‘ஜாய் ஆப் லிவிங்க் என்பதை வாழ்க்கையை இன்பமாக்க’ என்று மலையாளத்தில் நீங்கள் மொழி பெயர்த்த அனுபவம் பற்றி’
‘இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஊக்கப்படுத்தும்(Motivational) கட்டுரைகள்.அன்றாட வாழ்வில் நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதையும், நாம் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்பதையும் இந்தக் கட்டுரைகளில் திரு.வீரமணி அவர்கள் குறிப்பிடுகின்றார். ‘திங்கட்கிழமை நோய்’ அமெரிக்காவில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகம் ஆய்வு செய்து இந்தத் திங்கட்கிழமை நோய் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறது.வாரத்தின் திங்கட்கிழமை எல்லோருக்கும் ஒரு ஸ்டார்ட்டிங் டிரபில் இருக்கும்.சனி, ஞாயிறு விடுமுறையில் இருந்துவிட்டு,திங்கட்கிழமை படிக்கவோ,வேலைக்கோ போகும்போது ஏற்படும் தயக்கம்தான் இந்த நோய். இந்த நோய் எனக்குப் படிக்கும்போது இருந்தது.கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வரை இருந்தது. ஆனால் இந்த நூலைப் படித்தபிறகு இது நமக்கு மட்டும் இருக்கும் தயக்கம் இல்லை. திங்கட்கிழமை தயக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது என்பது தெரிந்தபிறகு ,இதைப் படித்தபிறகு எனக்கு அந்த நோய் போய்விட்டது.(சிரிக்கிறார்).
இந்த நூல் நேர் மறை எண்ணங்களை நம் மனதிற்குள் விதைக்கிறது.அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தை இந்த நூலின் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தி,அந்த நூலின் சிறப்புகளை இந்தக் கட்டுரைகளில் கொடுத்திருக்கிறார்.’ என்றார்.
‘ஆமாம், வாழ்வியல் சிந்தனைகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டிய புத்தகம் ‘தி செவன் கேபிட்ஸ் ஆப் ஹைலி எப்பக்டிவ் பீப்பிள்’ என்னும் புத்தகம்.ஸ்டீபன் ஹவே என்பவர் எழுதியது. வாழ்வியல் சிந்தனைகள் மூலமாக நான் அறிந்துகொண்ட அந்தப் புத்தகம் என் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. அந்தப் புத்தகத்தை நிறையப் பேருக்கு அன்பளிப்பாக்க் கொடுத்திருக்கிறேன்.பல நேரங்களில் அந்தப் புத்தகத்தைப் பற்றிய காணொளிகளைக் காலையில் கேட்கிறேன். இப்படி மாற்றம் ஏற்படுத்தும் பல புத்தகங்களைத் தன்னுடைய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் தோடர்ந்து அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்து கொண்டிருக்கிறார்…’
என்று சொன்னவுடன் அஞ்சு ‘நானும் அந்தப் புத்தகத்தைப் படிக்கிறேன்’ என்றார்.
அய்யா வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 19 தொகுதிகளாக இதுவரை வெளிவந்துள்ளன.2004-ல் ஆரம்பித்து,இன்றைக்கு வரை விட்டுவிட்டுத் தொடர்ந்து விடுதலையில் வாழ்வியல் சிந்தனைகளை எழுதிக்கொண்டுள்ளார். படித்தவர்கள் எல்லாம் வியக்கும் கட்டுரைகளாக இந்தக் கட்டுரைகள் இருக்கின்றன.படிக்கின்றவர்கள் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கிறது என்று சொல்கின்றார்கள்.
அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ,இயக்கக் கொள்கைகளைப் பரப்ப உலகம் முழுவதும் பயணம் செய்யக்கூடியவர்.அவர் அப்படிப் போகும் இடங்களில் அவர் விரும்பிப் போகும் இடம் நூலகங்கள். நல்ல நூல்களை உலகம் முழுவதும் அவர் தேர்ந்தெடுத்து,படிக்கின்றார். அவற்றில் மிகச்சிறப்பானவற்றை, வாழ்வியல் சிந்தனைகளில் எழுதுகின்றார்.அதன் மூலம் ஆயிரக்கணக்கான புத்தக விரும்பிகள் பயன் பெறுகின்றார்கள் என்று சொல்லிவிட்டு,
மதுரைக்கு அவர் வந்தால் என்னைப் போன்றவர்கள் நூல்களை அவருக்குக் கொடுத்து வரவேற்போம். மதுரைக்கு அவர் காலையில் 5 மணிக்கு வருகிறார்,அவரை வரவேற்று ஒரு நூலைக் கொடுத்துவிட்டு, மாலையில் அவரைப் பார்க்கச்சென்றால், அந்த நூலைப் படித்து முடித்து இருப்பார். நூலைப் பற்றிய ஒரு விமர்சனம் சொல்வார். எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கும். நான் அறிந்தவரையில் இப்படி நூலை உயிராக நேசிக்கக்கூடிய வேறு ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை என்றேன்.இவரைப் போல இவ்வளவு விரும்பி நூல்களை வாசிக்கும் வேறு ஒருவரைக் கண்டதில்லை என்றேன்.
ஒரு பக்கம் இடைவிடாத கொள்கைப் பிரச்சாரப்பயணம். இன்னொரு பக்கம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர். மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்.கல்வி நிறுவன்ங்கள் மீது பெரும் கவனம் செலுத்துகிறார். சென்னை பெரியார் திடலில் இருந்து விடுதலை,உண்மை,பெரியார் பிஞ்சு,தி மாடர்ன் ரேசனலிஸ்டு, திராவிடப்பொழில் போன்ற இதழ்கள் வெளிவருகின்றன.அந்த இதழ்களின் ஆசிரியராகவும், புரவலராகவும் இருக்கின்றார். அந்தப் பணிகள் ஒருபக்கம்.இந்த 93 வயதில் அவரின் உழைப்பை நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது என்று ,அவர் மொழி பெயர்த்திருக்கும் நூலின் ஆசிரியர் பற்றி அவரிடம் விளக்கினேன்.பின்பு .
‘நீங்கள் மொழிபெயர்ப்பு எப்படிச் செய்கிறீர்கள்…’ என்று கேட்டபோது .
. ‘நான் முழுக்க முழுக்கச் சுயமுயற்சியால் மொழிபெயர்ப்புச் செய்கிறேன். எந்தவிதமான அறிவியல் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துவதில்லை. முதலில் எந்த விதமான விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலை முழுவதுமாக ஒரு முறை படிப்பேன். பின்பு முதல் அத்தியாயத்தை மீண்டும் படிப்பேன்.அதில் தெரியாத சொற்களுக்கு மலையாளத்தின் அகராதியைப் பார்ப்பேன். பின்பு ஒவ்வொரு வாக்கியமாக மொழி மாற்றம் செய்வேன்.இப்படியே ஒவ்வொரு அத்தியாயமாக மாற்றுவேன். ஒரு நூலை மொழிபெயர்ப்புச் செய்ய எனக்குக் குறைந்தபட்சம் 2 மாதமாகும்.’ என்றார்.
‘ஒருவர் மொழி பெயர்ப்பு துறைக்குப் புதிதாக வர விரும்புகிறார் என்றால் நீங்கள் அவருக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்..’ என்று கேட்டபோது
‘முதலில் வருமானம் வரக்கூடிய ஒரு வேலையில் இருக்கவேண்டும். இதனை ஒரு விருப்பத்திற்கான தொழிலாகச் செய்யவேண்டும். கூகுள்,செயற்கை நுண்ணறிவு போன்றவற்றின் மூலம் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கும், நாமாகச் சுயமாகச் செய்யக்கூடிய மொழிபெயர்ப்புக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. வேறுபாட்டை எளிதில் கண்டு பிடிக்க முடியும். சுய மொழிபெயர்ப்புத்தான் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.. ‘ என்றார்.
‘நீங்கள் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தீர்கள் எப்படி வந்தீர்கள் என்பது பற்றிச் சொல்லுங்கள்…’ என்றபோது .
‘நான் மொழிபெயர்ப்பு துறைக்குள் வருவதற்குக் காரணம் பெரியார்தான்.எனக்கு வழிகாட்டி பெரியார்தான்.இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் என்னைப்போன்ற இன்று வாழும் ஒரு பெண்ணுக்கு வெளிச்சமாக இருக்கின்றார். பெரியாரின் கருத்துகள் மிகச்சிறப்பாக இருக்கிறது.அதனை மலையாளத்தில் கொண்டு வரவேண்டும் என்ற தூண்டுதல்தான் இந்தத்துறைக்குள் நான் வரக்காரணம். அடுத்து மைத்திரி பதிப்பகத்தின் உரிமையாளர் லால் சலாம் மற்றும் அவரது மனைவி மாயா லால்சலாம் ஆகியோரின் ஆதரவும் தூண்டுதலும் காரணம்.
எனது தந்தை கேரள போக்குவரத்துக் கழகத்தின் ஒரு பணியாளர். அம்மா வீட்டு வேலை. நான் ஒரு தனியார் பள்ளியில் நூலகராக இருக்கிறேன்.அந்தப் பள்ளி ஒரு மேல்நிலைப்பள்ளி.எனது தாய் ,தந்தை இருவருமே நிறைய நூல்களை வாசிப்பவர்கள். எனக்குச் சிறுவயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் உண்டு. வாசிக்காதே,எழுதாதே என்று எனது பெற்றொர்கள் எப்போதும் சொன்னதில்லை.அவர்கள் எனது எழுத்துக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறார்கள்’ என்றார்.
‘அய்யா ஆசிரியரின் எழுத்துகளின் மீதும் தந்தை பெரியாரின் எழுத்துகளின் மீதும் இவ்வளவு ஆர்வம் இருக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்கு எங்கள் விருந்தினாராக வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தேன். மகிழ்ச்சியோடு வருகின்றேன் என்றார்.
திராவிடப்பொழில் இதழுக்கு, நீங்கள் ஆங்கிலத்தில் கட்டுரை தாருங்கள்,மற்றவர்களுக்கும் சொல்லி இந்த இதழுக்கு கட்டுரை வாங்கித் தாருங்கள் என்ற வேண்டுகோளையும் வைத்து,லால் சலாம் இல்லத்தினர் அளித்த விருந்தோம்பலை ஏற்று எனது மகன் சொ.நே.அன்புமணியும் நானும் அவர்களிடமிருந்து விடை பெற்றோம்..



No comments:
Post a Comment