Monday 29 January 2024

எளிதில் அடையாளம் காணஇயலா....

 

காந்தியைக் கொன்றவர்கள்

கலர் கலராய் வருகிறார்கள்

எளிதில் அடையாளம் காணஇயலா

மாறு மாறு  வேடங்களில் வருகிறார்கள்...

 

கடையனுக்கும் கடைத்தேற்றம்

பேசியவர் காந்தி...

அதானி,அம்பானியின் தேற்றமே

தேசச்தின் தேற்றமென

தினவெடுத்து வருகிறார்கள்...

 

சத்தியமே வெல்லும்

என்றார் காந்தி...

காந்தி படம் போட்ட நோட்டுகளால்

எவரையும் விலைக்கு வாங்கிடுவோம்...

விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்திடுவோம்

எனும் இறுமாப்பில் வருகிறார்கள்...

 

அகிம்சையே எனக்கு கிடைத்த

ஆயுதம் என்றார் காந்தி..

ஹிட்லர் கையில் எடுத்த

ஹிம்சையே எங்கள் ஆயுதமென

கண்ணுக்குத் தெரியா வதைமுகாம்களை

நாடு முழுக்க விதைத்தவண்ணம்

காந்தி போல வேடமிட்டு வருகிறார்கள்...

 

அண்ணல் அம்பேத்கர் அழகாய்ச்சொன்னார்

அவர்கள்  நாக்கில்  ராமனை உச்சரிப்பார்கள்

ஆனால் கக்கத்தில் கொடுவாளை வைத்திருப்பார்கள்

துறவிகளைப் போல பேசுவார்கள்

ஆனால் கசாப்புக்கடைக்காரர்கள் போல

நடந்து கொள்வார்கள் என...

அப்படியே பொருந்துகிறது இந்நாளில்..


 

காந்தி வேடம் போட்டிருக்கும்

பசுந்தோல் போர்த்திய விலங்குகளை

எதிர்ப்பதற்கு காந்தி கொடுத்த

ஆயுதம்தான் கைவசம்...

மக்களிடம் செல்லுதல்...

மக்களிடம் சொல்லுதல்...

மக்களைத் திரட்டுதல்..

அநீதிக்கு எதிராக

சாகத்துணிவு கொள்ளுதல்...

ஒன்று கூடி எதிர்த்து நிற்றல்...

 

காந்தி நினைவு நாளில்

இதை நினைவில் கொள்வோம்...

குண்டுகள் துளைத்து

குருதியில் நனைந்த

அண்ணல் காந்தியை நினைவு கூர்வோம்!

வேற்றுமை மறந்து ஒன்று கூடுவோம்!

கொடுங்கோலர்கள் ஆட்சியை அகற்றுவோம்!

 

                                வா.நேரு,

                                 30.01.2024


No comments: