Sunday, 21 January 2024

கலங்கி அழும் கண்களோடு நாங்கள்...

 


இடிமழையாய் எதிரிகளுக்கு

பதில் அளித்த பகுத்தறிவாளர்

எங்கள் கொள்கைத்  தங்கம்

அய்யா அறிவுக்கரசு மறைந்தாரே!

 

அதிகாலையில் புலனத்தில்

செய்தியைப் பார்த்தவுடன்

பொங்கி வந்த அழுகையை

அழுது தீர்த்தபின்பும் உள்ளம்

ஆறுதல் அடையவில்லை!

 

கால் நூற்றாண்டாய் எனக்கு

ஆறுதல் தந்த தோள்கள் அவரின் தோள்கள்..

தோழமையோடு நான் செய்யும்

தவறுகளை இடித்துத் திருத்தியவர் அவர்…

இயக்கத்தில் குடும்பத்தில்

நான் எதைச்சொன்னாலும் சரியான

திசை நோக்கி வழிகாட்டியவர் அவர்..




 

 

பொங்கும் கோபத்தைப் போனில்…

நேரில் கொட்டித் தீர்ப்பார்…

பின்பு துள்ளி வரும் குழந்தையை

அள்ளி அணைப்பது போல்

பாசத்தைக் கொட்டித் தீர்ப்பார்..

அவரின் கோபத்தில் …

திருத்தும் நோக்கமன்றி

வேறு ஏதும் கண்டதில்லை…

 

தைத்திங்கள் முதல் நாளில்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச்சொன்னேன்..

எனது 35வது நூல் வெளியிடப்படுகிறது

சென்னை புத்தகத்திருவிழாவில் ..

அய்யா ஆசிரியர் வீரமணி 

தலைமையில் என்றார்…

 

எனது எல்லாப்புத்தகங்களும்

தந்தை பெரியார் கொள்கையை மட்டும்

சொல்லும் புத்தகங்களே!

என் வாழ்வில் வேறு எதையும்

எழுதவில்லை என்றார்…

 

கடல் அலைபோல அவரோடு

பேசிய பேச்செல்லாம்

உள்ளத்தில் எழுந்து

எழுந்து மறைகிறது…

 

நினைவுகள்தான் வாழ்க்கை!

அய்யா,உங்கள் நினைவு என்றும் மங்காது!

எங்கள் வாழ்வில் என்றும் மறையாது !

முன் அறிகுறி ஏதுமின்றி

திடீரென்று விடை பெற்றுக்கொண்டீர்கள்…

கலங்கி அழும் கண்களோடு நாங்கள்

வீரவணக்கம் செலுத்துவதைத் தவிர

வேறு வழியில்லை அய்யா!

வீரவணக்கம்! வீரவணக்கம்!

 

                வா.நேரு,22.01.2024

 

 

 

 

4 comments:

Kavitha Elango said...

எதிர்பாராத பேரிடியாக தாக்கிய அறிவுக்கரசு அய்யாவின் மறைவுச்செய்தி கண்களைக் குளமாக்கி விட்டதய்யா! 😭

வீரவணக்கம் அய்யாவிற்கு கனத்த மனத்துடன்!

Anonymous said...

அய்யா அவர்களுக்கு வீரவணக்கம்...

Anonymous said...

அழுகை தான் வருகிறது அண்ணா! நாம் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் இது...

முனைவர். வா.நேரு said...

கொடுமை...இயற்கைக் கோண்ல்..