Wednesday 17 August 2022

14.08.2022 வாழ்க்கையில் ஒரு மறக்க இயலாத நாளாக ....

 14.08.2022 வாழ்க்கையில் ஒரு மறக்க இயலாத நாளாக ஆனது.ஆம்  நூற்றாண்டு காணும் ஆத்தூர் அய்யா வே.தங்கவேல் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதுதான்.பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத்தலைவர் தோழர் தமிழ்.பிரபாகரன் அவர்கள் 25 நாட்களுக்கு முன்பே ,அய்யா சிறப்பு அழைப்பாளர்களில் நீங்களும் ஒருவர்.தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்றார்.அய்யா ஆசிரியர் அவர்கள் வருகின்றார்,கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகின்றார்.அய்யா சுப.வீ. வருகின்றார்,எழுத்தாளர் மதிமாறன் வருகின்றார் என்றார்.கட்டாயம் வருகின்றேன் என்று சொல்லி முதல் நாள் இரவே ஆத்தூருக்குப் போய் இரவு தங்கி விட்டு,காலையில் ஆனந்தமாக ஒரு நடைப்பயிற்சி போய்விட்டு,பின்பு பெரியாரிய ஆய்வாளர் அய்யா பொ.நாகராசன் அவர்களோடு இணைந்து அய்யா வே.தங்கவேல் அவர்களின் கடைக்குச்சென்றோம்.100 வயது என்றால் கோல் ஊன்றி நடந்து கொண்டிருப்பார் என்று நினைத்து நான் போனேன்.அவரைப் பார்த்தவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி,ஆனந்தம் மனதில் எழுந்தது.துள்ளி எழும் காளை போல சுறுசுறுப்பாக கடையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.பார்த்தோம்.நம்மை விட வேகமாக நடக்கின்றார்.அவரோடு சேர்ந்து சிரித்தோம்.மகிழ்ந்தோம்.

நிகழ்வில் முழுக்க இருந்ததோடு அந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் நாலு தலைமுறையைச்சார்ந்தவர்கள் கறுப்புச்சட்டையோடும்,தந்தை பெரியார் கொள்கையோடும் அய்யா ஆசிரியர் போட்டுத்தரும் பாதையில் பயணிப்பதைக் கண்டு உற்சாகம் பெற்றோம்.அந்தப் பயண அனுபவம் பற்றி அய்யா பொ.நாகராசன் அவர்கள் எழுதியிருப்பதை இந்தத் தளத்தில் பதிவிடுவதில் மகிழ்ச்சியும்,பெருமையும்....

வா.நேரு, மதுரை

17.08.2022 





நூற்றாண்டு நாயகருடன்

 கழிந்த இனிய ஒரு நாள் !

****************************


●  பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட செயலாளர், ஆத்தூர், ஆசிரியர் அ. அறிவுச் செல்வம் ( அறிவு ) அவர்களின் தாத்தா, பெரியார் பெருந் தொண்டர், ஆத்தூர் வே. தங்கவேல் அய்யாவின் 100வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள என்னையும் அழைத்திருந்தார் .


●  நூற்றாண்டு விழா 14.08.2022 அன்று ஆத்தூரில் நடைபெற உள்ளதையும், அய்யாவை வாழ்த்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர். கி. வீரமணி, மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேராசிரியர் சுபவீ, எழுத்தாளர் மதிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்ய உள்ளதையும் தெரிவித்தார்.


●  பெரியாரியத்தை அறிந்து கொள்ள பெரியாரின் படைப்புகளும் பெரியார் பற்றிய படைப்புகளும் நமக்கு உதவலாம்.

பெரியாரியத்தை ஆய்வு செய்ய விரும்புவோர், பெரியாரின் தொண்டர்களையும், பெரியார் பெருந் தொண்டர்களையும் சந்தித்து அவர்களின் நேரடி அனுபவங்களையும் அவர்களின் பங்களிப்பையும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது .


●  அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை பெற வேண்டி, முதல் நாள் இரவே ஆத்தூரை சென்றடைந்தேன். என்னை பேருந்து நிலையத்தில் வரவேற்க அறிவும் அவர்களது தோழர்களும் வந்திருந்து மகிழ்ச்சியிலாக்கினார்கள்..

அவர்களோடு நூற்றாண்டு நாயகர் தங்கவேல் அய்யாவும் ஒரு ஸ்கூட்டரில் பின்னே அமர்ந்து, நேரில் வந்து வரவேற்றது கண்டு ஆடிப் போய்விட்டேன்..தந்தை பெரியார் தன்னை காண வருபவர்களை இப்படித்தான் வரவேற்றாரோ !


●  அருகே ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதியில் தங்கி விட்டு, மறுநாள் காலையிலே தயாராகி கிளம்பினேன். அந்த விடுதியில் தங்கியிருந்த முனைவர் வா. நேரு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மாநில தலைவர் அவர்களோடு நிகழ்ச்சி அரங்கத்திற்கு சென்றோம்.


●  நிகழ்ச்சி அரங்கம் தயாராகி கொண்டிருந்த அதே வேளையில் நிகழ்ச்சியின் நாயகர் தனது தினவழக்கப்படி தங்கள் சிறிய கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரை கடையில் வைத்தே சந்திக்க எண்ணி நானும் அய்யா நேருவும் கடைக்கு சென்றோம். எங்களோடு விருதுநகர் தோழர் நல்லதம்பியும் இணைந்து கொண்டார்.


●  தங்கவேல் அய்யாவை கடையில் சந்தித்து உரையாடினோம். அவரது கடையில் பாக்கு மரத்தாலான தட்டுகள், சிறிய கப்புகள் விற்பனைக்குள்ளன..அவரது கடைக்கு எந்த நாளும் விடுமுறை கிடையாதாம். " இன்றாவது விடுமுறை விடலாமே " என்று கேட்டுப் பார்த்தேன்.. சிரிப்பு ஒன்றே பதிலாக தந்தார். அந்த கடையை 1952 லிருந்து வாடகை கொடுத்து நடத்துகிறார். அய்யா உட்கார்ந்திருக்கும் நாற்காலி அதற்கு முன்னரே வாங்கியதாம் !

ஆச்சர்யப்பட்டு போனேன்.. பெரியாரின் சிக்கனம் இது தானோ ?


●  நூற்றாண்டு விழா ' அண்ணா அரங்கம் ' நிரம்பி வழிய - அய்யா தங்கவேலுவின் குடும்ப உறவுகளும் கொள்கை உறவுகளும் இணைந்து சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துகளோடு நினைவில் கொள்ளதக்க வகையில் விழா நடந்தேறியது.. விழா நாயகருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. மதியம் நடைபெற்ற சிறப்பு விருந்திற்குப்பிறகு எல்லோரும் விடை பெற்றனர்..


●  மாலையில் அய்யாவை சந்திக்க அவரது கடைக்கு சென்றேன். கடையில் அவரின் நண்பர்கள் எப்போதும் மூன்று நான்கு பேர் அமர்ந்து உரையாடிக் கொண்டே இருப்பார்களாம். அவர்கள் அங்கு வந்த வேளையில் படிப்பதற்காக தினமும் ' விடுதலை ' நாளிதழ் வந்து விடுகிறது. அய்யாவை பொருத்தவரை அடுத்தவர்களை பேச விட்டு இவர் அமைதியாக கேட்கிறார்..என்னை கண்டவுடன் தனது நண்பர்களுக்கு இவர் ' பொன். நாகராஜன். ' என அறிமுகம் செய்து வைத்தார்.


●  அய்யாவிடம் அவர் பெரியார் பேச்சை கேட்ட முதல் அனுபவத்தை பற்றி கேட்டறிந்தேன் . அய்யா கூறுகிறார் - " நான் எனது 29 வயது வரை தீவிர பக்திமானாக இருந்தேன். பெரியாருக்கு எதிரி என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை பெரியார் ஆத்தூருக்கு பொதுக் கூட்டத்திற்கு பேச வந்தார். அந்த கூட்டத்தில் கலாட்டா நடைபெறும் என அறிந்து அதை வேடிக்கை பார்க்க சென்றேன். பெரியாரோ இரண்டு மணி நேரம் பேசினார். எல்லோரும் பெட்டிப் பாம்பாய் அடங்கி கிடந்தார்கள். வெறுப்பாகி போகி, கலவரம் ஒன்றும் நடைபெற வில்லையே என ஏமாற்றத்துடன் கிளம்ப ஆரம்பித்தேன்..


●  பெரியார் தனது உரையை நிறைவு செய்யும் போது ' என் பேச்சை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம் ! உங்களுக்கு சரியாக பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் விட்டுத் தள்ளுங்கள் ' என்றார். அப்போது அப்படியே திரும்பினேன். இப்படியும் ஒரு தலைவர் பேசுவாரா ? என அதிசயத்துப் போனேன். அன்றிலிருந்து பெரியார் தொண்டரானேன் " என்று உற்சாகமாக எடுத்துச் சொன்னார்..


●  ஒரே ஒரு முறை கேட்ட பெரியாரின் உரை ஒரு தீவிர பக்தனை நாத்திகனாக மாற்றியிருக்கிறது ! இதை அதிசயம் என்பதா அல்லது அறிவாயுதம் என்பதா ? அதனால் தான் இந்த மண்ணின் பெயர் பெரியார் மண்ணோ !..


●  தங்கவேல் அய்யாவுடன் இன்னமும் அதிகமாக பேசி உறவாட எண்ணி அன்று இரவு தோழர் அறிவின் இல்லத்தில் தங்கினேன். மறுநாள் காலையில் அய்யாவுடன் அறிவு தனது காரில் தங்கள் தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அய்யாவும் அவரது துணைவியாரும் சிறுக சிறுக சேர்த்து வைத்து வாங்கிய தோட்டங்கள்..


●  தங்கவேல் அய்யா தனது நூறாண்டு வாழ்வின் ரகசியமாக சொன்னது - ஒழுக்கம்; சிக்கனம்; சுயமரியாதை ..இந்த மூன்றின் காரணமாகவேயே அவர் பொருளீட்ட முடிந்தது.. நீண்ட ஆயுளையும் பெற முடிந்தது. 

அவர் எளிமையின் சின்னம் !


●  திரும்பும் வழியில் திராவிடர் கழக நகரத் தலைவர் அண்ணாதுரை இல்லத்திற்கு சென்றோம். ஆத்தூருக்கும் திராவிடர் கழகத்திற்கும் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வரும் உறவை விளக்கினார்.. தங்கவேல் அய்யாவின் கொள்கைப் பற்றை விளக்கினார். கட்சி பேதமில்லாமல் எல்லோரிடமும் இனிமையாக பழகுவதை கூறினார்.. எதற்கும் அசர மாட்டார் என்றும் கூறினார்.


●  ஆத்தூர் தங்கவேல் அய்யாவிடமிருந்து விடை பெறும் நேரம் வந்தது.. அவரது கையைப் பற்றும் போது எனது மூத்த உறவின் கையை பற்றுவது போல இருந்தது. தந்தை பெரியாரின் கைகளை பற்றியது போல இருந்தது !


●  பெரியாரியத்தை புத்தகங்களில் அறிந்து கொள்ளலாம். ஆய்ந்து தெளிவதற்கு பெரியாரின் தொண்டர்களின் கரம் பிடித்து பார்க்க வேண்டும்.. அவர்கள் தரும் அனுபவ பாடங்களை காது கொடுத்து கேட்க வேண்டும் ..என்ற பட்டறிவு நமக்கு கிடைக்கிறது..


●  " நீங்கள் மீண்டும் வர வேண்டும் " என தங்க வேல் அய்யா என்னிடம் கூறினார்.." உங்களது 101 பிறந்த நாள் விழாவிற்கும் வருவேன் ! " ..என கூறி விடை பெற்றேன்.. 

அப்போது என் தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியது போல இருந்தது !


●  உலகத்திலேயே இப்படி ஒரு கொள்கை உறவை தந்தை பெரியார் அமைத்து தந்தது போல வேறு யாரும் தந்து செல்லவில்லையே !..


●  ஆத்தார் வே. தங்கவேல் அய்யா இன்னமும் பல ஆண்டுகள் வாழ்ந்து எல்லோருக்கும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் !


●  தோழர். ஆசிரியர் அ. அறிவுச்செல்வமும் அவரது குடும்பத்தாரும் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள் !


பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்.

சென்னை. 17.08.2022.

**************************************

2 comments:

Anonymous said...

இனிய வாழ்வியல் கட்டுரை. பெரியார் கொள்கையின் வெற்றியின் ஒளி.

முனைவர். வா.நேரு said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்