Tuesday, 18 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(21)

 

 சக ஆசிரியருக்கும் பாடம் நடத்திய தலைமை ஆசிரியர்.

எங்கள் ஊரைச்சேர்ந்த திரு.கோதண்டராமன் அவர்கள் சாப்டூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் வேலை பார்த்தார்.நாங்கள் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது அவர்தான் எங்களுக்கு கணிதப் பாடம் எடுத்தார்.மிக நன்றாக புரியுமாறு நடத்துவார்.எங்கள் ஊர்  மாணவ-மாணவிகளுக்கு எல்லாம் அவர்தான் வழிகாட்டி.என்ன படிக்கவேண்டும் என்பதுமுதல்,படிப்பதற்கு வங்கிக் கடன் வாங்குவதுவரை பல பேருக்கு அவர் கணித ஆசிரியராக இருந்தபோதும் சரி,அதற்குப் பின் ஏ.இ.ஓ.வாக இருந்தபோதும் சரி,ஓய்வு பெற்ற பிறகும் சரி சாப்டூரைச்சார்ந்த மாணவ-மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு நீண்டகால வழிகாட்டியாக இருந்து வருகின்றார்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஊரைச்சேர்ந்த தமிழ் அய்யா குழந்தைவேல் அவர்கள் தமிழ்ப்பாடம் எடுப்பார்.ஒரு முறை தமிழ்ப்ப்பேப்பரைக் கொடுக்கும்போது ‘உனக்கு மதிப்பெண் குறைத்துப்போட வேண்டும்,போடவேண்டும் என்று நினைத்து திருத்துகிறேன்,ஆனால் நீ எழுதி இருப்பதைப் பார்க்கும்போது அதிக மதிப்பெண் போட்டுவிடுகின்றேன்” என்றார்.அப்போது கிடைத்த மிகப்பெரிய ஊக்க டானிக் அது எனக்கு.அமைதியாக ஆனால் மிக ஆழமாக பாடம் நடத்துவார். ஓய்வு பெற்ற பின்பும் உயர்கல்வி படித்தார்.இப்போது நினைவுகளில் வாழ்கிறார்.

அதைப்போல எங்கள் ஊரைச்சேர்ந்த சுப்பிரமணியம் வாத்தியார்..செஸ் விளையாடுவதில் அப்படி ஒரு ஆளுமை அவருக்கு செஸ் விளையாட்டு புரிந்ததால் என்னவோ பாடம் நடத்துவதிலும் அப்படி ஒரு புரிதலோடு நடத்துவார்.அதைப்போல செம்பட்டியில் இருந்து வந்த ஆசிரியர் திரு.தர்மக்கண்ணு அவர்கள் நினைவில் நிற்கிறார்.

இப்படி பல ஆசிரியர்கள் நினைவில் வருகிறார்கள்.எங்களுக்கு 6-ம் வகுப்பு பாடம் எடுத்த திரு.மூக்கையா ஆசிரியர் அவர்கள் மறக்க முடியாத ஆசிரியர்.6-ம்வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்க அவர் எடுத்த முயற்சிகள் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாதது.அண்மையில் சுப்புலாபுரத்தில் தலைமை ஆசிரியராக இருக்கும் எனது தங்கை வா.சாராதாவைப் பார்க்கச்சென்றிருந்தபோது திரு.மூக்கையா வாத்தியாரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அவரையும் அவரது இணையர் திருமதி கருப்பாயி டீச்சர் அவர்களையும் பார்த்துப்பேசினேன்.அப்போது திரு.வீரிசெட்டி சார் அவர்களின் பேச்சு வந்தது.அப்போது திரு.மூக்கையா வாத்தியார் சொன்னார்,” நேரு, நான் அப்போது ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரமாக பி.எட்.படித்தேன். எனக்கும் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் பாடம் எடுத்தார் “ என்றார்.வியப்பாக இருந்தது எனக்கு.  மாணவர்களுக்கு மட்டுமல்ல,சாப்டூரில் இருந்த நேரத்தில் சக ஆசிரியருக்கும் பாடம் எடுத்திருக்கிறார்.

மரியாதைக்கும் பேரன்பிற்கும் உரிய எனது ஆசிரியர் திரு.மூக்கையா வாத்தியார் அவர்களோடு நான் ...

இதுதான் எனது தலைமை ஆசிரியர்.தன்னைச்சுற்றி இருக்கும் ஆசிரியர்கள்,பணி ஆட்கள் இவர்கள் அனைவருக்கும்  நேர்மையான முறையில் எந்தெந்த வகையில் எல்லாம் உதவ முடியுமோ அத்தனை வகையிலும் அவர் உதவி செய்து இருக்கிறார் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்

ஒரு உயர்ந்த நோக்கத்தை மனதில் வைத்து அதற்காக உழைக்கின்றபோது ,இயல்பாகவே எல்லோருடைய ஆதரவும் கிடைக்கிறது. நாங்கள் படிக்கின்ற காலத்தில் ஆறுமுகம் என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார்.அவரைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்கள்.அவருக்கும் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சாருக்கு முன்னால் இருந்த தலைமை ஆசிரியருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டை,சத்தம் இருக்கும். ஆனால் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் வந்தபிறகு அவரின் செயல்பாடு முழுவதுமாக மாறியது.அப்படி ஒரு ஒத்துழைப்பை பள்ளியின் வளர்ச்சிக்கு கொடுத்தார்.எங்கள் ஊரைச்சேர்ந்த ஆசிரியர்கள்,வெளியூர் ஆசிரியர்கள்,பள்ளியின் நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்தனர்.

காலையில் 9.30க்கு பள்ளி ஆரம்பிக்கும் .அதற்கு முன்னால் 8.30 முதல் 9.30 வரை ஸ்டடி இருக்கும்.அதாவது எல்லா மாணவ,மாணவிகளும் வந்து அவரவர் இருக்கையில் உட்கார்ந்து முதல் நாள் பாடத்தைப் படிக்கவேண்டும்.அதனைக் கண்காணிப்பதற்கு ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வரவேண்டும்.இந்தக் காலை ஸ்டடியைக் கவனிப்பதற்கு பல ஆசிரியர்கள் தன்னார்வமாக முன்வந்தார்கள்.

எங்கள் ஊர் ஜமீந்தார் அவர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு. ‘என்ன நடக்குது நம்ம பள்ளிக்கூடத்திலே,படிக்கிற பையன்கள்தான் பள்ளிக்கூடத்திற்கு வேகமாக ஓடுகிறார்கள் என்றால்,வேலை பார்க்கிற ஆசிரியர்களும் அப்படி ஒரு ஓட்டமும் நடையுமாக போகின்றார்கள் “ என்று பார்த்து வியந்து பின் எங்களது தலைமை ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்டு,அவர் அங்கு வேலை பார்க்கின்றபோதும் சரி,அதற்கு பின்னாலும் சரி மிகப்பெரிய ஆதரவாக இருந்தார் என்பதை அடிக்கடி எனது தலைமை ஆசிரியர் அவர்கள் கூறியிருக்கின்றார்.

எங்கள் ஊரில் வேலைபார்த்தபோது,கல்விக்கு கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்தை பள்ளிக் கட்டமைப்புக்கும் கொடுத்தார்.அவர் காலத்தில்தான் பள்ளிக்கு மின்சாரம் வந்தது ,பின்பு கிணற்றுக்கு மோட்டார் பைப் போடப்பட்டது.பள்ளிக்கூடம் இருக்கும் நிலப்பரப்பை ரிக்கார்டுகளை வைத்து சரிபார்த்து பின்பு முழுவதுமாக ஒரு கேட் போல பள்ளியைச்சுற்றி கருவேலை மர வேலி அமைக்கச்செய்தார்.அதைப்போல பள்ளி நுழைவு வாயில் அமைக்கப்பட்டு எல்லோரும் வந்து போவது போல அந்த  நுழைவு வாயில் அமைந்தது.பள்ளியில் சின்ன மேடை கட்டப்பட்டு ,அதில் கொடிக்கம்பம் நடப்பட்டது.சுதந்திர தினத்திற்கும்,குடியரசு தினத்திற்கும் அந்த மேடையில் இருக்கும் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

மாணவர்களிடம் எவ்வளவு அக்கறையாக இருக்கிறாரோ அவ்வளவு கண்டிப்பாகவும் இருப்பார். நான் வாழ்க்கையில் ஆசிரியர்களிடம் அடிவாங்கியது மிகக்குறைவு .இப்போது  எங்கள் ஊரில் ,காங்கிரசு கட்சியில் இருக்கும் கொத்தனார் சுப்பையா என்னோடு படித்தவன்.பத்தாம் வகுப்பறையில் எதற்காக சண்டை போட்டோம் என்று நினைவில்லை.ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் அடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது திரு.வீரிசெட்டி சார் அவர்கள் வந்து விட்டார். ஏண்டா சண்டை போடுறீங்க என்று கேட்டு,அவர் எனது கன்னத்தில் அறைந்த அறை இன்றைக்கும் பசுமையாக நினைவு இருக்கிறது.அதைப்போல சுப்பையாவுக்கு அப்படி ஒரு அடி.அதற்குப் பின் நானும் சுப்பையாவும் வகுப்பறையில் சண்டை போடவே இல்லை.

பிற்காலத்தில் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, மாணவர்களை அடிப்பது தவறு என்று சட்டம் வந்தது குறித்து எல்லாம் அவருக்கு மனக்குறை இருந்தது. ‘தவறு செய்யும் மாணவனை எப்படித் திருத்துவது,அறியாத வயது,தான் செய்வது என்னவென்றே தெரியாமல் செய்யும் வயது. கண்டிக்காமல் விட்டு விட்டால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறைச்செய்து ,நாசமாகிப் போவானே , “ என்பார்.

“மாணவர்களை அடிக்காமல் ஆசிரியர்களால் திருத்த முடியும்தானே சார் “ என்றேன் நான் ஒருமுறை. ‘இல்லை, நீங்கள் எல்லாம் மேல் நாட்டு கல்வி முறையைப் பார்த்து விட்டு அதனைப்போல நமது நாட்டிலும் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.  நமது நாட்டில் இப்போதுதான் முதல் தலைமுறை,இரண்டாவது தலைமுறை படிக்க வருகின்றார்கள்.அவர்களுக்கு படிப்பு என்றால் என்ன?படிப்பினால் நமக்கு கிடைக்கும் உயர்வு என்ன? என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை.நாம்தான் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.அதற்கு கண்டிப்பு வேண்டும் ” என்றார். கடைசிவரை மாணவர்களை,மாணவிகளை அடித்துத் திருத்தும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு இருந்தது.

                                                  (தொடரும்)

 

No comments: