Thursday, 28 October 2021

பெரும் துயரைக் கூட்டுகிறது....

 ஐம்பது  ஆண்டுகளுக்கு 

முன்னரே மரணம் என்றாலும்

அவரின் மரண நாள்

இன்றும் கூட பெரும்

துயரைக் கூட்டுகிறது....





நாட்கள் செல்லச்செல்ல 

துயரம் குறையும்..

உண்மைதான்..

ஆனால் 

மறந்து போன நினைவுகள்

எல்லாம் ஒட்டுமொத்தமாய்

பெரும்பாறையை 

மோதிக் கரைக்கும்

ஆற்று வெள்ள நீர் போல

மனதில் மீண்டும் மீண்டும் 

நினைவுகள் மோதும் நாளாய்

அவரின்  நினைவு நாள்...


பள்ளிக்கூடம் போன அப்பாவுக்கு

நெஞ்சு வலி....

டவுசர் போட்ட மைத்துனரோடு

பக்கத்து ஊரின்

மருத்துவமனைக்குச் சென்றவர்

பிணமாய்ப் போன 

கதையைச்  சொல்லவா ?


பிணமாய்க் கிடக்கும்

அக்காவின் கணவரை

தன் தாய்மாமனை

ஊருக்கு  கொண்டு செல்லும்

வழி அறியாமல்

அழுது தவித்து அல்லல்பட்டு

எங்கள் ஊருக்கு 

கொண்டு வந்து சேர்த்த

என் தாய் மாமன் கதை சொல்லவா?


பதின்மூன்று வயதில்

தாய்மாமனுக்கு வாக்கப்பட்டு

இருபத்து எட்டு வயதிற்குள்

ஐந்து குழந்தைக்குத் தாயாகி

திடீரெனக் கணவரைப் பறிகொடுத்து

கதிகலங்கி ...

பின்பு எதிர் நீச்சலில் 

எங்களை வளர்த்த எங்க 

அம்மாவின் கதை சொல்லவா?


அவர் உடல் 

உயிர் இல்லாது கிடந்த இடத்தில்

பசிக்கிறதே எனப் புரியாமல்

நான் அழுத கதை சொல்லவா?...


இறந்து கிடக்கும் அப்பா

இனி என்றும் நம்மோடு

இருக்க மாட்டார் எனும்

அறிதலின்றி

பாட்டுப் பாடிக்கொண்டே

நீர் மாலை எடுத்து 

வந்த கதையைச் சொல்லவா?


அப்பா இறந்த போன

சில நாளிலேயே....

கட்டி முடிக்கப்படாமல் கிடந்த

கார வீட்டினை 

முடிக்க எண்ணாமல்...

கட்ட வைத்து இருந்த

செங்கல்களை விற்பதற்கு 

ஆட்களைக் கூட்டி வந்த

உறவுகளைச்சொல்லவா ?...


எப்போதேனும்....

அப்பாவிடம்

படித்த மாணவர்கள்

அவரின் அருமைகளைச்

சொல்லும்போது .....

இவ்வளவு பெருமைக்குரிய அப்பா

இப்படி அகலாமாய் 

நம்மை விட்டுச்செல்ல 

வழிவகுத்த இயற்கையின்

கோணல் புத்தியை 

எண்ணி எண்ணி துயருறும்

நொந்த கதையைச் சொல்லவா?


ஐம்பது  ஆண்டுகளுக்கு 

முன் நிகழ்ந்த  மரணம் என்றாலும்

என் ஏழு வயதில் நிகழ்ந்த

என் அப்பாவின்  மரணம்

இன்றும் கூட பெரும்

துயரைக் கூட்டுகிறது....                                     


                             வா.நேரு   28.10.2021




No comments: