Friday 4 June 2021

சிந்தனைக் கட்டுரை : ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்....முனைவர் வா.நேரு

முழுமையாக ,படங்களுடன் வாசிக்க உண்மை இணையதளம்:

http://www.unmaionline.com/index.php/6079-oru-nutrandil-eluthu-satsiyam.html 


தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பதித்த  கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 17.5.2021 அன்று மறைந்திருக்கின்றார். நூறு ஆண்டுகள் தொட்டுவிட ஒரே ஓர் ஆண்டும் சில மாதங்களும்  இருந்த நிலையில் கி.ரா. இயற்கை எய்தியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்’ என்று தலைப்பிட்டு, எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவிற்கு மிகச் சிறப்பான இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். (‘விடுதலை’ 18.5.2021). புதுச்சேரியில் மறைந்த கி.ரா. அவர்களுக்கு புதுச்சேரி அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தி, உடல் தமிழகத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கி.ரா. அவர்களின் சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில், குண்டுகள் முழங்க, அரசு மரியாதையோடு அவருக்கு இறுதி நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு கோவில்பட்டியில்  சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல; “கி.ரா படித்த இடைச்செவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அவருடைய படைப் பாளுமையை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்“ என்றும் மாண்புமிகு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஓர்  எழுத்தாளன் என்கிற வகையில், ஓர் எழுத்தாளர் கி.ரா.விற்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரிய மனநிறைவை நமக்கு அளிக்கிறது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், கி.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஒப்பிடும் போது சில ஒற்றுமைகளைக் காண்கின்றோம். இருவரும் 35 வயதிற்கு மேல் தாங்கள் எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்கு வந்தவர்கள். தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு பிறந்தவர். 1915-களுக்குப் பிறகுதான் பொது வாழ்வுக்குள் வருகின்றார். ஆனால் 95 ஆண்டு காலம் வாழ்ந்து யாரும் எட்ட முடியாத பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகப் புகழ் பெற்றார். தொண்டு புரிந்தார். மக்கள் மனதில் நின்றார். அதனைப்போலவே 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் பிறந்தவர் கி.ரா. அவர்கள். தன்னுடைய முதல் கதையை 1958இல் தான் எழுதுகிறார். அன்றைய ‘சரஸ்வதி’ இதழில்  வெளிவருகிறது. 1958இல் தொடங்கி தனது இறுதிவரை எழுத்துப் பணியை அவர் நிறுத்தவேயில்லை. தனது பணி எழுத்து என்று எடுத்துக் கொண்டபின், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்திருக்கின்றார். தந்தை பெரியார் தனது இறப்புக்கு முந்தைய சில நாள்களுக்கு முன் கூட எப்படி பேசிக் கொண்டிருந்தாரோ, அதனைப் போலவே எழுதிக் கொண்டும், இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தவர் கி.ரா.  ஆவார்.

தந்தை பெரியார் மூன்றாம் வகுப்புவரைதான் படித்தவர். கி.ரா. படித்தது 4ஆம் வகுப்பு வரை என்றும், ஏழாம் வகுப்பு வரை என்றும் இருவேறு செய்திகள் வருகின்றன. எப்படி இருந்தபோதிலும் அவர் ஏழாம் வகுப்பைத் தாண்டவில்லை என்பது உறுதியாகிறது. தந்தை பெரியார் தன்னைச்சுற்றி இருந்த சமூகத்தைப் படித்தார். இதற்கான காரணம் என்ன என்பதனைச் சிந்தித்தார். இதனைச் சீர்படுத்த பிரச்சாரமும் எழுத்துமே தனது வழி எனத் தீர்மானித்தார். அப்படித் தீர்மானித்த பிறகு தன்னுடன் யார் வருவார், தன்னை விட்டு யார் போவார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்  எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக இரவும் பகலும் பாடுபட்டார். ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ நிலைக்குத் தந்தை பெரியார் உயர்ந்தார்.

கி.ரா. அவர்கள் தனது 35ஆம் வயதில் எழுத ஆரம்பிக்கிறார். 99ஆம் வயதில் மறைந்திருக்கும் அவரின் படைப்புப் பட்டியல் நம்மைத்  திகைக்க வைக்கிறது. கண்ணிமை, மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு உள்ளிட்ட 24 தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், (சாகித்திய அகாடமி விருது பெற்றது), அந்தமான் நாயக்கர் என்னும் மூன்று நாவல்கள் வெளியிட்டிருக்கிறார். கிடை, பிஞ்சுகள் என்னும் தலைப்பில் குறுநாவல்கள். ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, புதுமைப்பித்தன், மாமலை ஜீவா. இசை மகா சமுத்திரம். அழிந்து போன நந்தவனங்கள், கரிசல் காட்டுக் கடுதாசி என்னும் தலைப்புகளில் அவரது கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. இது தவிர நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு, இதனைத் தவிர கரிசல் வட்டார வழக்கு அகராதி என்னும் சிறப்பான அகராதியினைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.


தந்தை பெரியார் படாத உடல் நோவு இல்லை. ஆனால், அந்த உடல் நோயினை உள்ளத்தில் எடுத்துக்கொண்டவர் இல்லை. தனது கடைசிக் கூட்டத்தில், சென்னையில் 19.12.1973 அன்று உடல் நோயினால், வலியினால் துன்பப்பட்டாலும், அந்தத் துன்பத்தை கண நொடியில் தாண்டிவிட்டு, இன இழிவினை ஒழிப்பதற்காக அவர் முழுங்கிய முழக்கம், எம்மைப் போன்று ஒலி நாடாவில் கேட்பவர்களின் கண்களிலேயே கண்ணீரை வரவைத்து, உணர்ச்சி மேலோங்கி நிற்கச் செய்கிறது. தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி போன்றவர்கள், அன்னை மணியம்மையார் போன்றவர்கள், அந்த நிகழ்விலே தந்தை பெரியாரின் உடன் இருந்தவர்கள் உள்ளத்திலே எத்தனை வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும் கூட நமக்காக அந்த வேதனையிலும் கர்ச்சனை செய்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கத்தின் குரல் நம்மை “இன்னும் வேலை செய்!’’ என்று அன்புக் கட்டளை இடுவதாகத்தான் எடுத்துக் கொள்கிறோம். உயர்ந்த நோக்கத்திற்காக தனது வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்களுக்கு நோய் அஞ்சத்தான் செய்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. எழுத்தாளர் கி.ரா. அவர்கள் காச நோயால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு திருமணமான போது அவருக்கு வயது 19. அவரது துணைவியார் பெயர் கணவதி அம்மாள். 19- வயதில் கி.ரா.வுக்கு திருமணம்  நடந்தபோதே அவருக்கு காச நோய் இருந்திருக்கிறது. காச நோய் உள்ள கி.ரா.வை. தைரியமாக மனமுவந்து திருமணம் முடித்துக் கொண்டதாக கணவதி அம்மாள் தெரிவித்திருக்கிறார். அன்னை நாகம்மையார் தனது கணவர் தந்தை பெரியாருக்கு செய்த பணிவிடைகள் போல கி.ரா.விற்கு கணவதி அம்மாள் பணிவிடைகள் செய்திருக்கிறார். காதலால் கசிந்துருகிக் கவனித்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினர்களை நன்றாகக் கவனித்து  விருந்தோம்பல் செய்திருக்கிறார். தன் கணவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற நேரத்தில், தனி ஆளாக நின்று சமாளித்து, தனது இரு பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார். (நன்றி: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்).


தன்னுடைய வாழ்க்கையிலிருந்து, தன்னுடைய இலட்சியத்தை அமைத்துக் கொண்டவர் தந்தை பெரியார். தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தனது வீட்டிற்கு வந்தடையும் பார்ப்பனர் களையும் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை, செல்வாக்கை உள்வாங்கிய தந்தை பெரியார் ஏன் எனச் சிந்தித்தார். பின் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார். கி.ரா.வைப் பொறுத்தளவில் அவர் ஒரு விவசாயி. இடைச்செவல் கிராமத்தில் நாற்பது வயதான நிலையில் தனது நிலத்திற்கு வரிகட்ட, தாசில்தார் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஏன் இந்தக் கதவு தனியாக நிற்கிறது என்று கேட்டிருக்கிறார். ஒரு விவசாயி கிஸ்தி (நில வரி) கட்டவில்லை. அதற்காக, அவரது வீட்டில் இருந்து கதவு பிடுங்கப்பட்டு இங்கு வந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதனை வைத்துத்தான், ‘அந்தக் கதவு’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அந்தக் கதைக்கான அடித்தளம் வாழ்வில் ஒரு விவசாயிக்கு ஏற்பட்ட நிகழ்வு. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்து கதைக் கருவை எடுத்துக் கொண்டவர் கி.ரா. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மொழிகளை, தனது கதைகளின் மொழியாக எடுத்துக்கொண்டவர் கி.ரா. அவரது  கதை மாந்தர்கள் கள்ளங் கபடமற்றவர்கள்.  எதார்த்தவாதிகள். பிழைக்கத் தெரியாதவர்கள். ஆனால், பெரிய மனதுக் காரர்கள். வட்டார வழக்கில் எழுதுவது எப்படி என்பதற்கான அகராதி கி.ரா ஆவார். இன்று பலர் வட்டார வழக்கு என்று எழுதுகின்றனர். ஆனால், அவையெல்லாம் கி.ரா.வின் வட்டார வழக்கு எழுத்துக்கு முன்னால் மிகச் சாதாரணமாக இருப்பதைப் படிக்கும்போது உணர்கின்றோம். அவரின் முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்‘ நாவலைப் படித்து முடித்தவுடன் அந்தக் கதைக்குள் இருந்து நாம் விடுபட நாள்கள் ஆகும். அப்படித்தான் அவரின் ஒவ்வொரு நாவலும் சிறுகதையும். 

இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில் மூட நம்பிக்கையைப் பரப்புவதிலேயே குறியாய் இருக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினரே கூட, பி.ஜே.பி.யைச் சார்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர், மாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா சரியாகிவிடும் என்றும், குஜராத்தில் மாட்டுச் சாணியில் குளியல் எடுத்தால் கரோனா சரியாகி விடும் என்றும் பொய்கள் பரப்பப் படுவதைப் பார்க்கின்றோம். மனிதர்களுக்கு ஏற்படும் கரோனாவைப் போல மாடுகளுக்கு ஏற்படும் தொற்றான கணை நோய் பற்றியும், தங்களுடைய கடவுள் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிட்டு மாடுகளுக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடும் மருத்துவர்களை, மனிதர்களைக் கேலி பேசும் அயிரக்கா, தொட்டணன் பாத்திரப் படைப்பும், எப்படி பாதிக்கப்படும் மக்களிடத்தில் மூட நம்பிக்கையைச் சிலர் பரப்புகிறார்கள் என்பதனைக் கதையாகச் சொல்லும் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கி.ரா.வின் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இந்தக் கரோனா காலத்தில், கரோனா பாதித்த தாயை வீட்டிற்குள் விடமாட்டேன் என்று சொல்லி, மகளும் மருமகனும் கதவைப் பூட்டிக்கொண்ட செய்தி சில நாள்களுக்கு முன் செய்தித்தாளில் வந்தது. அந்த நிலையில் மனிதர்கள், தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்குக்கூட எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள், ‘குடும்பத்தில் ஒரு நபரா’க நினைக்கிறார்கள் என்பதனை விவரிக்கும் கதை ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கதை.

தந்தை பெரியார், “தாகம் எடுப்பது போல, பசிப்பது போல, பாலியலும் ஓர் உணர்வு’’ என்றார். ஒரு உணவு விடுதியில் சென்று சாப்பிடுவது போல அது தனிப்பட்டவரின் விருப்பம் என்றார். கி.ரா. தனது  கதைகளில் பாலியல் என்பதும் ஒரு பசி என்பதனை மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் விரசமில்லாமல் மிக நளினமாகவும் எடுத்துச் சொன்னவர். அவரின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும் ‘ என்னும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு இதனை விரிவாகப் பேசும்.


திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல “தமிழகத்தின் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் என்னும் கிராமத்தில் பிறந்து, அம்மக்களின் பண்பாட்டை, வாழ்வியலைக் கதைகளாக்கி உலகெங்கும் உலவ விட்டவர். கரிசல் எழுத்துகளுக்கென்று களம் அமைத்தவர். தமிழின் மிகச் சிறந்த படைப்பாளியாகவும், படைப்பாளிகளை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பெரும் பங்காற்றியவராகவும் அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்டம், இடதுசாரி இயக்கம் என்று அரசியல் பாதைகளிலும் பயணம் செய்தவர். இறுதி வரைக்கும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியமாகத் திகழ்ந்தவர்” என்று சிறப்பாகக் குறிப்பிட்டு, அந்த ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம் தந்தை பெரியார் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதையும் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிக்கையில் குறிப்பிடுகின்றார். “திராவிட இயக்க எழுத்தாளர்களின் மீதான சிலரின் வன்மைப் பார்வைக்கு பார்ப்பனிய சிந்தனையே காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்காதவர். தந்தை பெரியாரின் மனித நேயத்தையும் சமூகப் பணியையும் போற்றி, ‘புதிய வழிகாட்டி’ என்று விளித்து மதித்தவர். மனதில் பட்டதை மறைக்கும் தன்மையின்றி உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர்” என்று கி.ரா. அவர்களைப் பற்றி புகைப்படம் போல விவரித்திருக்கின்றார்.

சில நாள்களுக்கு முன்னால், கோ.ஒளிவண்ணன் அவர்கள் நடத்திய ‘வாருங்கள் படிப்போம்‘ நிகழ்வில் கலந்து கொண்டு, கி.ரா. அவர்கள் கருத்துகளைத் தெரிவித்தார். அவருடைய ‘கிடை’ குறு நாவல், அவருடைய 96ஆம் வயதில் எழுதப்பட்டது. அதற்குப் பின் அவருடைய ‘மிச்சமிருக்கும் கதைகள்’ நூல் வெளிவந்தது. இப்படி இறுதிவரை இலக்கியம் குறித்து பேசிக் கொண்டும், இலக்கியப் படைப்புகளை அளித்துக் கொண்டும் இருந்தவர் கி.ரா. அவர்கள். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனக்கு பேராசிரியர் பதவி கிடைத்தபோது, வேண்டாம் என்று மறுத்தார். ஆனால் துணைவேந்தர் நேரிடையாக வந்து கேட்டுக் கொண்ட பின்பு ஏற்றுக்கொண்டு, நாட்டுப்புற இலக்கியம் குறித்து பல மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டினார்.

ஓர் எழுத்தாளரைப் போற்றுவது என்பது, அவரது எழுத்துகளை வாசிப்பது. ஓர் எழுத்தாளரை நினைவில் கொள்வது என்பது அந்த எழுத்தாளரின் படைப்புகளில் சிலவற்றையாவது படித்து மனதில் இருத்துவது. அந்த வகையில் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கும், தன்னுடைய எழுத்தால் ஒரு நூற்றாண்டின் சாட்சியமாகத் திகழ்ந்து மறைந்திருக்கும் கி.ரா. அவர்களின் படைப்புகளைப் படிப்பதோடு, மற்றவர்களுக்கும் அதனை சிறப்பாக எடுத்துக் கூறும் ஆண்டாகவும் இந்த ஆண்டை அமைத்துக் கொள்வோம்.


நன்றி உண்மை 01-06-2021

No comments: