Saturday, 3 June 2023

பாத்திரம் முழுக்கத் தண்ணீர்…முனைவர். வா. நேரு

‘அப்பப்பா,எனது வாழ்க்கையில் இப்படி  ஒரு உக்கிரமான வெயிலை இதுவரை நான் கண்டதில்லை’..உடலில் ஆறு போல ஓடும்  வியர்வையைத் துடைத்தபடி 70 வயதாகும் தாத்தா தன் பேரனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.வெயிலில் இருந்து வயதானவர்களும்,இதய நோய் போன்ற நோய் இருப்பவர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும், நீர்ச்சத்து உள்ள பழங்களைச்சாப்பிட வேண்டும்,நீர்ச்சத்து குறையாமல் இருக்க வெளியில் பகலில் எங்கு சென்றாலும் கையில் தண்ணீரைக் கொண்டு செல்லவேண்டும்,மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கவேண்டும்  என அரசாங்கம் அறிக்கை கொடுத்திருந்தது.மாலையில் குளிப்போம் என்று போனால் ஹீட்டர் போடாமலேயே தண்ணீர் அப்படிக் கொதிக்கிறது.வெந்நீராகத் தண்ணீர் சுடுகிறது.இதில் கலந்து குளிக்க பச்சைத் தண்ணீருக்கு எங்கே போவது என்று மனம் தத்தளிக்கிறது. என்ன ஆயிற்று நம் சூழலுக்கு..ஆயிரக்கணக்கான கேள்விகள் நம்மைச்சுற்றி எழுகிறது 


நம்மைச்சுற்றி நிகழும் இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் புவி வெப்பமாதல்,கால நிலை மாற்றம் என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.அடுத்தவர் போட்டுத்தந்த குடிசைக்குள் வசிக்கப்போன குரங்கு,தானாகவே பிய்த்துப் பிய்த்து, குடிசையை ஓட்டையாக்கி,வெயிலிலும் மழையிலும் காய்வதுபோல இயற்கையாக அமைந்த இந்தப் பூமியை மனிதர்கள் தங்கள் சுய நலத்திற்காகக் கெடுத்துக் கெடுத்து ஒட்டு மொத்த உலகத்திற்கும்,உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் படும் பாதகச் செயலைச்செய்து கொண்டிருக்கிறார்கள்.



ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து, பாலை ஊற்றச் சொன்னபொழுது, நாம் ஊற்றும் தண்ணீர் என்ன தெரியவா போகிறது என்று எல்லோரும் தண்ணீரை ஊற்ற,பாத்திரம் முழுக்கப் பாலுக்குப் பதிலாக தண்ணீரே நிரம்பி இருந்தது என்னும் கதை போல, நம்மால்தானா? சுற்றுச்சூழல் கெடப்போகிறது, புவி வெப்பமடையப் போகிறது என்று உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதரும் நினைக்க, ஒவ்வொரு நாடும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்த, அலட்சியப்படுத்த உலகம் ஓர் இருண்ட காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என ஜெர்மன் உள்ளிட்ட பல நாட்டு அறிவியல் அறிஞர்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.அதைப் பற்றிய விரிவான செய்தியை பி.பி.சி.தமிழ் பதிவு செய்திருக்கிறது.

“விஞ்ஞானிகள் என்றால் அறிவியல் ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார்கள், தங்களது ஆய்வுகளை அறிவியல் இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள் என்ற புரிதல் தான் உலக அளவில் வெகுஜன மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.தங்களைப் பற்றிய இந்த வரையறைக்கு மாறாக, தற்போது உலகெங்கிலும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர் அவர்கள். சாலை மறியல், அரசு அலுவலகங்களுக்கு முன் மனிதச் சங்கிலி என விஞ்ஞானிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.பருவநிலை மாற்றத்தைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகளை வலியுறுத்தி விஞ்ஞானிகள் தங்களது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இனியும் அறிவியல் இதழ்களில் பேசிக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில், இதன் விளைவாக பூமி மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது என்கின்றனர் அவர்கள்.

விஞ்ஞானிகளின் சர்வதேசக் கூட்டமைப்பான ‘சயின்டிஸ்ட் ரிபளிகயன்’ (Scientist Rebellion) இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாகக் கூறுகிறது இந்த அமைப்பு.போராட்டங்களை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகளை கைது செய்வது போன்ற நேரடி நடவடிக்கைகளை உலகின் பல்வேறு நாடுகள் கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வருகின்றன.

அறிவியல் அறிஞர்களே வீதிகளில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளார்கள்.ஏனென்றால் வரக்கூடிய ஆபத்து அப்படிப்பட்ட ஓர் ஆபத்து. உலகத்தைப் பேராபத்து சூழக்கூடிய நிலை இருக்கும்போது உலகில் உள்ள பல நாடுகளின் தலைமைகள் நம் நாட்டுப் பிரதமர் போலவே வெற்று வாக்குறுதிகளைத் தருகிறவர்களாக இருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே என்னும் எண்ணம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.தாங்கள் பதவியில் நீடிப்பதற்காக பல்வேறு வேடங்களைப் போடுகிறார்கள் என்ற நிலையில் அறிவியல் அறிஞர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

“பருவநிலை மாற்றம் தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளாக போதுமான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான விரிவான தீர்வுகள் IPCC (Intergovernmental Panel On Climate Change அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.ஆனால், இந்தத் தீர்வுகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் முனைந்து எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் போராட்டத்தில் இறங்கியுள்ள விஞ்ஞானிகள்.”

“பருவநிலை மாற்றம் குறித்த அய்.நாவின் 28 ஆவது சர்வதேச மாநாடு (COP28) துபாயில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில், 2015 இல் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலக வெப்பமயமாதலைத் தடுக்க எடுப்பதாக, உலக நாடுகள் ஒப்புக்கொண்ட நடவடிக்கைகள் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொழிற் புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், சராசரி உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு, பாரிஸ் பருவநிலை மாநாட்டில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை குறைந்தது 1. 5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால், கார்பன் வெளியேற்ற அளவானது 2019 இல் இருந்ததை விட, 2030 க்குள் 43% குறைக்கப்பட வேண்டும்.”

ஆனால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், கார்பன் வெளியேற்றம் குறைவதற்குப் பதிலாக அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.ஒவ்வொரு நாடும் கார்பன் வெளியேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் உலகம் வெப்பமடைந்து,மக்கள் மிகப் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாது.
கரியமில வாயுவை வைத்துத்தான் கார்பன் வெளியேற்றம் கணக்கிடப்படுகிறது.அதாவது ஒவ்வொரு நாடும் கரியமில வாயுவை உறிஞ்சுகிறது,வெளியிடுகிறது.வெளியிடுவதை விட உறிஞ்சக் கூடிய தன்மை அதிகமாக இருந்தால் அந்த நாடு கார்பன் நெகட்டிவ் நாடு எனப்படுகிறது.உலகம் கார்பன் நெகட்டிவ் உலகமாக மாற வேண்டும்,அப்பொழுதுதான் புவி வெப்பமடைதல் குறையும்.
2020 புள்ளி விவரத்தின்படி ,அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சீனா(31 %), அமெரிக்கா(14%), இந்தியா(7%), ரஷ்யா(5 %),ஜப்பான்(3%) இந்த 5 நாடுகள் மட்டுமே உலகளாவிய கரியமிலவாயு உமிழ்தலில் 100க்கு 60 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன. இந்த அய்ந்து நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலே மிகப்பெரிய மாற்றம் நிகழும்.
இன்று உலகின் முதல் ‘கார்பன் நெகட்டிவ் நாடு’ என்ற சாதனையைப் படைத்து, உலகிற்கே வழிகாட்டியாக பூடான் மாறியிருக்கிறது. 2017இன் தரவுகளின்படி பூடானில் உமிழப்படும் கரியமில வாயுவின் அளவு சுமார் 22 லட்சம் டன். ஆனால், பூடான் நாட்டின் அடர்ந்த காடுகள் இதை விட மூன்று மடங்கு கூடுதல் கரியமில வாயுவை உறிஞ்சும் திறனைக் கொண்டிருக்கின்றன.

பூடானின் அரசியலமைப்பு அதன் நிலப்பரப்பில் குறைந்தது 60 சதவிகிதம் காடுகளால் நிறைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பூடானின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தேசியக் காடுகள், இயற்கை இருப்புக்கள், காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளாக உள்ளன.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், காடுகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுதலைத் தடுக்கவும் உதவுகின்றனர். முக்கியமாக, பூடான் அரசின் ‘தூய்மையான பூடான்’ அல்லது ‘பசுமைப் பூடான்’ போன்ற தேசிய வனப் பாதுகாப்பு திட்டங்கள் மிகுந்த வீரியத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.

தற்போது, உலக அளவில் தண்ணீர் பிரச்சனை, உணவுப் பிரச்சனை, காற்று மாசுபாடு, தண்ணீர் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளாத நாடாக பூடான் உள்ளது.” என்று பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் பூடான் போல மாறவேண்டும்.அதற்கு நிறைய மரங்களை வளர்க்கவேண்டும்.காடுகளை உருவாக்க வேண்டும்.இருக்கும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.இயற்கையாக நிகழ்ந்த கொரோனா தொற்று நோயால் ஊர் அடங்கியது,உலகம் அடங்கியது.அந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் உலகில் கார்பன் உமிழ்வு 7 சதவிகிதம் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டன.
அப்படி ஒரு நிலைமை நிகழ்ந்தால்தான் கார்பன் உமிழ்வு குறையுமா?இயல்பாக எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து கார்பன் உமிழ்வு குறையாதா? என்பது இன்றைய பெரும் கேள்வி.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் கெடுதலினால் கால நிலை மாற்றம் எப்படி எல்லாம் நிகழ்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக அந்த நாள் அமைகிறது.

“மரங்களின் தேவைகளை அன்று உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.இடையில் வந்தவர்கள் மரங்களை வெட்டி, காடுகளை அழித்தார்கள். விளைவு? ’ஓசோன் படலத்தில் ஓட்டை, தட்பவெப்ப மாற்றங்கள் அடுத்து எதிர்காலத்தில் என்னென்ன இயற்கைச் சீற்றங்கள் நிகழுமோ என்ற கவலையால் உலகம் இன்று தத்தளித்துக்கொண்டுள்ளது” (வாழ்வியல் சிந்தனைகள், பாகம் 4,பக்கம்,186) என்று தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் 2007இல் குறிப்பிட்டார். இன்று நிகழும் இயற்கைச் சீற்றங்கள் உலகை அச்சுறுத்திக்கொண்டுள்ளன.

இந்திய அளவில்,தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து திண்டுக்கல் நகரம் மட்டும் இடம் பெற்றுள்ளது.தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரமும் கிராமமும் கார்பன் நெகட்டிவ் நகரங்களாக,கிராமங்களாக மாறவேண்டும். நல்ல தரமான காற்று வீசும் நகரமாக,ஊராக மாறவேண்டும்.அதற்கு இலட்சக்கணக்கான மரங்கள் நடப்பட வேண்டும். வளர்க்கப்படவேண்டும்.அதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும்.பொதுமக்களாகிய நாம் அதற்கான முழு ஒத்துழைப்பை அரசுக்கு அளிக்கவேண்டும்

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 1-15,2023

No comments: