Saturday 10 June 2023

நெருப்பினுள் துஞ்சல்...நூல் விமர்சனம் - க்ரிஷ்பாலா

மதுரை தியாகராசர் கல்லூரியின் மாணவர் க்ரிஷ்பாலா..மாணவப்பருவத்திலேயே ஒரு நாவல் எழுதிய பெருமைக்குரியவர்.தொடர்ச்சியாக மிக ஆர்வமாக வாசிப்பவராக இருக்கிறார். எனது சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுதி இண்ஸ்டாகிராம் பதிவாகப் பதிவிட்டிருந்தார். நன்றியும் மகிழ்ச்சியும் க்ரிஷ்பாலா.இனி அவரது பார்வையில் ' நெருப்பினுள் துஞ்சல் ' 


நூல் விமர்சனம் - க்ரிஷ்பாலா

நூல் - நெருப்பினுள் துஞ்சல்
ஆசிரியர் - வா.நேரு

• சிறுகதைகளில் எனக்கு பெரிதாக நாட்டம் கிடையாது.காரணம் நான் படித்த சிறுகதை புத்தகங்கள் எல்லாம் என்னை ஏமாற்றவே செய்தன.

 சிறுகதைகளின் மீதான என் ஆர்வத்தை குறைத்தன. அதனாலேயே அதை படிக்காமல் நாவல், குறுநாவல், கட்டுரைகளையே பெரும்பாலும் படிப்பேன்.

• வேறு எந்த ஒரு புத்தகமும் புதிதாக படிக்க இல்லாததால் என் அலமாரியில் ஒரு மாதமாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை தூக்கத்திலிருந்து எழுப்பும் சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
 எதார்த்தமாக அதை படிக்கவும் ஆரம்பித்தேன். அதுதான் “நெருப்பினுள் துஞ்சல்”

• மொத்தம் 13 கதைகள் கொண்ட ஒரு சிறுகதை தொகுப்பு தான் இந்த புத்தகம். ஒவ்வொரு கதையையும் படிக்கும் போது தான் உணர்ந்தேன், எப்படி இவ்வளவு அருமையான புத்தகத்தை படிக்க மறந்தேன் என்று. என் வாசிப்பு பயணத்தில், ஒரு சிறுகதை தொகுப்பை படித்துவிட்டு நான் பிரம்மிப்படைந்தது இதுவே முதன்முறை.

• பொதுவாக நான் வாசித்த சிறுகதை தொகுப்புகளில் ஏதாவது ஒன்றிரண்டு கதைகள் தான் நன்றாக இருக்கும். ஆனால் நேரு ஐயாவின் இந்த நெருப்பினுள் துஞ்சல் என்னும் சிறுகதை தொகுப்பில் உள்ள 13 கதைகளும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது.

• “சீர சுமந்து அழிகிற சாதிசனமே” என்ற கதை இத்தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான ஒரு கதை. ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ அல்லது காதுகுத்து நிகழ்ச்சிக்கோ நாம் செல்லும்போது மொய் வாங்குவதை பார்த்திருப்போம்.

 லட்சக்கணக்கில் வசூலான மொய்ப்பணத்தை வைத்து பல ஆண்டுகள் செல்வ செழிப்பாக வாழ்ந்து கொள்வார்கள் என இவ்வளவு நாட்களாய் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 
ஆனால் இந்த கதையை படித்த பிறகு தான் தெரிந்தது. மொய்ப்பணம் அனைத்தும் வட்டியில்லாமல் வாங்கும் கடன் என்று. என்றாவது ஒருநாள் திருப்பி அந்த மொய் பணத்தை ஏதாவது ஒரு விழாவில் மொய் செய்தே ஆக வேண்டும் என்றும் அப்படி திருப்பி மொய் செய்ய வழி இல்லாமல் எத்தனையோ பேர் தலைமறைவாகிறார்கள் என்றும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் இந்த கதை உணர்த்தியது.

• தனக்கு செய்த மொய்ப்பணத்தை விட அதிகமான மொய்ப்பணம் திருப்பி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் போது சமூகத்தில் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக ஆழமாக அழுத்தமாக இந்தக் கதை பேசுகிறது.

• அடுத்ததாக “நெருப்பினுள் துஞ்சல்” என்னும் கதை. 500 ரூபாய் சம்பாதிக்க பல மணி நேரம் அடுப்பில் வேலை செய்யும் புரோட்டா மாஸ்டர் வெற்றி திடிரென உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் படுத்துக் கொள்கிறான். மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்கக்கூட வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் புரோட்டா மாஸ்டர் வெற்றியைப் பற்றியும் அவனது குடும்ப சூழலை பற்றியும் இந்த கதை பேசுகிறது.

எனது அப்பாவும் ஹோட்டலில் வேலை பார்ப்பதால் கதையில் வரும் வெற்றி என்னும் கதாப்பாத்திரத்தை படிக்கும் போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் அதிகம் வந்தது. இந்த கதை எனக்கு மிக நெருக்கமான ஒன்றாக இருந்தது.

• அதேபோல “யார் யார் வாய் கேட்பினும்” என்கிற கதையில் பேசப்பட்டுள்ள சமூகப் பிரச்சினையை குறித்து நானும் பலமுறை யோசித்ததுண்டு. இயற்கைக்கு காதல் தெரியும். திருமணம் தெரியாது. திருமணம் என்பது நாம் கட்டமைத்த ஒன்றுதான். அதற்கு ஜாதகம் பார்த்து பத்து பொருத்தமும் பொருந்தினால் தான் திருமணம் என்னும் போது அங்கு உண்மையான காதல் தோற்றுப்போகிறது.ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றாக புரிந்து கொண்டு உண்மையான காதல் இருந்தால் போதாதா! பத்து பொருத்தமும் இருந்தால் தான் திருமணம் செய்ய வேண்டுமா? என ஜாதகம் பார்த்து திருமணம் நிகழ்வதை குறித்த மூடநம்பிக்கைகளை இந்த கதை மிக ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

• அடுத்ததாக “எங்களுக்கு தேவை என்றால்” என்ற கதை. பள்ளி கல்லூரிகளிலும் நமது குடும்பத்திலும் பரப்பப்படும் மதக் கொள்கைகளை பற்றி பேசுகிறது. கதையில் வரும் “மாசறுபொன்” என்னும் சிறுமியின் அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் ஒரு மாதமாக ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக கிடக்கிறார். சாமிக்கு தினமும் விளக்கு போட்டால் அப்பாவிற்கு குணமாகிவிடும் என்று சாமியார் சொல்வதைக் கேட்டு அம்மாவின் கட்டளையின்படி தினமும் அந்த சிறுமி விளக்கு போடுகிறாள்.

• இன்னொரு பக்கம் அவளின் பள்ளியில் இயேசுவை தினமும் வழிபட கட்டாயப்படுத்துகிறார்கள். மீறினால் பிரம்பால் அடிக்கிறார்கள். இறுதியில் எந்த சாமியின் துணையும் இன்றி அவளின் அப்பா படுத்தப்படுக்கையாகவே கிடக்கிறார்.

"நாங்கள் குழந்தைகள். எங்கள் மீது எந்த கடவுளையும் திணிக்காதீர்கள்” என்ற வசனம் கவனத்தை ஈர்க்கிறது.

• இப்படி இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் யதார்த்தமான மனிதர்களை அவர்களின் வாழ்வியலை சமூக பிரச்சனைகளை மிக எளிமையாகவும் அழகாகவும் அதே சமயம் ஆழ்ந்த கருத்துக்களையும் ஆழமாக மனதில் பதித்து விடுகிறது.

• இதைத்தவிர நேரு ஐயா கையாண்ட மொழி நடை என்னை மிகவும் கவர்ந்திழுத்து வாசிக்க தூண்டியது.
அதுமட்டுமில்லாமல் அவர் ஒவ்வொரு கதையையும் கதாபாத்திரங்களையும் கூற வரும் கருத்துக்களையும் கட்டமைத்த விதம் அருமையாக இருந்தது.

• 10 பக்கத்தில் எப்படி ஒரு ஆகச் சிறந்த கதையை எளிமையாக சொல்வது கதாப்பாத்திரங்களை எப்படி வடிவமைப்பது விதவிதமான கதைக்களத்தை எப்படி தேர்ந்தெடுப்பது வாசகர்களை கவரும் வண்ணம் எப்படி செம்மையாக கதையை நகர்த்துவது என பல விஷயங்களை சக எழுத்தாளனாக என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது.




வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். இதில் உள்ள 13 கதைகளும் நம் மூளையை சிந்திக்கச் செய்யும்.

ஆசிரியர் தொடர்ந்து இது போன்ற பல புத்தகங்களை எழுத வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

"நேரு ஐயாவிற்கு க்ரிஷ் பாலாவின்
அன்பும் நன்றியும்"



No comments: