Tuesday, 13 June 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(16)

 இப்படி என்னை மாத்திட்டீங்களே..

கொடை உள்ளம் கொண்டவர்கள் ,அரசுப்பள்ளிக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்று மட்டும் அல்ல ,இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு கீழ் வரும் செய்தி சான்று.பொறியாளர்கள் அ.இளங்கோவன்,அ.முத்தழகன்,ஆடிட்டர் அ.இராசகோபால் மூவரையும் பல்லாண்டு வாழ்க!வாழ்க!  என மனம் நிறைய வாழ்த்துவோம்.

 


மாற்றம் என்பது உலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. “மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்ற எல்லாம் மாறும் “ என்றார் தோழர் காரல் மார்க்ஸ்.கொள்கை ரீதியாக அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து ஏற்படுத்தும் மாற்றங்கள்,மனிதர்கள் இடத்திலும் அவர்கள் பணிபுரியும் இடத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் –அரை நூற்றாண்டுக்கு முன் செய்த காரியங்களைத்தான் இன்றைக்கு பீகார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமார்,தெலுங்கானா முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவ் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் அமுல்படுத்துகிறார்கள்.பட்டதாரிகளை,கல்வியியல் பட்டம்(B.Ed) பெறவில்லை என்றாலும் கூட விருப்பம் உள்ளவர்களை ஆசிரியர் பணியில் நியமிக்கின்றார்கள்.அதனால் கல்வியில் ஏற்படும் மாற்றம் பெரும் பாய்ச்சலான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என நம்புகின்றார்கள்.செயல்படுத்துகின்றார்கள்.அதனால் பெருந்தலைவர் காமராசர் போல புகழ் பெறுகின்றார்கள். மக்கள் பலன் பெறுகின்றார்கள்.

நேற்று மதுரையில் எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களின் தம்பி பொறியாளர் திரு.வே.பாலசுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. எங்கள் அண்ணன்தான் எங்களுக்கு ஞானத்தந்தை(Godfather) என்றார்.பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.தன்னுடைய உடன்பிறந்தோருக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு எல்லாம் எவ்வளவு பெரிய வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்பதை எல்லாம் சொன்னார்.எனக்கும் எனது அண்ணனுக்கும் 9 ஆண்டுகள் வித்தியாசம்.தேவதானப்பட்டியில் அண்ணன் வேலை பார்க்கும்போது கூட்டுக்குடும்பம்தான். எங்களுக்கு(தம்பிகளுக்கு) கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார் என்று குறிப்பிட்டார். வாழ்க்கை முழுக்க தனக்குப் புரிந்த பாடத்தை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்.எந்த நிலையிலும் பணம் பெற்றுக்கொண்டு பாடம்  நடத்தும் டியூசன் எங்கள் அண்ணன் எங்கும் எடுத்தது இல்லை என்பதையும் திரு.வே.பாலசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிட்டார்.அதைப்போல அண்ணன் படித்தது இண்டர்மீடியட் என்று குறிப்பிட்டார்.

நான் படித்தது 10,+2,3 என்னும் படிப்பு முறை.அதற்கு முன் இருந்த முறை 11,1 வருடம் பி.யு.சி.,அப்புறம் 3 வருடம் கல்லூரிப் பட்டப்படிப்பு.பி.யூ.சி.முறை வருவதற்கு முன் 1955களில் இண்டர்மீடியட் என்னும் முறை இருந்திருக்கிறது.அதைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எனது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ,பெரும் மதிப்பிற்குரிய திரு.கி.ஆழ்வார் சார் அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது,ஆமாம் நானெல்லாம் படித்தது அந்த முறைதான் என்று சொல்லி விட்டு அந்த முறையை விளக்கினார். 11-ஆம் வகுப்பு வரை உயர் நிலைப்பள்ளி ,அப்புறம் 2 வருடம் இண்டர் மீடியட் என்னும் படிப்பு…பி.யு.சி.வகுப்புகள் போலக் கல்லூரிகளில் இருக்கும்,அப்புறம் 2 வருடம் கல்லூரிப் பட்டப்படிப்பு எனக் குறிப்பிட்டார். ஆனால் எல்லாக் கல்விமுறையிலும் ஒரு பட்டதாரியாக வேண்டும் என்றால் 15 வருடம் படிக்கவேண்டும் என்பது பொதுவானது என்பதையும் குறிப்பிட்டார்.

தமிழ் நாட்டில் 1978-ல் ஏற்பட்ட பெரிய மாற்றம் என்பது பழைய 11-ஆம் வகுப்பு முறையை மாற்றிவிட்டு +2 என்னும் முறையைக் கொண்டு வந்ததாகும்.கிராமங்களில் 11-ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் இருக்கும்.11-ஆம் வகுப்பில் வெற்றி பெற்றவர்கள் பி.யு.சி. எனப்படும் புதுமுக வகுப்பிற்கு மாநகரங்களுக்கு வந்து கல்லூரியில் படிக்கவேண்டும்.அப்படி பி.யூ.சி.படித்து முடித்தவர்கள்தான் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளுக்கு போவது மட்டுமல்லாது எந்தப் பட்டம் பெறுவதாக இருந்தாலும் போக முடியும்.இந்தப் பி.யூ.சி.முறை மாற்றப்பட்டு +1,+2 முறை 1978-ல் கொண்டு வரப்பட்டு இன்று வரை தொடர்கிறது.இந்த +2 முறை அமுலுக்கு வந்தபோது எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களின் பணியில் ஏற்பட்ட மாற்றத்தை அவரே விளக்கினார்.

“ நான் சிறுகுடியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோதுதான் +2முறை நடைமுறைக்கு வருகின்றது.என்ன ஆயிற்று என்றால் அதுவரை 11-ஆம் வகுப்புவரை இருந்த அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியராக வர பட்டப்படிப்பு இருந்தாலே போதுமானது.ஆனால் +2 வருவதால் ,+2  ஹையர் செகண்டரி பள்ளிகளில் தலைமை ஆசிரியராக இருக்க முதுகலை,முதுஅறிவியல்(P.G) முடித்திருக்க வேண்டும் என்று அரசு ஓர் ஆணையைப் போட்டார்கள்.அப்படி ஒரு அரசு ஆர்டர் வந்தபொழுது .அன்றைக்கு மதுரை மாவட்டத்தில் வேலை பார்த்த தலைமை ஆசிரியர்களில் எவரும் P.G. இல்லை.எல்லோரும் U.G..முடித்தவர்கள்தான்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய P.G. முடித்த தலைமை ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் எல்லோரும் மதுரை மாவட்டத்திற்கு மாற்றலாகி வருகின்றார்கள். 7 பேர் அப்படி வந்தார்கள்.அப்படி வந்ததால் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு தலைமை ஆசிரியர்களுக்கு மாற்றல் வந்து விட்டது.மாற்றலில் மதுரை மாவட்டத்திற்குள் வருபவர்கள் எல்லாம் சீனியர்கள்.+2 முறை வரக்கூடாது என்று எதிர்த்தவர்கள்.+2 முறை வந்தால் படிப்பு கெட்டுப்போய் விடும் என்றவர்கள்…

நாங்கள் எல்லாம் +2முறை வரவேண்டும் என்று ஆதரித்தவர்கள்.வரட்டும்,வந்தால் நிறையப் பேர் படிக்க முடியும்.கிராமத்து மாணவர்கள்  நிறையப்பேர் பி.யூ.சிக்காக நகரத்திற்குப் போய் படிக்க முடியவில்லை,உள்ளூரிலேயே வந்து விட்டால் நிறைய மாணவர்கள்,மாணவிகள் படிக்க முடியும்.அவர்களுக்கு மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.எனவே கிராமத்து மாணவர்களைக் கணக்கில் வைத்துக்கொண்டு +2முறை வரவேண்டும் என்று ஆதரித்தவர்கள்.அப்போதைய கல்வி அமைச்சர் திரு.அரங்கநாயகம் அவர்கள் கொண்டுவந்த திட்டத்தை முழுமையாக ஆதரித்தவர்கள்.ஆனால் ஆதரித்தவர்களுக்கு மாற்றம் என்று அமைந்துவிட்டது இந்த மாற்றம்.

நான்தான் இருக்கும் தலைமை ஆசிரியர்களில் ஜூனியர் மோஸ்ட்.என்னை சிறுகுடியிலிருந்து தூக்கி விட்டார்கள்.தூக்கி எங்கே போட்டார்கள் என்றால் தொண்டியில் ..இராமநாதபுரத்திற்கு அருகில் போட்டார்கள். நான் சென்னைக்குச்சென்று அப்போது ஜாயிண்ட் டைரக்டராக இருந்த ஒரு அம்மையாரிடம் பேசினேன்.அப்போது எனக்கு என்னை ஏன் சிறுகுடியிலிருந்து மாற்றினார்கள் என்ற காரணம் தெரியவில்லை.அந்த அம்மையாரிடம் “ இப்படி என்னை மாத்திட்டீங்களே,கம்பிளைண்ட் ஏதாவது என் மீது இருக்கிறதா? வந்திருக்கிறதா?அதனால் மாற்றி விட்டீர்களா? “ எனக் கேட்டேன்.”அய்யய்யோ அதெல்லாம் ஒன்றும் இல்லீங்க,ஹையர் செகண்டரி வருகின்றது.மதுரை மாவட்டத்தில் வேலை பார்த்த மற்ற தலைமை ஆசிரியர்களுக்கு எல்லாம் வட ஆற்காடு மாவட்டத்தில் மாற்றல் போடப்பட்டிருக்கிறது.உங்கள் மனைவி மதுரை மாவட்டத்தில் ஆசிரியராக வேலை பார்ப்பதால் உங்களுக்குப் பக்கத்திலேயே(!) தொண்டியிலே போட்டிருக்கிறோம்.நீங்க ஒரு வருடம் அங்கே இருங்கள்,அடுத்த வருடம் பக்கத்திலேயே கிடைச்சா போட்டிடுவோம்” என்றார்.சரி என்று சொல்லி விட்டு தொண்டி போனேன்.அவர் தொண்டி அரசுப்பள்ளியில் செய்த மாற்றங்களை அடுத்துப்பார்ப்போம்…                        

(தொடரும்)  

 

No comments: