Wednesday, 12 July 2023

தூப்புக்காரி...நாவல் பல மொழிகளில்..

தரமான எழுத்து தரும் அங்கீகாரமானது தனித்துவமானது.எதனோடும் ஒப்பிட இயலாதது.வாழ்நாள் முழுவதும் உச்சி முகர்ந்து பாராட்டி,படித்த,படிக்கின்ற வாசகர்கள் தரும் பாராட்டு என்பது அப்படி ஒரு மகிழ்ச்சி தருவது.அப்படி ஒரு மகிழ்ச்சியில் தோழர் மலர்வதி இப்போது இருக்கின்றார்.'தூப்புக்காரி 'என்னும் தன்னுடைய முதல் நாவல் மூலம் படிப்பவர்களின் மனம் தொட்ட அந்தத் தோழர் தன்னுடைய எழுத்தால் தலை நிமிர்ந்து நிற்கின்றார்.

'தூப்புக்காரி ' நாவலைப் படித்து விட்டு அது தந்த தாக்கத்தால் அந்த நூலைப் பற்றி புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசினேன். மிக ஈர்ப்பாக இருந்த நூல் அது.உண்மையைச்சொல்லும் நூல்.எனவே இயல்பாக பேச முடிந்தது.

அந்த நூல் விமர்சனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவில் வசிக்கும் பேரா.திரு.சோம.வேலாயுதம் அவர்கள் ,அமெரிக்காவிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்,ஆனால் பிறப்பு அடிப்படையில் அந்தத் தொழில் அவர்களுக்கு வருவதில்லை.வருமானத்திற்காக எவரும் அந்தத் தொழிலை மேற்கொள்ளலாம் என்று சொன்னதோடு நிற்காமல்,அமெரிக்காவில் இந்தத் துப்புரத்தொழில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பல படங்களோடு,தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் எடுத்துக்காட்டி அடுத்து ஒரு கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசினார்.

இப்படி தூப்புக்காரி நாவல் படிப்பவர்களை மட்டுமல்ல,படித்து விட்டு  ஒருவர் சொல்வதைக் கேட்பவர்களையும் ஈர்க்கும் அருமையான நூல்.அந்த நூல் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது,மலையாளத்தில் வந்திருக்கிறது,இப்போது கொரிய மொழியிலும் வந்திருக்கிறது என்பதை அந்த நூல் ஆசிரியர் பகிர்ந்திருக்கிறார். இனி அந்த நூல் மொழி பெயர்ப்புகள் பற்றி அந்த நூலின் ஆசிரியர் தோழர் மலர்வதியின்  நெகிழ்வான பதிவு  

"தூப்புக்காரி வெளிவருவதற்கு முன்பான அணிந்துரைக்காக இலக்கிய தந்தை பொன்னீலனை அவர் இல்லத்தில் சந்தித்த போது ‘இலக்கியம் பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா? மக்கா’  என்று தான் வரவேற்றார். 


இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் எவரையும்  அப்போது நானும் அறிந்திருக்க வில்லை தான். வாழ்வியலின் படிப்பினைகளும், வாழ்க்கை களம் தந்த காயங்களையும்  சேகரித்து எழுத வந்த எனக்கு இலக்கிய உலகின் பெருங்கடலின் கரை கூட தெரியாத நிலையில் தூப்புக்காரி ஏற்படுத்திய அதிர்வலைகள் இப்போதும் அடங்கிய பாடில்லை. 

அதற்கு பிறகும் பல நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகளென இலக்கிய போக்கு விரிவடைந்து போய் கொண்டிருந்தாலும் மலர்வதிக்கான இலக்கிய அடையாளம் தூப்புக்காரியாகவே இருக்கிறது.

 இந்த நாவல் வெளிவருவதற்கும் முன்னே  வாசித்த என் இலக்கிய தந்தை பொன்னீலன் என்னோடு ஒரு தீர்க்கத்தரிசனம் சொன்னார்.. ‘மக்கா நீ நல்ல ஒரு குழந்தையை பெத்துருக்க...எந்த மாசு மருவும் இல்லாம உன் இலக்கிய தாய்மை பெற்ற உன் தூப்புக்காரி இருக்காளே.. உனக்கான வெகுமதியை உனக்கு வாங்கி தருவா...’ என்று முதற்சங்கு அலுவலகத்தில் வைத்து சொன்ன சொல் இப்போதும் எனக்குள் ஒலிச்சிட்டே இருக்கு. 
  
   நண்பர் ஒளிவண்ணனின் எமரால்டு பதிப்பகத்தில் தூப்புக்காரி ஆங்கில மகளாக 20.2.2020 அன்று பிறந்தாள். ஆங்கில  மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவில்  இலக்கிய தந்தை பொன்னீலன் தலைமை தாங்க, முதல் பிரதியை அப்போதைய ஆட்சியாளர் மு. வடநேரே   வெளியிட, திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் முன்னாள் தலைவர் கே. செல்லப்பன் பெற்றுக்கொண்டார். 

தூப்புக்காரியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க பல்வேறு தரப்பிலிருந்து மிகவும் ஆர்வம் காட்டினார்கள். முழுக்க முழுக்க வட்டார வழக்கு மொழியாக தூப்புக்காரி இருந்த காரணத்தினால், இதே பகுதியை சார்ந்தவளுக்கே அது கை கூடும் என்ற கருத்து நிலவிய போது முன் வந்தவர்களே பேராசியர். ஹேம்லின், சூசன் ராய். இவர்கள் இருவரும் செய்த  மொழிபெயர்ப்பு பணி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. வரிக்கு வரி படித்து அதில் சிக்கி, அதற்கான சரியான மொழிக்காக தவித்து, அதே உயிரோடு ஆங்கிலத்தில் கொண்டு வர பல இரவுகள் உறங்கியிருக்கவில்லை என்பது எனக்கு தெரியும்.    தமிழின் அதே சுவையோடு உயிரோடு தூப்புக்காரியை ஆங்கில பிள்ளையாக உருமாற்றி அதே தலைப்பையும் நழுவ விடாமல் செய்து முடித்து, புத்தகம் வெளியேறிய தருணத்தில் கொரோனாவின் கோரப்பிடியில் எல்லாமே சிக்குண்டு போனது. 

ஒரு படைப்பானது ஆங்கிலத்தில் வரும் போது அது உலகளாவிய கவனம் பெறுகிறது என்றெல்லாம் என்னை பலரும் உற்சாகப்படுத்திய நிலையில் கொரோனா காலத்தில் ஆங்கில மகள் சிக்குண்டு போனாள் என்பதில் மொழிபெயர்ப்பாளர்களுக்கும், நண்பர் ஒளிவண்ணனுக்கும் எனக்கும் தான் சங்கடம்  இருந்தது.

இந்த நிலையில் மலையாள இலக்கியத்திலும் தூப்புக்காரியின் முகம் மலர எழுத்தாளர் பால்சர்க்கரியா வழி செய்தார். மலையாளத்தின் முன்னணி பத்திரிகையான மாத்ரு பூமி சார்பான மொழி பெயர்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் என் தூப்புக்காரி  மலையாளத்திலும் வர போகிறாள். 

இதே நிலையில் கடந்த வாரம், எமரால்டு பதிப்பக நண்பர் ஒளிவண்ணன் ஒரு செய்தியை கடத்தினார்.
‘தோழர் மலர்வதி.. தமிழ்நாடு அரசின் மொழி பெயர்ப்பு   மானிய திட்டத்தின் உதவியுடன் உங்கள் தூப்புக்காரி கொரியா மொழியில் வர போகிறது. சந்தோசப்படுங்கள்..தூப்புக்காரி இனி பல மொழிகளில் வர போகிறாள்’ என்ற தகவலை சொன்ன போது இலக்கிய தந்தையின் தீர்க்கத்தரிசனத்தையே நினைத்தேன். 

’என்னிக்கோ ஒரு நாள் என் மகா உச்சத்தில வருவா..வருவாண்ணா வருவா..தாமர பூவுக்க  வேரு தொழியில கிடந்தாலும்  அதுக்க மூஞ்சி மேல் நோக்கி சிரிக்கிறது போல எனக்க மொவளும் ஒரு நாளு உச்சத்தில வருவா’ என்று தூப்புக்காரியில் வரும் பூவரசி பேசுவது போலவே நானும் தூப்புக்காரி மகளை பெருமையோடு பார்க்கிறேன். அவள் ஏழை தான்..புறக்கணிக்கப்படுகிறவள் தான்...ஏமாற்றங்களால் நொறுங்கி போனவள் தான்..ஆனால் அவள் உச்சம் தொடுவாள்.

இந்த பயணத்திற்கான பின் புலமாக இருந்த தோழமைகள் ஹேம்லின், சூசன் ராய் எப்போதும் நன்றிக்கும் அன்புக்கும் உரியவர்கள்..அது போலவே எமரால்டு பதிப்பக ஒளிவண்ணன்...என் இலக்கிய தந்தை பொன்னீலன்...எல்லாவற்றிற்கும் மேலாக தூப்புக்காரியை சொந்த மகளாக ஏற்றுக்கொண்ட என் அன்பு வாசகர்களுக்கு எப்போதும் என் அன்பின் நன்றிகள்..."

அடுத்தவர்கள் உயர்வில் அகம் மகிழும் அண்ணன் ,எமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் ஆங்கில மொழி பெயர்ப்புக்கான முன் முயற்சியை எடுத்திருக்கிறார்.பாராட்டுகள் அவருக்கு.மனமார்ந்த வாழ்த்துகளும் பாரட்டுகளும் தோழர் மலர்வதி...அத்ற்குப்  பின் எத்தனையோ படைப்புகளை கொடுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் எழுத்தின் அடையாளமாக நிற்கும் ;தூப்புக்காரி ;உலக மொழிகள் எல்லாவற்றிலும் போகட்டும்.அதன் மூலம் ஒரு சாதிக்கு என ஒதுக்கிவைத்திருக்கும் தூப்பு வேலை அனைவரும் பார்க்கும் வேலையாக மாறட்டும்.சாதி ஒழியட்டும்.இழிவு நீங்கட்டும்.

No comments: