Thursday 4 January 2024

அறிவியல் தரும் வாய்ப்புகள்...முனைவர் வா.நேரு

 



“இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும், அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை

எல்லாம் -அந்நாட்டவர் பழையவற்றோடு திருப்தி அடைந்து, அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக் கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வம் கொண்டு நடுநிலை அறிவோடு முயற்சித்ததன் பலனாலேயே ஏற்பட்டவை ஆகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன. ஆகவே இதை உணர்ந்தவர்கள்தாம் இனிச் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட உலகத்தைக் காணலாம். அதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்பதை ஒருவாறு கற்பனைச் சித்திரமாகவாவது தீட்ட முடியும்” என்றார் தந்தை பெரியார்.(இனிவரும் உலகம்).

புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய மனிதர்களின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்து மின்சாரமும், இணையமும் இணைந்திருக்கின்றன. உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு இன்றைக்கு மின்சாரமும் இணையமும் தேவைப்படுகின்றது.

உலகத்தில் 70 சதவிகிதப் பரப்பு கடல். இன்றைய புதிய அறிவியல் மூலமாக உலகத்தில் கடல் என்பது மீன் பிடிக்க மட்டுமல்ல; பயணம் செய்வதற்கு மட்டுமல்ல; நவீன தொழில் நுட்பத்திற்கான சாலையாகவும் மாற்றப்படுகிறது..கடலுக்கு மேலே பாலம் கட்டுவது தெரியும். ஆனால் கடலுக்கு அடியில், அடி ஆழததில் கேபிள்கள் பதிக்கப்படுகின்றன.

தந்தி சாதனம் உபயோகப்படுத்த ஆரம்பித்த 1850-ஆம் ஆண்டுகளில் இருந்து கடலின் வழியாக தகவல் தொடர்புக்கான கேபிள்கள் பதிப்பது ஆரம்பமாகியது என்று இணையச் செய்திகள் கூறுகின்றன. 1989-முதல் இணையத்திற்கான இணைப்பை அளிக்கும் பைபர் கேபிள்கள் கடலின் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.
இணைய இணைப்புகள் காற்றின் வழியாகவும், செயற்கைக்கோள்கள் வழியாகவும், நேரடியான பைபர் கேபிள்கள் இணைப்பின் வழியாகவும் கொடுக்கப்படுகின்றன. காற்றின் வழியாக இணைக்கப்படும் இணைய இணைப்பை விட கேபிள்கள் வழியாக இணைக்கப்படும் இணைய இணைப்பு உறுதியாகவும், நிலையாகவும், வேகமாகவும் இருக்கும்.ஒரு நாட்டிற்குள், நிலப்பரப்பில் கேபிள் இணைப்புகளைப் பதிப்பது எளிது.ஆனால், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் கடல் இருந்தால் என்ன செய்வது ? என்ற கேள்வி வருகின்றபோதுதான் கடலின் வழியாகச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் என்னும் கேபிள்கள் வருகின்றது. இவை கடலுக்கு அடியில் அதன் அடித்தளத்தில் செல்லும் கேபிள்கள்.பல ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தக் கேபிள்கள் செல்கின்றன.

“கடல்களுக்கடியில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் உள்ளன. பூமி முழுதும், 10 லட்சம் கிமீ.நீளத்துக்கும் அதிகமான கேபிள்கள் நிறுவப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், மற்றும் உலகளாவிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனமான டெல்க்சியஸ் ஆகியவை இணைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் 5,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மரியா நீர்மூழ்கிக் கப்பல் கேபிளை நிறுவி முடித்தன. இது அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா கடற்கரையை ஸ்பெயினில் உள்ள பில்பாவோவுடன் இணைக்கிறது.

அமெரிக்கத் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனமான டெலிஜியோகிராஃபி, ‘நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் மேப் போர்ட்டல் என்ற வரைபடத்தை உருவாக்கியது. இது கூகுள், ஃபேஸ்புக், அமேசான், வெரிசான், அல்லது கிஜி&ஜி போன்ற நிறுவனங்களின் தரவுகளுடன் உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து நீர்மூழ்கிக் கேபிள்களின் ஊடாடும் வரைபடமாகும்.



உலகம் முழுவதும் 13 லட்சம் கி.மீ. தூரம் நீண்டிருக்கும் 400க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கேபிள்கள் உள்ளன.” என்று பி.பி.சி. தமிழ் செய்தி கூறுகிறது.
தொலைபேசி, இணைய இணைப்புகளுக்காக கடலுக்கு அடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது போல, அண்மையில் கடலின் வழியாக மின்சார கேபிள்கள் கொண்டு செல்லும் திட்டங்கள் தீட்டப்பட்டு, அவை வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. டென்மார்க் நாட்டிலிருந்து பிரிட்டன்வரை ஏறத்தாழ 765 கி.மீ. தூரத்திற்கு கடலுக்குள் மின் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. நீர் மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடலின் அடியில் இந்தக் கடல் மின் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘வைகிங் லிங்க்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.கடலின் வழியாக மின்சாரத்தைக் கடத்துவது மனித குல வரலாற்றில் மகத்தான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் ,மின்சாரம் தயாரிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. சூரிய ஒளியின் மூலமாக மின்சாரம், காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரித்தல் போன்றவை நடைபெறுகின்றன. பிரிட்டன் நாட்டிலும் ,டென்மார்க் நாட்டிலும் நிறைய காற்றாலைகள் மூலம் மின்சார உற்பத்தி நடக்கிறது. இந்த மின்சாரத்தை இரண்டு நாடுகளும் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மின்சாரக் கேபிள்கள் ‘வடகடல்’ வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
“இதன் கட்டுமானம் 2019-இல் தொடங்கியது. இதன் திட்டமிடல், கட்டுமானம், மற்றும் வேலைகளுக்காக 30 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செலவிடப்பட்டுள்ளது. இந்த மின் கேபிள் செப்பு, எஃகு, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் ஆனது. கடலின் அடிப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான செலவு இந்திய மதிப்பில் சுமார் 19,000 கோடி ரூபாய்.” இவ்வளவு செலவு செய்து மனித குலத்தின் ஒரு புதுப்பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது.
இதைப் போல இந்தியாவிலும் கடல் வழியாக மின் இணைப்பு தரலாம்.

உலக நாடுகளுக்கு இடையே இருக்கும் நேர வேறுபாடும் சேமிக்க முடியாத மின்சாரத்தை பயன்படுத்த உதவும் என்று குறிப்பிடுகிறார்கள். இப்போது கணினி பயன்படுத்துவதைப்போல, அமெரிக்காவில் இரவு என்றால் தமிழ் நாட்டில் பகல் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் தாங்கள் தூங்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் வழியாக வேலையைக் கொடுத்துவிட்டு, அவர்கள் தூங்கி எழுந்தவுடன் முடிந்த வேலையைப் பெற்றுக்
கொள்வதுபோல, அதிகமாகத் தேவைப்படும் நேரங்களில் கடலின் வழியாக இணைக்கப்படும் இந்த மின்சாரப் பயன்பாட்டை அந்தந்த நாடுகள் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடுகின்றனர்.

உலகத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்னொரு பக்கம் மழையில்லாமல்,குடிக்கத்தண்ணீர் இல்லாமல் மக்கள் துன்பப்படுகின்றனர்.மனித சக்தி மகத்தானது. வெள்ளத்தில் வரும் அதிகமான நீரை ,நீர் கிடைக்காத மற்ற பகுதிக்குக் கொண்டு செல்லத் திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.ஒரு பக்கம் செழிப்பும் இன்னொரு பக்கம் ஏழ்மையும் வறுமையும் கொண்ட நாடுகளாக உலகில் பல நாடுகள் திகழ்கின்றன. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்னும் திராவிடத்தத்துவம் உலக அளவில் உண்மையாகவேண்டும். எல்லா நாட்டிலும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளோடு, மின்சாரம், இணையம் போன்றவை கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் உலக நாடுகள் செய்யவேண்டும். தங்களிடம் அதிகமாக உள்ள தங்கள் வளத்தை,ஆற்றலை மற்ற நாடுகளோடு பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.அதற்கான திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.

உலகில் உள்ள வளங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து, பெற்று பயன்படுத்துவதுபோல, உலக மக்களின் இடர்கள்_ துன்பங்களில், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன் மூலம் தீர்வு காணலாம். அதைத்தான் பெரியா£ 60 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார். ♦

நன்றி உண்மை மாதம் இருமுறை இதழ் ஜனவரி 01-15,2024



No comments: