Tuesday, 14 July 2026

அண்மையில் படித்த புத்தகம் : அதிகாரம் ( நாவல்)...எஸ்.அர்ஷியா

 

அண்மையில் படித்த புத்தகம் : அதிகாரம் ( நாவல்)

ஆசிரியர் : எஸ்.அர்ஷியா

வெளியீடு : எதிர் வெளியீடு,பொள்ளாச்சி . செல்: 9942511302

முதல் பதிப்பு : ஜூன் 2016, 200 பக்கம், விலை ரூ 180

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எண் : 894-8113 ARS ;1




 

தோழர் எஸ்.அர்ஷியா நினைவில் வாழும் எழுத்தாளர். அவரோடு படித்த அண்ணன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் அடிக்கடி அவர் பற்றிக் குறிப்பிடுவார். நான் மதுரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொதுமேலாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களைப் பார்க்க எஸ்.அர்ஷியா வருவார்.அப்போது அறிமுகமாகி அவரோடு சிலமுறை பேசியிருக்கிறேன். தோழமை கலந்த உரையாடலாக அவரின் உரையாடல்கள் இருக்கும்.

அதிகாரம்என்னும் இந்த நாவலைப் படித்தபோது ,அவர் எவ்வளவு விமர்சனப்பார்வையும், சமூகத்தின் மீதான அக்கறையும் உள்ளவர் எனத் தெரிந்தது.’ அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாது , அநீதி களைய முடியாதுஎன்பது தொழிற்சங்க முழக்கம். அப்படி ஒன்றுகூட முடியாதபோது, கண் முன்னே நிகழும் அநீதிகளை எழுத்தின் வழியாகப் பதிவு செய்வதும் ஒரு மிகப்பெரிய போராட்டம்தான். அந்த வகையில் காவல்துறை குறித்த, தன் மீது வன்முறை நிகழ்த்தப்படலாம் என்பதை உணர்ந்தபின்பும் அச்சமின்றி இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்பதை வாசிப்பின் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

மதுரை மாவட்டத்தில் இருக்கும்  ஒரு ஊர் மேலூர். அங்கிருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷன். அங்கிருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் மணிமாறன். அங்கிருக்கும் காவலர்கள், ஏட்டையாக்கள், பெண் போலீஸ்கள், எஸ்.ஐ.கள், புதிதாகப் பணிக்கு வந்துள்ள ஒரு பெண் எஸ்.ஐ. திவ்யா என்று முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ஸ்டேஷனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கதை.நிகழ்ந்த கதையாக இருக்கலாம் அல்லது நிகழப் போகின்ற கதையை ஏற்கனவே சொல்லிவிட்டாரோ என்று நினைக்கக் கூடிய அளவிற்கு எழுதப்பட்டுள்ள ஒரு நாவல்.

அதிகாரம் என்பது எப்படிக் கட்டமைக்கப்படுகிறது. எளிய மனிதர்கள் மேல் அவ்வளவு அதிகாரம் செலுத்தும் போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள், நீதிமன்றத்திற்கு உள்ளே போகும்போது எப்படி அவமதிப்பு உருவாகிறார்கள், அதனை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் பேசக்கூடிய ஒரு நாவலாக இந்த நாவல் இருக்கிறது.

காணாமல் போன பவளம் என்றொரு பெண். அவளுக்குக் கணவன் இருக்கிறான், ஒரு குழந்தை இருக்கிறது. பெற்றோரால் உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக தனது தாய்மாமன் சங்கரநாதனுக்கு கட்டி வைக்கப்பட்டப் பெண்ணான பவளத்தைக் காணவில்லை என்பதில் இருந்துதான் கதை தொடங்குகிறது. பவளம் கவிதை எழுதுகிறாள்..ஏற்கனவே கல்யாணமான ஒருவனோடு காதல் கொள்கிறாள். தான் ஆசைப்பட்டவனை வரைந்து வைக்கிறாள் அவனோடு பேசிய சில தருணங்களை மனதுக்குள்ளே பூட்டி வைக்கிறாள். ஆனால் எப்படிப்பட்ட எதிர் விளைவுகள் வரும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டை விட்டு ஓடி அதனால் சில துன்பங்களை சந்திப்பவளாக இந்த நாவலில் பவளம் வருகிறாள்.

முஜம்மின் என்னும் கதாபாத்திரம் மிக வலுவாக இந்த நாவலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. திடீரென உன்னைக் காதலிக்கிறேன் என்று வந்து நிற்கும் பவளத்திடம் இல்லை நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டு எப்போதும் போலத் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்வதற்கு முஜம்மின் சென்று விடுகிறார் ஆனால் பவளத்தின் வீட்டில் அவளின் டைரியில் இருந்த வரையப்பட்ட முஜம்மின் உருவம், போலீசை அவனை நோக்கி விசாரணையை திசை திருப்ப வைக்கிறது. மிக இயல்பாக விசாரணை என்று சொன்னவுடன், தன்னுடைய பேரன் முஜம்மினை, இன்ஸ்பக்டரின் வந்து ஒப்படைக்கும் அவனது தாத்தா,அவரது இறை நம்பிக்கை, போலீசின் கொடுமையான விசாரணை,அதன் விளைவாக முஜம்மின் மரணம் என்று இந்த நாவல் நடப்பு போலீஸ் நடவடிக்கைகளை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துக் காட்டுகிறது.

மனதில் ஈரம் இருக்கும் இரண்டு போலீஸ் எஸ்.ஐ-க்களாக திவ்யாவும்,கடம்பனும் காட்டப்படுகிறார்கள். காவல்துறைக்குள் இருக்கும் அவர்கள் எப்படி பந்தாடப்படுகிறார்கள் என்பதை  இயல்பாக அர்ஷியா எழுதிச்செல்கிறார். பெண் காவலர்கள் படும் பாட்டைப் பற்றி விரிவான விவரிப்பு இருக்கிறது.

நாவல் முழுவதும் பகடி இருக்கிறது.எத்தலும் குத்தலும் அதிகாரத்தை நோக்கி இருக்கிறது.தனது மதத்தைப் பற்றிய விமர்சனம் இருக்கிறது(பக்கம் 102).எப்படி காவல்துறை கட்டமைப்பு இருக்கிறது என்பதைப் பற்றிய துல்லியமான விவரிப்பு இருக்கிறது. சில நல்ல கவிதைகள் கதைக்குள்ளேயே இருக்கின்றன.




வாசிக்க வேண்டிய நாவல். சில உண்மைகள் கசக்கத்தான் செய்கின்றன.அவற்றை வாசிக்கும்போது மனதிற்குள்ளும் அந்தக் கசப்பு பரவுகிறது. இருந்தபோதினும் இப்படி உண்மையைச் சொல்லும் நாவல்கள்  நிறைய வரும்போது கசப்புகளை நீக்கும் மருந்துகள் சமூகத்தில் உருவாகலாம்..

வா.நேரு, 15.07.2026

2 comments:

anandam said...

அனைவருக்கும் வணக்கம் நினைவு தெரிந்த நாளிலிருந்து இயல்பாகவே எல்லாவற்றையும் அரசியல் பார்வையோடு பார்த்து பழகப் பழக்கப்பட்டவன் என்பதால் ஒரு சில கருத்துக்களை அதிகமாகவோ ஆழமாகவோ சில பலருக்கு பிடிக்காத வகையிலோ நான் பதிவேற்றி இருக்கக்கூடும் எனவே எனது பதிவினால் யாருக்கும் சங்கடம் ஏற்பட்டிருந்தால் பொறுத்தருள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

எங்கள் பள்ளித் தோழர்களுக்கான குழுவில் ஓரிரு நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவு. என்னைப் போலவே எங்களோடு வாழ்ந்தவன்..ஆர்சியா...அவன் இருந்திருந்தால் சமூகம் இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கும்...

முனைவர். வா.நேரு said...

உண்மை...நன்றிங்க அண்ணே...