Tuesday, 17 October 2023

உணவும் வறுமை ஒழிப்பும்…. (முனைவர் வா.நேரு)


1945-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(Food and Agriculture Organization-FAO)  அக்டோபர் 16 அன்று உருவாக்கப்பட்டது.அந்த அமைப்பின் சார்பாக 1979-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 20-வது பொது மாநாட்டில்,அதன் உறுப்பு நாடுகள் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஐ உலக உணவு நாள்(word Food Day) எனக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தரமான,ஊட்டச்சத்து உள்ள உணவுகளைக் குறைந்த விலையில் கொடுக்கவேண்டும் என்பதுதான் இந்த உணவு நாளின் நோக்கமாகும்.இந்த நாள்  உலகம் முழுவதும் உள்ள உணவு தயாரிக்கப் பயிரிடும்  விவசாயிகளுக்கும்,விளையும் பொருட்களை உணவாக மாற்றுவதற்கு இடையில் உழைக்கும் அனைவருக்கும்  நன்றி செலுத்தும் நாளாகாவும் கடைப்பிடிக்கப்படுகிறது.அதோடு உணவின் தேவை,அதனை வீணாக்காமல் இருக்கப் பழக்குதல்,சத்தான இயற்கை உணவுகளை அடையாளம் காட்டி உண்ண வைத்தல். என உணவினைச்சுற்றி நிகழும் பல்வேறு பொருட்களைப் பற்றிப் பேசும் நாளாகவும் அமைகிறது.

இந்த 2023-ஆம் ஆண்டிற்கான உலக உணவு தினக் கருப்பொருள் “நீரே உயிர்,நீரே உணவு,யாரையும் விட்டு விடாதீர்கள் ‘ என்பதாகும்.

 உலக உணவு நாளைப் பற்றிச் சிந்திக்கும் போது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் உணவு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். சத்தான உணவை ,அனைத்து வேளைக்கும், அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்பதுதான் நமது இலக்கு என ஐக்கிய நாடுகள் சபை கூறும் நிலையில் அந்த இலக்கினைப் பற்றி நினைத்துப்பார்க்க இயலா நிலையில் இந்தியா இருக்கிறது.நல்ல உணவும்,குடி நீரும் இல்லாமல் இருக்கும் கோடான கோடி மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

அதைப்போல ஐக்கிய நாடுகள் சபை ,வறுமை ஒழிப்பு நாள் என அக்டோபர் 17-ஐ 1992-ஆம் ஆண்டில் அறிவித்தது.1993ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் அக்டோபர் 17 என்பது வறுமையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.மனிதர்களாக வாழும் யாரும் ஆதரவற்ற நிலையில் வறுமையில்  வாடக்கூடாது என்பதுதான் இந்த நாளின் நோக்கமாகும் .சென்ற 2022-ஆம் ஆண்டு மற்றும் இந்த 2023-ஆம் ஆண்டின் வறுமை ஒழிப்பு நாளின் கருப்பொருள்  ‘சுயமரியாதையுடன் வாழும் உரிமையை எல்லா நிலையிலும் நடைமுறைப்படுத்துதல்(Dignity for all in practice is the umbrella theme of the International Day for the Eradication of Poverty for 2022-2023) ‘என்பது இந்த நாளின்  நோக்கமாகும்.

உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா,காங்கோவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புல்ளி விவரம்….இந்தியாவில் 73 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் உள்ளனர் ( நன்றி : தினமணி 13.09.2019).இந்த புள்ளிவிவரத்திற்குப் பின் ஏற்பட்ட கொரனா பாதிப்பு காரணமாக இன்னும் பல கோடி பேர் இந்தியாவில் தீவிரமான வறுமைக்கு ஆளாகி உள்ளனர்.உலகிலேயே வயதான காலத்தில் வறுமையால் வாடுபவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.


இந்தியாவில் இருக்கும் உணவு இல்லாமைக்கும்,வறுமைக்கும் நேரடியான தொடர்பில் இருக்கும் காரணம் ஜாதியே.இன்றைக்கும் சின்னஞ்சிறு குடிசைகளில்,ரோட்டோரங்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் பல கோடிப்பேரைக் கொண்டது இந்தியா.கணக்கு எடுத்துப்பார்த்தால் அதில் ஒருவர் கூட உயர் ஜாதியைச்சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். உழைக்கும் மக்களுக்குத்தான் ஒதுங்குவதற்குக் கூட இடம் இல்லாத கொடுமை இந்த நாட்டில் இருக்கிறது.குடிக்கத் தண்ணீர் இல்லை,சாப்பிட உணவு இல்லை, உடுக்க நல்ல உடை இல்லை,இருக்க வீடு இல்லை என்னும் கொடுமையில் வாழ்கிறார்கள் கோடிக்கணக்கான மக்கள் இந்த நாட்டில். அவர்கள் அனைவரும்  தாழ்த்தப்பட்ட,பிறபடுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த மக்கள்.இவர்கள் இப்படி அடிமை வேலையை மட்டுமே தொடர்ந்து செய்யவேண்டும் என்பதற்காகவே அவர்கள் முன்னேற்றத்தை இந்த சனாதன அரசு கண்டு கொள்வதில்லை.

“மேல் நாட்டில் சாதி இல்லாததால் ,அங்கு பொதுவுடமைக்கு முதலில் வகுப்புச்(வர்க்க) சண்டை துவங்கவேண்டியதாயிற்று.இங்கு சாதி இருப்பதால் பொதுவுடமைக்கு முதலில் சாதிச்சண்டை துவக்கவேண்டியதாகும்.

பார்ப்பானும் ,பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடமை வேஷம் போடுவதால் சாதிச்சங்கதியை மூடிவிட்டு,ஆகாத காரியமான- ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு(class) உணர்ச்சியைப் பற்றிப் பேசி-சாதியை ஒழிக்கப்பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்;சாதியை ஒழிக்கச்செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப்பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும்.இதிலேயே அரைப்பாகம் பொதுவுடமை ஏற்பட்டு விடும்.அதாவது,சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத்தன்மையும்,சாதியினால் சுரண்டப்படுவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.(தந்தை பெரியார்,குடி அரசு தலையங்கம்,25-3-1944) என்கிறார் தந்தை பெரியார்.

இந்த உலக உணவு நாளிலும்,உலக வறுமை ஓழிப்பு நாளிலும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டிய செய்தி ஜாதி ஒழிப்பாகும்.அதற்கு காரணமாக இருக்கும் ஸ்னாதான மத ஒழிப்பாகும்.உழைக்காமல்  நெய்யை ஊற்றி ஊற்றித் திங்க ஒரு ஜாதியும்,சாப்பிட ஒன்றும் இல்லையென்றாலும் மாடாய் உழைக்கும் மனிதர்களைக் கொண்டதாக ஒரு ஜாதியும் இருக்கும் இந்த நாடு மற்ற நாடுகளோடு ஒப்பிடத்தக்கதன்று.

அண்மையில் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு உழைக்கும் மக்களின் உண்மையான தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.இந்தியாவிலேயே கல்வியில்,பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் பீகார்.ஆனால் அந்த மாநிலத்தைச்சார்ந்த பார்ப்பனர்கள் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ் போன்ற உயர் பதிவிகளை வகிப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படி பதவியில் இருந்துவிட்டு ஓய்வு பெற்ற பின்பும் கூட மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.  

பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை 13 கோடி.இதில் இந்துக்கள் மட்டும் 82 சதவீதம்.இஸ்லாமியர்கள் 17 சதவீதம்.இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27,மிகப்பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் 36,பட்டியலினத்தவர்கள் 19,பழங்குடியினர் 1.06 ,உயர்ஜாதி எனப்படுவோர் 15 சதவீதம் எனப் புள்ளிவிவரம் காட்டுகிறது.அதிலும் முன்னேறிய ஜாதியினரில் 3.5 சதமே பார்ப்பனர்கள். அந்த 3.5 சதவீதச பார்ப்பனர்கள் வாய்ப்பும் வசதியும் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது.

 இந்தியா முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.அதில் மிக அதிக வறுமை நிலையில் உள்ளவர்கள் யார் யார் என்ற கணக்கெடுப்பும், சத்தான உணவு இன்மையால் துன்பப்படுபவர்கள் யார் யார் என்னும் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படவேண்டும்.அப்போதுதான் இந்த இந்திய ஒன்றியம் யாருக்கு ஒளிர்கிறது, யாருக்கு இன்னும் இருட்டாகவே இருக்கிறது என்னும் உண்மை அனைவருக்கும் தெரியும்.இந்தியாவில் வறுமை ஒழிப்பிற்கும் ,அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதற்கும் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய உண்மையான சிந்தனையும் தீர்வும் கிடைக்கும்.பிறவி முதலாளிகளை உருவாக்கும் ஸனாதன தர்மத்தை ஒழிக்கும் சிந்தனை பரவும்.விழிப்புணர்வு ஏற்படும்.அப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இந்த உலக உணவு நாளையும்,உலக வறுமை ஒழிப்பு நாளையும் நாம் கடைப்பிடிப்போம். 


நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் அக்டோபர் 15-31

No comments: