக்களுக்குக் கொடுப்பதாகவும் அமைகின்றன. கல்வியில் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, நீட் தேர்வினால் அனிதா போன்றவர்களின் இழப்பு என்று கடந்த சில ஆண்டுகளாக நாம் படும் துன்பங்கள் பல. தந்தை பெரியாரும் இன்றைய திராவிடர் கழகத்தலைவரும் ஒரு பிரச்சனையின் ஆணிவேரை ஆராய்ந்து, அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்பவர்கள், செய்பவர்கள். அந்த வகையில் கல்வியில் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கான காரணம், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, வஞ்சகமாக பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதுதான். அதனை 2011இல் காங்கிரசு மத்திய அரசாக இருந்த காலத்திலேயே சுட்டிக்காட்டி, அதற்காக ஒரு மாநாட்டினை (25.09.2011) நடத்தி, என்ன செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த மாநாட்டில் உரையாற்றிய சிறப்பு அழைப்பாளர்களின் உரைகளை யெல்லாம் தொகுத்து திராவிடர் கழகம் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ என்பதாகும்

100 ஆண்டுகளுக்கு முன், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய நமது கல்வி நிலையைப் பற்றிய புள்ளி விவரங்களை நமது இளைஞர்கள் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றைக்கும் வட இந்திய மாநிலங்கள் கல்வியில் பின் தங்கியிருக்க, அன்று மதராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பகுதிகள் கல்வியில் சிறந்து இருப்பதற்கான காரணம் என்ன என்பதனை உணர வேண்டும். நீதிக்கட்சி ஆட்சியில், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க உணர்வால் எழுந்த மாற்றங்களை உள்வாங்க வேண்டும். கதர் சட்டைக்குள் ஒரு கருப்புச்சட்டை என்று ஆனந்த விகடனால் அடையாளம் காட்டப்பட்ட பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், அவரைத் தொடர்ந்த திராவிட ஆட்சிகளில் கல்விக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், திட்டங்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வட இந்திய மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்ததற்கும், இன்று உலகம் முழுக்க மென்பொருள் போன்ற துறைகளில் பல தமிழர்கள் சாதனை புரிவதற்கும் அடிப்படை கல்வியே ஆகும். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’  எனத் தேடித்தேடிப் படிப்பதற்கான வசதிகளை, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம் ஆகும்.


ஆனால் இன்றைக்கு இந்திய அரசின் ‘புதிய கல்விக் கொள்கை’ போன்ற கொள்கைகளால் மிகப் பெரும் ஆபத்தினை எதிர் நோக்கியிருக்கிறோம். கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தி போல எந்த நேரமும் நம்மைப் போன்றோர் பெற்ற கல்வி வாய்ப்பினை நமது அடுத்த, அதற்கடுத்த தலைமுறை பெறமுடியுமா? என்னும் பெரும் கேள்விக்குறி நம்முன் நிற்கிறது. 3ஆவது வகுப்பில் தேர்வு, 5ஆம் வகுப்பில் தேர்வு, 8ஆம் வகுப்பில் தேர்வு, 10,11,12ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என மத்திய ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். உலகமெங்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வில் தோல்வியென்று சொல்லி, தேர்ச்சி பெறாமல் ஆக்குவது குற்றம் என்னும் கொள்கை வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் அதற்கு நேர் எதிரான மனப்பான்மை கட்டி அமைக்கப்படுகிறது. வடிகட்டி, வடிகட்டி மாணவர்களை, மாணவிகளைக் கல்வி பெறுவதில் இருந்து தடுத்து அவர்களை மீண்டும் குலத்தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இத்தனை தேர்வுகளுக்கான அடித்தளம் என்பதாகும். கொசுவை ஒழிக்க வேண்டுமென்றால், கொசு உற்பத்தியாகும் இடத்தை அழிக்க வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும் என்பது போல, பார்ப்பனியத்தை உள்வாங்கிய மத்திய அரசின் இத்தகைய போக்குகளை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு, கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்.

இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் ஆழ்ந்து படியுங்கள் என்று தலைப்பிட்டு அய்யா ஆசிரியர் அவர்கள் “மாநில அதிகாரங்களைப் பறிப்பது என்பது அரசியல் சட்ட வரைவுக் குழுவினர்களிடமே - அப்போதே மேலோங்கிய எண்ணமாக இருந்திருக்கிறது’’ என்பதனை விரிவாக விளக்கியுள்ளார். “மருத்துவக் கல்லூரிகள் சில மாநிலங்களில் போதுமான அளவில் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே மாநில அரசுகள் தங்கள் நிதியில் இருந்து கட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களைப் பறிப்பது நேர்மையானதுதானா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்தக் கரோனா காலத்தில் உத்தரப் பிரதேசத்திலும் ஏன் தலைநகர் தில்லியிலும் கூட மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதனை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுகாதாரத்திற்காக 17 சதவிகிதம் தனது பட்ஜெட்டில் அமெரிக்கா ஒதுக்கியிருக்க, இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கியிருப்பதோ வெறும் 3 சதவிகிதம். அதிலும் கரோனா சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் தன்னகத்தே வைத்திருந்த நடுவண் அரசு இப்போது, சுகாதாரம்  மாநிலப் பட்டியலில் வருகிறது என்று கூறுவதும், தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவுவதும் எவ்வளவு பெரிய கொடுமை. சுகாதாரத்தை அந்தந்த மாநிலங்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்லும் நடுவண் அரசு கல்வியை அப்படிச் சொல்ல மறுப்பது ஏன்? எனும் கேள்வி எழுகிறது.

இன்றைய பி.ஜே.பி. அரசு, 2014இல் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அவர்களின் தத்துவம் அப்படி. தத்துவத்தில் கோளாறு. ஆனால், கரோனா தொற்று பரவ ஆரம்பித்த சென்ற வருடத்தில், இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கால்நடையாகச் சென்று உழைக்கும் தோழர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் என்றே அழைக்கப் பட்டார்கள். ஒரு நாட்டிலிருந்து  இன்னொரு நாட்டிற்கு செல்பவர்கள்தாம் புலம் பெயர்ந்தோர் என்று அழைக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வேறுபாடு மாநிலத்திற்கு மாநிலம் காணப்படுகிறது. அய்யா ஆசிரியர் அவர்கள், “டில்லியில் உட்கார்ந்துகொண்டு அனைத்திந்திய அளவில் ஒரே சீரான முடிவு என்பதெல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும்? இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?” என்ற ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளார். பொதுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், மத்திய அரசுப் பட்டியல்களில் என்னென்ன இருக்கின்றன என்பதையும், எவையெவை மாநில அரசுப் பட்டியலில் இருந்தவை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்பதையும் அய்யா ஆசிரியர் அவர்கள் விரிவாக ஓர் ஆவணமாக இந்த நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். நமது கழகப் பேச்சாளர்கள் ஆவணமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ எனும் நூலில் அய்ந்து ஆளுமைகளின் உரைகளின் தொகுப்பு இருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள், தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், மேனாள் துணைவேந்தர் முனைவர் அ.இராமசாமி அவர்கள், தமிழ்நாடு திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் அவர்கள்  என்னும் இந்த அய்ந்து ஆளுமைகளின் உரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ என்பதற்கான அடுக்கடுக்கான வாதங்களை எடுத்துவைத்து, இந்திய ஒன்றிய அரசிடம் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

புள்ளி விவரப் பட்டியல் அடிப்படையில் பெண் கல்வி என்று எடுத்துக் கொண்டால், இந்தியாவில் முதன்மை மாநிலங்களாக கேரளா, தமிழ்நாடு வருகிறது. மிக மோசமாக பெண் கல்வி உள்ள மாநிலமாக பிகார் உள்ளது. அதைப்போல ஆண்கள் கல்வி மிக மோசமாக உள்ள மாநிலமாக இராஜஸ்தான் உள்ளது. வட மாநிலங்கள் கல்வியில் முன்னேறி வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பெண்களுக்கான கல்வி என்பது மிக மோசமாக வட மாநிலங்களில் உள்ள நிலைமையில் அவர்களை முன்னேற்றுவதற்குப் பதிலாக, கல்வியில் நல்ல நிலைமையில் உள்ள தமிழ் நாட்டினைப் போன்ற மாநிலங்களைப் பின்னே இழுக்கும் வேலையை இந்திய ஒன்றிய அரசு செய்கிறது. இதனைத் தடுப்பதற்கு  மாநிலப் பட்டியலுக்கு கல்வி வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கல்விதான் முன்னேறுவதற்கான ஏணிப்படி என்பதனை திராவிட இயக்கம் உணர்ந்து செயல்படுத்தியது. ஜாதி ஒழிப்பிற்கான முதன்மை வழியாக சமூக நீதியை நடைமுறைப்படுத்தியது. கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதை அடிப்படையாக வைத்து சமூக நீதியையும், அனைவருக்கும் தரமான கல்வி என்பதையும் குழிதோண்டிப் புதைக்கும் வேலையில், ‘புதிய கல்விக்கொள்கை’ என்பதனை இந்திய ஒன்றிய அரசு எடுத்திருக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது தி.மு.கழகத்தின் கொள்கையாகும். ஆகஸ்ட் 1, 2020இல் இன்றைய முதல்வர், தி.மு.க.வின் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்ற  மாவட்டச் செயலர்கள், எம்.பி.,- எம்.எல்.ஏ.க்கள், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இன்றைக்கு தமிழ்நாட்டின் தேர்தல் முடிவும், மேற்கு வங்காளம், கேரளா தேர்தல் முடிவும் இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அகில இந்தியாவிற்கும் வழிகாட்டும் தலைவராக உயர்ந்து நிற்கின்றார். அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து ‘கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர ‘முயற்சிகள் எடுப்பார் என்னும் நம்பிக்கை நமக்கு இருக்கிறது. திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இந்தியாவின் பல மாநிலத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் அழைக்கப்பட்டு, 2011இல் நிகழ்த்தியது போலவே ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?” என்னும் மாநாடு ஆங்கிலத்தில் நடத்தப்படலாம். அதன் மூலம்  “திராவிடம் வெல்லும்! அதனை எதிர்காலமும் சொல்லும்!’’ என்பதனை உணரலாம். 


நன்றி :உண்மை மே-1-15,2021














1 comment:

முனைவர். வா.நேரு said...

"உண்மை மே திங்கள் இதழின் கட்டுரை மிகச் சிறப்பான படைப்பு!
நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் ஆணிவேரே கல்விதான். மனித குலத்தின் வளர்ச்சிக்கே அதுதான் முதன்மைக் கருவி. இதனை ஆரியமும் மிகத் தெளிவாக உணர்ந்துதான்! மீண்டும் மீண்டும் நமது திராவிட இயக்கத்தின் வளர்ச்சியின் அடைப்படையை சிதைக்க நினைக்கிறது! தற்போது புதிய கல்விக் கொள்கை என்ற கொடிய நச்சுக் கொள்கையை திணிக்க நினைக்கிறது! அய்யா தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் நூற்றாண்டு கடந்து இன்றும் தொடர்கிறது! திராவிடம் வெல்லும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முழக்கம் இன்று வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது!
தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தலைமையில் தொடர்ந்து போராடி கல்வியையும் சமூக நீதியையும் பாதுகாப்போம்! திராவிட இனத்தின் நலனை மீட்டெடுப்போம்! திராவிடம் தொடர்ந்து வெல்லும்!".

முக நூலில் அண்ணன் அ.செல்லப்பாண்டியன் அவர்கள்,தொலைதொடர்பு தொ.மு.ச.வின் அகில இந்தியப் பொருளாளர்.

எனது பதில்
அண்ணே,மிக்க நன்றி...உங்கள் உற்சாகமான சொற்கள்,பாராட்டு மேலும்,மேலும் எழுதத் தூண்டுகிறது.