Monday, 4 May 2026

சிந்தனைக் கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்...

 


அண்மையில் படித்த புத்தகம் : சிந்தனைக் கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்.

நூல் ஆசிரியர் : ஆலடி எழில்வாணன்

பதிப்பகம் : எழிலினி பதிப்பகம்,சென்னை-8

முதல் பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 362,விலை ரூ 350.




 

ஒரு திராவிட இயக்கத்து தலைவரின் வாழ்க்கை வரலாறு என்பது அவரின் வாழ்க்கையைச் சொல்வது மட்டுமல்ல.அவரது ஊரின்,சமூகத்தின், இயக்கத்தின் வரலாற்றை எல்லாம் எடுத்துச்சொல்வது.அந்த வகையில் இளவல் ஆலடி எழில்வாணன் அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளசிந்தனைக் கனி திரு ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்என்னும் நூலை வாசித்துமுடித்தபோது ,ஒரு மிகப்பெரிய பணியை இளவல் ஆலடி எழில்வாணன் அவர்கள் செய்து முடித்திருக்கிறார் என்று மனம் நிறைவு பெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி,சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு,திரு முனைவர் வை.செல்வமுத்து,திரு அ.அமுதவாணன் ஆகியோர் அணிந்துரை,வாழ்த்துரை புகழுரை எல்லாம் வழங்கி உள்ளனர். அடுத்து என்னுரையை இந்த நூல் ஆசிரியர் இளவல் ஆலடி எழில்வாணன் அவர்கள் வழங்கியுள்ளார்.

எடுத்தவுடன் இந்த நூலில் அணிந்துரைகள்,என்னுரையெல்லாம் படித்து முடித்தபிறகு முதல் அத்தியாயத்தைப் படிக்கவில்லை. வலிக்கும்,வாசிப்பதைத் தடுக்கும் எனும் உணர்வு தோன்றியது. மற்ற அத்தியாயங்களையெல்லாம் படித்துவிட்டு பின்பு அதனைப் படித்தேன். எப்பேர்ப்பட்ட ஆளுமையின்  வாழ்க்கையை முழுமையடவிடாமல் முடித்திருக்கிறார்கள்என்னும் துயரம்தான் எழுந்தது.

71 ஆண்டுகள் வாழ்ந்த அய்யா ஆலடி அருணா அவர்களின் வாழ்க்கையைப் பத்து பத்து ஆண்டுகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார். நல்ல உத்தி இது. 1933-43 காலகட்டத்தில் அய்யா ஆலடி அருணா அவர்களின் வாழ்க்கையைவிளையும் பயிராக அருணாச்சலம்என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.திருச்செந்தூர் பகுதியிலிருந்து தன்னுடைய முன்னோர்கள் எப்படி இந்தப் பகுதிக்கு வந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி,ஓர் இருண்ட வரலாறும் உண்டு என்று குறிப்பிடுகிறார். இந்த ஆரம்பமே இந்த நூலின் உண்மைத்தன்மைக்கு உரைகல்லாக அமைந்துவிடுகிறது.உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கும் இந்த நூல் ஆலங்குளம் பகுதியில் திராவிட இயக்கம் வளர்ந்த கதையையும் இணைத்துச் சொல்கிறது.இந்த அத்தியாயத்தில் கொடுத்திருக்கும்ஆலடி அருணா குடும்பத்தின் ஏழு தலைமுறையினர்-அட்டவணைஎன்னும் இணைப்பு வெகு சிறப்பு.பூசாரி குடும்பத்தில் பிறந்த அவர் எப்படி இளம் வயதில் பூசை செய்பவராக இருந்தார்.அவரது தந்தை திருவைத்தியலிங்க பூசாரி எப்படி அதனைப் படிப்பின் பக்கம் திருப்பினார்,பின்பு எப்படி பகுத்தறிவின் பக்கத்திற்கு வந்தார் என்பதை அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார்.

மாணவப் பருவத்தில் அய்யா ஆலடி அருணா அவர்கள் எப்படி இருந்தார்கள் மாணவப் பருவத்தில் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக பரிசுகள் பெற்றது,பின்பு கல்லூரிக்காலத்தில் ஆங்கிலத்திலும் புலமை பெற்று, ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று இருக்கிறார் என்று சுட்டிக்காட்டி ,’கல்லூரி மாணவர்கள் அரசியலில் நுழைவதை அந்நாட்களில் கல்லூரிகள் ஊக்கப்படுத்தின என்பது ஒரு சுவராசியமாகும்என்று குறிப்பிடுகிறார். நாங்கள் படித்த காலம்வரைக்கும்(1980-களில்) கல்லூரிகளில் அரசியலை மாணவர்கள் அதிகம் பேசினர். அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.இப்போது ஏன் இல்லை,எப்படி அதனை வளர்க்கவேண்டும் என்பது இன்றைய முக்கியமான கேள்வியாகும்.’ஆலடிப்பட்டியில் மாணவர் பருவத்தில் ,”அறிவு வளர் படிப்பகம்என்ற அமைப்பை ஒரு சிறிய கட்டிடத்தில் நிறுவி ,அதில் பகுத்தறிவு மற்றும் நாத்திகக்கொள்கைகளைக் கட்டித் தொங்கவிடுவார்என்று சொல்லி அதில் எழுதப்பட்ட ஒரு வாசகத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். அருமை.

1953-1963 திராவிடத்தில் ஐக்கியமான அருணாச்சலம் என்று குறிப்பிட்டு பூசாரி குடும்பத்தில் பிறந்தவர் பெரியார்,அண்ணா,பகுத்தறிவு, நாத்திகம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார் என்று  நகையாடி அய்யா ஆலடி அருணாவின் தந்தையிடம் சொன்னபோது அவர் சொன்ன பதில் போற்றத்தக்கது.பின்பற்றத்தக்கது. அருணாச்சலம் ஆலடி அருணா ஆன கதை நல்ல நகைச்சுவையுடன் கூடிய வரலாற்றுக்குறிப்பு.ஆலடி-அருணா கமலம் திருமணம்,அவர்களது குழந்தைகள் என்று விறுவிறுப்பாகவும், வாசிப்பதற்கு எளிதாகவும் அடுத்தடுத்த பக்கங்கள் அமைந்திருக்கின்றன.’மக்கள் செல்வாக்கில் ஆலடி அருணா ‘ என்னும் பகுதியில் திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அவர்கள் கைவிட்டபோது ,அண்ணா அவர்களுக்கு அதனை எதிரித்து ஆலடி அருணா அவர்கள் எழுதிய கடிதம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். எப்படிப்பட்ட ஜனநாயக இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம். பெருமையாக இருக்கிறது.1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 பொதுத்தேர்தல் போன்றவைகளில் அய்யா ஆலடி அருணா அவர்களின் பங்களிப்பும் ,வெற்றி பெற்றபின் பீடித்தொழிலாளர்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தவர். இன்றைக்கும் அந்தப்பெயர் அந்தப் பகுதியில் நிலைத்து நிற்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

டாக்டர் கலைஞரின் மனதில் எழுந்த சந்தேகம்,அதன் பின் எம்.ஜி.ஆரோடு இணைந்து பயணித்த அரசியல் பயணம், மீண்டும் ஜெயலலிதா காலத்தில் கலைஞரோடு இணைந்த அய்யா ஆலடி அருணா என்று அவரின் அரசியல் பயணத்தை அருமையாக விவரித்திருக்கிறார்.1977-ல் பாராளுமன்ற உறுப்பினர்,1983-ல் மாநிலங்களவை உறுப்பினர்,1988-ல் போபர்ஸ் குழு அறிக்கைக்கு எதிராக மறுப்பு அறிக்கை எழுதியதை விவரித்துள்ளார்.’வரலாற்றில் முதல் முறையாக பிரதமருக்கு எதிராகத் தனி நபராக,தந்தையார் ஆலடி அருணா வெளியிட்ட 20 பக்க மறுப்பறிக்கை(dissent note) உலகச் செய்தியானது. வி.பி.சிங்,ஹிந்து ராம் போன்றோர் இதை மக்களிடம் விரைவாக எடுத்துச்செல்ல, காங்கிரசும் ,ராஜீவ் காந்தியும் செல்வாக்கையும் ,ஆட்சியையும் இழந்தனர்’ (பக்கம் 95) என்று குறிப்பிட்டிருக்கிறார்.எவ்வளவு பெரிய மனத்தின்மையோடு இதனைச் செய்திருக்கிறார். பெரிதும் பாராட்டுக்குரிய செயல்.1989-ல் மீண்டும் தி.மு.க-வில் இணைந்து இறுதிவரை தி.மு.க.காரராகவே இருந்து மறைந்திருக்கிறார்.

1993-2004 என்று குறிப்பிட்டு ‘சிகரம் தொட்ட ஆலடி அருணா ‘ தலைப்பில் அருமையான தகவல்களைத் தொகுத்து கொடுத்துள்ளார் நூலாசிரியர்.சட்ட அமைச்சராக இருந்து அவர் ஆற்றிய பணிகளைப் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன.ஆலடி அருணாவின் கல்லூரிக் கனவு என்னும் தலைப்பில் அவரது தந்தையாரின் ஒரு கல்லூரி நிறுவ வேண்டும் என்னும் கனவு,அதற்கு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் பெயர் வைப்பதற்கு நூல் ஆசிரியர் ஆலடி எழில்வாணன் அவர்களும் ,அவரது அண்ணன் ஆலடி அமுதவாணன் அவர்களும் இணைந்து தந்தையோடு ஆற்றிய உரையாடலை எல்லாம் கொடுத்திருக்கிறார்.

அடுத்த அத்தியாயமாக தலைவர்களுடன் ஆலடி அருணா என்னும் தலைப்பில் கொடுத்திருக்கிறார்.தந்தை பெரியாரோடு ஆலடி அருணா அவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி,’தி.மு.க.வில் தீவிரமாக இயங்கிய காலத்தில்,பெரியாரின் கொள்கையில் துளியும் சமரசம் செய்து கொண்டதில்லை.”தனி ஒரு மனிதனிடம் பெரியாரின் தாக்கம் எத்தகையது “ என நாம் அளவிட வேண்டும் என்றால் அதற்கு ஆலடி அருணாவே ஓர் உதாரணம் எனலாம்.ஆலடி அருணா எளிமை,சிக்கனம் போன்றவற்றைக் கடைப்பிடித்து,ஆடம்பரத்துக்கு விருப்பப்படாமல் இருந்தார்.அதே சமயம் கல்வி,வாசிப்பு,எழுத்து என வந்துவிட்டால் துணிந்து செலவிடவும்,செயல்படவும் தயங்க மாட்டார்.இக்குணங்கள் தந்தை பெரியாரிடமிருந்து ஆலடி அருணா கற்றுக்கொண்டவை என்றே சொல்லலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இளவல் ஆலடி எழில்வாணன் அவர்களும் தந்தையின் வழியிலேயே தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார் என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயலே ஆகும்.அறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர்,திரு எம்.ஜி.ஆர்,திரு ஆர்.வெங்கட்ராமன்,திரு வி.பி.சிங்,திரு எல்.கே.அத்வானி,பரூக் அப்துல்லா,மம்தா பானர்ஜி,ஜார்ஸ் பெர்னாண்டஸ் ஆகிய தலைவர்களோடு இருந்த தொடர்பை மிக அழகாக எடுத்து வைத்துள்ளார்.

ஆலடி அருணா நண்பர்கள்,உறவுகள் என்ற தலைப்பில் பல ஆளுமைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.அதில் திரு கா.காளிமுத்து உள்ளிட்ட பல ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார்.இந்தத் தலைப்பில் தன்னுடைய தாயார் அம்மா திருமதி கமலா அருணா அவர்கள் பற்றி ஏழு பக்கங்களில் எழுதியுள்ளார். சிறப்பாக உள்ளது,படங்களையும் இணைத்துள்ளார்.

நிர்வாகிகளின் பார்வையில் என்று தலைப்பிட்டு தி.மு.க வைச்சார்ந்த திரு பாப்புலர் செல்லத்துரை உள்ளிட்ட பல தி.மு.க நிர்வாகிகள் பற்றியும்,அவர்களுக்கு அய்யா ஆலடி அருணாவோடு இருந்த தொடர்புகள் பற்றியும்,அப்புறம் ஊர் மக்கள் என்று தலைப்பிட்டு ,தனது சொந்த ஊரைச்சார்ந்த பலரைப் பற்றியும் எழுதியிருக்கிறார். நல்ல முயற்சி. நல்ல பதிவு.அவர்களையெல்லாம் பெருமைப்படுத்தும் பதிவு.

ஆலடி அருணாவின் குணாதிசயங்கள் என்று குறிப்பிட்டு அவரின் உணவுப் பழக்கவழக்கங்கள்,உள் நாட்டுப் பயணங்கள்,வெளி நாட்டுப்பயணங்கள், உடைப்பழக்கம்,அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட தலைப்புகளில் விவரித்துள்ளார். பயனுள்ள தகவல்கள்.தனி நபர் ஒழுக்கத்தில் எவ்வளவு சிறந்து இருந்தார்,உறவுகளை எப்படிப் பேணிப் பாதுகாத்தார்,அவருக்கு இருந்த பொழுதுபோக்குகள்,அவரது நேர்மை எனப் பல தலைப்புகளில் சிறப்பாக விவரித்துள்ளார்.

அடுத்த தலைப்பு ஆலடி அருணா வழக்கு. இப்போதுதான் அந்த முதல் அத்தியாயத்தைப் படித்தேன். மனது மிகவும் கனத்தது. 13-வது அத்தியாயத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த படம் மிகவும் மனதைப் பாதித்தது.அடுத்த பதிப்புகளில் தவிர்க்க கேட்டுக்கொள்ளலாம் எனத் தோன்றியது. நூலாசிரியர் கதவை உதைத்ததுபோல உதைக்கத்தான் தோன்றியது,இந்த 1,13 அத்தியாயங்களைப் படிக்கும்போது.

ஆலடி அருணா நூல்கள் ஒரு பார்வை என்ற பகுதி விரிவாக அவரின் தமிழ்,ஆங்கில நூல்களைப் பற்றி விவரிக்கிறது.ஆலடி அருணா அவர்கள் எழுதியுள்ள சிறுகதைத் தொகுப்பு பற்றியும் அதில் அவர் எழுதியுள்ள என்னுரை பற்றியும் இந்த அத்தியாயத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆலடி அருணா அவர்களின் புகைப்படங்களின் தொகுப்பு கடைசி அத்தியாயமாக இணைக்கப்பட்டுள்ளது.

இன்று 04.05.2026. தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகளைச் சீரணிக்க முடியவில்லை. மனது மிகவும் வருத்தமாக இருந்தது.இவ்வளவு சிறப்பாக பணியாற்றிய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தோற்றதும்,தி.மு.கழகம் அணி தோற்றதும் மிகப்பெரிய துயரைத்தைக் கொடுத்தது.93 வயதில் அலைந்து அலைந்து பிரச்சாரம் செய்த திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உழைப்பு எல்லாம் பலன் கொடுக்கவில்லையே என்னும் வருத்தம் இருந்தது.ஆனால் தேர்தலில் நடக்கும் வெற்றி,தோல்வி பற்றி ‘தேர்தல்னா வெற்றி தோல்வி இருக்கத்தான் செய்யும்.அடுத்து ஆக வேண்டியதைப் பாரு{“ என்று சாதாரணமாகக் சொல்லிக் கடந்து சென்றார் மதியம் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு,அவரது வழக்கமான மதியத் தூக்கத்தில் அவர் இருந்ததைப் பார்த்தபோது எனக்கு மலைப்பாகபே இருந்தது”(பக்கம் 118) என்று இந்த்  நூல் ஆசிரியர் குறிப்பிட்டதைப் பார்த்தபோது இவற்றையெல்லாம் இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

இந்த நூலை இளவல் ஆலடி எழில்வாணன் அவர்கள் நுட்பமாக பார்த்து,பார்த்து எழுத்துகளால் செதுக்கி அழகிய சிற்பம் போலக் கொடுத்துள்ளார்.இன்றைய இளைஞர்கள் இந்த நூலை வாசித்தால் திராவிட இயக்கத்தின் முழுமையான வரலாறு தெரியும் என்கிற அளவிற்கு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல்  நிறையப் பேருக்கு சென்று சேரவேண்டும்.மிகச்சிறப்பாக இந்த நூலைக் கொடுத்துள்ள இளவல் ஆலடி எழில்வாணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்.

அண்மையில் சேடபட்டி மு.மணிமாறன் அவர்களைச் சந்தித்தபோது, இந்த நூலைப் பற்றிச்சொன்னேன்.இன்றைக்கு திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.அவர்களுக்கு வாழ்த்துகள்.அவரை,அவரது தந்தை சேடபட்டி இரா.முத்தையா அவர்கள் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன்.பார்ப்போம் என்றார். திரு ஆலடி அருணா போன்றவர்கள்தான் திராவிட இயக்கத்தின் .வேர்கள். வேர்களைப் பற்றிய விவரங்கள் இன்றைய தலைமுறைக்குத் தெரியவேண்டும்.அப்போதுதான் நாம் இருக்கும் திராவிட இயக்க ஆலமரம் எப்படிப்பட்டது என்பது அவர்களுக்குப் புரியும்.இந்தக் காலகட்டத்திற்கு தேவையான வரலாற்றை அற்புதமான வடிவமைப்பில் கொண்டு வந்திருக்கும் எழிலினி பதிப்பகத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.வாழ்த்துகள்.

வாசியுங்கள்.வாங்கி வீட்டில் வைத்து வாசியுங்கள்.மற்றவர்களுக்கும் பரிசாக அளியுங்கள். இந்த நூலைப்பரப்புங்கள்.திராவிடம் எளிதில் புரியும்.




அன்புடன்

வா.நேரு,

மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.04.05.2026  

 

  


No comments: