Monday, 20 April 2026

எம் மனங்களில் வாழ்கிறாய் நீ !...

 



 

மறைந்தாயா நீ!

இல்லை!இல்லை !

எம் மனங்களில்

வாழ்கிறாய் நீ!

 

நின்றுபோனதா நின்

தமிழ்ப் பாக்கள்?...

இல்லை ! இல்லை !

திகட்டாத தேனாய்

தினம் வாழ்வில்

காலையும் மாலையும்

வாசிக்க வாசிக்க

வந்து கொண்டேயிருக்கும்

வசந்தமாய் நின் பாக்கள் !

 

நின்று போனதா ..”

நீ ஊட்டிய

தன்மான உணர்ச்சி ?..

நின் ஒவ்வொரு

கவிதையும்

‘தீ எரிய ‘

பற்ற வைக்கும்

நெருப்புக் குச்சிகளாய்…

 

எழுத்தாளர்களை

ஊக்குவித்த உன் செயல்

நின்று போனதா?...

புதிதாய் எழுத  நினைக்கும்

எவருக்கும் உன் எழுத்துகளே

தனக்குத்தானே திருத்திக்கொள்ளும்

எழுத்துத் திருத்திகளாய் !..

 

எதையாவது பாடாமல்

விட்டுச்சென்றாயா?

உன் கவிதைகளுக்குள்

தேடிப்பார்க்கிறேன் நான்…

கர்ப்பபை சாத்தல் முதல்

முதியோர் காதல்வரை

பாடாமல் விட்டவை ஏதேனும்

இருக்கிறதா என யோசிக்கிறேன் நான்..

ஞான் அறிந்துவரை ஏதுமில்லை காண் !


பார்ப்பனிய வேர்களில்

வெந்நீர் ஊற்றும் வித்தையைக்

கற்றுத் தருகிறாய் !

ஆதிக்க இந்தியினை

விரட்டி அடிக்கும்

வேகத்தை சொல்லித்தருகிறாய் !

 

ஈரோட்டுத் தாடிக்கிழவர்

தொட்டதுபோல்

வாழ்வின் எல்லா

நிலையையும் பாடியிருக்கிறாய் !


 நீ உடலால்

மறைந்த நாள் இது!

உள்ளத்தால் எமது பாட்டனாய்..

நூல்களின் வழிக்

கற்பிக்கும் ஆசானாய் !

எமது இல்லத்து  

நூலகத்தில் கம்பீரமாய்

கால்மேல் கால்போட்டு

அமர்ந்து கற்பிக்கிறாய் நீ!

 

மறைந்தாயா  நீ !

இல்லை ! இல்லை !

எம் மனங்களில்

வாழ்கிறாய் நீ !


                                வா.நேரு,21.04.2026

(இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள்)

 

 

 

 

 

 


No comments: