தோழர்
குடியாத்தம் ந.தேன்மொழி அவர்களின் முதல் நூல்
‘உயிர்வலி ‘ வெளிவந்திருக்கிறது. முதலில் இதனை மிக அழகான வடிவமைப்பில் தரமாக வெளியிட்டிருக்கும்
‘கீழடி வெளியீட்டகத்திற்கு ‘ மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். உயிரோட்டமாய்
அட்டைப்படத்தை வடிவமைத்த ல.மு.அகிலாராசனுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். வடிவமைப்பால்
ஒரு புத்தகத்தைப் பார்த்தவுடன் எடுக்கத்தோன்ற வேண்டும் என்பார்கள்.அப்படி ஒரு நேர்த்தியான
வடிவமைப்பில் வந்திருக்கிறது. உள்ளடக்கத்தால் பரவலாகக் கவனம் பெறும் நூலாக இந்த நூல்
மாறியிருக்கிறது.திராவிடர் கழகத்தின் களப்பணியாளரகப் பணியாற்றும் தோழர் ந.தேன்மொழியின்
கட்டுரைத்தொகுப்பான இந்த நூலை திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன்
அவர்கள் வெளியிட்டு ,சென்னை பெரியார் திடலில் சிறப்புரையாற்றினார்.புத்தகத்தைக் கையில்
ஏந்தி வெளியீட்டு விழாவில் உரையாற்றிய (படத்தில் இருக்கும்) அத்தனை ஆளுமைகளின்
உரைகளின் தொகுப்பும் விடுதலை நாளிதழிலில் வந்தது. அருமைக்குரிய பெரியாரியத் தோழர்களே,
ஒரு எழுத்தாளருக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு,அவரின் நூலைப் படிப்பது,உள் வாங்குவது, விமர்சனம்
செய்வது என்பதாகும்.அந்த வகையில் நம் தோழர்கள் இந்த ‘உயிர்வலி ‘ நூலைப் படியுங்கள்,பரப்புங்கள்
என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த நூலுக்கு நான் கொடுத்திருக்கும் வாழ்த்துரையையும்
இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி.
வாழ்த்துரை
முனைவர் வா.நேரு,
தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.,பெரியார்
திடல் ,சென்னை-7.
"உயிர்வலி
"என்னும் இந்த நூல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசிக்கும் திராவிடர் கழக மண்டல மகளிரணிச் செயலாளர் தோழர் ந.தேன்மொழி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு .தந்தை பெரியாரின் தத்துவத்தை முழுமையாக உள்வாங்கியிருக்கும் தோழர் தேன்மொழி அவர்கள் இன்றைய நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான சிக்கல்களை பெரியாரியல் பார்வையில் எழுதியிருக்கும் கட்டுரைகள் இவை..
கடந்த காலம் பற்றிய வரலாறு, நிகழ்காலத்தில் பெண்களுக்கு நிகழும் சிக்கல்கள்,தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள்,எதிர்காலம் பற்றிய சிந்தனை என்று மூன்று காலச்சிந்தனைகளையும் உள்ளடக்கிய 34 கட்டுரைகளைக் கொண்டது இந்த நூல்.திராவிட இயக்கத்தின் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும் அன்னை நாகம்மையார் பற்றியும்,அன்னை மணியம்மையார் பற்றியுமான கடந்த கால வரலாறு பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கட்டுரைத் தலைப்புகளே எழுச்சி ஊட்டக்கூடிய விதத்தில் இருக்கின்றன.'திராவிடம் என்றால் தீட்டா?','அறிவு இருக்கா?',''மானங்கெட்டவர்களா நாம்?","நறுக்கடா உறுப்பை","ஜாதிக்கு வராதா சாவு?","நட்டகல்லா நாம்
?" போன்ற தலைப்புகளே அவரின் உணர்ச்சியைக் காட்டுகின்றன. கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்குள் போனால் தகவல்களும்,விவரங்களும்,நியாயமான கேள்விகளுமாக உணர்ச்சிப் பிழம்பால் உருவான எழுத்துகளால் கட்டப்பட்ட இந்த நூல் கருத்துகளால் வலுவாக இருக்கிறது.
பெண்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த 'மனு நூல் 'பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.'மனுவா? மானுடமா? ' என்னும் கேள்வியைக் கேட்டு மனு நூல் எப்படி எல்லாம் மானுடத்திற்கு எதிராகவும் மகளிருக்கு எதிராகவும் இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக ஆதாரங்களோடு எடுத்துக்காட்டியிருக்கிறார். தொலைக்காட்சி சின்னத்திரைகள் எப்படி எல்லாம் நமது இல்லத்தில் இருக்கும் பெண்களின் உள்ளத்தைப் பாழ்படுத்துகிறது என்பதனை ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.
"நெடுந்தொடர் என்ற பெயரில் மனிதரின் மூளைக்கு விலங்கு போடப்பட்டுள்ளது. எந்த நேரமும் ஓவென்ற அலறலும் அழுகை ஒலியும் வீட்டினுள்ளே "
என்று சின்னத்திரைகளில் ஓடும் தொடர்கள் பற்றி எழுதியிருக்கிறார்.
தொலைக்காட்சி ஒன்றிலே நடந்த தாலி பற்றிய சொற்போர் அரங்கம் பற்றி எழுதியிருக்கிறார். அன்றைக்கு என்ன நடந்தது என்பது பலரும் அறிந்திராத நிகழ்வு. மிகத்தெளிவாக 'பெண்ணெனும் பேராளுமை' என்னும் கட்டுரையில்
."உரக்கச் சொல்லுங்கள் உரக்கச் சொல்லுங்கள் என்று சொற்போர் செய்ய வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலே போய்விட்டது. நிகழ்ச்சி வாய்மூடி போனது எதனால்?காலம் காலமாக பெண்கள் கழுத்திலே ஆண்களால் கட்டப்பட்ட ஒரு அடிமை குறியீட்டை பற்றிய சொற்களம் அது. தாலி என்பது பெண்ணுக்கு சீர்மை செய்கிறதா இல்லை சிறுமையைச் சேர்க்கிறதா’என்பதுதான் அது. தாலி - இதைப்பற்றி ஆய்வு செய்ய கூடாதா? ஏன் செய்யக் கூடாது? ஒளிபரப்பு செய்யக் கூடாதா? ஒளிபரப்பு செய்யக் கூடாத அளவு அங்கே என்ன தான் நடந்தது? உண்மையில் அருமையான சொற்போர் நிகழ்ச்சி காலம் காலமாக உருவாக்கப்பட்ட, பெண்கள் மீது திணிக்கப்பட்ட, ஒரு அடிமை எண்ணத்தின் முகத்திரையை, கிழிக்கும் நிகழ்ச்சிதான் அங்கே நடந்தது."
என்று குறிப்பிட்டு விளக்கமாகக் கொடுத்திருக்கிறார்.இந்தச்செய்தி இந்தக் கட்டுரையின் வாயிலாக அனைவருக்கும் இந்த நூலின் மூலமாகச்சென்று அடைய வேண்டும்.
ஆண் பெண் பாகுபாடு மனதளவில் எப்படி எல்லாம் வேலை செய்கிறது.ஒரே செய்தியை ஓர் ஆண் எழுதினால் முக நூலில் இருக்கும் ஆண்கள் எப்படிப்பார்க்கிறார்கள்..அதையே ஒரு பெண் எழுதினால் ஆண்கள் எப்படிப்பார்க்கிறார்கள் என்ற வேறுபாட்டை தனது சொந்த அனுபவத்தின் மூலமாகவே பதிவு செய்திருக்கிறார்.
மூட நம்பிக்கை எப்படிப் பரப்பப்படுகிறது என்பதனை களத்தில் நின்று முறியடித்த ஒரு நிகழ்வை கட்டுரையாக வடித்துள்ளார்.குடியாத்தம் நகருக்கு அருகில் இருக்கும் ஒரு சிற்றூரில் திடீரென்று வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்று கூடிய கூட்டம் பற்றியும் ,அதற்கான விளக்கத்தை அறிவியல் அடிப்படையில் விளக்கியதையும் விவரித்துள்ளார்..
பெண் விடுதலை என்று சொன்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் தந்தை பெரியார்.'பெண் ஏன் அடிமையானாள் ' என்பதை ஒரு 80,90 ஆண்டுகளுக்கு முன்னாள் காரண காரியத்தோடு விளக்கியவர் தந்தை பெரியார்.பெண்கள் கல்வி பெறவேண்டும்.பெண்கள் வேலைக்குச்செல்ல வேண்டும்.பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திச்சொன்னவர் பெரியார். ஆனால் இன்றைக்கு கற்ற பெண்கள்,பொருளீட்டும் பெண்கள் விடுதலை பெற்று இருக்கிறார்களா?இன்னும் ஆண்களின் அடிமையாகத்தான் இருக்கிறார்களா? என்னும் கேள்வி எழுப்பினால் இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.இதனை "
பொருளியலைத் தேடும் உரிமையைப் பெற்று உள்ளார்கள் என்பதைவிடப் பொருளியல் தேடித்தரும் பொறியாக உள்ளார்கள் என்பதுதான் துயர் தரும் செய்தி.ஏனெனில் செலவழிக்கும் உரிமை பெண்களிடம் இல்லை "
என்று தோழர் தேன்மொழி குறிப்பிடுகின்றார்.உண்மைதானே.இன்றைக்கு வேலைக்குச்செல்லும் பெரும்பாலான பெண்களின் வங்கி ஏடிஎம் கார்டு அவர்களின் கைகளில் இல்லையே. ஏடிஎம் கார்டை கணவனிடம் கொடுத்துவிட்டு ,பேருந்தில் போய்வரப் பணம் கொடுங்கள் என்று கையேந்தும் நிலைமைதானே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது.
" ஒவ்வொரு பெண்ணின் புன்னகைக்குப் பின்னால் ஓராயிரம் துன்பங்கள் உள்ளது.பெண்கள் உணர்வுகளுக்காக வெகுவாகப் போராட வேண்டியுள்ளது "
என்பதனைத் தன் கட்டுரையில் குறிப்பிடும் தோழர் தேன்மொழி ' பெண் மூலமாகப் பிறந்து பெண்ணொடு வாழ்ந்து பெண் குழந்தையை உருவாக்கி பெண்மையைச்சிதைக்கிறாய் சொற்களால்,நயண்மையா? ' எனக் கேள்வி கேட்கிறார். ஆபாசமாக திரைப்படப் பாடல்கள் எழுதிக் குவிக்கும் கவிஞர்களைப் பார்த்து தோழர் கேட்கும் கேள்விகள் நறுக்கென உள்ளது.
ஒட்டுமொத்த பார்ப்பனியத்தைப் புறந்தள்ளி,ஆரிய மாயையிலிருந்து விடுபட்டு,ஆரியப்பண்பாடுகளை களையெடுத்து ,எப்போது முழுமையான தமிழராக நாம் வாழப்போகிறோம் "
என்னும் ஆதங்கத்தை தோழர் தேன்மொழி தன் கட்டுரையில் எழுப்பியிருக்கிறார்.
பச்சிளம் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நடக்கிறதே,வயது முதிர்ந்த பாட்டிகளுக்கு பாலியல் கொடுமை நடக்கிறதே,இதற்கெல்லாம் காரணம் பெண்கள் உடையா? என்ற கேள்வியை எழுப்பும் இந்த நூலின் ஆசிரியர் "மாற வேண்டியது பெண்களோ? பெண்களின் ஆடைகளோ அல்ல...ஆண்களின் பார்வையே "
என்று தீர்வையும் கொடுக்கிறார்.
கொடுமைகளை எரிதழல் கொண்டு எரிக்கவேண்டும் என்னும் அறச்சீற்றத்தோடு சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆணும் பெண்ணுமாய் வாழும் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது,ஏன் இத்தனை பிரச்சனைகள் என்று பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு ,பிரச்சனைகளைத் தவிர்த்து உண்மையான காதலோடு இல்லற வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளைக் காட்டுகின்ற சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.
சில கட்டுரைகளில் உளவியல் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகி அதற்கான தீர்வுகளையும் குறிப்பிடுகின்றார்.தாழ்வு மனப்பான்மை ஒருவரை,அவர் நினைப்பதை மட்டுமே செயல்படுத்த முனையும் என்பதனைக் குறிப்பிட்டு அதனால் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள்,அதனைத் தீர்ப்பதற்கான வழிகளையும் குறிப்பிடுகின்றார்.
மானுட நேயத்தை வலியுறுத்தும் இக்கட்டுரைகள் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன. நம்மைக் கோபம் கொள்ளச்செய்கின்றன.இதற்கு என்னதான் தீர்வு என்று சிந்திக்க வைக்கின்றன.பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. பல பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக எழுதக்கூடியவராக தோழர் ந.தேன்மொழி அவர்கள் இருந்தாலும், இந்த நூல்தான் அவரின் முதல் நூல்.அந்த வகையில் ஒரு பெண்ணுரிமைப் போராளியின்,பகுத்தறிவுச்சிந்தனைவாதியின் முதல் நூல் வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி.இதைப்போல இன்னும் பல நூல்களைப் படைக்கவேண்டும்.அனைவரும் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும்.பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
தோழமையுடன்
வா.நேரு
No comments:
Post a Comment