Wednesday 27 September 2023

எனைப் பார்த்து ஏளனமாகச்சிரித்தது…

 கவிஞர் ‘சமயவேலின்’

கவிதையைப் படித்த  நேரம்

எனக்கும் கூட

ஒரு பால்ய நண்பன்

நினைவில் வந்து வந்து போகின்றான்…

 

ஒன்றாம் வகுப்பு முதல்

12-ஆம் வகுப்பு வரை

உடன் படித்தவன்…

 

+1 புதிதாகச்சேர்ந்த

காந்தி நிகேதனில்

சார் என்று சொல்லக்கூடாது...

அய்யா என்றுதான் சொல்லவேண்டும்

என்பது விதி…

அவன் மனதிற்குள் அது

போகவே இல்லை…

"அய்யா என்று சொல்" என்று

அய்யா பால்ராஜ் அடித்தபோது

அடியை வாங்கிக்கொண்டே

‘இனிமேல் அய்யா என்று

சொல்லி விடுகிறேன் சார்’ என்றான்..

அடித்துக்கொண்டிருந்த அய்யாவும்

சிரித்துவிட்டார்..

 

கல்லுப்பட்டியில் நான்

தங்கிப் படித்தபோது

சளைக்காமல் எனக்காக

ஐந்து அடுக்கு டிபன் பாக்ஸில்

சோறு சுமந்தவன்

சாப்டூரிலிருந்து கல்லுப்பட்டிக்கு…

 

அவனது சிரித்த முகம்

எப்போதும் என் நினைவில்...

கருத்தாகப் படித்தான்

கல்லூரிக்குச்சென்றான்

வேலைக்குச்சென்ற சில நாட்களில்

விபத்தில் மாண்டான்..

 

ஊருக்கெல்லாம் பிரசவம்பார்த்து

உயிர்களைக் காப்பாற்றிய

அவனது தாய் நடுரோட்டில்

எனைப் பார்த்து

‘கண்ணன் போயிட்டானே சாமி’

என்று கதறிய கதறல்

என்னை விட்டுப்போக

இன்னும் மறுக்கிறது….

 

ஒன்றாம் வகுப்பிலிருந்து

பணிரெண்டாம் வகுப்புவரை

என்னுடன் படித்த நண்பன்

நவநீதகிருஷ்ணன் என்னும் கண்ணன்

ஒரு நாளும் என்னை வாடா போடா

என்று அழைத்தில்லை..

எல்லோரும் வாடா போடா என்றழைக்க

இவன் மட்டும் ஏன் நம்மை

‘அய்யா ‘ என்று அழைக்கிறான்

என்பது  குற்ற உணர்ச்சியாய்

அன்றைக்கு உரைக்கவில்லை…

 

முடிவெட்டும் அவனது அண்ணன்

வாங்க போங்க

என்றழைத்தபோது

‘என்னடா எப்போது வந்தே

என்று கேளுங்கள் ‘என்று சொன்னபோது

முடிவெட்டுவதை நிறுத்திவிட்டு

மேலும் கீழும் எனைப் பார்த்த அவர்

‘ஏன் நான் இந்த ஊர்ல

ஒழுங்காகப் பிழைக்க வேண்டாமா?’

என்று கேட்டபோது

கிராமத்து வீதிகளில்

உயிரோடு இருக்கும் ஜாதி

பால்ய நண்பனின்

நினைவுகளையும் தாண்டி

எனைப் பார்த்து

ஏளனமாகச்சிரித்தது…

 

                  வா.நேரு

                  28.09.2023

6 comments:

anandam said...

கவிதை அருமை அண்ணே!அய்யா என்ற சொல்கூட இன்றும் பலருக்கு அந்நியமாகவே இருக்கிறது... மொழி மட்டும் அல்ல... அடக்கப்பட்ட மனத்தின் வெறுப்பும் காரணம்...!

முனைவர். வா.நேரு said...

ஆமாம்,உண்மைதான் அண்ணே..பள்ளிக்கூடத்திலாவது அந்த 'அய்யா ' என்று சொல்லை மறப்போமே என்று நினைத்திருக்கக்கூடும்..நல்ல பார்வை. நன்றி.

மதிகண்ணன் said...

தோழர் நேருவிற்குள் இப்படி ஒரு கவிஞன் இருப்பது இத்தனை நாளாக தெரியவே தெரியாது. குறி தப்பாமல் இலக்கை சரியாகச் சென்றடைந்த கவிதை. வாழ்த்துக்கள் நேரு.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர்

Anonymous said...

வணக்கம் அண்ணா!

தங்களின் மனவலியை

வலிமையான சொற்கள் கொண்டு

இறக்கி வைத்துள்ளீர்கள்!

வாசித்த என்மேல்

ஏறிக்கொண்டது அந்த வலி!

வாசிப்பவர்களுக்கு வலியைக்

கொடுக்கும் தங்களின் கவிதை

வெற்றிப்பாதையில்........

உங்கள் அன்புத் தங்கை,
வி. இளவரசி சங்கர்

முனைவர். வா.நேரு said...

வணக்கம் தங்கையே...நன்றி வாசிப்பிற்கும் கருத்திற்கும்..உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை..