Saturday 14 October 2023

என்ன செய்யப்போகின்றோம் இதனை மாற்ற?

 

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்கு

இராக்கட்டுகள் வீசி

கலகத்தைப் பற்ற வைத்த

அறிவிருப்பதாக நினைக்கும் அறிவிலிகளே!

உங்களின் ஒரு  நாள் செயலைவைத்து

எதிரி கொத்து கொத்தாய் எரிக்கின்றான்..

 

பற்றி எரிய வீசப்படும் வெடிகுண்டுகள்!...

வெந்து சாகும் குழந்தைகள்…

ஓடி ஓடி ஒளியும் மக்களின்

மேலே விழுந்து வெடிக்கும் குண்டுகள்..

படம் கண்டு மனம் பதைக்கிறது..

எங்கள் கண்களில்

2009 தமிழ்ஈழம் கண்ணில் வந்து

கண்ணீர் வடிகிறது!

 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்

அமெரிக்க மண்ணில் வசித்துவந்த

ஏதுமறியா அப்பாவிகள்…

பூர்வகுடி செவ்வந்தியர்களைக்

கொன்று குவித்து....

அந்தக் குருதியின் மீது

அந்த நிலத்தில் தங்கள்

கொடியை நாட்டிக் கொண்ட

அமெரிக்காதான் இன்றைக்கு

உலகத்தின் நாட்டாமை!

அவன்தான் இன்றைக்கு இஸ்ரேலுக்கு

உதவுகிறான்..

 

அகண்ட பாரதம் காணும் கனவில்

இங்கு இருக்கும் ஒருவரும்கூட

இஸ்ரேலுக்கு உதவிட அழைக்கின்றார்…

இவர்களின் பார்வைகளில்

நிலம்தான் முக்கியம்..

அந்த நிலத்தில் வாழும் மனிதர்களல்ல!

 

எவ்வளவு நாளாக அந்த நிலத்தில்

அந்த மனிதர்களின் மூதாதையர்கள்

வாழ்ந்தார்கள் என்பதோ…

எத்தனை யுகங்களாக

அந்த மனிதர்களின் பரம்பரை இரத்தம்

அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு

உதவியது என்பதோ அவர்களுக்கு முக்கியமில்லை…

 

அந்த  நிலம் வேண்டும்..

வந்தவன் வசதியாக வாழ்வதற்கு

அந்த  நிலம் வேண்டும்..அந்த  நிலத்திற்க்குள்

இருக்கும் இயற்கைப் பொருட்கள் வேண்டும்..

 

அதை அடைய இடையூறாக இருக்கும்

அந்த  நிலத்து மனிதர்கள் அகற்றப்படவேண்டும்..

அவர்கள் அகல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில்

அவர்க:ள் கொல்லப்படவேண்டும்..

 

அப்படிக் கொல்லும் கொலைகாரச்ச்செயலை

நியாயப்படுத்த ஏதேனும் காரணங்கள் வேண்டும்..

இதே காரணத்திற்காகத்தான்

மணிப்பூரும் கூட மாதக்கணக்கில்

எரிந்து கொண்டிருக்கிறது…

இங்கிருப்பவருக்கு மணிப்பூரைப்

பார்க்கவோ! எரியும் நெருப்பை அணைக்கும்

முயற்சிக்கோ நேரமில்லை…

இஸ்ரேலுக்கு உதவிட

முன்வரிசையில் நிற்கின்றார்…

 

கொன்றார்கள்..ஆதலால் கொல்கின்றோம்

திருப்பிக் கொல்வதற்கு

எந்த வழிகாட்டுதலும் தேவையில்லை…

இன்னும் கூடுதலாய் நிலங்களை ஆக்கிரமிப்போம்…

காஸாவில் இருக்கும் அப்பாவி

மக்களை அடைத்துவைத்துக் கொன்றாலும்

அமைதி காக்கவேண்டும் உலக மக்கள்!

என்ன கொடுமை இது!

 

உலகக் கேடிகளின் தலைவன்

இஸ்ரேலையும் அவனுக்கு வழிகாட்டும்

சிலரையும் கண்டு கொண்டோம்..

என்ன செய்யப்போகின்றோம் இதனை மாற்ற?

 

                              முனைவர் வா.நேரு,

                               15.10.2023

No comments: