இரவு நேர ஸ்டடிக்கு வந்த இருபால் மாணவர்கள்...
என்னுடைய ஆசிரியர் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் தனது பண்ணைக்காடு அனுபவத்தைத் தொடர்ந்தார்.
"தலைமை ஆசிரியர் சமூக அறிவியல் பாடம் 11-ஆம் வகுப்பிற்கு எடுக்க வேண்டும்.மேப்-எல்லாம் காட்ட வேண்டும்.சரியாக நடத்துவதில்லை,மேப் எல்லாம் காட்டுவது இல்லை என்று என்னிடம் மாணவர்கள் சொன்னார்கள்.பண்ணைக்காடு அரசுப் பள்ளியில் பெரிய ஆய்வகம் இருந்தது.12 பீரோ முழுக்கப் புத்தகங்கள் இருந்தது.நூலகம் இருந்தது.குளோப்,அட்லஸ்,ஏராளமான புத்தகங்கள் என இன்றைக்குத் தனியார் பள்ளியில் உள்ள அத்தனை வசதிகளும் இருந்தது.ஆனால் அவை மாணவ-மாணவியர்களுக்குப் பயன்படவில்லை.தலைமை ஆசிரியரிடம் தனியாகப் பேசப்போனேன்.உட்காரச்சொன்னார்.முதலில் எல்லாம் நிற்க வைத்துத்தான் பேசுவார்.பாடம் நடத்தாமல் இருப்பதைச்சொன்னவுடன் 'ஆமாம்' என்றார். ' எனக்கு நிர்வாகம் பார்க்கத்தான் நேரம் இருக்கிறது."என்று சொன்னார்.இன்னொரு சமூக அறிவியல் ஆசிரியரும் அந்தப் பள்ளியில் இருந்தார்."அவரையும் கொஞ்சம் நிர்வாக வேலையைப் பார்க்கச்சொல்லுங்கள்.அவரையும் கொஞ்சம் பாடம் நடத்தச்சொல்லுங்கள் " என்று சொன்னேன்.ஏற்றுக்கொண்டார்.மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தப்பட்டது.
பண்ணைக்காடு பள்ளிக்கு அன்றைக்கு மின் இணைப்பு இல்லை.என்னிடம் தலைமை ஆசிரியர் கேட்டார்.அரசுக்கு எழுதச்சொன்னேன்.அரசுக்கு,அலுவலகப் பணியாளர்களுக்கு 90 சதவீத தலைமை ஆசிரியர்கள் அடிமைகளாக அன்றைக்கு இருந்தார்கள்.ஏதாவது வேண்டும் என்று கேட்டு எழுதுவது குற்றம் என்று நினைத்தார்கள்.இல்லை அது குற்றம் இல்லை, நமக்குத் தேவையானதை நாம் மேலே இருப்பவர்களுக்குத் தெரியப் படுத்தவேண்டும்,அப்போதுதான் அந்தத் தேவை நிறைவேற்றப்படும் என்பதைச்சொன்னேன்.ஆசிரியர்களுக்காக கட்டப்பட்ட டாய்லெட் டேங்க் எல்லாம் நிரம்பிவிட்டது.தலைமை ஆசிரியரை விடாமல் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதச்சொன்னேன்.எழுதினார். உடனே அது சரி செய்யப்பட்டது.
மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் விளையாட்டு மைதானத்தில் விளையாட ஆரம்பித்தோம்.கல்லூரி வரை நான் கற்றுக்கொள்ளாத இரண்டு விளையாட்டுக்களை பண்ணைக்காட்டில் நான் கற்றுக்கொண்டேன்.ஒன்று பேட்மிட்டன்.அற்புதமான பொழுதுபோக்கு.வேறு எங்கும் போகவேண்டாம்.உடற்பயிற்சி ஆசிரியர் கெட்டிக்காரர்.விளையாடுவதற்கு மைதானத்தை சரி செய்தார்.சுத்தமாகி விட்டது. எல்லோரும் விளையாடினோம்.
பண்ணைக்காட்டில் நிறையக் ஃகாபி விளைகிறது.ஃகாபி விற்பனை மேனேஜர் ஒருவர் பண்ணைக்காட்டில் இருந்தார்.கேரளத்துக்காரர்.ஓய்வு நேரத்தில் பள்ளிக்கு பேட்மிட்டன் விளையாட வருவார்.ஒரு நாள் எங்களை எல்லாம் வற்புறுத்தி அவர் இருக்குமிடத்திற்கு அழைத்துச்சென்றார்.பட்டதாரி ஆசிரியர்கள் அங்கு போனோம்.
அவர் தங்கியிருந்த வீடு பெரிய வீடு.200 அடி நீளம் ,30,40 அடி அகலம் உள்ள ஒரு பெரிய அறையின் ஒரு பகுதியில் டேபிள் டென்னிஸ் போட்டு வைத்திருந்தார்.அவர் கூட விளையாட யாருமில்லை.எங்களை அழைத்துச்சென்று காண்பித்து விளையாட வரச்சொன்னார்.கற்றுக்கொண்டேன்.காலையில் டேபிள் டென்னிஸ்,பகலில் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள்,மாலையில் பேட்மிட்டன் எனப் பொழுது அற்புதமாகப் போனது.
பள்ளி ஆண்டு விழாவிற்கு அந்த மேனேஜரைக் கூப்பிட்டோம்.வந்தார்.நான் ஒரு கோரிக்கை, பேசும்போது வைத்தேன்.டேபிள் டென்னிஸ் இங்கே பள்ளிக்குக் கொடுத்தால் பையன்களும் விளையாடுவார்கள் என்று சொன்னேன்.கொடுத்துவிட்டார்.அன்றைக்கு அது ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புப் பெறும்.காஸ்ட்லி.அவரே ஆட்களை வைத்து கொண்டு வந்து பள்ளியில் மாட்டிவிட்டார்.தலைமை ஆசிரியரும் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வந்து கலந்து கொள்ள ஆரம்பித்தார்.எல்லோரும் மாணவர்கள் உட்பட பலர் கற்றுக்கொண்டனர்.விளையாடினோம்.
மாணவர்களின் நன்மைக்காகக் கேட்போம்.கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்.கொடுக்கவில்லையெனில் பரவாயில்லை,நாம் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை என்னும் மனப்போக்கு உண்டாவதற்கு காரணமாக அந்த நிகழ்வு அமைந்தது.
மின்சாரம் இணைப்பு வேண்டும் என எழுதிக் கேட்டதால் ,மின் இணைப்பு பள்ளிக்குக் கிடைத்தது 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஸ்டடி வைக்கவேண்டும் ' என்று ஆசிரியர்கள் கூட்டத்தில் நான் தான் சொன்னேன்.பொதுத்தேர்வுக்கு படிக்கவைப்போம் என்றேன்.உள்ளூர் ஆசிரியர்களுக்கு இதில் விருப்பம் இல்லை.சிலர் 50 ஏக்கர்,60 ஏக்கர் ஃகாபித் தோட்டம் வைத்திருப்பவர்கள்.பிள்ளைகள் வருவார்களா?பெற்றோர்கள் ஒத்துக்கொள்வார்களா? என வினாக்களை எழுப்பினார்கள்.
'ஸ்டடி வைத்தோம்'.பிள்ளைகள் எல்லோரும் வந்தார்கள்.கோ-எஸுகேசன்,இருபாலர் படிக்கும் பள்ளி. இருபாலரும் ஸ்டடிக்கு வந்தார்கள்.பண்ணைக்காட்டில் 3 மாதம் இரவும்,பகலும் மழை பெய்யும்.மழையில் குடையைப் பிடித்துக்கொண்டு ஸ்டடிக்கு வந்தார்கள்.பள்ளி மாலையில் முடிந்தவுடன் ,ஒரு மணி நேரம் நாங்கள் விளையாடுவோம்.அந்த நேரத்தில் பிள்ளைகள் வீட்டிற்குப் போய்விட்டு ஸ்டடிக்கு வந்து விடுவார்கள்...."
இந்த நேரத்தில் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சாரின் அணுகுமுறையைச்சொல்ல வேண்டும். எவரிடமும் எதனையும் சொல்லத் தயங்க மாட்டார்.பயப்பட மாட்டார். ஆனால் அதனைச்சொல்லும் விதம் மிகவும் பணிவாகவும் ,எந்த விதமான உள் நோக்கம் இல்லாததாகவும் இருக்கும். யாரிடமும் பொது நலன்,மாணவர்கள் நலன் கருதிப் பேசலாம்,அணுகலாம் என்பதே அவரின் அணுகுமுறையாக இருந்தது.
1961-62-களில் இந்த இரவு நேர ஸ்டடி என்பதை ஆரம்பித்த எங்கள் வீரிசெட்டி சார்,ஆசிரியர் தனது ஆசிரியர் பணி முழுவதும் இதனைத் தொடர்ந்திருக்கின்றார்.1979-ல் அவரிடம் மாணவனாகப் படித்த நான் இன்றும் ,2023-ல் அவரை நினைவில் வைத்திருப்பதற்குக் காரணம் இந்த இரவு நேர ஸ்டடிதான்.காலையில் மாடுகளுக்குத் தீவனம் போடுவது,அதன் சாணியை அள்ளிப்போடுவது என்று மாடு சார்ந்த வேலைகள்,பின்பு காட்டு வேலைகள்,வீட்டு வேலைகள் என்று படிப்பதோடு சேர்த்து பல வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.எங்கள் வீட்டில் கரண்ட் இணைப்பு இல்லாத காலம். வீட்டில் ஹரிக்கேன் லைட்டுகள் இருந்த காலம். அப்போது.அந்தக் காலத்தில் மின் விளக்குகளை எங்கள் ஊர் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் ஏற்படுத்தி,தினமும் இரவு 7 மணி முதல் 9 வரை படிக்கும் நேரம் என்று எங்களைப் பழக்கப்படுத்தியவர் எங்கள் தலைமை ஆசிரியர்.எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல்,அவரின் மேற்பார்வையில்,இரவு நேரத்தில் தினந்தோறும் பாடங்களைப் படித்த பலனாகத்தான் நல்ல மதிப்பெண்களை நான் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கமுடிந்தது. என்னோடு படித்த எங்கள் ஊர் நண்பர்களும் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற அடிப்படையாக அமைந்தது
இந்த இரவு நேர ஸ்டடி என்பது முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் சார்ந்தது.வகுப்புகள் முடிந்தபின்பு, மாணவர்களோடு 2,3 மணி நேரம் செலவழிப்பது,எந்த விதமான பணபலனும் எதிர்பார்க்காமல் எத்தனை பேரால் முடியும் என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண் மாணவர்களும்,பெண் மாணவிகளும் வந்து பண்ணைக்காட்டு அரசுப் பள்ளியில் இரவு நேர ஸ்டடியில் படித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய செய்தி. எத்தனை பேருக்கு ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொடுப்பதாக,அதிக மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பாக இந்த இரவு நேரப் படிப்பு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது....
(தொடரும்)
2 comments:
தன் மாணவர்களின் மேன்மையை மட்டுமே கருத்தாய்க் கொண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியரால், தம் வாழ்வு மேம்பட்டது என்ற நன்றியுணர்வின் உந்துதலால், பலரும் பயன்பெற இவ்விலக்கியம் மலர்கிறது!
வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றிங்க அம்மா..
Post a Comment